போதலின் தனிமை : யாழன் ஆதி

This entry is part 12 of 35 in the series 11 மார்ச் 2012

தனிமைப்படுத்தப்படுகிறவர்களின் அனுபவப்பிரதிநிதியாக பிரியவொண்ணா அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் கவிஞர் யாழன் ஆதியின் நான்காவது கவிதைத்தொகுப்பு’போதலின் தனிமை’ கருப்புப்பிரதிகள் வெளியீடாக தோழர் நீலகண்டனின் அறிமுகத்துடன் துவங்குகிறது.
துவக்கமே பறவையென இறக்கையை விரித்தெழுகிற அதிகாரவர்க்க சூரியனையும் எழுச்சியெனும் நிறம் பூசிக்கொள்ளும் உழைக்கும் வர்க்க வானத்தால் பதற்றமுற்று எஞ்சியுள்ள நிறத்தை தின்று பசியாற எத்தனிக்கும் அதன் முயற்சியையும் ஆழமாய் பதிவு செய்கிறார்.வலிக்காத வார்த்தைகளை தர முடியாத அவலத்தையும் கனறாத கங்குகளின் மீது நின்று எதிர்காலத்தை முன்னெடுத்துச்செல்லாத தடைக்கற்களை என் செய்யவென்று ஆதங்கப்படுகிறார்.அறைக்கூவலாய் தொனிக்கவேண்டிய வரிகள்.இருளாய் போன வாழ்வியல் அமைப்பை கொண்டவர்களுக்கான விடியலின் துருவங்களை அடுத்த கவிதையில் தேடுகிறார்.
முந்தைய கவிதை தொகுப்புக்களை வாசித்தவர்கள் அதே நினைவுகளோடு இந்த தொகுப்பினை கைக்கொள்ள விழைந்தால் நிச்சயமாக ஏமாற்றம் தான் மிஞ்சும்.எழுத்து எண்ணம் அதில் காலம் ஏற்படுத்தும் மாற்றம் ஆகியவை அப்பட்டமாக வெளித்தெரியும் போக்கு இத்தொகுப்பில் அதிகம்.இதன் பொருள் வீரியம் குறைந்தது என்றோ அல்லது கொண்ட பொருட்கருவில் சருக்கலென்றோ கொள்ளக்கூடாது.’போதலின் தனிமை’-Going Alone-என்று பொருள் கொண்டால் இத்தொகுப்பு தனி மனிதனின் உள்ளக்கிடக்கையை அதில் தன் சமூகம் சார்ந்த புரிந்துணர்வு தன் மக்களுக்கு ஆற்ற வேண்டிய பணி அவர்களின் விடுதலைக்கான வேட்கையை வளப்படுத்துதல் போன்றே முன்னேறினாலும் தனது தனிப்பட்ட தனி மனித அபிலாஷை ‘காதலென்றும்’ சொல்லித்தான் புரிய் வைக்கிறார். அதில் வெற்றியும் பெறுகிறார்.
’உன் கண் நீர்’என்னும் கவிதையில்,”புயல்களை உற்பத்தி செய்யும் இமைகளை/உடுத்தியிருக்கும் உன் விழிகளுக்குள்/என் பிம்பங்களைச் சேமிக்கையில்/கண்ணீர்த்துளியாகிறேன்” என்கிறார்.துளியாய் திரண்டு அவை வெளிப்படுதல் தான் கவிஞரை காதல் வெளிச்சத்திற்குள் பிரவேசிக்க வைக்கிறது.காதலியின் கன்னங்களில் வழிந்தோடும் அவரை சுலபமாக நாம் அடையாளம் கண்டு கொள்ளலாம்.தனித்து விடப்படுவோம் என்ற அச்ச உணர்வோடு மெல்லிய தாரைகளாக தான் இறங்கிய வழித்தடத்தை பதித்துச்செல்கிறார் அவளது கன்னங்களில். மகிழ்ச்சியால் ததும்பும் முகத்தில் தாய்மையின் அடிவயிற்று சுருக்கங்களை காண்கிறார்.இது எப்படி சாத்தியமாகிறதென்று தான் யோசிக்கிறேன்.
”மரத்தைப்போல் பூவொன்றை உதிர்த்துவிட்டுப் போ/பூக்களில் உள்ள எறும்புகள் கடிக்கலாம் என்னை”என்கிறது ’நீயுனது’. தன்னவளுக்கு சொல்வதற்கு முன் இவர் சொல்லிப்பார்த்துக்கொள்கிறார் அதிக உயரமில்லாத மலைக்குன்றின் பெயரையும் அவரது அன்பினையும்.தடுமாறக்கூடாதென்ற முன்னெச்சரிக்கை தொனிக்கிறது.’நிறுவுதலு’க்கான முயற்சியென்றும் கொள்ளலாம்.
‘முந்நிலை’மென்மையான காதல் கவிதை.மெல்ல ஆவியாகி மேலேறி விண் பலகையில் அவளது ஞாபக ஓவியங்களை வரைகிறது கவிஞனின் கைகள்.உயிர் சொரிதலும் உன்னுடன் என்றால் நாமாகி இருப்பது நமக்கன்றி வேறென்ன என்ற கேள்வியில் அமைதிக்கொடூரத்தையும் தாண்டி காதலிக்காய் கண் அசைக்கிறது கவிஞனின் சொல்.
‘சிதைவுற்ற பிராயத்திலிருந்தே….’என்று ஆரம்பிக்கிற கவிதையில் தலித் வாழ்வின் ஆரம்ப மவுனநிலையை சொல்லிச்செல்கிறார். எழுச்சியையும் சொல்ல மறுக்கவில்லை.
’எதிர்நிலை’யில் தன் மனப்பாட்டை”என்னிரவுகளை கொத்தி கிளறியே கூரிய அலகுகளால் புழுக்களை எடுக்கிறாய்”என்றும் ”வழிந்த ரத்தக்கோடுகள் வரைந்திருக்கின்றன் உன்னை”என்றும் தன்னவளின் நினைப்பையும் சுட்டுகிறார்.
‘புறக்கணிக்கப்பட்ட துயரத்தில்’கவிகிற இருளில் மறையும் உருவத்தின் படிமம் அறைக்குள் தனிமையில் இருக்கும் இவரிடம் வந்தமர்கிறது ஓர் ஒற்றைச்சொல்லென.காதல் பேசத்தான் என்பதில் சந்தேகமில்லை.
‘பசலைகவிதை’யின் வரிசையில் துயில முடியா இரவில் மிதக்கும் உடலை வலையிட்டு கரை சேர்க்க யாருமற்று போவது காதலியின் வரவை எதிர்நோக்கும் காதலன் படும் பாட்டை உணர்த்துகிறது.”இரவின் கருமமைதியில் உறங்க முடியாத மல்லிகையாய் இருக்கிறது நிலா /கழிந்த சொப்பனங்கள் காலத்தின் மீது நண்டுகளைப்போல ஏறுகின்றன”என்பவை ‘நிலவிரவின்’அமைதியில் காதலியின் எண்ணங்களால்”தீயூட்டம்”பெற்றவனின் குரலாக ஒலிக்கின்றன.காலையிலோ அவை பாய்க்குள் சுருட்டப்பட்ட தலையணையாய் பகலுக்குள் சுருட்டப்படும் இரவாயும் மாறி அடங்கிபோகிறது.எதார்த்த தொனியொலிக்கும் வரிகள் இவை.
‘கைச்சர்ப்ப’த்தில் மனதை அலைகழிக்கும் காதலியின் நினைவுகள் நீர் நிறைந்த பானையில் சர்ப்பமாய் நெளியும் கையாகவும் தெரிகிறது இவருக்கு.
‘பிரதிபலன்’ காலங்களை கடந்து நிற்கும் சொற்களை கொண்ட படைப்புக்களுக்கானது .’மென்னியம்’ பேசுதலை விடாதவை தனது படைப்புக்கள் என்று பறை சாட்டுகிறார்.
‘இழப்பு’ எல்லா இடத்திலும் பொருந்திக்கொள்ள கூடியதான பொருள் பொதிந்த கவிதை.அதில்,”முந்தைய மரணத்தின் சோகத்தை வீழ்த்திவிட்டு கம்பீரமாய் சுழல்கிறது அன்றைய மரணச்சூறாவளி” என்ற வரிகளை வாசிக்கும் போது மனது கனத்துவிடுகிறது.ஒரு தொடராய் இம்மாதிரியான நிகழ்வுகளை நிகழ்த்தும் இயற்கை குறித்தான தெறிதல் புரிபட ஆரம்பிக்கிறது.
’குழந்தைகள் அழும் வீட்டில் ’நண்பனை பார்த்து புன்னகைக்கும் குழந்தை நட்பின் விரிவையும் ஆழத்தையும் வெளிப்படுத்துகிறது.கவிதைகள் குறித்தான கவிதையில் தளும்பி வழியும் நீரைப்போல கவிதைகள் வந்துவிடலாம் என்றும் அஜாக்கிரதையாக இருந்தால் நம்மை கொன்றும் கவிதை வெளிவரலாமென்கிறார்.ஆனால் அது நம் கவிதை தானா என்று அறுதியிட முடியாது போனாலும் வேரைப்போல கற்பாறைகளையும் ஊடுருவலாம் அவை என்கிறார்.எழுதியவனைத்தேடும் எண்ணமற்று இருப்போர் படிக்கக்கடவர் என்ற’கட்டளை’ “மீன்கொத்தியின் இறக்கைகளே துடுப்பாகிவிடுதல் தவிர்க்க இயலாதது”என்ற வரிகளை வாசிக்கும் போது சரியென்றே படுகிறது.
‘நட்பாயுத’த்தில் போர்க்காலம் என்பது மேகங்களால் தீர்மானிக்கப்படுவதில்லை என்கிறார்.மேகம் போல் சூழும் சூழ்நிலையே போருக்கான முன்னெடுப்பாய் அமைகிறது என்பது என் கருத்து.ஆனாலும் நட்பை கணைகளாக்கும் தத்துவம் புரியாது தான் இவர் இந்த முடிவுக்கு வருகிறார் எனும் போது நட்பாயுதத்தை முறிக்கும்’பொறி’யை கையிலெடுப்பதில் தவறில்லை தான்.
‘அநீதி’யில் புதைக்கப்படும் உண்மையின் வாய் பற்றி பேசுகிறார்.பொதுவுடமைக்கவிதைகளாய்”மவுனத்தின் கூர்மையை அறியாத எத்தனிப்பு பட்டம் போன்றது.அதை காற்றின் கைகள் கிழிக்கலாம்”என்பதாயும்
சுரண்டலை,”வெவ்வேறாய் காய்ந்த குளங்களில் ஒன்றாய் குவிகிறது சூரிய ஒளி”என்றும் பதிக்கிறார்.இதையே ஒன்றாய் எழுச்சியுறும் சமூகத்தின் ஓர்மைக்கான கவிதையாயும் கொள்ளலாம்.வாசகனின் மனநிலையை சோதிக்கும் பல படைப்புக்கள் இப்படித்தான் மனச்சஞ்சலத்தை ஏற்படுத்தும் போலும்.
தொகுப்பின் முக்கிய கவிதையாய்’சொற்கல்லற்ற நதிக்கரை’யை சொல்லலாம்.போதலின் தனிமை என்ற பதத்தை சரியாக பொதிந்து வைத்து தவழுகிறது இக்கவிதை.எல்லாம் இருந்தும் ஏதுமற்றவனாய் எண்ணம் கொள்ளும் மனநிலை படைத்தவனின் குரலாய் ஒலிக்கிறது இது.கடைசி வரிகள்,”ஊசியில் நூல் கோத்துத்தைக்க கிழிந்தவை கிடக்கின்றன ஏராளமாய்”என்கிறது.எல்லாம் விடுத்து தனித்துச்செல்பவனின் உள்மனதில் பம்மிப்பதுங்கிக்கிடக்கும் உள்ளாற்றை வெளிப்படுத்துவதாய் அமைந்துள்ளது இவ்வரிகள்.நேர் செய்ய அல்லது சரிப்படுத்த என்பதாயும் கொள்ளக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகதிகம் உள்ளது.
பெண்மையின் இழத்தலையும் தாய்மையின் பூரிப்பையும் ’இழத்தலின் கர்வம்’ கோடிடுவதாய் படுகிறது.திசையறியாது பயணப்படும் வண்ணத்துப்பூச்சி,பூமடலின் வலியறியா பனித்துளிகள்,புறக்கணிப்பின் துக்கந்தாளாது புலம்பும் சிற்பக்கூடத்து பாறைத்துணுக்குகள்.இப்படி அழகியல் தெறிப்புக்கள் அதிகம் காணமுடிகிறது.
‘கேள்விகள்’ பல.அதில் பழக்கப்படாத ’எங்கள்’ மரணங்களை பழக முடியுமா உங்களால் என்று கேட்கிறார்.அதிகார ஆணவ வர்க்கத்தின் பால் தொடுக்கப்படும் இந்த கேள்விக்கான பதில்?கேள்விக்குறி தான்.
‘ஈழம்’ என்ற கவிதை கவிஞர் யாழன் ஆதியின் அடையாளமாகிப்போன பிம்பத்தை இன்னும் ஆழமாய் பதியப்பண்ணுகிற விதமாய் அமைந்துள்ளது. “அப்பாவிகளின் ரத்தங்களை தோளில் துண்டாக்கிக்கொண்ட ஆட்சியாளன்” என்ற ஒற்றை வரி ஏற்படுத்தும் அதிர்வு சொல்லில் அடங்காது.அகதிச்சொல்லின் தாக்குதல் குறித்து ஒரு கவிதை.
“குழந்தையின் மழலைமொழியை கைபொத்தி மூடிக்கொள்ள முலைகளில் பால் வழிய தாய்மையைப்படரவிடுகிறாள் பதுங்குக்குழிக்குள் தமிழச்சி” என்றும்,
“கடலில் புதைந்து இக்கரை மீள்கையில் ஓடிவந்து தாக்கிக்குமைகிறது அகதிச்சொல்”எனும் போதும் நாம் வலியுணர்ந்து செயலற்றுப்போகிறோம்.
பெரியவர்கள் அழ குழந்தைகளும் அழும் காட்சியினை ‘பதிலிலிகள்’சொல்கிறது
இப்படி இத்தொகுப்பிலுள்ள எல்லா கவிதைகள் குறித்தும் பேசிக்கொண்டே செல்லலாம்.என்ன காதலில் மூழ்கித்திளைக்கும் போது சமூக பிரக்ஞையை கிளர்த்தும் கவிதைகள் நம்மை உணர்ச்சிப்பிழம்பாய்
மாற்றிவிடுகிறது.உணர்ச்சிக்கொந்தளிப்பில் மூழ்கும் போது அதை ஆற்றுதல் போல் இடையில் சில காதல் கவிதைகள்.பின் சம கால நவீன கவிதைகள். சற்று அசந்தாலும் நம்மை ஏமாற்றிவிடும் போக்கு கவிதைகளுக்கு உண்டு.
காதலென்று நினைத்தால் அனல் பரத்தும் சமூக விழிப்புணர்வு கவிதையாய் அது மாறிடும் விசித்திர தன்மையும் உள்ளது.காதலை தனியாய் சொல்லியிருந்தால் நன்றாய் இருந்திருக்குமோ?தனித்தொகுப்பாக காதல் கவிதைகளை எதிர்நோக்குகிறோம்.
நட்புடன்…சு.மு.அகமது.

Series Navigationகுப்பை அல்லது ஊர் கூடி…தமிழ் ஸ்டூடியோவின் குறும்படங்கள் திரையிடல்
author

சு.மு.அகமது

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *