அக்னிப்பிரவேசம்-27 தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத்

This entry is part 24 of 26 in the series 17 மார்ச் 2013

 

தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத்

 yandamoori@hotmail.com

தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன்

tkgowri@gmail.com

gaurikirubanandanசரியாய் பத்து நிமிடங்களுக்குப் பிறகு பாவனாவுக்கு விழிப்பு வந்தது. தன்னை யாரோ தூக்கிக்கொண்டு போவது போன்ற கனவு. அதற்குள் அது கனவு இல்லை என்றும், நிஜம்தான் என்றும் புரிந்துவிட்டது. புரிவதற்கு முன்பு அவள் சமையல் அறையில் இருந்தாள் அவள். தரையில் பொத்தென்று போட்டார்கள். கத்தி கூச்சல் போடாமல் அவள் வாயைப் பொத்தினார்கள். வசந்தி கால்களைப் பிடித்துக்கொண்டாள். தலைமாட்டில் கணவன் இருந்தான்.

மண்ணெண்ணெய் வாசனை குப்பென்று வந்தது.

அவள் கத்தப் போனாள். வாயை அழுத்தமாய் பொத்தியிருந்ததால் கத்தல் வெளியே வரவில்லை. சமையலறையின் கொல்லைக் கதவு திறந்து இருந்தது. முன் கதவை உள்புறமாய்த் தாழிட்டார்கள். நெருப்புப் பற்றிக்கொண்டதுமே அந்த இரண்டாவது கதவை வெளிப்புறமாய்த் தாழிட்டுவிட்டால், சமையலறைக்குள் தாழிட்டுக்கொண்டு பாவனா தற்கொலை பண்ணிக்கொண்டு விட்டாள் என்று நினைப்பார்கள். அதுதான் அவர்களுடைய திட்டம்.

கணவன், நாத்தனார், மாமியார், மாமனார் எல்லோரும் சேர்ந்து மருமகளை உயிருடன் எரிப்பதைப் பற்றி பேப்பர்களில் படித்திருக்கிறாள். பலர் சொல்ல கேட்டிருக்கிறாள். ஆனால் இப்பொழுது தானே அந்தப் பலிகடாவாக மாறப் போகிறோம் என்று தெரிந்துவிட்டது. அவள் அவயவங்கள் சுவாதீனத்தில் இல்லை. எதிர்க்கலாம் என்றால் சாத்தியப்படவில்லை. அந்த அதிர்ச்சியில் சலனம் ஒடுங்கிப்போய் அவர்களையே பார்த்தபடி இருந்துவிட்டாள்.

அந்த இருட்டில் தீக்குச்சியின் நெருப்பு நெருங்கி வந்து கொண்டிருந்தது புலப்பட்டது. அறை முழுவது மண்ணெண்ணெய் நாற்றம் பரவியிருந்தது.

கொள்ளியை தலையில் வைப்பார்கள். அவன் பாதத்திற்கு அருகில் பற்றவைத்தான்.

தீயைப் பார்த்ததும் அவளுக்கு சுயநினைவு வந்து விட்டாற்போல் இருந்தது. பயத்தினால் ஏற்பட்ட மயக்கம் விடுபட்டு விட்டது.

அவளுக்கு அந்தச் சக்தி எப்படித்தான் வந்ததோ தெரியாது. பலத்தை எல்லாம் கால்களில் கூட்டிகொண்டு காலால் ஒரு உதை உதைத்தாள். அந்த உதை அவன் வயிற்றுக்குக் கீழ் பகுதியில் பட்டுவிட்டது போலும். ஐயோ என்று முனகிக்கொண்டே அவன் கீழே சரிந்தான். கையைப் பிடித்துக் கொண்டிருந்த வசந்தியை சரேலென்று தள்ளிவிட்டு அவள் வெளியே ஓடினாள்.

அதே வேகத்தில் அவள் தெருவுக்கு வந்து சேர்ந்தாள். தெரு முழுவதும் இருட்டாகவும், ஆளரவமில்லாமலும் இருந்தது. குளிர்ந்த காற்று திடீரென்று வந்து தாக்கியது.

அத்துடன் அவள் ஆவேசம் சட்டென்று தணிந்துவிட்டது.

மண்ணெண்ணெயில் நனைந்த புடவையுடனும், நடுங்கும் கால்களுடனும், சிதறிய உள்ளத்துடனும், வியர்வை பெருக்கோடிய உடலுடனும் எந்தப் பக்கமாய் போகவேண்டும் என்று புரியாதவளாய் அவள் நடுத்தெருவில் நின்றாள். படிப்பும், தைரியமும் இல்லாத சராசரி இந்தியப் பெண்ணின் எதிர்காலத்தைப் போல் சுற்றிலும் சூழ்ந்திருந்த இருள். அவள் குழப்பத்துடன் நடக்கத் தொடங்கினாள். நகரம் உறக்கத்தில் ஆழ்ந்து போய் ரொம்ப நேரம் ஆகியிருந்தது.

அவள் தெருமுனையில் திரும்பிக் கொண்டிருந்த போது ஒரு கார் வேகமாய் வந்தது. நள்ளிரவு வேளையில் ஹாரன் எதற்கு தேவையில்லாமல் அடிப்பானேன் என்று எண்ணியிருப்பான் போலும். அதே வேகத்தில் முனையில் திரும்பினான். அவளைப் பார்த்துவிட்டு அவசரமாய் ப்ரேக் போடப் போய், தடுமாற்றமடைந்து, காரை ஒரு பக்கமாய்த் திருப்பி, ஒரு குப்பைத்தொட்டியில் மோதிக்கொள்ளவிருந்து அதிர்ஷ்டவசமாய் தப்பி, ஒரு ஓரமாகக் கொண்டு வந்து நிறுத்தினான்.

மயிரிழையில் தப்பியது ஆபத்து. “நள்ளிரவில் ஒரு பெண் தனியாய் தெருவில் நடக்க முடிந்த அன்றைக்குத் தான் உண்மையான சுதந்திரம் கிடைதாற்போல் என்று காந்தி சொன்னாரே தவிர, நள்ளிரவில் தெருவுக்கு நட்டநடுவில் நடக்க முடிந்த அன்று என்று சொல்லவில்லை மேடம்!” என்றான் கழுத்தை வெளியில் நீட்டிக்கொண்டே.

பாவனா பதில் சொல்லவில்லை. அப்பொழுதுதான் கவனித்தான் அவன் மண்ணெண்ணெய் நாற்றத்தை. அது தான் குடித்த ஆல்கஹாலின் மணமா இல்லை வேறு ஏதாவதா என்று குழப்பமடைந்து மேலும் ஒரிருமுறை ஆழமாக மூச்சை எடுத்துக்கொண்டான்.

அதற்குள் பாவனா “தயவுசெய்து பஸ் ஸ்டான்ட் வரையிலும் லிப்ட் தர முயட்யுமா?” என்று கேட்டாள். அவன் சிரித்துவிட்டு “வேறு யாரையாவது முயற்சி செய்வது நல்லது. நான் அப்படிப்பட்டவன் இல்லை” என்றான்.

இம்முறை பாவனா குழப்பத்துடன் பார்த்தாள்.

“குடிபழக்கம் உண்டே தவிர விபச்சாரத்தின் தேவை இதுநாள் வரையிலும் வந்தது இல்லை. வேறு யாரையாவது நல்ல கஸ்டமரைப் பார்த்துகொள்வது நல்லது” என்றான்.

அவன் சொன்னது புரிந்ததுமே பாவனாவின் முகம் களையை இழந்தது. அவள் அங்கிருந்து போகக் கிளம்பியபோது “நில்லுங்கள். உங்களிடமிருந்து வருவது கிரோசின் வாடைதானே?” என்று கேட்டான்.

அவள் பதில் பேசவில்லை. அவன் காரைவிட்டிறங்கி அவள் அருகில் வந்து “என்ன நடந்தது? யார் நீங்க?’ என்று கேட்டான்.

“நான் நினைப்பதுப் போல் அந்த விதமான் பெண் இல்லை. பஸ் ஸ்டாண்டுக்குப் போகணும் உண்மையிலேயே” என்றாள்.

“காரில் ஏறிக் கொள்ளுங்கள்.”

அவள் ஏறிக்கொண்டதுமே அவன் கேட்டான். “நான் அனாவசியமான ஆர்வத்தைக் காட்டுவதாக நினைக்கவில்லை என்றால், அது கிரோசின்…”

“ஆமாம்.” தலை குனிந்தபடி சொன்னாள்.

அவன் நிசப்மாய் காரை ஒட்டிக்கொண்டிருந்தான். கொஞ்ச நேரம் கழித்து கேட்டான். “இந்த நேரத்தில் உங்க ஊருக்கு பஸ் இருக்குமா?”

“தெரியாது. இல்லாவிட்டால் காலை வரையிலும் வெயிட்டிங் ரூமிலேயே இருந்து கொள்கிறேன்.”

“கிரோசினில் தோய்ந்த இந்தப் புடைவையுடனா?”

அவள் பதில் பேசவில்லை.

“எந்த ஊருக்குப் போகணும் நீக?”

“தெரியாது.”

“உங்களுக்கு யாருமே இல்லையா?”

“இருக்காங்க. ஆனால் இந்த நிலையில் பெற்றவர்கள் கூட அடைக்கலம் தரமாட்டார்கள்.”

“பின்னே எங்கே போவதாக உத்தேசம்?”

“தெரியாது.”

அவன் அவளை வினோதமாய்ப் பார்த்தான். “உங்களுடைய பர்ஸ் எங்கே?”

“இல்லை.”

“பின்னே பணம் இல்லாமல் பஸ்ஸில் எப்படி ஏறுவீங்க?”

“ஏதோ ஒரு இடத்தில் இறக்கி விடுங்கள்.”

“என்ன பண்ணுவீங்க?”

“செத்துப் போகிறேன்.”

அவன் பதில் சொல்லவில்லை. கொஞ்ச நேரம் கழித்து கார் போய்க் கொண்டிருக்கும் திசையைப் பார்த்துவிட்டு “இப்போ எங்கே போய்க் கொண்டு இருக்கிறோம்?” அவன் குடித்திருப்பதை உணர்ந்து பயந்துகொண்டே கேட்டாள்.

“எங்க வீட்டுக்கு. நாளைக் காலை வரையிலும் எங்க வீட்டிலேயே இருங்கள். எந்த விதமாய் சாவது நல்லது என்று என் மனைவியும், மூன்று குழந்தைகளும் உங்களுக்கு யோசனை சொல்லுவார்கள். அவர்கள் என் பேச்சை மதிக்காமல் சஸ்பென்ஸ், கிரைம் நாவல்கள் படிப்பார்கள். நான் யாரென்று சொல்லவே இல்லை இல்லையா? என் பெயர் பரத்வாஜ். நான் ஒரு எழுத்தாளர்.”

“நீங்க. நீங்க.. எழுத்தாளர் பரத்வாஜ் நீங்கள்தானா?”

“இது கௌரவத்தோடு கூடிய ஆச்சரியமா? அல்லது பயத்தோடு கூடிய அருவருப்பா?”

அவன் பேச்சைக் காதில் வாங்கிக்கொள்ளாமலேயே அவள் சொன்னாள். “என் சிநேகிதிக்கு நீங்க ஒரு ஆட்டோகிராப் போட்டீங்க. அது இன்னும் ஞாபகம் இருக்கு.”

“எந்த ஞாபகம்? எழுதிய ஞாபகமா? அல்லது ஆட்டோகிராப் ஞாபகமா?”

“ஆட்டோகிராப்தான்.  for a maan, an attraactive l..சொல்லிக் கொண்டிருந்த போதே அவன் இடைமறித்தான்.

“ஞாபகத்துக்கு வந்துவிட்டது. பெண்ணுக்கு ஆண், அல்லது கணவனுக்கு மனைவி இணைந்த புதிதில் அபூர்மான நபர் போலவும், சகல நற்பண்புகளும் நிறைந்து, கடவுள் தமக்காகவே அனுப்பிய பரிசு போலவும் தென்படுவார்கள். காலம் கரையக் கரைய  அந்த தெய்வீகத் தன்மையின் மதிப்பெடுகள் காணமல் போய்விடும். அதுதானே  அந்த ஆடோக்ராப்!”

“ஆமாம் பரத்வாஜ் சார்! இப்போ என் வாழ்க்கையும் அப்படித்தான் ஆகிவிட்டது.”

அவள் சொல்லத் தொடங்கினாள்.

*******

தொலைவிலிருந்தே சாஹிதியைப் பார்த்துவிட்டு கூர்க்கா உள்ளே ஓடினான். வீடெல்லாம் விளக்குகள் போடப் பட்டிருந்தன. நள்ளிரவில் சூட்கேசுடன் திரும்பி வந்த மகளைப் பார்த்துவிட்டு, நிர்மலா ஹோவென்று கதறியபடி ஓடிவந்து கட்டிக்கொண்டாள்.

“நான் என்ன பாவம் செய்துவிட்டேன்? மகள் கோபித்துக்கொண்டு வீட்டைவிட்டுப் போய்விட்டாள் என்றால் அது எவ்வளவு மானக்குறைவு? ஆனாலும் நீயே இல்லை என்றால் எனக்கு இந்த வாழ்க்கை எதற்கு? இன்றிரவு மட்டும் நீ திரும்பி வராமல் போயிருந்தால் நான் தற்கொலை பண்ணிக்கொண்டு இருப்பேன்” என்று கதறித் தீர்த்துவிட்டாள்.

சாஹிதிக்கு அவளைப் பார்த்தாள் இரக்கமாய் இருந்தது. கோபத்தால் கொந்தளிப்பாள் என்று எண்ணிக் கொண்டிருந்த தாய், இப்படி மனம் கரைந்து போகும்படி அழுவதைப் பார்த்தபோது வருத்தமாக இருந்தது. “அழாதேம்மா. அதான் வந்துவிட்டேனே. நீ இவ்வளவு வருத்தப்படுவாய் என்று தெரிந்திருந்தால் நான் இப்படிப் பண்ணியிருக்க மாட்டேன். இனி ஒருபோதும் இதுபோன்ற காரியத்தைச் செய்யமாட்டேன்” என்றாள்.

இந்தக் காட்சியை பரத்வாஜ் மட்டும் பார்த்திருந்தால் “கரைந்துபோன கஷ்டங்கள்” என்ற தலைப்பில் நாவலை எழுதியிருப்பானோ என்னவோ.

நிர்மலா கண்களைத் துடைத்துக்கொண்டாள். இருவரும்  ஒருவரையொருவர் அணைத்தபடி அப்படியே உள்ளே போனார்கள்.

உள்ளே பூஜையில் பரமஹம்சா பத்மாசனமிட்டு தியானத்தில் ஆழ்ந்திருந்தான்.

நிர்மலா போய் அவன் பாதங்களில் விழுந்தாள். “உங்க தவத்தின் வலிமை அபாரம். நீங்கள் சொன்னது போலவே தியானதிலிருந்து எழுந்திருப்பதற்குள்ளாகவே மகள் வீட்டிற்குத் திரும்பி வந்துவிட்டாள்.”

பரமஹம்சா கண்களைத் திறந்து சாஹிதியைப் பார்த்துவிட்டு முறுவலித்தான்.

சாஹித்தி மௌனமாய் தன் அறைக்குள் போய்விட்டாள். அதுவரை இருந்து வந்த சந்தோசம் ஒரேயடியாய் மாயமாகிவிட்டது. அலமாரியில் தேடினாள். வேண்டியது கிடைத்தது. இந்த முறை இரு மடங்கு டோஸ் போட்டுக்கொண்டாள்.

தியானத்திலிருந்து எழுந்த பிறகு பரமஹம்சா குளித்தான். நேரம் இரவு பதினொன்றரை ஆயிற்று. நிர்மலா தலையில் மல்லிகைச் கரத்தை சூடிக் கொண்டிருந்தாள். “சாஹிதியுடன் பேசிவிட்டு வந்து விடுகிறேன் நிரமலா” என்று சாஹிதியின் அறைக்குள் நுழைந்தான். அதற்குள்ளாகவே சாஹித்தி மயக்கத்தில் ஆழ்ந்து போய்விட்டாள். “கொஞ்சம் நகரும்மா” என்று வந்து படுக்கையில் உட்கார்ந்துக் கொண்டான்

“எதற்காக அப்படிப் போனாய் சாஹித்தி? நாங்க எவ்வளவு பயந்துவிட்டோம் தெரியுமா?”

“ஊம்.. ஊம்.”

நீ அப்படிப் போய்விட்டால் எப்படி வாழப் போகிறாய்? இவ்வளவு வசதிகளுடன் வளர்ந்தவள் இல்லையா?

“ஆமாம்… ஆமாம்.”

“நீ போய்விட்டால் உங்க அம்மா செத்துப் போய் விடுவாள். அம்மாவைக் கொல்லப் போகிறாயா?”

“கொல்லமாட்டேன். கொல்ல…. மாட்டேன்.’ அரை மயக்கத்தில் பதிலளித்தாள்.

“நம் குடும்ப விஷயத்தை வெளியே எங்கேயும் சொல்லக் கூடாது. சொன்னால் அப்பாவின் ஆன்மாவுக்கு நிம்மதி இருக்காது.”

“ஆமாம்.”

எதிர்காலத்தைப் பற்றிய பயத்தை,, சென்டிமென்டின் மீது பலவீனத்தை,, சமுதாயக் கட்டுபாடுகளை  வேறு வழியில்லாமல் ஏற்றுக்கொள்ளவேண்டிய ஆதரவற்றத்த்னமை … ஆகியவற்றை அவள் மனதில் பதியும்படி பிரெயின் வாஷ் செய்து கொண்டிருந்தான் அவன்.

*******

“உன் கதை முழுவதையும் கேட்டால் எனக்கு ஒன்றுதான் தோன்றுகிறது. எதிர்காலத்தைப் பற்றிய பயம், செண்டிமெண்டின் மீது பலவீனம், சமுதாயக் கட்டுபாடுட்களை வேறு வழியில்லாமல் ஏற்றுக்கொள்ள வேண்டிய ஆதரவற்றதன்மை.. இவைதான் மனிதர்களை துன்புறுத்துகின்றன. வேதனைக்கு ஆளாக்குகின்றன” என்றான்.

பாவனா புரியாமல் விழித்தாள்.

ரஜனி அவளைப் பார்த்துச் சிரித்தாள். “எங்க அப்பா பேசுவது பாதி புரியாது விடுங்கள். நாவல்களில் வரும் பாத்திரங்கள் பேசும் மொழியில் பேசுவார்” என்றாள்.

பரத்வாஜ் பாவனாவை வீட்டிற்கு அழைத்து வந்தான். பரத்வாஜுக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன். மூத்தவள் ரஜனிக்கு பதினெட்டு வயது இருக்கும்.

பாவனா காரில் வரும்போதே அவனிடம் தன் கதையெல்லாம் சொன்னாள். சாஹிதியின் கதையைக் கேட்டு அவன் அவ்வளவாய் நெகிழ்ந்துவிடவில்லை. அவனுக்கு அது ஒரு பிரச்சனையாகவே தோன்றவில்லை.

ஆனால் இங்கே விஷயம் வேறு. குறைந்தபட்சம் ஆண்மைக் கூட இல்லாத ஒருவன், தான் ஆணாய் இருந்த ஒரே காரணத்திற்காக வரதட்சணை எதிர்பார்ப்பதும், ஆணாதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்வதற்காக மனைவியை துன்புறுத்தி, ஆதரவற்றவளாய் ஆக்கியதும் தான் அவனை வருத்தத்தில் ஆழ்த்தியது.

“இதையெல்லாம் இவ்வளவு நாளாய் எப்படிச் சகித்துக் கொண்டு இருந்தாய்?”

‘பின்னே என்ன செய்வது?’ என்பதுபோல் பார்த்தாள் அவள்.

“இவ்வாறு இருப்பதைவிட வேறுவிதமாய் நம் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று தோன்றியபோது, இதை விட்டுவிட்டு அவ்வாறு வாழ்வதில் தவறு என்ன இருக்கு? அப்படி ஏன் முயற்சி செய்யவில்லை?”

ரஜனி குறுக்கிட்டாள். “என்னப்பா? ரொம்பவும் சாதாரணமாய்ச் சொல்றீங்க? வாழ்க்கையும் சாப்பாடும் ஒன்றாகிவிடுமா? குழம்பு நன்றாக இல்லை என்று ரசத்தை ஊற்றிக்கொண்டு சாப்பிடுவதற்கு” என்றவள் பாவனாவின் பக்கம் திரும்பினாள். “நீங்க ஒன்றும் நினைத்துக் கொலாதீங்க. எங்க வீட்டில் இதுபோல் உதாரணம் காட்டித்தான் பேசிக்கொண்டு இருப்போம். சொல்லுங்கள் டாடி! இந்தப் பெண் தன் பழைய வாழ்க்கையை விட்டு வெளியே வந்திருக்க வேண்டுமா? அப்படி என்றால் நம் நாட்டில் பெண்களில் பாதிபேர் தம் குடும்பத்தை விட்டுவிட்டுத் தனியாய் இருந்தால் எப்படி இருக்கும் என்று பரிசோதனை பண்ண வேண்டியிருக்கும்” என்றாள்.

“நான் சொன்னது அது இல்லை. ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு கவலை.’எனக்குக் கல்யாணம் ஆகவில்லை. வரதட்சணை பிரச்னை! எனக்கு வேலை இல்லை. வேலையில்லாப் பிரச்சனை! என கணவன் சின்ன வீடு வைத்திருக்கிறான். பாதுகாப்புப் பிரச்சனை! இதுபோல் பலவிதமான பிரச்சனைகளால் கவலைப்பட்டுக்கொண்டு இருப்பார்கள். இந்தப் பிரச்சனைகளுக்கு சமுதாய உணர்வுடன் தீர்வு சொல்லும் விதமாய் கதைகளை எழுதச் சொல்லி கேட்டுக்கொண்டு இருப்பார்கள். எல்லா பிரச்சனைகளுக்குமே தனித்தன்மை வளர்த்துக்கொள்வது ஒன்றுதான் வழி என்று சொன்னால் மட்டும் கேட்டுக்கொள்ள மாட்டார்கள். நேற்று இலக்கிய கூட்டத்தில் நடந்த ரகளை கூட நான் இப்படிச் சொன்னதற்குத்தான்.”

“ஆனால் இந்தப் பெண்ணுக்குப் படிப்பும் இல்லை. பணமும் இல்லை அப்பா.”

“அவிவிரண்டும் மட்டுமே இருந்தால் போதும் என்ற பட்சத்தில், அவை இரண்டும்  இருக்கும் சாஹிதி என்ற பெண் எதற்காக தற்கொலை செய்துகொள்ள நினைத்தாள்?” எதிர்க்கேள்வி கேட்டான். யாருமே பேசவில்லை. மீண்டும் அவனே சொன்னான். “வாழ்க்கையை எப்பொழுது வேண்டுமோ அப்பொழுது புதிதாய்த் தொடங்கலாம் பாவனா! நாளையிளிருந்தே புது வாழ்க்கை எப்படித் தொடங்குவது என்று நீ முயற்சி செய்து தெரிந்துகொள். இதைவிட சந்தோஷமாய் ஏன் வாழ முடியாது என்பதை நிரூபித்துக்காட்டு” என்று எழுந்தான்.

ரஜனி சிரித்துவிட்டு “மொத்தத்தில் பாவனாவை நீ ரொம்ப கஷ்டப்படுத்தப் போகிறாய் அப்பா. முதலில் இந்தப் பெண்கள் இப்படி கஷ்டப்படுத்துபவர்களின் காரின் கீழே விழக்கூடாது. ஏதாவது இளைஞனுடைய காரின் கீழேயோ அல்லது மனைவி இறந்துவிட்ட நடுத்தர வயது மனிதரின் காருக்குக் கீழேயோ விழுந்திருக்கணும். அவனுடைய குழந்தைகளுக்கு ஆயாவாக போய்ச் சேர்ந்துவிட்டு, ‘சுபம்’ என்று போடுவதற்குக் கொஞ்சம் முன்னால் அவன் மார்பின் மீது சாய்ந்துவிடவேண்டும்” என்றாள். பரத்வாஜ் அவள் தலையில் தட்டிவிட்டு “இரவு ரொம்ப நேரமாகிவிட்டது  போய் படுத்துக்கொள்” என்றான். அவள் போன திசையையே பார்த்தபடி உட்கார்ந்திருந்தாள் பாவனா. அவளையும் அறியாமல் கண்களில் நீர் கசிந்தது. ஒரு காலத்தில் அவளும் தந்தையிடம் இதுபோலவே நடந்துகொள்வாள்.

“என்ன யோசிக்கிறாய்? இன்று இரவு படுத்துத்  தூங்கு. நாளைக்கு என்ன பண்ணலாம் என்று யோசிப்போம்.”

‘உங்க மகளை எனக்கு ரொம்பப் பிடித்துவிட்டது” என்றாள்.

“ஏன்?”

“அந்தச் சிரிப்பு, ஆர்வம், சுறுசுறுப்பு, சுவாதீனம்..”

“எங்கள் மொழியில் சொல்லணும் என்றாள் தன்னம்பிக்கை!”

“அவ்வளவு பெரிய வார்த்தையெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால் உங்களைப் போன்ற அப்பாவும், பணவசதியும், படிப்பும் இருப்பதால்தானே அந்த சுறுசுறுப்பு வந்திருக்கு?”

கதவுக்கு அருகில் போனவன் திரும்பி அவளைப் பார்த்தபடிச் சொன்னான்.

“உன் தியரி தவறு பாவனா. நான் சொல்ல வந்ததும் அதைத்தான். பிரச்சனையை சரியான கோணத்திலிருந்து பார்த்தால் பரிகாரம் கிடைக்கும். மரணத்தை சரியான கோணத்திலிருந்து வரவேற்க முடிந்தால், வாழ்ந்து கொண்டிருக்கும் வரை சந்தோஷம் கிடைத்துக்கொண்டே இருக்கும். அதற்குப் பரிபூர்ண எடுத்துக்காட்டு பிரெயின் ட்யூமரால் பாதிக்கப்பட்டு மரணத்தின் விளிம்பில் இருக்கும் என் மகள் ரஜனி.”    (தொடரும்)

Series Navigationபுதுத் துகள் ஹிக்ஸ் போஸான் கண்டுபிடிப்பு பூதச் செர்ன் விரைவாக்கியில் உறுதியானது.வாழ்வியல் வரலாற்றில் சில பக்கங்கள் -48
author

கௌரி கிருபானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *