எங்கள் நடைச் சேற்றில் சாத்தான் விதைகளின் முளை. உழக்கும் கால்களைத் தடவி அது அங்கக் கொடியாய்ப் படரும். நிலத்தின் படுக்கைகள் ஒவ்வொரு இராப்பொழுதிலும் கசங்கிப் போகிறது. அந்தரங்கத் துணையொன்று இரகசியங்களில் பறந்தோடும் மின்மினிகளைப் பிடித்தொட்டுகிறது. மெதுவாய்த் தின்னும் பூச்சிகளால் கரைந்து போகிறதெல்லாம். சாத்தானின் பொழுதுகளில் ஒளிப்பேதம் எங்கே? ஆச்சரியங்கள் மயங்கிய சாதாரண நாளொன்றில் நிரந்தரமாயிற்று நிர்வாணம். நிலத்தைப் புணருமுடல்களின் கீழ் கசங்கிப் போகிறது காலம். -ந.மயூரரூபன்
நான் நடக்கின்ற பாதை எரியமுடியாத இருளினடிக்கட்டைகளால் கிழிபட்டிருந்தது. ஒவ்வொரு காயக்கிடங்கிலும் செந்நிறமுறிஞ்சிய நினைவுகளை விழுங்கிய எறும்புகள் பரபரத்தோடி விழுகின்றன. பாதையின் முடிவற்ற வரிகளைஒவ்வொருவரிடமும் காவியபடி ஊர்ந்துவருகின்றன சிவந்த எறும்புகள். உலரமுடியா அழுகையினீரம்இருட்கட்டைகளிலிருந்து சிந்துகிறது. ஓலச்சுவர்களின் வெறுமையில் நாக்கறுந்த பல்லியொன்றினசைவு எதுவுமற்றுக் கரைந்துபோகிறது. நினைவுப்பாலையாகிவிட்ட இந்த நிலத்திலிருந்து காயக்கிடங்கில் எறும்புகள் மொய்த்த என்னைப்பார்க்கிறேன்.இருட்கட்டைகளினீரம் எங்கும்டரஏதுமற்றுக் கரைந்துபோகிறேன். –ந.மயூரரூபன்