அந்த முடிச்சு!

This entry is part 25 of 45 in the series 4 மார்ச் 2012

அது
சம்பவித்துக் கொண்டிருந்தது

அருகிலிருந்து
அவதானித்துக் கொண்டிருந்தேன்

உடல்
கிடத்தி வைக்கப்பட்டு
உயிர்
கொஞ்சம் கொஞ்சமாக
பிடியை இழக்க
அது
சம்பவித்துக் கொண்டிருந்தது

அது
சம்பவித்து முடிவதில்
ஏதோ ஓர்
எதிர்ப்பு இருப்பதாக
என்னால்
உணர முடிந்தது

எனினும்
அது
கால்களின் விரல்களில் துவங்கி
மேல்நோக்கி
கைப்பற்றிக்கொண்டே செல்வதற்கான
அடையாளங்களைக்
காண முடிந்தது

அது
கடந்து சென்ற வழியெல்லாம்
நரம்பு நெகிழ்ந்து அசைவிழக்க
உஷ்ணம்
குறையத் தொடங்குவதைக்
குறிக்கத் தவறவில்லை நான்.

மரணப் படுக்கையில்
பார்வை
பிரத்தியேகமானது என்று
கேள்விப்பட்டிருந்தும்
அந்த வகையான பார்வையை
நான் என்
வாழ்நாளில் கண்டதில்லை

வெற்றான இலக்கில் குத்தி நின்றாலும்
அடையாளம் காண முடியாத பயமும்
அளப்பதற்கரிய ஆசைகளும்
அது
சம்பவித்துக் கொண்டிருப்பதை
அறியாததோர் அப்பாவித்தனமும்
உச்சகட்ட வலியை
அனுபவித்துக்கொண்டிருக்கும்
சுரணையோ இல்லாத நிலையும்
இன்னும்
அலைகளற்ற கடலை
அடிவானம் வரை பார்ப்பது போலும்
ஒரு பார்வை

மூச்சு இழுத்து விடுவதில்
முடிச்சு ஒன்று
விழுவதும் அவிழ்வதுமாகவே
எனக்குப் பட்டது.

ஒரு சில சமயங்களில்
அவிழ்ந்து முடிகிறதோவென
நினைக்க
சட்டென மீண்டும்
முடிச்சு விழ
அது
எதிர்ப்பை விஞ்சி
சம்பவிக்க முயல்வதைக்
காண முடிந்தது

நான்
வெளியேற எத்தனிக்கயில்
என் முகம் நோக்கியப் பார்வையில்
பிரியாவிடையின் சாயல் தெரிய
சன்னமான சப்தத்தோடு
அவிழ்ந்த முடிச்சில்
இரத்த வாடை வீசியதாக ஞாபகம்.

வாயிலைக் கடக்கும்போது
கோஷம் போன்றதொரு
அதிக ஓசையுடனான
அழுகுரலால்
அது
சம்பவித்து முடிந்திருக்கலாம்
என
யூகிக்க முடிந்தது.

-sabeer.abushahruk@gmail.com

Series Navigationவழிமேல் விழிவைத்து…….!கசீரின் யாழ்

7 Comments

  1. எனது இறந்தவன் பேசிய வார்த்தைகள் கதைக்கு முன்னுரை போல் கனகச்சிதமாக உள்ளது இந்த கவிதை. செத்த பிறகே சரிபார்க்க முடியும் இல்லையா?

  2. அன்புள்ள சபீர்,

    மிகவும் அற்புதமாக,மரணத்தின் கடைசி நிமிடங்களை உணர்ச்சிப் பூர்வமாக எழுதியுள்ளீர்கள். பல சமயங்கள் நான் மரணத்தின் கடைசி நொடிப் பற்றி யோசித்துள்ளேன்.. இப்படி இருக்குமோ என்ற எண்ணம் எழும். இறப்பில் வருவது யாதெனக் கேட்டேன்… இறந்து பாரென இறைவன் பணித்தான் .. என்ற கண்ணதாசனின் வரிகள் நினைவு வருகிறது … மிக நல்ல கவிதை.. வாழ்த்துக்கள் …-பத்மநாபபுரம் அரவிந்தன்-

  3. மரணத்தின் அனுபவத்தை விவரிக்க மனோதிடம் தேவை
    உண்மையாகவே மரணிக்கும்போது மனோதிடம் முதலாகவே மரணித்துவிடும்

    ஆயினும் உங்கள் உலாவல் நடை மிகவும் நன்று

    அன்புடன்
    தமிழ்த்தேனீ

  4. Avatar ramani

    மரணத்தை நானும் சிலமுறை மிக அருகிலிருந்து கவனித்திருக்கிறேன். மரணம் விடுதலையாக இல்லை மரணித்தவர்களுக்கு. உயிர் தத்தளித்துக்கொண்டிருந்தது இன்னும் எனக்குள் விவரிக்க முடியாததாய் உறைந்துபோயிருக்கிறது. மரணத் தறுவாயை கவிதையில் வாழ வைத்திருக்கிறீர்கள் சபீர்.

  5. Avatar jayashree

    மரணம்….. வாழ்வின் இறுதி நொடியை…படமாகக்
    காட்டி இருக்கிறீர்கள்.அருமை…

  6. Avatar sabeer

    வாழ்வியல் தத்துவத்தின் தவிர்க்க முடியாத தருணங்களை ஆமோதித்துக் கருத்திட்டமைக்கு மிக்க நன்றி

  7. Avatar N.ஜமாலுதீன்

    மரணம் உறுதி என்பது நினைவுள்ளவரையில் மனிதன் அதிகபட்ச மனிதத் தன்மையுடன் வாழமுடியும்.மரணிப்பவர் நிலையை கண் முன்னால் கொண்டுவர முயன்றுள்ளீர்கள்.எனினும்,அது விளக்க முடியாத,தவிர்க்கமுடியா அனுபவம்.

    அருமையான நினைவூட்டல். நன்றி.

Leave a Reply to N.ஜமாலுதீன் Cancel reply

Your email address will not be published. Required fields are marked *