மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை – 15

This entry is part 32 of 45 in the series 26 பிப்ரவரி 2012

கறுப்பு நிறத்தில் நீண்ட கழுத்தை மூடிய அங்கியும், இடுப்பில் இறுகச் சுற்றி பக்கவாட்டில் தொங்கிக்கொண்டிருந்த கயிறும் தலையில் கிரீடம்போல ஒரு தலைப்பாகையும் அணிந்து நன்கு சிவந்த தோலுடன் எதிர்பட்ட ஆசாமியைப் பார்க்க வியப்பாக இருந்தது. தோல்வியாதி பிடித்த மனிதன்போலிருந்தான். கையை உயர்த்தி ஆசீர்வதித்தான், அதை ஏதோ கெட்ட சகுனம்போல உணர்ந்தார்.

16. நேற்று அணில் கடித்த மாம்பழத்தை எவருடன் பங்கிட்டுக்கொண்டாயென்று கேளுங்கள், மூன்று நாட்களுக்கு முன்பு பல்லாங்குழி ஆட்டத்தின் முடிவில் வீட்டிற்குக்கொண்டுவந்த சோழிகள் எத்தனையென்று கேளுங்கள் அல்லது இருகிழமைகளுக்கு முன்பு போட்ட நீர்க்கோலத்திற்கு எத்தனை புள்ளிகளென்று கேளுங்கள் சிவகாமி சரியாகச்சொல்லிவிடுவாள். ஆனால் எத்தனை நாழிகையாக குளத்து படியில் தலையை முழங்கால்களுக்கிடையில் கொடுத்து அமர்ந்திருக்கிறாயென கேட்டீர்களெனில் திருதிருவென்று விழிப்பாள். அவள் குளக்கரையை நெருங்கியபொழுது மறுகரையிலிருந்த ஆலமர கி¨ளைகளிலெல்லாம் தீப்பிடித்ததுபோல சூரியன் தெரிந்தான். வௌவால்கள் காச்சு மூச்சென்று இரைச்சலிட்டபடி மரத்தை மொய்ப்பதும் விலகிச் செல்வதுமாக இருந்தன. இரண்டொரு பெண்கள் குடத்திலெடுத்த தண்ணீரை இடுப்பில் தூக்கிவைத்துக்கொண்டு நிமிர்ந்தவர்கள் வியப்பை கண்களிலும், தசை நார்கள் உறைந்த கன்னங்களில் மெல்லிய கசப்பையும் வெளிப்படுத்தியவர்களாய் தாண்டிச் சென்றார்கள். அநேகமாக இவளை இன்னும் கானவில்லை யென்று வீட்டில் தேடக்கூடும். தேடட்டுமே. வீட்டில் அதனாற் ஏற்படக்கூடிய முதல் பதட்டத்தை நினைக்கையில் இனித்தது. மனதிற் சுரந்த சந்தோஷம் சில நொடிகளில் ஒரு குறுநகையாய் வெளிப்பட்டு கடை உதடுகளில் கரைந்தது.

குளத்தை வெகுநேரமாக வைத்தைகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருக்கிறாள்: கூம்பிய தாமரை மொக்குகள், நீரில் இதழ்களைக் கிடத்தி வெண்மை கொஞ்சம் கபில நிறம் கொஞ்சமென முறைப்படுத்திக்கொண்டு படைப்பு ரகசியத்தில் தோய்ந்திருந்த மலர்கள், அவள் உள்ளங்கைக்கு ஈடாக தாமரைக்காய்கள்; வட்டவட்டமாய் கரும்பச்சைநிற இலைகள், தாமரைக் கொடிகள், புளிய இலைகள்போல படர்ந்திருந்த பாசிகள் என்ற காட்சியைக் கடந்து பார்வை நீர்த் துறையை வேரூன்றி நின்றது. நீர்கொண்டு வரைந்த மரம்போல துறை கண்களுக்குத் தெரிந்தது. இது போன்ற காட்சிகளை இப்போதெல்லாம் ஒருவரிடமும் பேசுவதில்லை. தாய் பார்வதி ஏற்கனவே இவள் எதைச் செய்தாலும் சொன்னாலும், அசடு அசடு என திட்டுகிறாள்.

நீர் உறங்குவதுபோல பாசாங்கு செய்கிறென நினைத்தாள். நீர்பூச்சிகள் விசுக் விசுக்கென்று அலைகிறபோது அதன் பொய்யுறக்கத்தை உணர்ந்துகொண்டாள். சரியான ஏமாற்று பேர்வழி, கையும் களவுமாக மாட்டிக்கொண்டது. நீர்பரப்பில் அந்திவானம் மட்டும் துலக்கமாகத் தெரிந்தது. உள்ளே அடர்த்தியான நிழற்பந்துபோல அயரைமீன்கள். அவ்வளவும் இவளை பார்த்தபடி அசையாமல் நிற்கின்றன. இவள் தெரிகிறாளா என்று பார்த்தாள். இல்லை என்றானதுமே மனதிற் பாரத்தை இறக்கியபோல உணர்ந்தாள். சிவகாமிக்கு தனது முகம் மறந்து நாளாகியிருந்தது. காதுமடல்களைக் கடிப்பதுபோல காற்று இவளைக் கடந்து சென்றது. வழக்கமான நாட்களெனில் காற்றை ஏக வசனத்தில் திட்டித் தீர்த்திருப்பாள். மீன்கொத்தியொன்று இவளுக்குப் போட்டியாக நீர்துறைக்கு மேலே சாம்பல் நிற வால் பகுதியை விசிறிபோல மேலே மடித்துவைத்துக்கொண்டு இறக்கைகளிரண்டையும் படபடவென்று அடித்துப் பறக்கிறது. சில நாழிகைகள் ஓரிடமாக நிற்பதும், பின்னர் விலகி ஒதுங்குவதும், அடுத்த ஓரிரு நொடிகளில் மறுபடியும் முன்பிருந்த இடத்திற்கே வருமாக இருக்கிறது. நாவற்பழம்போல கருத்திருந்த அதன் தலையையும், அதன் கூரிய அலகையும் அவதானித்தாள். தீடிரென்று நீருக்குள் பாய்ந்து படபடத்துக்கொண்டு வெளிப்பட்டபொழுது அலகில் மீனொன்று துடிப்பதைப்பார்த்தாள். உடல் நடுங்கியது. அக்காட்சியைக் காணச் சகியாதவள்போல முகத்தைப் பொத்திக்கொண்டாள்.

‘ஈஸ்வரா! என்று தீனமாகக் குரல் ஒலித்தது. எழும்பிய குரல் திரும்ப அவளுக்குள் விழுந்த வேகத்தில் உடைந்து சிதறியது. ஈரச்சேலையை சுற்றிக்கொண்டதுபோல ஓரிரு நொடிகள் சிறு நடுக்கத்தை சரீரத்தில் நிகழ்த்திவிட்டு பின்னர் அமைதியானது. அம்மா அருகிலில்லை. இருந்திருந்தால், ‘அசடு அசடு’ என்ன நடந்துவிட்டது? எதற்காக இப்படி காரணமின்றி நடுங்கிச் சாகிராய். நானிருக்கும்வரை உனக்கும் ஒரு பயமும் இல்லையென வாரி அணைத்துக்கொள்வாள். அவள் காலை நீட்ட தலையை ஒருக்களித்து வைத்து அவள் தொடையில் படுக்கவும் செய்வாள். தாயின் சதைப்பற்றில்லாத கையும் கண்ணாடி வளையும் அவள் தலைமயிரில் அளையும், சிவகாமி எச்சிலொழுக தூங்கிவிடுவாள். இப்போதும் அந்த அம்மா தேவையாகயிருந்தது மெல்ல எழுந்து நடந்தாள்.

கிருஷ்ணப்ப நாயக்கர் சிதம்பரத்திற்கு வருவதற்கு முன்பே கொள்ளிடத்து பாளையக்காரன் சிதம்பரம் வந்திருப்பதாக செய்தி பரவிற்று. சோழகனை நகர எல்லையில் அந்தணர் புடைசூழ பூரணகும்பத்துடன் வாழ்த்தி வரவேற்றிருக்கவேண்டும். சபேச தீட்சதர் போகவில்லை, தாம் சுகவீனப்பட்டிருப்பதாக ஊர்ப் பெரியவர்களிடம் தெரிவித்துவிட்டார். பாளையத்துக்கிழவன் தலையை சீவினாலும் சீவட்டுமே. சாகத் தீர்மானித்தபிறகு நாளென்ன கிழமையென்ன, அது யார்வடிவில் வந்தாலுமென்ன? என வீம்புக்குக் கூறிக்கொண்டாலும் அர்த்தமற்று பிராணனைவிட அவர் தயாரில்லை. நாயக்கர் வருகையையொட்டி, விழா செலவுக்காகவும் அவரது பரிவார செலவுக்கும் புதிதாக வரியொன்றை விதித்து பாளையத்துக்கிழவனின் தண்டல்காரர்கள் ஈட்டிவீரர்களுடன் வாசல்தேடிவந்து வசூலிக்க ஆரம்பித்துவிட்டதாக ஏகம்ப முதலியாரும் வேறு சிலரும் காலையில் புலம்பிவிட்டுப்போனார்கள்.

நாயக்கர் தமது தளவாய், பிரதானி, இராயசம், ஆயிரக்கணக்கான வீரர்கள், பார்ப்பணர்கள் சூழ எந்நேரமும் நகர எல்லைக்குள் பிரவேசிக்கலாமென்கிற பேச்சு எல்லா வீடுகளிளும் சலசலத்தது. விஜய நகர மன்னரே சிதம்பர வரட்டுமே, அவரை வரவேற்கும் மனநிலையில் தாமில்லையென்பதில் தீர்மானமாக தீட்சதர் இருந்தார். அதே நேரத்தில் நேற்றிரவு கூட்டத்தில் முடிவெடுத்தபடி கோவிந்தராஜர் திருப்பணியை தடுத்தேயாகவேண்டும். இனி பின்வாங்குதலில்லை. இவரைப் போகவிட்டு நகைப்பார்கள். ஏதோ ஒரு வேகத்தில் முடிவெடுத்தாயிற்று, அதைக்கூட்டத்தில் பகிரங்கமாகவும் அறிவித்தாகிவிட்டது. மூத்த தீட்சதர்களிடம் இதுபற்றி தீர கலந்தாலோசித்து எடுக்கவேண்டிய முடிவு. கொஞ்சம் அவசரப்பட்டுவிட்டோமோ, என்றுகூட நினைத்தார்.

பார்வதியை சமாதானப்படுத்துவதுதான் பெரும்பாடாக இருந்தது. ஒரு பேச்சுக்குச்சொன்னேன். எல்லாம் நல்லவிதமாக நடக்கும், உன் புருஷனுக்கு எந்த விக்கினங்களும் வராமல் பகவான் பார்த்துக்கொள்வார் என்று எவ்வளவோ சொல்லிப்பார்த்தார், அவள் முந்தானையைக் கொத்தாக தோளில் வாரி போட்டுக்கொண்டு பூஜை அறையில் விழுந்தவள் விழுந்தவள்தான், எழுந்திருக்கவில்லை. பிள்ளைகள் அம்மா அம்மாவென புலம்பியதைப் பார்க்க இவர் துடித்துப்போனார். இதுநாள்வரை வீட்டில் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்ததில்லை. யார் கண் பட்டதோ? சுப்பு பாட்டி பானகம் கரைத்துகொண்டு வீடுதேடிவந்தாள். காலையிலிருந்து, அக்காள் வீட்டை எட்டிப்பார்க்காமலிருந்த ஜெகதீசனை அழைத்துவந்தார்கள். அக்காளை நிமிர்த்தி உட்காரவைத்து தனது மார்பில் சாய்த்துக்கொண்டு அவள் பற்களை விலக்கி சுப்புப்பாட்டி கொண்டுவந்த பானகத்தை ஒவ்வொரு சொட்டாக பார்வதியின் வாயிலிட்டான். இதையெல்லாம் காணச் சகியாமல் தீட்சதர் நடராஜரைத் தேடி சன்னதிக்கு ஓடினார். அம்பலத்தில் மார்பு ரோமங்கள் தோய விழுந்தார், அழுதார். தீட்சதர்களோ வேறுமனிதர்களோ இல்லையென்பதை உறுதிசெய்துகொண்டதும் ஆயிரங்கால் மண்டபத் தூணில் தலையைத் இடித்துக்கொண்டவர், தோளிலிட்டிருந்த உத்தரீயத்தின் முனையை வாயில் துருத்திக்கொண்டு தேம்பினார்.

கோவிலைவிட்டு வெளியில் வந்தார். கறுப்பு நிறத்தில் நீண்ட கழுத்தை மூடிய அங்கியும், இடுப்பில் இறுகச் சுற்றி பக்கவாட்டில் தொங்கிக்கொண்டிருந்த கயிறும் தலையில் கிரீடம்போல ஒரு தலைப்பாகையும் அணிந்து நன்கு சிவந்த தோலுடன் எதிர்பட்ட ஆசாமியைப் பார்க்க வியப்பாக இருந்தது. தோல்வியாதி பிடித்த மனிதன்போலிருந்தான். கையை உயர்த்தி ஆசீர்வதித்தான், அதை ஏதோ கெட்ட சகுனம்போல உணர்ந்தார். மனதை சகநிலைக்குக்கொண்டுவந்து புன்னகைக்க முயன்றார். தலையை ஒரு முறை தாழ்த்தி வணங்கிவிட்டுத் வேகமாக நடந்தார். தெற்கில் நடக்கலாமா அல்லது மேற்கில் நடக்கலாமா என்று சிறிதுநேரம் குழம்பினார். எதிரே சாமிநாதன் திண்ணையிலமர்ந்து வழக்கம்போல வெற்றிலை மென்றுகொண்டிருந்தார். அவரைப்பார்க்க சபேசதீட்சதருக்கு கோபம் பொத்துக்கொண்டுவந்தது. கோபத்தை ஒதுக்கிவிட்டு அவர் வீட்டிற்காய் நடந்தார். இவரைப்பார்க்காதவர்போல சாமிநாத தீட்சதர் கவனம் வெற்றிலை முதுகை விரல்களால் நீவி, கிள்ளி நரம்பெடுத்துக்கொண்டிருந்தது. வழக்கம்போல திண்ணையின் தெருபக்கமாக இரத்தவாந்தி எடுத்ததுபோல வெற்றிலை சாறு ஈரம் உலராமல் ஈ மொய்த்துக்கொண்டிருந்தது.

– சாமிநாதா மறந்திடாதே, நேற்று சொன்னதெல்லாம் ஞாபகமிருக்கிறதா?

சாமிநாத தீட்சதரின் வாய் நிறைய வெற்றிலைச் சாறு தேங்கி¢யிருப்பதை உப்பிய கன்னங்கள் காட்டின. உதட்டோரங்களில் அதன் நிழல் தெரிந்தது. இடது கையை உயர்த்தி, வலது கையை அலட்சியமாக வளைத்து அக்குளை சொரிந்துமுடித்தபின் பதில் வந்தது.

– ம்..ம்.. இருக்கிறது இருக்கிறது. இல்லாமலென்ன? என்று சொல்லிவிட்டு ஏதோ முனுமுனுக்கிறார். அதன் அடையாளமாக இரண்டொரு சாற்று புள்ளிகள் வாயில் விடுபட்ட வேகத்தில் கீழ்நோக்கி விழுந்து மறைந்துபோயின.

வழக்கமாக இவரைக்கண்டதும் பணிவுகாட்டத்தெரிந்த சாமிநாதனின் பதிலை எப்படி எடுத்துக்கொள்வதென்று புரியாமல் குழம்பியபடி மேலே நடந்தார். ஜெகதீசனை அனுப்பி ஒரு தீட்சதர் விடாமல் பார்த்துவர சொல்லவேண்டும். தேவைப்படின் தானே ஒவ்வொரு வீடாகச் சென்று எடுத்த முடிவிலுள்ள நியாயத்தை மீண்டும் சொல்லி புரிய வைக்கவேண்டும். தில்லையம்பலம் கூத்தபிரானுக்கன்றி வேறு கடவுள்களுக்கு நாம் சொந்தமானவர்களல்ல என்பதை உறுதிப்படுத்த உகந்த தருணம் வாய்த்திருக்கிறது. அதற்கு தீட்சதர் குடும்பங்களின் உயிர்களை பலிகொடுத்துதான் ஆகவேண்டுமெனில் நடக்கட்டுமே. இந்தத்தலத்திற்கு யாரை உபாசித்து உயிர்வாழ்வதென தீட்சதர்கள் வந்தார்களோ அவன் இருப்புக்கே நாளை மோசம் வரலாம் என்ற ஐய்யத்தின் பேரில் வாழ்ந்து ஆகப்போவதென்ன, எண்ணத்தைக் கிளறியபடி நடந்த தீட்சதர் மைத்துனர் வீட்டெதிரே நிற்பதை உணர்ந்திருக்கவேண்டும், சட்டென்று மைத்துனர்வீட்டுக்குள் நுழைந்தார்.

– ஈஸ்வரா.. ஈஸ்வரா..

– வாங்கண்ணா, உட்காருங்கள். அவர் செட்டியாரிடம் போயிருக்கிறார். வருகிறநேரம்தான்.

– ஈஸ்வரா.. வாய் முனுமுனுத்தது. காலையில் இத்தனைப்புழுக்கத்தைக் கண்டதில்லை. ஒரு விசிறி கொண்டா.

– தீர்த்தம் கொண்டு வரட்டுமா?

– அதெல்லாம் ஒன்றும் வேண்டாம். எங்கள் வீட்டில் என்ன நடக்கிறதென்று தெரியுமா இல்லையா? ஒருத்தர்கூட இப்படி எட்டிப்பார்க்காமலிருந்தால் என்ன அர்த்தம். சபேசன் குடும்பத்தின்மீது வைத்திருந்த பட்சத்திற்கும், மரியாதைக்கும் என்ன பங்கம் வந்து நேர்ந்தது. உன் மகன் ஜெகதீசன் எங்கே போய்த் தொலைந்தான். பொழுதுக்கும் அக்காள் அக்காளென பூனைபோல வீட்டைச்சுற்றிக்கொண்டிருந்தவனை ஆள்வைத்து கூப்பிடும்படி ஆயிற்றே. மளமளவென்று மனப்பாடம் செய்திருந்ததை ஒப்பிப்பதைப்போல உள்ளத்தைத் திறந்து காட்டினார்.

– எனக்கென்ன தெரியும்?

– புருஷர்களை போல பேசுகிறாய். தில்லை நகரத்தில் எந்த பொம்மனாட்டிக்கு இவ்வளவு தைரியம் வரும். உன்னைச்சொல்லிக்குற்றமில்லை. அவனைச் சொல்லணும்..

– அண்ணா, அவர் வீட்டிலில்லை. வேறு மனிதர்களும் இங்கில்லை. உங்களுக்குப் பதில் சொல்லவில்லையென்றாலும் பொம்மனாட்டிக் கழுதைக்கு திமிரைப் பார் என்பீர்கள் நான் என்னதான் செய்யட்டும்?

– எதுவும் செய்ய வேண்டாம், நீ வாயை மூடிக்கொண்டு இருந்தாலே, நடக்க வேண்டியது காலாகாலத்திலே நடந்து தீரும்.

– நீங்க என்ன சொல்கிறீர்கள் என்பது விளங்கவில்லை. கோவிந்தராஜர் திருப்பணியை செஞ்சி நாயக்கர் செய்யாமல் பார்த்துகொள்வதென ஊர்ப் பெரிய மனிதர்களெல்லாம் கூடி முடிவெடுத்த பிறகு, பெட்டைக் கழுதைக்கு என்ன வேலை? வாயை மூடிக்கொண்டுதானிருக்கிறேன்.

– நான் சொல்ல வந்தது அதல்ல, நாளை மறுநாள் சிதம்பரத்தில் என்ன கூத்து அரங்கேறினாலும் சங்கரனுக்கும் சிவகாமிக்கும் நடத்தவேண்டிய விவாகத்தை நிறுத்தக் கூடாது. அது நடந்தே தீரும். அதைசொல்லத்தான் உன் ஆம்பிடையானைத் தேடிவந்தேன்.

– அதை அவரிடமே சொல்லுங்கள். என்னிடம் ஏன் சொல்லவேண்டும். நீங்களே சொல்லுங்கள் அண்ணா சங்கரன் இத்தனை வயதுக்குப்பிறகும் பித்து பிடித்தவன்போல சுற்றிவருகிறான். வயதுக்குக் தகுந்த பிள்ளையாக இல்லை. அவன் நன்றாக இருந்தால் நீங்கள் கேட்கவே வேண்டாம், ஜாம் ஜாமென்று சங்கரன் மாங்கல்யம் என் மகள் கழுத்தில் ஏறும், எங்களுக்கும் உங்கள் குடும்பத்தில் பெண்கொடுக்க கசக்குமா என்ன? ஆனால் சங்கரன் நிலைமை அப்படி சந்தோஷப்படும்படியாகவா இருக்கிறது. எங்கள் நிலமை எவ்வளவுதான் தாழ்ந்திருந்தாலும் இப்படியொரு பிள்ளைக்கு மகளைத் தாரை வார்க்க எப்படி சம்மதிக்க முடியும்.

– முடிவாக என்ன சொல்கிறாய்?

– உங்கள் மைத்துனர் வரட்டும் அவரையே கேளுங்கள். என்னை கேட்டீர்களெனில் சம்மதமில்லையென்பதுதான் பதில்.

– அவன் பதில் எதுவாக இருக்குமென எனக்குத் தெரியாதா என்ன? நீ பார்த்துக்கொண்டே இரு உன் மகளுக்கும் என் மகனுக்கும் பாணிக்கிரகணம் நடந்து தீரும் என்பது விதி. அதை நான் சொல்லவில்லை, சாட்சாத் சிவபெருமானே என் நாவிலிருந்துகொண்டு சொல்கிறான். நான் கிளம்பறேன். ஈஸ்வரன் வந்தால் வீட்டிற்கு வரச்சொல். – சபேசன் தீட்சதர் வேகமாய் எழுந்து நடந்தார்.

பரமேஸ்வரி முனுமுனுத்தாள் அதனைக் காதில் வாங்காதவாறு தீட்சதர் வெளியேறினார். ஆனால் புறக்டைவாசலில் கேட்டுக்கொண்டிருந்த சிவகாமி அச்சத்தில் சுவற்றில் கையூன்றியவள் துவண்டு விழுந்தாள்.

-தொடரும்-

——-.

Series Navigationசந்ததிகளும் ரப்பர் உறைகளும்கவிதை

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *