ரிங்கிள் குமாரி – பாகிஸ்தானின் கட்டாய மதமாற்றக் கலாசாரம்

மார்வி சிர்மத் 

பெண்கள் படிப்பதற்கு எதிராக ஆணை பிறப்பித்த தாலிபான் இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு எதிராக உறுதியுடன் நின்று, பெண்கள் படிக்க உதவ வேண்டும் என்று உறுதியுடன் அறிவித்த மலாலய் யூசுப்ஜாய் என்ற பாகிஸ்தானிய பெண்ணே நாம் அனைவரும் பார்க்க விரும்பும் பாகிஸ்தானின் முகம்.  ஒரு பக்கம் பெருமையும் மறுபக்கம் மறுதலிப்புமாக நாம் ரிங்கிள் குமாரியை உதாசீனம் செய்து மலாலய் யூசுப்ஜாயை பார்க்க விரும்புகிறோம். ரிங்கிள் குமாரி 19 வயது சிந்தி இந்து பெண். இவர் கடத்தப்பட்டு கட்டாயமாக இஸ்லாமுக்கு மதம் மாற்றப்பட்டு நவீத் ஷா என்ற முஸ்லீமுக்கு கட்டாயமாக மணம் செய்துவைக்கப்பட்டார்.  பாகிஸ்தானின் இந்த முகத்தை காட்டுபவர்கள் பாகிஸ்தானின் துரோகிகள் என்றும் பாகிஸ்தானை வெறுப்பவர்கள் என்றும் திட்டப்படுகிறார்கள்.  நமது சமூகத்தின் அவலங்களை திருத்த முயல்வது துரோகமாக இருந்தால், நானும் அதனை பண்ண விழைகிறேன். ரிங்கிளின் கதை எல்லோருக்கும் உரத்து கூறப்பட வேண்டும். பெப்ரவரி 24 ஆம் தேதி நவீத் ஷாவாலும் இன்னும் நான்கு பேர்களாலும் கடத்தப்பட்டார். மியான் அஸ்லம், மியான் ரஃபீக், அவர்களின் தந்தை மியான் மித்து ஆகிய முஸ்லீம் இமாம்கள் சம்பந்தப்பட்டிருப்பதால், இவர்களை பற்றி FIR பதிய போலீஸ் மறுத்தது. அந்த பெண் கோட்கி நீதி மன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். அந்த பெண் தான் பிறந்த குடும்பத்துடன் செல்ல விரும்புவதாக நீதிபதியிடம் சொன்னார். ஆனால் நீதிபதி அந்த பெண்ணை போலீஸ் கஸ்டடியில் சுக்கூர் பெண் போலீஸ் ஸ்டேஷனில் வைக்கும்படி உத்தரவிட்டார். இது பெரிய பிரச்னையானதும், பாகிஸ்தானின் ஜனாதிபதி ஜர்தாரி, கட்டாய மதமாற்றத்துக்கு எதிராக பத்திரிக்கை செய்தி ஒன்று விடுத்திருந்தார். பாகிஸ்தான் ஜனாதிபதிக்கு எதிராகவும், அவரது கட்சியின் உப தலைவருக்கு எதிராகவும் மியான் மித்து நீதிமன்றத்திலேயே எல்லோருக்கும் முன்னால் எச்சரிக்கை விடுத்தார். ரிங்கிள் அவரது பிறந்த குடும்பத்திடமே கொடுக்கப்பட்டால், மிர்பூரையே எரித்துவிடுவேன் என்று மிரட்டினார். ரிங்கிளின் தாய்வழி மாமா, ராஜ்குமார், “எதுவந்தாலும் சரி. நீதியே நிலைக்க வேண்டும்” என்று கூறினார். அந்த உறுதி,  பல வருடங்களாக ஒடுக்குமுறையிலும் அடக்குமுறையிலும் அநீதியிலுமே வாழ்ந்து வந்ததால் வந்த உறுதியாக இருக்கலாம். “பல ஆண்டுகளாக இது போன்று இந்து பெண்களை கடத்திச் செல்வதும், கட்டாயமாக மதம் மாற்றுவதும் நடந்துவருகிறது. இந்த ஒடுக்குமுறைக்கும், அநீதிக்கும் எதிராக எந்த ஒரு குரலும் இல்லை” என்று ரிங்கிள் குமாரியின் குடும்பத்து வக்கீல் அமர் லால் கூறினார்.

 

பத்திரிக்கைகளும், சிவில் சமூக உறுப்பினர்களும் ரிங்கிள் குமாரிக்கும் ஆதரவு தெரிவித்தாலும், அரசாங்கத்தின் பதில் புதிராகவே இருக்கிறது. 2007இல் இந்து கவுன்ஸில்  கட்டாய மதமாற்றங்களுக்கு எதிராக சமர்ப்பித்த புகாரை மீண்டும் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிக்கு கொடுத்திருக்கிறார்கள். அந்த புகாரில் ரிங்கிள் குமாரி உட்பட பலரது பெயர்களும் இணைக்கப்பட்டிருக்கின்றன. இந்த புகாரால் தைரியம் கொண்ட ரிங்கிள் குமாரி, மார்ச் 26இல் தனது உள்ளத்தை  திறந்து தலைமை நீதிபதியிடம் பேசினார்.  அதன் பின்னர் தலைமை நீதிபதி தேசிய மற்றும் உலக பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் ரிங்கிள் தனது சொந்த வீட்டுக்கு போக விரும்புவதாகவும் மற்றொரு கடத்தப்பட்ட இந்து பெண்ணான லதா, முடிவெடுக்க முடியாமல் இருப்பதாகவும் கூறினார். பெண்கள் தாளமுடியாத மன அழுத்தத்தில் இருப்பதாகவும், தொடர்ந்து அழுதுகொண்டே இருப்பதாகவும், போலீஸுடன் போக விருப்பமில்லாமல் இருப்பதாகவும் அவர் பத்திரிக்கையாளர்களிடம் கூறினார்.  எனவே அவர்கள் சுதந்திரமாக எந்த ஒரு கருத்தையும் கூறுவதற்கு முன்னால், ஒரு சுதந்திரமான சூழ்நிலை நிலவ வேண்டும் என்று தலைமை நீதிபதி கூறினார். ஓய்வு பெற்ற நீதிபதி மஜிதா ரஜ்வி நடத்தும் பெண்கள் பாதுகாப்பகத்துக்கு அந்த பெண்கள் போக வேண்டும் என்று ஆணையிட்டார்.  அவர் இந்த அறிவிப்பை செய்ததும், எல்லா பத்திரிக்கையாளர்களுக்கும் தொலைக்காட்சியினருக்கும் முன்பு ரிங்கிள் வீல் என்று கதறி, தான் தன் அம்மாவின் வீட்டுக்கு போக விரும்புவதாக அழுதார்.

 

தலைமை நீதிபதி அந்த பெண்ணை பாதுகாப்பகத்துக்கு அனுப்ப ஆணையிட்டதும், ரிங்கிள் நீதிமன்றத்திலேயே அழ ஆரம்பித்ததையும், கதறியதையும் , அம்மாவீட்டுக்கு போக விரும்பியதையும் KTN TV பதிவு செய்தது.  பாதுகாப்பகத்துக்கு போக மாட்டேன், நான் இங்கே நீதிமன்றத்திலேயே தூங்கப்போகிறேன் என்று கூக்குரலிட்டார்.  இந்த அமைப்பில் அவருக்கு நீதி கிடைக்காது என்றும், இந்த முஸ்லீம்பெரும்பான்மை சமூகத்தில் அவரை கட்டாயப்படுத்தி முஸ்லீமாக மாற்றுகிறார்கள் என்றும், ஒவ்வொரு முஸ்லீமும் மற்ற முஸ்லீமுக்குத்தான் உதவுகிறார் என்றும் தனக்கு யாரும் உதவவில்லை என்றும் அவர் கதறியது இதயத்தை உருக்குவதாக இருந்தது. இந்த விசாரணைக்கு முன்பு நடந்த ஒவ்வொரு நிகழ்ச்சியும், பாகிஸ்தானில் நீதி அமைப்பின் கேவலத்தையும், நமது அமைப்புகளின் காலாவதியான ஒழுக்கத்தையும், நமது ஒட்டுமொத்த போலித்தனத்தையும், கையாலாகாத்தனத்தையும் தெள்ளென காட்டியது. நமது அரசாங்கத்தின் உயர்ந்த பதவியில் உள்ளவர்கள் சமூகத்தின் கேவலமான பிரகிருதிகளை கட்டுப்படுத்த முடியாமல் இருப்பதை காட்டியது.

 

மிர்புர் மதெலோ நீதிமன்றத்தில் நடப்பதை பார்க்க இந்து சமூகம் முழுக்க முழுக்க தடுக்கப்பட்டிருந்தது. ஆனால், எதிர்தரப்புக்கோ எந்த விதமான தடையும் இல்லை. ரிங்கிள் குமாரியின் குடும்பத்தினர் நான்கு பேர்களே கோர்டுக்குள் அனுமதிக்கப்பட்டார்கள். கோர்ட் ரூமுக்குள் இரண்டு பேரே அனுமதிக்கப்பட்டார்கள். ஆனால் மியான் மித்துவின் ஆட்கள் ஆயிரக்கணக்கானவர்கள் கோர்ட்டுக்குள்ளும் கோர்ட் ரூமுக்குள்ளும் குழுமியிருந்து கோஷமிட்டார்கள். பகிரங்கமாக ஆயுதங்களை காட்டிகொண்டு அல்லாஹூ அக்பர் என்று கோஷமிட்டுகொண்டிருந்த தாடிக்காரர்களை கோர்ட்டோ நீதிபதிகளோ வெளியே போகச்சொல்லவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் ரிங்கிள் குமாரி எப்படி போலீஸ் கஸ்டடியில் இருந்துகொண்டே , அதுவும் மியான்மித்துவின் ஆட்கள் சுற்றியிருக்கும் போதே. காதில் புளூடூத் போனை ஒட்டிகொண்டு, பத்திரிக்கையாளர்கள் பேட்டிக்கும் ஏற்பாடு செய்திருக்கிறார் என்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம். மேற்குலகம் இஸ்லாமுக்கு எதிராக திட்டமிடுவதால் அது கெட்டது. ஆனால் மேற்கத்திய தொழில்நுட்பம் இஸ்லாமை பரப்ப ரொம்ப நல்லது போலிருக்கிறது!

அவரிடம் புளூ டூத் வழியாக பத்திரிக்கையாளர்களிடம் என்ன சொல்லவேண்டும் என்று சொல்லிகொடுத்துகொண்டிருந்தார்கள். இஸ்லாமை தழுவ அவரை உந்தியது எது என்று பத்திரிக்கையாளர்கள் கேட்ட கேள்விக்கு “சூரா எக்லவுஸ்” என்று பதில் தந்தார். அதாவது “ஸூரா இக்லாஸ்” என்பதை அவர் சொல்ல இரண்டு முறை  முயற்சி செய்து தோற்றார். ஸூரா இக்லாஸில் என்ன சொல்லியிருக்கிறது என்று பத்திரிக்கையாளர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல தெரியாமல்  முழித்த  ரிங்கிள் குமாரியை மியான் மித்துவின் மகன் பலவந்தமாக இழுத்துச் சென்றார். ஆமாம் நீங்கள் சரியாகத்தான் படித்தீர்கள். போலீஸ் கஸ்டடி என்று சொன்னாலும், அவர் மித்துவின் ஆட்களின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறார்.  அந்த பத்திரிக்கையாளர் சந்திப்பிலேயே ரிங்கிள் கடத்தப்பட்டு சில மணி நேரங்களுக்குள் திருமணம் செய்விக்கப்பட்டதாக கூறப்படும் நவீத் ஷாவை ரிங்கிளுக்கு தெரியவே தெரியாது என்பதையும் பத்திரிக்கையாளர்கள் அறிந்தார்கள்.  காலை 5 மணிக்கு அவர் தனது வீட்டிலிருந்து கடத்தப்பட்டார். மாலை மூன்று மணிக்கு அவர் திருமணம் செய்திருக்கிறார்.  ரிங்கிள்  இஸ்லாமையே தழுவியிருந்தாலும் இவ்வளவு வேகத்தில் “ஒரு சுதந்திரமான பெண்” ஒரு முக்கியமான முடிவை மூன்று மணி நேரங்களுக்குள் எடுக்கும்படி என்ன அவசரம் என்று பெருமை தங்கிய நீதிமன்றம் மியான் மித்துவிடம் கேட்டிருக்கலாம்.

நாம் பல முக்கியமான விஷயங்களை கேட்பதே இல்லை என்பது கேவலமானது. யார் இந்த மியான் மித்து? இந்த வழக்கில் அவருக்கென்ன அக்கறை? பர்ச்செண்டி ஷெரீப் என்ற மசூதியின் தலைவராக அவர் சில பத்திரிக்கைகளில் கூறப்படுவது உண்மையல்ல.  அவருக்கு நவீத் ஷாவுடன் எந்த விதமான தொடர்பும் இல்லை. இந்த நவீத் ஷாவுடன் தான் வீட்டை விட்டு ஓடிச்சென்று இஸ்லாமை தழுவி திருமணம் செய்துகொண்டதாக கதை!  மியான் அப்துல் காலிக் என்பவர் மியான் மித்துவின் சொந்தக்கார. இவர்தான் பர்ச்செண்டி ஷெரீப் மசூதியின் தலைவர். இவர் மியான் மித்து இஸ்லாமின் பெயரால் செய்ததை கடுமையாக கண்டனம் செய்கிறார். இன்னும் பல மசூதி தலைவர்கள் மியான் மித்து செய்ததை கண்டனம் செய்கிறார்கள். கட்டாய மதமாற்றம் மதமாற்றமே அல்ல, அது பாவம் என்றும் கூட மௌலான ஷிரானி கூறியிருக்கிறார்.

 

ஏப்ரல் 10ஆம் தேதி, மித்து தன் ஆதரவாளர்களுடன் இஸ்லாமாபாத்தில் மிகவும் விலையுயர்ந்த ஹோட்டலில் மாநாடு நடத்தினார். இந்த மாநாட்டில் சுப்ரீம் கோர்ட் அவருக்கு எதிராக தீர்ப்பு அளித்தால், அவர் தீர்ப்பை மதிக்கமாட்டார் என்றும் இஸ்லாமிய ஷரியாவையே மதிப்பார் என்றும் அறிவித்தார்.  ஜனாதிபதி வேறுமாதிரி கூறியிருக்கிறாரே என்று மியான்மித்துவிடம் கேட்டபோது, “நான் ஜனாதிபதியை பார்த்துகொள்கிறேன். எனக்கு எதிராக யாரும் சவால் விட முடியாது” என்றார். மித்துவின் மிரட்டல்கள், மித்துவின் ஆட்கள் ரிங்கிளின் தாத்தா மனோஹர் லால் அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியது ஆகியவற்றின் பின்னால், ஒட்டுமொத்த குடும்பமே சொந்த வீட்டையும் ஊரையும் விட்டு கிளம்பி கராச்சிக்கு சென்றார்கள்.  இன்னும் மூன்று முக்கிய இந்து தலைவர்கள் மியான் மித்து என்ற இந்த இமாமின் மிரட்டலின் கீழ் இருக்கிறார்கள்.  அமர் லால் என்ற மனித உரிமை வழக்கறிஞர், சாத் ராம் என்ற துறவி, ரிங்கிளின் தாய்மாமா ராஜ் குமார் ஆகியோரே இந்த மூவர்.

மார்ச் 18ஆம் தேதி விசாரணை முடிந்து ரிங்கிள் தனது அம்மாவின் வீட்டுக்கே போகலாம் என்று தீர்ப்பானால், ரிங்கிளின் குடும்பத்துக்கும் இந்த மூவருக்கும் என்ன நடக்கும் என்பதை சுப்ரீம் கோர்ட்டின் முன் உள்ள முக்கியமான கேள்வியாக இருக்கும். யார் இவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பார்கள்? ஏழை பாழைகள் ஒடுக்கப்பட்டவர்கள் இப்படிப்பட்ட அரசாங்க அமைப்புகளை நம்பி வாழ முடியுமா? கோட்கி கிராமத்தில் வாழும் இந்துக்களுக்கு சுப்ரீம் கோர்ட் கொடுக்கும் நீதியோ பாதுகாப்போ போதுமானதாக இருக்குமா? அது தரமுடியாது என்றால் யார் தருவார்கள்? தனது வரலாற்றில் சுப்ரீம் கோர்ட் தனது மிகப்பெரிய சவாலை இந்த வழக்கில்தான் எதிர்கொள்கிறது. 2007இல் சுதந்திரமான நீதி அமைப்புக்காக தெருவில் இறங்கி போராடிய இந்து சமூகமே இன்றைய நசுக்கப்பட்ட சமூகமாக இருக்கிறது. இந்த நீதி அமைப்பு போலீஸ் மற்றும் கீழ் கோர்ட்டுகளை கொண்டதாக இருக்கிறது. ரிங்கிள் தனது வீட்டுக்கு திரும்பி சென்றாலும், கோட்கி போலீஸ் மீதும், கீழ் கோர்ட் நீதிபதிகள் மீதும், மியான் மித்து மற்றும் அவரது மகன்கள் மீதும் சட்டப்பூர்வமான விசாரணை வேண்டும்.  ஏன் கடந்த ஆறு மாதங்களில் இந்து பெண்களை கடத்துவதும், கிறிஸ்துவ சிறுமிகளை கடத்துவதும், கட்டாய மதமாற்றமும் அதிகரித்திருக்கிறது? “எங்களை நாட்டை விட்டு துரத்த விரும்புகிறார்கள். எங்கள் சொந்த தாய்நாட்டை விட்டு துரத்த விரும்புகிறார்கள். நாங்கள் அஞ்சமாட்டோம்” என்று ரிங்கிளின் வழக்கறிஞர் அமர் லால் கூறுகிறார்.

 

பலம் பொருந்தியவர்கள் பலமற்றவர்களை நசுக்கும்போது அதற்கு அரசு அமைப்பையே உபயோகிக்கும்போது நீதித்துறையே கேலிக்கூத்தாகிவிடுகிறது. மியான் மித்து சட்டத்தை மட்டுமே கேலி செய்யவில்லை, மதிப்புக்குரிய நீதிமன்றத்தையும் துச்சமாகத்தான மதித்தார். ஆயுதம் தாங்கிய தனது ஆதரவாளர்களை கோர்ட்டுக்குள்ளேயே அனுப்பி மிரட்டியிருக்கிறார். ரிங்கிள் போலீஸ் கஸ்டடியில் இருப்பதாக சொல்லப்படும் அந்த நேரத்திலேயே தனது பிரத்யேக காரில் ரிங்கிளை கூட்டிவந்து அவருக்கு பிரஸ் மீட் வேறு ஏற்பாடு செய்கிறார். பாராளுமன்றத்தை அவமரியாதை செய்கிறார். ஜனாதிபதியையே அவமரியாதை செய்து” ஜனாதிபதியை நான் பார்த்துகொள்கிறேன்” என்கிறார். அரசாங்கத்தின் எந்த தூணாவது இந்த அவமரியாதைகளுக்கு உரித்த பதில் தருமா?

http://www.thefridaytimes.com/beta2/tft/article.php?issue=20120413&page=9

http://www.thefridaytimes.com/beta3/tft/article.php?issue=20120525&page=6

http://www.dailytimes.com.pk/default.asp?page=2012\04\19\story_19-4-2012_pg7_3
http://pakobserver.net/detailnews.asp?id=151043

http://www.youtube.com/watch?v=b3X0pU4N5jQ&feature=related

 http://www.bbc.co.uk/news/world-south-asia-17272943

 

இது சம்பந்தமாக தமிழ் தினசரி “தினத்தந்தி” தலையங்கம் எழுதியது.

அந்த தலையங்கம் இதோ.

இந்த தலையங்கத்துக்கு தமிழக இஸ்லாமிய கட்சிகள் மற்றும் அமைப்புகள் எதிர்வினை செய்துள்ளன.

தவ்ஹீத் ஜமாத்தின் எதிர்வினை

http://vasudevanallurtntj.blogspot.com/2012/05/blog-post_5350.html

தமுமுக கட்சியின் தளத்தில் எதிர்வினை

http://tmmk.in/index.php?option=com_content&view=article&id=2001:2012-04-28-12-25-26&catid=42:press-reless&Itemid=160

 இது சம்பந்தமான ஒரு பாகிஸ்தான் தொலைக்காட்சி செய்தி

 

Series Navigationபெட்டி மஹாத்மியம்வலியும் வன்மங்களும்