அக்னிப்பிரவேசம்-24

தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத்

yandamoori@hotmail.com

தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன்

tkgowri@gmail.com

நள்ளிரவு தாண்டியிருக்கும். சாஹிதிக்கு திடீரென்று விழிப்பு ஏற்பட்டது. ரொம்பவும் தாகமாய் இருந்தது. எழுந்து தண்ணீருக்காகப் பார்த்தாள். அறையில் எங்குமே இல்லை. அவளுக்கு ஜுரம் வந்தது முதல் நிர்மலா அந்த அறையிலேயேதான் படுத்துக்கொண்டாள். தாயின் தவிப்பைப் பார்க்கும் போதெல்லாம் அவளுக்கு அன்பும், இரக்கமும் பெருக்கேடுத்துக் கொண்டே இருந்தன.

நிர்மலா ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.

சாஹிதிக்கு தூக்கம் வரவில்லை. தாகம் அதிகரித்தது. தாயை எழுப்புவதில் விருப்பம் இல்லாமல் மெதுவாய் எழுந்திருந்தாள். ரொம்ப சோர்வாக இருந்தது. அடிமேல் அடி வைத்துக்கொண்டே டைனிங் ஹாலை நோக்கி நடந்தாள். அவ்விடமெல்லாம் இருட்டாய் இருந்தது. விளக்கைப் போட சுவிட்சின் மீது போன கைகள் அப்படியே நின்றுவிட்டன.

“ஏதோ சத்தம் கேட்குது. அம்மா எழுந்துட்டாங்க போலிருக்கு சுவாமி.” ரங்கம்மாவின் குரல்.

“காலை வரையிலும் எழுந்திருக்க மாட்டாள். ஒன்றும் ஆகாது.” பரமஹம்சா சொல்லி கொண்டிருந்தான்.

“நிஜமாகவே என் வயிற்றில் குழந்தை பிறக்கப் போகுதா சுவாமி?”

“கண்டிப்பாக. உனக்குப் பிறக்கப் போகும் குழந்தைக்கு தெய்வ அம்சம் இருக்கும். அது கடவுளின் உத்தரவு. அந்த விஷயம் முந்தாநாள் உனக்காக பூஜை பண்ணியபோது தான் எனக்குத் தெரிந்தது.”

“உங்க நன்றியைத் தீர்த்துக் கொள்ளவே முடியாது சுவாமி. என்னைப் போன்ற வேலைக்காரிக்கிக் கூட கருணைக் காட்டி இருக்கீங்க. உண்மையிலேயே நீங்க கடவுளின் அவதாரம்தான்.” ரங்கம்மா பத்தி பரவசத்துடன் பேசிக்கொண்டிருந்தாள்.

சாஹிதி அறைக்குத் திரும்பி வந்துவிட்டாள். முன்பாக இருந்தால் இந்தச் சம்பவத்தைப் பார்த்து திக்பிரமை அடைந்து இருப்பாள். இப்பொழுது அந்த நிலைமை தாண்டிவிட்டது. எல்லாம் சாதாரண விஷயங்களாகவே தென்பட்டன.

ரங்கம்மா எவ்வளவு உறுதியாய் நம்புகிறாள் அவனை? இப்படிப்பட்ட ஆதரவு இல்லாதோர் எல்லோரையுமே கடவுளின் பெயரைச் சொல்லி நம்பவைத்து ஏமாற்றுவது இவனுக்குக் கைவந்த கலை போலும். ரங்கம்மா கிடக்கட்டும். படிப்பு அறிவு இல்லாதவள். புத்தி சாதுரியம் கிடையாது. ஆனால் தாய்? அவ்வளவு படித்துவிட்டு அவனை அவ்வளவு தூரம் நம்புவதும், கண்மூடித்தனமாய் வழிபடுவதும்… யோசிக்க யோசிக்க வருத்தமும், இயலாமையும் அவளை சூழ்ந்துகொண்டன.

சாஹிதி எழுந்து புத்தக அலமாரியைத் திறந்தாள். சிநேகிதி சொன்ன பெட்டிக்கடையில்தான் கிடைத்தது அந்த பவுடர். கொஞ்சம் எடுத்து வாயில் போட்டுக்கொண்டு சுவைத்தாள். ஐந்து நிமிஷம் கழித்து இனிமையான மயக்கம்… காற்றில் மிதப்பது போன்ற உணர்வு. எந்த சிந்தனையும் இல்லை. அந்த மயக்கத்தின் தாலாட்டில் அப்படியே உறங்கிவிட்டாள். அந்த உறக்கத்தில் சாஹிதிக்கு ஒரு கனவு வந்தது. ரங்கம்மாவையும், பரமஹம்சாவையும் சமையலறை தரையில் நிர்வாண கோலத்தில் பார்த்துவிட்ட நிர்மலா, காளியாய் மாறுகிறாள். அவனைத் தெருவில் இழுத்து வந்து துரத்தி துரத்தி அடிக்கிறாள்.

மறுநாள் காலையில் எழுந்ததுமே ஜுரம் முற்றிலுமாய் தணிந்து போய்ப் புத்துணர்ச்சி ஏற்பட்டது சாஹிதிக்கு. யாரோ வந்த சந்தடி கேட்டுத் திரும்பிப் பார்த்தாள். பரமஹம்சா முறுவலுடன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

“ஏம்மா, தொந்தரவு செய்துவிட்டேனா?” அன்பாய்க் கேட்டான்.

சாஹிதிக்கு ஏனோ குணசேகரம், பரத்வாஜும் நினைவுக்கு வந்தார்கள். அவர்களைப் போலவே தானும் இவனை நன்றாக அழ\வைக்க முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டே, படுக்கையிலிருந்து எழுந்து கொண்டாள்.

“இல்லை அங்கிள். வாங்க” என்று வரவேற்றாள்.

“உட்கார்.. உட்கார்.. நான் கொடுத்த மருந்து நன்றாக வேலை செய்திருக்கு. பார்த்தாயா? இன்றைக்கு தெளிவாய் இருக்கு உன் முகம்.”

“உண்மைதான் அங்கிள். உங்கள் கையால் எது கொடுத்தாலும் அது தெய்வ பிரசாதம் ஆகிவிடும் என்று ரங்கம்மா கூடச் சொன்னாள்.”

“பின்னே? அந்த விஷயம் எல்லோருக்குமே தெரிந்திருக்கிறது. ஆனால் நீ மட்டும் கொஞ்ச நாள் படிப்பிலேயே கவனம் செலுத்து. எதற்கும் லாயக்கு இல்லாத மாப்பிள்ளைகளைப் பற்றி யோசிக்காதே. உன் மனதில் என்ன இருக்கு என்று எனக்கு நன்றாகப் புரிந்துவிட்டது. அதைத் தெரிந்துகொள்.”

“என்னவோ அங்கிள். உங்களுக்குப் புரிந்தாற்போல் என் மனசு எனக்குப் புரிய மாட்டேங்கிறது. ரொம்ப குழப்பமாய் இருக்கு” என்றாள் சிரிப்பை அடக்கிக்கொண்டே. அவளுக்கு நேற்றிரவு கண்ட கனவு நினைவுக்கு வந்தது.

“நான் சொல்லட்டுமா? உனக்கு வேண்டியதை வேறு யாரோ பறித்துக்கொண்டு விட்டாற்போல் வருத்தமாய் இருக்கும். அப்போ தனியள் ஆகிவிட்டோம் என்று வருந்துவாய். ஃப்ரஸ்ட்ரேஷன் வந்துவிடும். என்ன பேசுகிறோம் என்று உனக்கே தெரியாமல் போய்விடும். அப்படித்தானே?”

“ஆமாம் அங்கிள். இதெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரியும்?” வியப்புடன் கேட்டாள்.

பரமஹம்சா எழுந்து அவள் அருகில் வந்தான். அவள் முகத்தைத் தன் பக்கமாய்த் திருப்பி, அவள் கண்களையே நேருக்கு நேராய்ப் பார்த்தபடி சொன்னான்.

“நீ எனக்காகப் பிறந்திருப்பதால்! நீ மனதில் என்ன நினைத்துக் கொண்டாலும் எனக்குத் தெரிந்து போய் விடுவதால்! அன்பு இருக்கும் இடத்தில்தான் பொறாமையும் இருக்கும். நான் எல்லோர் மீது அன்பு செலுத்துவதை உன்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. என்மீது இருக்கும் உன் மனதை வேறு ஆணின் பக்கம் திருப்ப முயன்று தோற்றுப் போய்க் கொண்டிருக்கிறாய். அதனால் உன்மீது உனக்கே கோபம் வருகிறது.”

“அப்படித்தான் போலிருக்கு. எனக்கு ஒன்றுமே தெரியவில்லை.”

“இன்னும் நீ சின்னப் பெண். அதான் இன்னும் கொஞ்சநாள் படிப்பில் கவனத்தைச் செலுத்தச் சொல்கிறேன். உன் மனப்போராட்டம் தணிவதற்கு கொஞ்ச நாள் ஆகும். அன்பு என்பது நாம் வேண்டும் என்கிற போது ஏற்படுவது இல்லை. வேண்டாம் என்று நினைத்தால் போய்விடக் கூடியது இல்லை. யார்மீது எதற்காக ஏற்படுகிறது என்றும் தெரியாது. நீ இந்த விஷயத்தில் அனாவசியமாக வருந்தாதே. நான் அவ்வப்பொழுது வந்து உனக்கு தைரியத்தை அளிக்கிறேன். அவகாசம் வந்ததும் என்னுடையவளாக்கிக் கொண்டுவிடுகிறேன். அதற்குப் பிறகு உன்னை எந்தச் சிந்தனையும் பாதிக்காது.” அவன் குனிந்து அவளுடைய இரு கன்னங்களிலும் முத்தமிட்டான். அதற்குப் பிறகு அவள் உதடுகளை நோக்கிக் குனியப் போனான்.

சாஹிதி கவரமடைந்தாள். “யாரோ வருகிறார்கள்” என்று சரேலென்று எழுந்து நின்றாள். பரமஹம்சா சட்டென்று வெளியே போய் விட்டான். அவள் அப்படியே நின்றுவிட்டாள்.

ஒரு தாயுடனும், அவளுடைய மகளுடனும் கூட குடும்பம் நடத்துவதாகச் சொல்லும் இந்த அயோக்கியன் சமுதாயத்தில் கடவுள் அவதாரம்! வீட்டுத் தலைவியுடனும், வேலைக்காரியுடனும் சமமாய் சரசம் புரியும் இவன் சீர்திருத்தவாதி! தாய்க்கு இவன்மீது அளவுகடந்த நம்பிக்கை. இன்றைக்கு அவளோடு இவ்வாறு பேசினான் என்று தெரிந்தால் தாயின் இதயம் வெடித்து விடாதா? ஆனாலும் சொல்லித்தான் ஆகவேண்டும். அவனுடைய உண்மை சொரூபம் தெரிந்தாலொழிய அவளுக்கு ஞானோதயம் ஏற்பாது. சாஹிதிக்கு வருத்தமாக இருக்கவில்லை. சந்தோஷமாக இருந்தது. முதல்நாள் கண்ட கனவு நினைவுக்கு வந்தது. இனி இந்தச் சிக்கலான முடிச்சு அவிழ்ந்து விடப்போகிறது.

வெளியே பரமஹம்சா போய்விட்டாற்போல் கார் சத்தம் கேட்டது. “சாஹிதி! கல்லூரிக்குப் போகப் போவதில்லை என்று சொன்னாயாமே? உடம்பு சரியாக இல்லையா?” ஏறணு நிர்மலா வந்தாள்.

“இல்லை மம்மி! வந்து..” நிறுத்தினாள்.

“என்ன நடந்தது?”

“நடக்கக் கூடாதது நடந்துவிட்டது. தந்தையின் ஸ்தானத்தை கொடுத்திருந்த ஆள் வந்து என்னை வைப்பாட்டியாக வைத்துக் கொள்வதாய் சொல்லி ஆறுதல் சொல்லிவிட்டுப் போனான். உன்னோடும், என்னோடும் ஒன்றாக குடும்பம் நடத்தக் கூடிய சாமர்த்தியம் படைத்தவனாம். என்னை முத்தமிட்டு மேலும் வாக்குக் கொடுத்திருக்கிறான்.”

அவள் வார்த்தை இன்னும் முடியக்கூட இல்லை. நிர்மலா சரேலென்று எழுந்துகொண்டாள். “சாஹிதி! என்ன பேச்சு இது?” என்று கோபமாய்க் கத்தினாள்.

சாஹிதி மெதுவாய்ச் சொன்னாள். “உண்மைதான் மம்மி. பரமஹம்சா அங்கிள்… இன்னும் அங்கிள் என்ன? உங்கள் கல்யாணம் நடந்த அன்றே எனக்குத் தந்தையாகி விட்டான். எனக்குத் திருமணம் செய்து வைப்பதில் அவனுக்கு விருப்பம் இல்லை. என் குணம் நல்லது இல்லை என்று பிரசாரம் செய்தான். ஏன் தெரியுமா? என்னுடனும் சரசம் புரிவதற்காக. ஏமாந்துவிட்டோம் மம்மி! அவன் குள்ள நரி என்று தெரியாமல் சொத்தை முழுவதும் அவன் கையில் ஒப்படைத்து விட்டோம்.”

“ஷட் அப்! உனக்குப் பைத்தியம் பித்துவிட்டது. என்ன பேசுகிறாய் என்று உனக்கே தெரியவில்லை.”

“அவனும் இதையேதான் சொன்னான் மம்மி! அவனைக் கண்டால் எனக்கு பைத்தியமாம். அதனால்தான் இப்படி ஆகிவிட்டேனாம். உனக்குத் தெரியாது. ரங்கம்மாவைக் கூப்பிட்டுக் கேள். நள்ளிரவு நேரத்தில் அவள் பக்கத்தில் படுத்து வருவது தெரியும். அப்படிப்பட்டவனை மதிப்பது நம்முடைய தவறு. என் பேச்சில் நம்பிக்கை இல்லாவிட்டால் சாயந்திரம் வருவான் இல்லையா? அவனையே கேள். எல்லாம் வெட்ட வெளிச்சமாகிவிடும்.” என்றாள் சாஹிதி ஆவேசமாய்.

அவள் வார்த்தைகள் முடியக்கூட இல்லை. நிர்மலா அழுதுகொண்டே அறைக்குள் போய்க் கதவைச் சாத்திகொண்டு விட்டாள்.

‘அம்மா வருத்தப்பட்டாலும் பரவாயில்லை. உண்மையைத் தெரிந்து கொண்டாள். அதுவே போதும்’ என்று நினைத்துக் கொண்டாள் சாஹிதி.

அன்று முழுவதும் அந்த வீட்டில் பயங்கரமான நிசம்ப்தம் தாண்டவமாடிக் கொண்டிருந்தது. சாஹிதி பயப்படவில்லை. அவன் எப்பொழுது வருவான் என்று பார்த்துக் கொண்டிருந்தாள்.

மாலையில் அவன் வந்தான். அவர்கள் இருவரும் ரொம்ப நேரம் ஏதோ பேசிக் கொண்டார்கள். சாஹிதிக்கு பதற்றம் அதிகரித்தது. அதற்குப் பிறகு அவன் அவள் அறைக்கு வந்தான். அவன் முக அமைதியாய் இருந்தது. “அம்மா! சாஹிதி!” என்றான். அந்தக் குரலில் இருந்த அமைதி அவனை பயமுறுத்தியது.

நிமிர்த்து தீனமாய் பார்த்தாள்.

“பைத்தியக்காரி! எப்படியம்மா என்னைத் தவறாகப் புரிந்து கொண்டாய்? உன் உடல்நலம் சரியாக இல்லை என்று நினைத்தேனே தவிர இவ்வளவு தூரம் உன் மனம் கலங்கிவிட்டிருக்கும் என்று எனக்குத் தெரியாது. தவறு என்னுடையது தான். உன் கிரகநிலை சரியாய் இல்லை என்று தெரிந்தும் சரி பண்ணாமல் விட்டது, உன்னை உன்மத்த நிலைக்கு கொண்டு போய்விட்டது.”

அவனுடைய ஒவ்வொரு வார்த்தையும் குண்டாய் வெடித்தது. அவள் தைரியத்தைச் சின்னா பின்னமாக்கியது. ஆனாலும் துணிச்சலைக் கூட்டிக் கொண்டாள்.

“எனக்கு எந்த நோயும் இல்லை. கிரகங்கள் எல்லாம் சரியான வழியில்தான் செயல் படுகின்றன. நீங்க ஒன்னும் கடவுள் இல்லை. எல்லாவற்றையும் அம்மாவிடம் சொல்லிவிட்டேன்” என்றாள்.

“இவளுடைய போக்கைப் பார்த்தால் எனக்குப் பயமாக இருக்கிறது. என்ன செய்வது?” நிர்மலா அழுது கொண்டிருந்தாள்.

“மம்மி! எனக்கு ஒன்றுமே இல்லை. இவன் பேச்சை நம்பாதே. நான் சொன்னதெல்லாம் உண்மைதான்.

“சாஹிதி! பைத்தியம் போல் அபாண்டமாய்ப் பழியைப் போடுகிறாய். உன் மனதில் என்ன இருக்கு என்று எனக்குத் தெரியாது என்று நினைத்துவிட்டாயா?” என்றான் பரமஹம்சா மென்மையான குரலில்.

“சாஹிதி! அவருடைய கால்களில் விழுந்து மன்னிப்புக் கேட்டுக்கொள். அப்படிப்பட்ட தெய்வத்தைத் தவறாகப் புரிந்து கொண்டதற்குப் பெரிய தண்டனையே கிடைக்கும். நானும்தான் விவேகம் இல்லாமல் நடந்து கொண்டேன். நீ சொன்னதை எல்லாம் நம்பி அவரை உலுக்கி எடுத்து விசாரித்தேன். உன் மனதைப் பற்றியும், உடல்நிலையைப் பற்றியும் உடனுக்குடன் கடவுளிடம் பேசி தெரிந்துகொண்டு விட்டார்” என்றாள் நிர்மலா.

சாஹிதி வாயடைத்துப் போய் நின்றுவிட்டாள்.

“நிர்மலா! வருத்தப்படாதே. அவளுடைய தவறு எதுவும் இல்லை. எல்லாம் கிரகங்களின் கோளாறு. குழந்தை இவ்வளவு கஷ்டப்படுவதை என்னால் பார்த்துக்கொண்டு இருக்க முடியாது. உடனே குணமாக்குவதற்கு ஏற்பாடு செய்கிறேன்.” பரமஹம்சாவின் கண்களிலிருந்து பொலபொலவென்று கண்ணீர் உதிர்ந்தது. ‘நம் சாஹிதி என்னைத் தவறாகப் புரிந்து கொண்டு இருக்கிறாள் என்றால் உள்ளூர எவ்வளவு குமுறிப் போயிருப்பாள்?’

“பார்த்தாயா? எவ்வளவு பரந்த மனம் அவருக்கு? அவர் சாட்சாத் கடவுள்! காலில் விழுந்து வேண்டிக்கொள்.” நிர்மலா அழத் தொடங்கினாள்.

சாஹிதிக்கு மண்டை வெடித்துவிடும் போல் இருந்தது. என்ன நடக்கிறது? இவர்கள் நடந்துகொள்ளும் விதம்தான் என்ன? அவள் வார்த்தைக்கு மதிப்பே இல்லாமல் போய்விட்டது. உண்மையிலேயே அவளுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதா?

பரமஹம்சா சொல்லிக்கொண்டிருந்தான்.

‘உன் சொத்தை நான் கொள்ளையடித்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன் என்று உனக்கு சந்தேகமாய் இருக்கு போலிருக்கு. இல்லையாம்மா? அதனால்தான் இந்த மாதிரி அபாண்டமாய் பழியைப் போடுகிறாயோ என்று தோன்றுகிறது. வேண்டாம் அம்மா. மனதில் அந்தமாதிரி எண்ணங்களை வளரவிடாதே. என் சாஹிதி கண்ணு அந்த மாதிரி யோசித்துப் பார்ப்பதைக்கூட என்னால் தாங்கிக்கொள்ள முடியாது. இந்த நிமிஷமே இதையெல்லாம் விட்டுவிட்டுப் போய் விடுகிறேன். என் மகளே என்னை தவறாக புரிந்துகொள்வதை என்னால் சகித்துக்கொள்ள முடியாது.”

அவள் வாயடைத்துப் போய் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

எவ்வளவு சாமர்த்தியமான நாடகம்! ஒரே பாய்ச்சலாய் அவன் மேல் பாய்ந்து நகத்தால் முகத்தை பிராண்டிவிட வேண்டும் என்ற ஆவேசத்தை வலுக்கட்டாயமாக அடக்கிக்கொண்டாள். அவளுக்கு அவன்மீது கோபம் வரவில்லை. தாயின் மீதுதான் வந்தது. அது முற்றிலும் கோபம் கூட இல்லை. அனுதாபம்!! ஆதரவற்றத்தன்மை! வெறுப்பு! எல்லாம் கலந்த உணர்வு!

“இவளை எந்த பேயோ பிசாசோ பிடித்திருக்கிறது.” நிர்மலா விசும்பிகொண்டே அங்கிருந்து போய்விட்டாள். அவனும் எழுந்திருந்தான். லேசாய் சிரித்தான். அந்தச் சிரிப்பில் ஆயிரம் அர்த்தங்கள் பிரதிபலித்தன. அங்கிருந்து நிசப்தமாய் போய்விட்டான்.

ரொம்ப நேரம் சாஹிதி அப்படியே உட்கார்ந்திருந்தாள். கற்சிலையிடமாவது சலனம் இருக்குமோ என்னவோ. ஆனால் அவளிடம் சலனம் இல்லை. கடலில் ஓசையைப் போல் அவள் மனதில் எண்ணங்கள் ஆர்பரித்தன.

கொஞ்ச நேரத்தில் அவள் சுதாரித்துக்கொண்டு எழுந்தாள். ஒரு முடிவுக்கு வந்தவளாய் சந்தடி இல்லாமல் அவ்வறையை விட்டு வெளியே வந்தாள். எல்லோரும் தூங்கிக் கொண்டிருந்தார்கள்.

கேட்டைத் திறந்துகொண்டு வெளியே வந்தாள். ஆளரவமில்லாத வீதியும், விசாலமான நகரமும் அவளை வரவேற்பது போல் தென்பட்டன.

அவள் நடக்கத் தொடங்கினாள்.

தொலைவில் எங்கேயோ நாய் ஒன்று குறைத்துக் கொண்டிருந்தது. அவள் நடந்து கொண்டே இருந்தாள். அவ்வாறு எவ்வளவு தூரம் நடந்திருப்பாளோ தெரியாது. வயது வந்த ஒரு பெண் அவ்வாறு தனியாய் நடந்து போவது ஆர்வத்தைக் கிளப்பிவிட்டது போலும். இரு இளைஞர்கள் அவளைப் பின் தொடர்ந்தார்கள். கொஞ்சம் நேரம் கழிந்ததும் அவர்களில் ஒருவன் மேலும் உரிமை எடுத்துக்கொண்டு அவளிடம் நெருங்கி வந்து “ஹலோ!” என்றான். அவள் பயந்துபோய் நடையின் வேகத்தை கூட்டினாள். மக்கள் நடமாட்டமே இல்லை. அவள் பயம் அவர்களுக்கு உற்சாகத்தைத் தந்தது. ஒருத்தன் அவள் இடுப்பில் கையை வைத்தான். அவளுக்கு இப்படிப்பட்ட அனுபவம் புதுசு. எப்பொழுதும் காரில்தான் போவாள் அவள். அவர்களோ பேட்டை ரவுடீக்களை போலிருந்தார்கள். அவளுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. வீட்டிலிருந்து புறப்பட்ட போது இருந்த ஆவேசம் இப்பொழுது இல்லை. பயந்து கத்தப் போனாள். அதைப் பார்த்துவிட்டு இன்னொருத்தன் அவள் வாயைப் பொத்தி கத்த முடியாமல் தடுத்துவிட்டு, இன்னொரு கையை அவள் முழங்காலுக்குக் கீழே வைக்கப் போனான்.

தொலைவில் மரங்களும், விளையாட்டு மைதானமும் தென்பட்டன. அந்த இடம் முழுவதும் இருட்டாய் இருந்தது. அவள் திமிறிக் கொண்டிருந்தாள். அடுத்தவனும் முதலாமவனுக்கு உதவி பண்ணத் தொடங்கினான். வானத்தில் பறவை ஒன்று தீனமாய் கத்திக் கொண்டே போயிற்று.

(தொடரும்)

Series Navigationவால்ட் விட்மன் வசன கவிதை -12 என்னைப் பற்றிய பாடல் – 5ஹிந்துமத வெறுப்பென்பது மதஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்தைப் பேணுதல் ஆகாது மஹாத்மா காந்தியின் மரணம் – ஒரு எதிர்வினை – பாகம் – 1