தில்லையில் கள்ள உள்ளம்…

This entry is part 13 of 42 in the series 25 மார்ச் 2012

(இதைப் படித்தபின் எவரது மனமாவது புண்படுமாயின் தயைகூர்ந்து மன்னிக்கவும்..)

மனசு பூரா…எதிர்பார்ப்போடு அம்மாவின் வருகைக்காகக் காத்திருந்தேன். நீண்ட மாதங்கள் கழித்து இப்போது தான்
மிகவும் பிரயத்தனப்பட்டு ஒரு வழியா….என் தொல்லை தாங்காமல் என் வீட்டுக்கு வர அம்மாவை
பெங்களூரில் இருந்து சிதம்பரத்திற்கு பஸ் ஏற்றி விட்டு..ஜெயா..நீ வந்து அம்மாவை அழைச்சுக்கோ.. ன்னு சொன்னான்.. என் தம்பி.
அதுவும் அம்மாவுக்கோ….என்னைப் பார்க்கும் சந்தோஷத்தை விட சிதம்பரத்தில் சபாநாயக்கர் கோவிலில் நடராஜ தரிசனம் காணும்
ஒரே ஆவலும் …ஆசையும்… தான் அதிகமாக இருந்தது…எனக்கும் தெரியும்.

இதோ..நான் கிளம்பிப் போயிண்டே இருக்கேன்..அம்மாவை அழைச்சுண்டு வர. சொல்லி வைத்தாற்போல் பஸ்சும்
சரியான நேரத்துக்கு சிதம்பரம் வந்தது. பஸ்ஸை விட்டு ஒவ்வொருவராக இறங்க என் கண்களில் பொறுமையின்மை..
அம்மா எங்கே…இன்னும்..? நினைத்த மாத்திரத்தில் அம்மாவின் ஊன்றுகோல் படியின் முன் ஊன்றிக் கொள்ள…
தட்டுத் தடுமாறி அம்மா இறங்கி வந்தாள். எழுபத்தி மூன்று வயது அம்மாவின் உடலெல்லாம் தனது அனுபவத்தை கிறுக்கி
வைத்திருந்தது. கீழே இறங்கி..என் முகத்தைப் பார்த்து….சிரித்தபடியே…நன்னாயிருக்கியா ஜெயா..? என்று கேட்டபோது
வாஞ்சையோடு அருகில் சென்று ஒட்டிக்கொண்டு அப்படியே அம்மாவை அணைத்துக் கொண்டேன். அன்பிற்கும் உண்டோ
அடைக்கும் தாழ்..?

சிதம்பரத்தின் மண்ணை மிதித்த சந்தோஷத்தோடு….கடைசீல வரவழைச்சுட்டாரே….நடராஜர்..னு பரவசமானாள்.
பஸ் வசதியா இருந்ததாம்மா…?.என் கேள்விக்கு..
சொகுசு பேருந்து தானே…ஒரு பிரச்சனையும் இல்லை…சுகம்மா…வந்து சேர்ந்தேன்…என்றாள்.
வீட்டில் நுழைந்ததுமே….சரி..இன்னைக்கே…அரவிந்தன் காலேஜுக்குக் கிளம்பியதும்…நாமளும் .கோயிலுக்குக் கிளம்பிடலாம்..
அவனுக்கு மட்டும் சமையல் பண்ணி கொடுத்து அனுப்பிடு..என்று அவசரப்படுத்தினாள்.

பாட்டியைக் கண்ட சந்தோஷத்தில்… அரவிந்த்..”இனிமேல் இந்த அம்மாவுக்கு ஜாலி தான்…சும்மாவே காலு வீட்டில் தங்காது…..இப்போ உன்னையும் கூட
அழைச்சிண்டு கோயில்…கோயிலா….சுத்தக் கிளம்பிடுவா..பாரேன்…” என்றதும்..

