அமெரிக்க சீக்கியர்கள்

அமெரிக்க சீக்கியர்கள்
This entry is part 2 of 5 in the series 7 ஏப்ரல் 2019

பெரும்பாலான அமெரிக்கர்களுக்கு தலைப்பாகை கட்டி தாடி வைத்திருக்கும் இந்திய சீக்கியர்களுக்கும், இரானியர்களுக்கும், ஆப்கானிகளுக்கும், ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கும் வித்தியாசம் தெரியாது. தலைப்பாகை கட்டி தாடி வளர்த்தவனெல்லாம் இஸ்லாமியத் தீவிரவாதி என்பது அமெரிக்கப் பொதுபுத்தி. எல்லோரும் அப்படி என்று நான் சொல்லவில்லை. வித்தியாசம் தெரிந்தவர்கள் குறைவு என்பதுதான் நான் சொல்ல வருவது.

அமெரிக்க பொதுமக்கள் மட்டும் அப்படியில்லை. காவல்துறை அதிகாரிகள், விமான நிலைய சிப்பந்திகள் எனப் பலருக்கும் இந்தப் பிரச்சினை உண்டு. அமெரிக்க இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப்பட்ட செப்டம்பர் 11-க்குப் பிறகு அமெரிக்க விமான நிலையங்களில் தென்பட்ட சீக்கியர்களைக் கைது செய்த கதைகளெல்லாம் அரங்கேறின. இன்னொருபுறம் தாக்குதலுக்குக் காரணமான பின்-லேடனின் குடும்பம் தனி விமானத்தில் பாதுகாப்பாக சவூதி அரேபியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அப்படியொரு அமெரிக்க விமான நிலையத்தில் தலைப்பாகை கட்டி, பெருந்தாடி வளர்த்த சீக்கியரான குர்விந்தர் சிங்கிற்குத் தொல்லைகள் நிகழ்ந்தன. இந்த குர்விந்தர் சிங் ஒரு பிஸினஸ்மேன். அமெரிக்காவிற்கு $837 கைக்காசுடன் வந்து ஒரு பிஸினசைத் துவக்கி ஏறக்குறைய நூறு பேர்களுக்கு வேலை கொடுத்துக் கொண்டிருக்கிறவர். எனவே மேற்படி சிங்கானவர் பிற சீக்கியர்களைப் போல வாயை மூடிக் கொண்டிருக்காமல் அந்த நிகழ்வை ஒரு வீடியோ படமாக எடுத்து வெளியிட்டு அமெரிக்காவில் பிரபலமாகியிருக்கிறார். யூ-ட்யூபில் தேடினால் கிட்டலாம்.

எனக்கு அமெரிக்க சீக்கியர்கள் மீது கொஞ்சம் அலர்ஜி உண்டு. இந்தியாவிற்கு எதிரான மனப்பான்மை கொண்ட, பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ.க்கு விலைபோன சீக்கியர்களால் நிறைந்து கிடக்கிறது அமெரிக்கா. ஒருகாலத்தில் தேசபக்திக்குப் பேர்போன சீக்கிய சமூகம் இன்றைக்கு நஞ்சைக் கக்கிக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் வசிக்கும் சீக்கியர்கள் அப்படியானவர்கள் இல்லை. அவர்களுக்கு இன்றைக்கும் தேசபக்தி உண்டு. நான் சொல்வது அமெரிக்கா மற்றும் கனடாவில் வசிக்கும் சீக்கியர்களைக் குறித்து.

இந்திய அரசாங்கம் தங்களைத் துன்புறுத்துவதாக நாடகமாடி அமெரிக்க அல்லது கனடா விசா பெறுவது மட்டுமே அவர்களின் நோக்கம். அப்படி விசா வாங்கிக் குடியேறியவர்கள் அந்த நாடகத்தைத் தொடர்ந்து நடத்தியாக வேண்டும். ஏனென்றால் அடுத்து அவனின் மச்சானோ அல்லது மாமனோ விசா வாங்கவேண்டும் என்பதற்காக. எனவே அவர்கள் இந்தியர்களுக்கு எதிரான மனப்பான்மை கொண்டிருப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. கலிஃபோர்னியாக்காரர்களைக் கேட்டால் கதை, கதையாகச் சொல்வார்கள். இந்தியா என்கிற மாபெரும் தேசத்தின் ஆதரவு இல்லாவிட்டால் சீக்கியன் சிங்கியடிப்பான் என்கிற சாதாரண அறிவுகூட இல்லாத மூடர்கள் அவர்கள்.

இன்றைக்கு இந்தியாவிலேயே ஆந்திரர்களுக்கு அடுத்து மிக வேகமாக கிறிஸ்தவர்களாக மதம் மாறிக் கொண்டிருப்பவர்கள் பஞ்சாபிய சீக்கியர்கள்தான். அப்படி மதம் மாறினால் அவர்களுக்கு விசா வாங்கிக் கொடுக்க ஆசை காட்டப்படுகிறார்கள். இன்னும் இருபது ஆண்டுகளில் பஞ்சாபில் சீக்கியர்கள் மைனாரிட்டிகளாவார்கள் என்பது என்னுடைய கணிப்பு.

கடந்த இருபது வருடங்களாக சீக்கியர்கள் அமெரிக்காவில் தொடர்ந்து குடியேறி வருகிறார்கள். அவர்களில் பெரும்பாலோர் அவர்களின் உடல் வலிமை காரணமாக ட்ரக் ட்ரைவர்களாக பணியாற்றி கொண்டிருக்கிறார்கள். அவர்களின் ஒற்றுமை காரணமாக சீக்கிய சமூகம் மெல்ல, மெல்ல செல்வந்த சமூகங்களில் ஒன்றாக மாறிக் கொண்டிருக்கிறது. ஒருபெரும் கூட்டமாக ஒரே ஏரியாவில் வீடு வாங்கிக் குடியேறுவது, இந்தியர்களிலிலிருந்து தங்களைத் தனித்துக் காட்ட முயல்வது போன்றவை நடந்து கொண்டிருக்கின்றன. இவர்களில் தனிநாடு கேட்கும் பாகிஸ்தானிய கைக்கூலிகளான காலிஸ்தானிகளும் உண்டு. எனவே அவர்களிடமிருந்து நான் விலகியிருக்கவே முயன்றிருக்கிறேன்.

மேற்படி குர்விந்தர் சிங் என்னுடைய பேட்டைக்காரர்தான். நிறைய சீக்கியர்கள் இந்தப் பகுதியில் குடியேறியிருக்கிறார்கள். இந்தியர்களும் உண்டு. எனவே குர்விந்தர் எங்கள் பகுதி கவுன்சில் தேர்தலில் போட்டியிடுகிறார்.

அவரது ஆட்கள் காலையில் வீட்டில் வந்து மணியடித்து ஓட்டுக் கேட்டார்கள். ‘சரிதான் யோசிக்கிறேன்’ என்றேன். இந்தத் விளம்பரத்தட்டியை உங்கள் வீட்டு முன்புறமிருக்கிற புல்தரையில் வைக்கவேண்டும் என்றார்கள். அதனை வாங்கிக் கொண்டு திரும்பவும் ‘யோசிக்கிறேன்’ என்று சொல்லி அனுப்பியிருக்கிறேன்.

இனிமேல்தான் யோசிக்க வேண்டும்.

Series Navigationதொடுவானம்இயக்குனர் மகேந்திரன்

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *