அண்ணாவும் மாணவர்-தொழிலாளர் மோதலும்: மேலும் கொஞ்சம் பேசலாம்

தில்லி ராம் லீலா மைதானத்தில் பாபா ராம் தேவ் கூட்டிய கூட்டத்தை போலீசார் நட்ட நடு நிசியில் வலுக்கட்டாயமாகக் கலைத்தது பற்றிய எனது கட்டுரையில் உண்மையான மக்களாட்சி எவ்வாறு இருக்கும் என்ற எனது கருத்தை விவரிக்கிறபோது அண்ணா அவர்கள் முதல்வராக இருக்கையில் எப்படி நடந்துகொண்டார்கள் என்பதற்கு ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்திருந்தேன்.

1967-ல் தி.மு.க. ஆட்சிப் பொறுப்பை ஏற்ற சில மாதங்களிலேயே கல்லூரி மாணவர்களுக்கும் சென்னை மாநகரப் போக்குவரத்துத் தொழிலாளர்களான ஓட்டுனர், நடத்துனர் இணைந்த குழுவினருக்கும் இடையே கடும் மோதல் நிகழ்ந்தது.

சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர்களைப் போக்குவரத்து தொழிலார்கள் மிகவும் மோசமாகத் தாக்கியதாகக் கேள்விப்பட்ட முதல்வர் அண்ணா அவர்கள் தாமாகவே மாணவர்களைத் தேடிச் சென்று மன்னிப்புக்கோரி சமாதானம் செய்ததை எனது கட்டுரை யில் குறிப்பிட்டு மக்களாட்சி முறை அவ்வாறாக அமைய வேண்டும் என உணர்த்தியிருந்தேன்.

இதைப் படித்த திண்ணை வாசகர்களுள் ஒருவர் தமது கருத்தைச் சொல்லி விளக்கம் கேட்டுள்ளார். தனிப்பட்ட முறையில் அவருக்கு விடை அளிப்பதைவிட அனவரும் அறியத் தக்கவாறு தனிக் கட்டுரையாகவே எழுதிவிட்டால் அதே போன்ற கருதுள்ளவர்களுக்கும் மன நிறைவாக இருக்கும் என எண்ணி இதனை எழுதலானேன்.

1967-ல் தி.மு.க. ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் வாய்ப்பைப் பெற்றமைக்கு அன்றைய மாணவர் சமுதாயமும் ஒரு முக்கிய காரணம் என்பதை விளக்கத் தேவையில்லை. அவ்வகையில் மாணவர்களுக்கு தி.மு.க. நன்றிக் கடன் பட்டிருந்ததால்தான் மாநில முதல்வராக இருந்தும் அண்ணா தாமாக மாணவர் களைத் தேடிச் சென்றாரா, மாணவர்களைத் தேடிச் சென்றதுபோல் போக்குவரத்துத் தொழிலாளர்களையும் அண்ணா தேடிச் சென்றாரா என்றெல்லாம் திண்ணை வாசகர் ஸ்ரீ செந்தில் குமார் (sentil_kumar74@rediffmail.com)
கேட்டிருக்கிறார்.

அன்றைக்கு மருத்துவக் கல்லூரி மாணவர்களை மட்டுமல்ல, கல்லூரி மாணவர் பருவத்தில் இருந்த இளைஞர்கள் அனைவரையுமே போக்குவரத்துத் தொழிலாளர்கள் வெறிபிடித்தாற்போல் தாக்கிக் கொண்டிருந்தனர். பஸ்களில் மாணவர்கள் செய்யும் அட்டகாசங்களைப் பார்த்து வெறுப்படைந்திருந்த மக்களின் ஆதரவும் போக்குவரத்துத் தொழிலாளர் பக்கமே இருந்தது.

பொதுவாக மருத்துவக் கல்லூரி மணவர்கள் எதிலும் பட்டுக்கொள்ளாமல் இருப்பதுதான் வழக்கம். மாணவர் பிரச்சினகளில் அவர்கள் பெரும்பாலும் இறங்குவ தில்லை. ஆனால் போக்குவரத்துத் தொழிலாளர்கள் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சிலரையும் கடுமையாகத் தாக்கிவிட்டனர். எவ்விதக் காரணமும் இன்றித் தங்களைப் போக்குவரத்துத் தொழிலாளர்கள் தாக்கியதால் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கொதிப் படைந்தனர். அதனால்தான் அவர்களை சமாதானப்படுத்த அண்ணா அவர்கள் நேரில் சென்றார்கள்.

மருத்துவக் கல்லூரி மாணவர்களை நேரில் சமாதானப் படுத்தியதுபோல் மற்ற கல்லூரி மணவர்களை நேரில் சென்று சமாதானப்படுத்த அண்ணா செல்லாதது ஏன் என்றும் கேட்டிருக்கிறார், செந்தில் குமார்.

அப்படியெனில் அன்றைய சூழலில் முதல்வர் அண்ணா கல்லூரி கல்லூரியாகச் சென்று மாணவர்களைச் சமாதானம் செய்ய வேண்டி வந்திருக்கும்! ஒருவேளை அதற்கும் அண்ணா அவர்கள் தயாராக இருந்திருக்கக் கூடும். குறிப்பாகக் கல்லூரிகளுக்குச் சென்று மாணவர் களிடையே பேசுவதில் தனி இன்பம் காண்பவராயிற்றே எமது அண்ணா!

ஆனால் தற்செயலாய் ஒரு சிறு பொறியென மாணவர்களுக்கும் போக்குவரத்துத் தொழிலாளர் களுக்கும் நிகழ்ந்த சச்சரவைக் காங்கிரஸ் மாணவர் பிரிவும் இளைஞர் காங்கிரசும் பெரு நெருப்பாக ஊதிப் பெருக்கிவிட்டிருக்கின்றனர் என்று உளவுத் துறை யினரிடமிருந்து தகவல் கிடைத்திருந்தது. தி.மு.க. அரசுக்குக் கெட்ட பெயரை உண்டு பண்ண வேண்டும் என்பதற்காகவே ஒரு பக்கம் மாணவர்களும் மறு பக்கம் போக்குவரத்துத் தொழிலாளார்களூம் துண்டிவிடப் படுகின்றனர் என்பதைப் புரிந்துகொண்ட அண்ணா அந்நிலையில் பிற மாணவர்களை நேரில் சந்தித்துச் சமாதானம் செய்வதில் பொருளில்லை என முடிவு செய்தார்கள்.

போக்குவரத் தொழிலாளர்களோ பல்வேறு தொழிற் சங்கங்களில் உறுப்பினர்களாக இருந்தனர். அந்நிலை யில் யாரை நேரில் சென்று சமாதானம் செய்ய முடியும்? எனவேதான் அண்ணா அவர்கள் தாமே நேரில் சென்று தொழிலாளர்களிடம் பேச இயலாமல் அனைத்துத் தொழிற் சங்கப் பிரதிநிதிகளையும் அழைத்துப் பேசினார்கள்.

மாணவர்கள் என்போர் யார்? நம் வீட்டுப் பிள்ளைகளே அல்லவா? நம் வீட்டுப் பிள்ளைகளை நாம் சில சந்தர்ப்பங்களில் தண்டிக்க நேரிடும் என்றாலும் அதற்காக வெறிபிடித்தாற்போல் அடித்துப் போடக் கூடாது அல்லவா? என்ன இருந்தாலும் மாணவர்கள் சிறு பையன்கள்தாமே. இள ரத்தம் கொஞ்சம் துடிப்பாகத்தான் இருக்கும். நாம் வாழ்க்கையில் அடிபட்டுப் பக்குவம் ஆனவர்கள் அல்லவா? நம் பொறுமையைச் சோதிப்பதுபோல் பிள்ளைகள் நடந்துகொண்டாலும் பெற்றோருக்குரிய பொறுமையுடன் நாம்தான் சிறிது விட்டுகொடுக்க வேண்டும் என்றெல்லாம் அண்ணா அவர்கள் உருக்கமாக வேண்டினார்கள். அதன் பிறகே இரு தரப்பினருக்கு மிடையே தொடர்ந்து நடந்து வந்த மோதல் அடங்கியது.

அந்தச் சமயத்தில் கருணநிதிதான் பொதுப் பணித் துறைக்கும் போக்குவரத்துத் துறைக்கும் பொறுப்பு வகித்த அமைச்சராக இருந்தார். மாணவர்கள் தூண்டி விடப்படுகின்றனர் என்பதைத் தெரிந்துகொண்டதால் போக்குவரத்துத் தொழிலார்கள் மாணவர்களைத் தாக்குகையில் முளையிலேயே கிள்ளி எறிய முயற்சி செய்யாமல் மோதல் முற்றும்படிச் செய்துவிட்டார். அவருடைய மெத்தனத்தால் முற்றிய மோதலைச் சமனம் செய்யும் பெரும் பொறுப்பு அண்ணா தலையில் விடிந்தது.

மாநில நிர்வாகத்தை மிகவும் சிக்கனமாக நடத்துவதில் அண்ணா அவர்கள் மிகவும் கவனமாக இருந்தார்கள். அமைச்சரவையில் தம்மையும் சேர்த்து ஒன்பது பேருக்குமேல் தேவையில்லை என்பதில் அண்ணா அவர்கள் மிகவும் உறுதியாக இருந்தார்கள். நிர்வா கத்தை நடத்திச் செல்பவர்கள் அரசுச் செயலர்கள்தாம். ஆட்சிப் பொறுப்பேற்கும் அமைச்சர்கள் கோட்பாடுக ளையும் கொள்கையையும் வகுத்துக் கொடுத்து அவற்றுக்கு ஏற்ப செயல் முறை உள்ளதா என மேற்பார்வை பார்த்தால் போதுமானது. எனவே அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகம் தேவையில்லை என்பதே அண்ணா அவர்களின் கருத்தாக இருந்தது. இந்த விஷயத்தில் காமராஜர் அவர்களையே அண்ணா பின்பற்றினார்கள்.

1967-ல் தி.மு.க. ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் வாய்ப்பைப் பெற்றதும் அவருடைய தம்பிமார்கள் பலரும் நேரடியாகவும் மறைமுகமாகவும் அண்ணாவுக்கு நெருக்கடி கொடுக்கத் தொடங்கி விட்டார்கள். அமைச்சர் பதவி வேண்டும் என்றுதான்!
அமைச்சர் பதவி கிடைக்கவில்லை என்று தெரிந்ததும் மிகவும் நம்பிக்கையுடன் இருந்த சில தம்பிமார் வீட்டுப் பெண்டிர் அண்ணா அவர்களின் வீட்டு வாசலில் மண்ணை வாரித் தூற்றிவிட்டுப் போனதும், புரண்டு அழுததும் உண்டு!

+++

Series Navigationமேலதிகாரிகள்என்னைக் கைது செய்யப் போகிறார்கள்