ஆமாம்டா…சும்மா இந்த நாலு சுவற்றுக்குள்ளே…இருந்துண்டு…டீ வி ல வர ஆட்டத்தையும்..அழுமூஞ்சி சீரியலையும் பார்த்துண்டு
அதுவே கதின்னு இருக்க முடியுமா? இந்த வயசில் நாலு கோவில…குளத்தைப் பார்த்தால் தானே….போற வழிக்குப் புண்ணியம்.
மனுஷனுக்கு கையும் காலும் நன்னா இருக்கும்போதே….பகவானைத் தொழணும்…இல்லாட்டா…இப்படித்தான். என்னை மாதிரி..
சின்ன வயசுல எல்லாம் குழந்தைகள்…குழந்தைகள்…னு சம்சார சாகரத்தில் மாட்டிண்டு கிடந்தேன். வீடே கதின்னு….
இப்போ…வயசாச்சு…..தனியா…துணை இல்லாத ஒரு இடம் போக முடியலை. கட்டையும் …கோலுமா…..எடுத்துண்டு நடக்க
வேண்டியிருக்கு. நல்லவேளை…நீயாவது .இங்க…. படிக்கற……நன்னாப் படி..இந்தக் குடும்பம் உன்னை நம்பித்தான் இருக்கு..!

சரி பாட்டி…படிக்கிறேன்…அப்போ நான் வரட்டுமா..?நான் காலேஜுக்குக் கிளம்பறேன்..எனக்கும் நேரமாச்சு.
அட….நீ பாட்டுக்கு உன் காலேஜுக்குப் போற வேலையைப் பாரு..!

அம்மா…இந்தா…காப்பி….இங்க சுந்தரம் காப்பிப் பொடி தான் ரொம்ப பிரபலம்…உனக்குப் பிடிச்சிருந்தா சொல்லு..ஊருக்குப் போகும்போது ஒரு கிலோ
வாங்கித் தரேன்.

ம்ம்ம்….பேஷ்…பேஷ்…வாசனையே சொல்றதே….நரசுஸ் தோத்துப் போகுமனு…..ரொம்ப நன்னாருக்கு….வாங்கித் தா…அங்க நல்ல பொடியே கிடைக்காது..
மண்ணாட்டமா…இருக்கும் .வயசாறது இல்லையா…எல்லாத்தையும் சலிப்பாத் தான் சொல்லுவா அம்மா.

மகள் வீட்டுக்கு வந்து விட்டால் மட்டும் இந்த அம்மாக்களுக்குக் எப்படித் தான் இவ்வளவு சக்தி கிடைக்குமோ தெரியலை….எதையாவது
இழுத்துப் போட்டுண்டு செய்து கொடுப்பாள்…சரி..அப்போ..நாம கிளம்பலாம்….வா..

அம்மாவும்..நானும்…இரண்டாவது மாடியில் இருந்து ஒவ்வொரு படியா இறங்கி வந்து ஆட்டோ பிடித்து…கீழ வீதிக்கு வந்து இறங்கியாச்சு.

நான்கு கோபுரங்களையும் சுற்றி வரும் நான்கு வீதிகள் தான் சிதம்பரம்..சின்ன…அழகான ஊர். எப்போதும் பரபரப்பான தெருக்கள்.

கீழ வீதி கோபுரத்தைப் பார்த்து…..கையெடுத்துத் தொழுது .:சிவ..சிவ…ன்னு சொல்லிண்டே உள்ளே செல்கிறோம்..
இருபத்தொரு படிகள் கடந்து செல்கையில்…வேத கோஷங்களும்….மந்திரங்களும்….கம கம வென்று…சாம்பிராணி, சந்தனம்,பன்னீர்,
ரோஜா, மல்லிகை, பச்சைக் கற்பூரம், ஹோமப் புகையின்.. நெய் வாசம்..எல்லாம்…கலந்து எடுத்து வந்த குளிர்ந்த காற்று இந்தா ஒரே மூச்சில் பிடி…
என்று அள்ளிக் கொடுக்க.தெய்வீகப் ..பரவசத்தோடு…நாங்களும் உள்ளே நுழைய…தக தக வென…சூரியக் கதிரால் ஜொலித்துக் கொண்டிருக்கும்
தங்கத் தகடு வேய்ந்த கூரை…அப்படியே மனதை கட்டிப் போடுகிறது. கண்கள் படம் பிடித்துக் கொண்டது.

நடராஜர் சன்னதி முழுக்க முழுக்க தெய்வீகம் நிறைந்து…..நித்தம் ஏதோ உற்சவம் போல இருக்கும்.

அருகில் பெரிய யாகம் ஒன்று நடந்து கொண்டிருந்தது. “மஹா..ருத்ர ஹோமம்..” அதை ஏற்பாடு செய்திருப்பவர்….
அனைவரும் அயல் நாட்டினர். வட கொரியா வில் இருந்து வந்தவர்கள் என்று சொன்னார்கள். புகை மூட்டத்தில்
தாமரைப் பூவுக்கு கை கால் முளைத்தாற்போல…அசப்பில் ஜப்பானியர்கள் போலவே….அமர்ந்திருந்தனர்.பார்க்கவே
மிகவும் அழகாக இருந்தது. அந்த இடத்தை விட்டு நகர மனது இடம் கொடுக்கவில்லை..அதனால் அங்கேயே அமர்ந்தோம்.

பட்டு வேஷ்டி, அங்கவஸ்திரம், பூணூல்…அருகில் இருக்கும் மனைவியும் பட்டுபுடவை, பூச் சரம் அணிந்து..
தீக்ஷதர் சொல்லும் மந்திரங்களை உச்சரித்த படியே…அவர்கள் .தப்பித் தவறி அயல்நாட்டில் பிறந்து விட்டவர் போலவே..
தெரிந்தார்கள் எனக்கு.அவ்வளவு பக்தி சிரத்தை. பக்தி தேசத்தைக் கடந்தது….என்ற உண்மை புரிந்தது.

ருத்ரம்…சமகம்..என்று வேதம் சொல்லவே..ஒரு பத்து பேருக்கும் மேலே தீக்ஷதர்கள்..ஹோம குண்டத்தை சுற்றி அமர்ந்து
கணீர் என்ற குரலில்…வேதங்கள் ஓதிக் கொண்டிருந்தார்கள்.நீண்ட நேரதிற்குப் பிறகு…பூர்ணாஹூதி ….சமர்பித்து…தீபாராதனை..
முடித்து…அவர்கள்…. தாம்பூலத்தில் அத்தனை வேத விற்பனர்களுக்கும் காணிக்கையாக கட்டுகட்டாக பணத்தை
தந்து சந்தோஷப் படுத்துக் கொண்டிருந்தனர்… !

இது போன்ற யாகங்கள் இந்தக் கோயிலில் அடிக்கடி நிகழ்வதும் உண்டு. தெய்வீக சன்னதியில் இங்கு இறைவன்
ஆனந்தமாக ஆடுகிறான் என்று சத்தியம் செய்து கொண்டிருந்தது போலிருந்தது.

அடுத்து..சொர்ண பைரவர் அபிஷேகம், இரத்தின சபாபதி அபிஷேகம், ஸ்படிக லிங்க அபிஷேகம் என்று பல வகைப் பழங்களால்
வகை வகையான அபிஷேகங்கள்…அற்புதமாக நடந்து முடிந்தது. காணக் கண் கோடி..வேண்டும் என்ற வரிகள் நம்மை அறியாமலே
நினைவில் வந்து மோதும் தருணங்கள். மிகவும் பரவசமான உணர்வு..அதை வார்த்தையால் வெளியிட முடியாது.
கண்டு ஆன்ம பூர்வமாக உணரக்கூடிய இடம் தெய்வத்தின் சன்னதி தான்.

நடராஜரைப் பார்த்ததும் அம்மாவுக்கு….பக்தி பரவசம்….எத்தனை வருடத்திய எண்ணமோ…நெஞ்சம் நெகிழ…
“சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா..தில்லை..” என்று பாட ஆரம்பித்து விட்டாள். அத்தனை நெகிழ்ச்சி.
கண்களில் ஆனந்தக் கண்ணீர். முகத்தில் பரவசம். எனக்குள்ளும் பரவசம்…சந்தோஷம்.

சன்னதிக்கு எதிரில்…ஒரு பெண்…”இடது… பதம் தூக்கி ஆடும்….” என்று அபிநயம் செய்து நாட்டியம் ஆடிக் கொண்டிருந்தாள்.
ஆடலரசன் அனைத்தையும் “குனித்த புருவமும்..கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிக்குமாக..இனித்த முடைய எடுத்த பொற்பாதமாக ”
வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

அன்று கோயிலில் கூட்டம் அதிகமாக இருந்ததால்….நிறைய பேர்கள் தாங்கள் எடுத்து வந்த கேமராவில்..படம் பிடித்துக் கொண்டிருந்தனர்.
எனக்கும் ஒரு நப்பாசை..நானும் மெல்ல என் கைப்பையில் இருந்த கேமராவை எடுத்து….”பொற்கூரை” யை கிளிக் செய்தேன்…அவ்ளோதான்
அதற்காகவே காத்துக் கொண்டிருந்தவர் போல் ஒரு காவல்காரர் ஓடி வந்து “இங்கல்லாம் போட்டோ எடுக்கக் கூடாதுன்னு தெரியாதா..?
குடு…கேமராவை…என்று பிடுங்க வந்தார்…நான் சுதாரித்துக் கொண்டு….”அவங்கல்லாம் எடுக்கறாங்களே..அதனால் தான் நானும் எடுக்கலாமேன்னு
நான் முடிப்பதற்குள்….அவர்…அவங்க ஒரு லட்ச ரூபா கொடுத்து இங்க யாகம் செய்தாங்க…எடுக்கறாங்க…
அதுக்குன்னு கண்டவங்கல்லாம் எடுக்கக் கூடாதுன்னு…சொன்னதும்….எதிர் பாராத இந்த அவமானத்தை உடனே தாங்கும் சக்தியின்றி
சரி மன்னிச்சுக்கங்க ..னு சொல்லிவிட்டு விறு விறு வென கூட்டத்தோடு கலந்தேன். நல்லவேளை…. கேமராவைக் காப்பாத்தினேன்..

அம்மா தான் புலம்பினாள்..இப்படி வந்த இடத்தில் கையக் கால வெச்சுண்டு சும்மா இல்லாத வாங்கிக் கட்டிக்கணுமா..? ன்னு.

பின்ன என்னம்மா இந்தக் கோயிலில் பயங்கர ஊழல் ன்னு நான் சொல்ல….

கொஞ்சம் உன் திருவாயை திறக்காமல் பேசாமல் வா….புண்ணியமா போகும் என்று அம்மா அதட்ட….வேறு வழி இல்லாமல்
கையைப் பிடித்துக் கொண்டு பூனை மாதிரி வந்தேன்…உள்ளம் மட்டும் உறுமிக் கொண்டிருந்தது.

அம்மாவுக்கோ இன்னும் பக்தி பரவசம்…மேலே ஏறிப் சென்று நடராஜரை பக்கத்தில் பார்க்க முடியாதோ என்று குறை பட்டார்.
சரி வா…எத்தனை…. பண்ணியாச்சு..இத பண்ணமாட்டேனா என்று..உள்ளே அழைத்துப் போக செல்லும் வழியில் இரண்டு தீக்ஷதர்
அம்மாவிடம்..மாமிக்கு ..எந்த ஊரு?..என்றார்..அம்மாவும்..சந்தோஷமாக பெங்களுர்..என்றார்..நான் “இந்த ஊரு தான் என்று ” சொன்னதை
அவர் காதில் வாங்கியதாகத் தெரியவில்லை.. அம்மாவிடம் ஒரு நோட்டைக் கொடுத்து..இதில் உங்க பேரும் முகவரியையும் ..நட்சத்திரம்
எழுதுங்கோ…கட்டளை….மாதா மாதம் பிரசாதம் தபாலில் வரும் என்றார்.

அம்மாவும்..நோட்டை வாங்கி தன் கையால்….பேராசை யாரை விட்டது….தன் மூத்த பெண்ணில் இருந்து கடைசி பையன்
வரை..பேரன்கள்..பேத்திகள் வரை நிதானமாக எழுதிக் கொடுக்க..அவரும் அதை பார்த்து…ரொம்ப நல்லது…அருள் உண்டு..
ஒரு ஆயிரம் ரூபா….கொடுங்கோ என்றார்…

மின்சாரம் தாக்கியது போல…நான்..எதுக்கு? என்றேன்…
அப்படியெல்லாம்… கேட்கபடாது…..அம்மா எழுதிருக்காளோன்னோ……! என்றார்..
சரி உள்ளே போகணும்….அனுப்புங்கோ….அம்மா கேட்டாள்..
அர்ச்சனை இருக்கா ? இது தீக்ஷதர்…
அவசரத்தில் தட்டு வாங்கலையே…. இது நான்…
பரவால்ல…பரவால்ல…..எங்கேயே இருக்கு…..மொத்தம் ஒரு ஆயிரத்தி இருநூத்தி அம்பது கொடுங்கோ..என்றார்.
அம்மா..முகத்தைப் பார்த்தேன்….ஈயாடலை….சரி கோயிலுக்குத் தானே என்று குழைந்தாள்.
ஒருவழியாக கொடுத்துவிட்டு உள்ளே சென்று நடராஜரை பார்த்ததும் பக்தியில்..பணம்… மறந்து போனது.
சிதம்பர ரகசியத்தை அம்மா அதிசயமாகப் பார்த்தாள்….அம்மா சந்தோஷமா இருக்காளே..அது போதும் எனக்கு.

வெளியில் பிரசாதம் வாங்க வரும்போது..அதே தீக்ஷதர்…அபிஷேக பஞ்சாமிருதப் பிரசாதத்தை பிளாஸ்டிக்
டம்ளரில் போட்டு வைத்து..கொடுக்கும்போதே..”பத்து.. ரூபா”..”பத்து ரூபா” என்று கொடுத்துக் கொண்டிருந்தார்.
அவர் சொன்னது போலவே அத்தனை டம்ளரும் பத்து பத்து ரூபாயாக மாறியது..
அதற்கு பெரிய வரிசையும் நீண்டது.அருட்ப்ரசாதம் அல்லவா?

நானும் அம்மாவும் கையில் ஆளுக்கொரு டம்ப்ளரை வைத்துக் கொண்டு ஒரு படியில் அமர்ந்தோம்.
அருகில் ஒரு அம்மையார்…இன்னைக்கு இந்த ஹோமம் முடிச்சாங்களே..பிரசாதம் தருவாங்கன்னு
ஓடியாந்தேன்….என்றாள்…அதே சமயம்..”அபிஷேக பொருளை விக்கிறான் பாரு இந்த ஐயரு…இவிங்களுக்கு
எம்புட்டு வந்தாலும் பத்தாது”..ன்னு என் மனதை படித்தவள் போல் என் முகம் பார்க்க.

.ஆமோதிததபடியே…. இந்தாங்க பிரசாதம் னு சொல்லி ஒரு டம்ப்ளரை கொடுத்தேன்.,பவ்யமாக வாங்கிக் கொண்டவள்
கண்ணில் ஒற்றிக் கொண்டாள்…நடராஜரே தனக்குக் கொடுத்தது போல் முகத்தில் ஒரு பிரகாசம்.

பணம்..பணம்..பணம்…கோவிலுக்குள் அனுமதியில் இருந்து….பிரசாதம் வரைக்கும் பணம் தான் இங்கு பேசிக் கொண்டிருக்கிறது.
இதை நீயும் பார்த்துக் கொண்டிருக்கிறாயா நடராஜா? என் உள்மனம் கேட்டது.
ஒரு புகைப்படம் எடுத்ததும் ஓடிவந்து கையும் கேமராவுமாக… என்னைத் துரத்தியவர்….இந்த பிரசாத பிசினஸ்-க்கும் தனக்கும் எந்த
சம்பந்தமும் இல்லாதது போல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். இது தான் கோயில் தர்மமோ..?

வந்திருந்த பக்தர்கள் அன்னப் பிரசாதத்துக்காக அமைதியா காத்திருந்த வேளையில்…ஸ்டீல் தூக்கு….ஸ்டீல் தூக்காக …சக்கரைப் பொங்கல்,
கேசரி, புளியோதரை..எல்லாம் எடுத்துக் கொண்டு வேக வேகமாக வெளியில் ஒரு வண்டியில் வைத்து விட்டு வந்தார் ஒரு தீக்ஷதர்..
மீதி இருக்கும் தயிர் சாதத்தை பிளாஸ்டிக் கவரில் போட ஆரம்பித்ததும்….அம்மா..வா..போகலாம்..கோயிலைப் பார்த்தாச்சு
இல்லையா..? என் அர்த்தமுள்ள கேள்வியை புரிந்து கொள்ளாமல்..இரு பிரசாதம் வாங்கிண்டு தான் வருவேன்..என்று தயிர் சாதம்
வாங்கிக் கொண்டு மன நிறைவோடு வந்தாள். அதற்கு அவர்கள் எந்த விலையும் வைக்காதது…என்னைக் குழப்பியது. நான் தான் அவர்களைத்
தப்பாக நினைத்துக் கொண்டேனோ….மனசுக்குள் ஒருவிதமான நெருடல் இருந்தது.

பணத்தையே பிரதானமாக…ஒரு நாளில் எவ்வளவு தேறும் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள் கோயிலுக்கு உள்ளேயும்……
பணத்தைக் கொடுத்தால் கேட்ட வரம் அனைத்தும் சித்திக்குமோ என்று கோயிலுக்கு வெளியேயும்…மனங்கள்…!.
நடராஜா…உனக்குத் நித்யம் தொண்டு செய்வோருக்கு…(செல்வம் ) இருக்கும் (மனம்) இடத்திலிருந்து….இவர் இருக்கும் இடத்திற்கே..
அள்ளிக் கொடுக்கும் நின் தாட்சண்யம்..இதுவல்லவோ…இறையருள்.!

இருந்தும்….அளவுக்கு மீறும்போது….கோயிலுக்குள் பக்தி…. வியாபாரம் ஆகும் நிலையும் வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது.
ஒவ்வொரு பக்தரும் தான் ஏமாற்றப் படுகிறோம் என்று அறியாமல் பக்திப் பரவசத்தில் ஏமாந்து கொண்டிருக்கிறார்கள்.
கள்ள உள்ளங்களைக் கண்ட அதிருப்தியில்.. இறைவன் வேண்டுவது..நம் ..மனத்தால், எண்ணத்தால், செயலால் தூய்மையே
தவிர வேறொன்றும் இல்லை. பொருட்செல்வம் வேண்டாமலே… அருட்ச்செல்வம் தருவான்… இறைவன்…!

“பிறவிப் பெருங்கடல் நீந்துவர்: நீந்தார்
இறைவ னடிசேரா தார்” – தெய்வப் புலவர் திருவள்ளுவர்.. “இன்பத் தருகத் திறைவன் மலரடி…..”

” பரமபிதாவே…! அவர்களை மன்னியும்..தாம் செய்வது இன்னது என்பதைத் தாமே அறியாது செய்கிறார்கள்..” என்று
இயேசுநாதர் …வேண்டியது போல…..நடராஜரிடம்… முறையிட்டு கோயிலை விட்டு வெளியே வந்தேன்.

***

Series Navigationஇந்திய மொழி இலக்கியங்களை பிரெஞ்சு நண்பர்களுக்கு அறிமுகப் படுத்தும் ஒர் வலைப்பூசோவின் ‘ என்று தணியும் இந்த சுதந்திர தாகம் _ மேடை நாடகம் (நகலச்சு)
author

ஜெயஸ்ரீ ஷங்கர்

Similar Posts

14 Comments

  1. Avatar
    punai peyaril says:

    ரொம்ப ந்ன்னா சொன்னேள் போங்கோ.. ஆனா, கடைசியில் ஜீஸஸை இழுத்தது இடரே…

    1. Avatar
      jayashree says:

      ஜீசஸை இழுத்தது இடர்…என்றால்…வருந்துகிறேன்…!

  2. Avatar
    ஜெயபாரதன் says:

    தில்லையில் கள்ள் உள்ளம்” என்ற நிஜக் கதையில் நுணுக்க மான விளக்கங்கள் பல மினுக்கின்ற்ன. வாசகரைத் தில்லை நடராஜர் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார் ஜெயஸ்ரீ. பகடை ஆடப்படும் பணம் தெய்வத்தின் முன் தளத்தில் பரத நாட்டியம் புரிவதைத் துணிச்சலுடன் நல்ல அபிநயமோடு காட்டுகிறார். அதற்கு அவரே பலியாகி வருந்துவதும் கதையில் காணக் கிடைக்காத காட்சி.

    முடிவில் ஏசுநாதரின் இறுதிப் பொன்மொழி மகுடமாய்ச் சூடப் படுவது எதிர்பாராத மின்னல் திருப்பம்.

    சி. ஜெயபாரதன்

    1. Avatar
      jayashree says:

      நன்றி ஐயா…ஒருவருக்கு இடராக இருப்பது…உங்களுக்கு மகுடமாக இருக்கிறது….இது தான் விந்தை மனது…
      இந்த விந்தை உலகில் எனது சொந்த அனுபவத்தில் நான் கற்ற பாடம் தான் எத்தனை….எத்தனை…!
      தங்களின் ஆழ்ந்த நோக்கிற்கு மிக்க நன்றி.

  3. Avatar
    punai peyaril says:

    இப்படியாக, ஜயபாரதன் தனது மதப் பற்றை கான்பிக்கிறார். இரும்பு அடிக்கற இடத்தில் ஈ க்கு என்ன வேலை என்பது போல், இயேசு நாதர் என்பவருக்கு ஆன்மீக வெளிச்சம் தந்த இந்து மத விஷய அனுபவத்தில் , அவரைப் பற்றிச் சொன்னது இடரே…

  4. Avatar
    Paramasivam says:

    I request MrMalarmannan,who lived in Chidambaram for many years to comment about this sorry state of affairs.Whatever bad happens in Hindism,even quotations from Jesus could not be tolerated by somebody.But they will not take any step to correct the affairs.

  5. Avatar
    Kavya says:

    உண்மைச்சம்பவம். ஆனால் எல்லாருக்கும் தெரிந்த ஒன்றே. தில்லை தீட்சிதர்கள் இப்படிக்கோயிலைக்கொள்ளையடிக்கப்பயன்படுத்துவதில் தமிழகத்தில் முதன்மையானவர்கள். ஏனெனின் மற்ற கோயில்களிலும் இது நடைபெறுகிறது. கோயிலில் ஊழியம் செய்வோர் அக்கோயிலில் உறையும் தெய்வத்தைக்கண்டு பயப்படுவதில்லையென்றுதான் சொல்லவேண்டும். அடிக்கடி திருப்பதியில் ஊழியர்கள் போலீசில் பிடிபடும் நிகழ்ச்சிகளே சான்று. நேற்றிலிருந்து டைம்ஸ் ஆப் இந்தியா திருப்பதி கோயிலைப்பற்றி எழுதிவருகிறது படிக்கவும்.

    பகதர்கள் தெய்வநிந்தனையாகி விடுமோவென இத்தீச்செயலகளைக்கண்டு வாளாவிருந்துவிடுகின்றனர் எழுத்தாளரின் தாயாரைப்போல. எழுத்தாளருக்கு அத்தெய்வ நிந்தனை தம்மாலும் ஆகிவிடுமோ என இயேசுவின் சொற்களினால் அவர்களை மன்னிக்கிறார். அத்தாய் செய்தது அவரைப்பொறுத்தவரை சரி; எழுத்தாளர் செய்தது அவரைப்பொறுத்தவரை சரி.

    தீட்சிதர்கள் செய்ததும் அவர்களைப்பொறுத்த்வரை சரி. ஏனென்றால், பக்தனுக்குத்தான் கடவுள். பூஜாரிக்கு அது பணம் கொடுக்கும் காமதேனு.

    1. Avatar
      jayashree says:

      தங்களின் கருத்தும் உண்மையே…இது நடந்து மனதை உறுத்திய போது சரியாத் தவறா என்பதை விட
      பக்தி எங்கே போகிறது? என்ற நோக்கோடு எழுதப் பட்டது.

  6. Avatar
    Dr.G.Johnson says:

    What JAYASRI SHANKAR has written is totally true. I have been inside the temple during my childhood and was awed by the structures inside. Later on when I visited the temple a few years ago for particulars for my novel, I was barred from taking a video at the entrance itself. I wonder why this is so in the temples in particular.What is the hidden agenda behind this ” prohibition ” for the regular devotee? And why this privilege for the foreigners who bribe them with money? I thank JAYASRI SHANKAR for depicting this true incident for the readers of THINNAI!PITHAVE IVARGALAI MANNIYUM…THAANGAL SEIVATHU INNATHENDRU ARIYAATHIRUKKIRRAARGALE!

  7. Avatar
    jayashree says:

    மிக்க நன்றி…நிறைய அறிந்துகொள்ள முடிந்தது.

  8. Avatar
    jayashree says:

    மிக்க நன்றி…நீங்கள் பார்த்ததும்…நினைத்ததும் சரியே..இன்றும் நிலை மாறவில்லை…தங்களின்
    கருத்துக்கும்….பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.

Leave a Reply to jayashree Cancel reply

Your email address will not be published. Required fields are marked *