அமேசான் கதைகள் – 3 நிலவைத் தேடி..

 

ஒவ்வொரு நாள் மாலைப் பொழுதையும் ஆற்றங்கரைக்குச் சென்று கழிப்பதை ஒரு பெண்கள் குழு பழக்கமாக்கிக் கொண்டிருந்தனர். தென்றல் காற்றின் ஸ்பரிசத்தை அனுபவித்து விட்டு, இதமான நீரில் குளித்து விட்டு, பாடல்களைப் பாடி, ஆடி, கதைகள் பேசி தங்கள் பொழுதை ஆனந்தமாகக் கழிந்து வந்தனர்.
புல்வெளியில் மல்லாக்கப் படுத்துக் கொண்டு, இருண்டு கொண்டு வரும் வானத்தைப் பார்ப்பது அனைவருக்குமே பிடித்த ஒன்று.  நிலா வெளி வந்ததும், அதைக் கண்டு பல விதமான கதைகளைப் பேசுவது அதைவிடவும் பிடித்த விஷயம்.
ஒரு நாள் அப்படிப் பேசிக் கொண்டிருந்த போது, “சொர்க்கம் எவ்வளவு பெரியது.. அங்கு என்னவெல்லாம் ஆச்சரியங்கள் மறைந்து கிடைக்கின்றன என்று யாருக்குத் தெரியும்?” என்று அங்கலாய்த்தாள் ஒருத்தி.
“நான் விண்மீனாக இருந்தால், எவ்வளவு நன்றாக இருக்கும். அப்படியே வானத்தைக் கிழித்துக் கொண்டு நிலவின் அருகே சென்று விடலாம்” என்று ஆதங்கப்பட்டாள் மற்றொருத்தி.
“நாம் எல்லோருமே விண்மீனாக மாறினால், சாசுவதமாக ஆகி விடலாம்” என்றாள் இன்னொருத்தி.
ஒரு நாள் இரவு, வழக்கத்திற்கு மாறாக, நதிக்கரையில் அதிக நேரம் இருந்து விட்டபடியால், இரவு வானம் முழுமையாகக் கருமை அடைந்து, விண்மீன்கள் எப்போதும் போலில்லாமல், பளீரென ஒளிர்ந்தன.  நிலவும் முழு ஒளியுடன், காட்டில் வெள்ளி நிறத்தை பரப்பிக் கொண்டிருந்தது.
பெண்களால் தங்கள் கண்களை நம்பவே முடியவில்லை.  இத்தனை அழகிய சூழலை இதற்கு முன்னால் அவர்கள் கண்டதேயில்லை.
இரவுக் காற்று கனத்து, பூக்களின் நறுமணத்தைப் பரப்பிக் கொண்டு இருந்தது.  மின்மினிகள் புதர்களின் நடுவே மினுக்மினுக்கென்று வெளிச்சத்தைப் பரப்பிய வண்ணம், நடனமாடின.  பெண்கள் லேசான மனத்துடன், கனவுலகில் சஞ்சரிக்க ஆரம்பித்தனர்.  அவர்களில் இளையவளான நையா, தன்னுடைய கைகளை விரித்து, முழு நிலவின் ஒளியை வரவேற்றாள்.  “நான் உன்னைத் தொட விரும்புகின்றேன்” என்று முணுமுணுத்தாள்.  “எனக்கு சொர்க்க ஒளியுடன் கலக்க ஆசையாக இருக்கிறது” என்றாள் தனக்குள்ளாக.
வானத்தின் கீழே, நிலவு தன் வெள்ளிக் கிரணங்களை நையாவின் முகத்தின் மீது இதமாக வீசியது.  அவளுக்கு தான் அப்போது சொர்க்கத்தில் இருப்பதைப் போன்ற உணர்வு ஏற்படுவதாக எண்ணினாள்.  நிலவினை அடைந்தால் எவ்வளவு ஆனந்தம் கிடைக்கும் என்று எண்ணலானாள். தன்னைச் சுற்றிலும் சுற்றிப் பார்த்தாள்.  அவளது வித்தியாசமான செய்கைக் கண்டாள் அருகிருந்த அவளது தோழி.
“என்ன பார்க்கிறாய்?” என்று கேட்டாள் தோழி.
“நிலவை அடைய வழி..” என்றாள் ரகசியமாக. “நான் நிலவைத் தொட்டால் அது என்னை விண்மீனாக மாற்றிவிடும். பிறகு சொர்க்க வாழ்க்கை தான்” என்று கூறி ஆனந்தித்தாள்.
நையாவிற்கு என்னவோ ஆகி விட்டது என்று எண்ணிய தோழி, அதைப் பற்றி மற்ற தோழிகளிடம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, சற்று நேர யோசனைக்குப் பின், நையா எழுந்து, சிறது தூரம் நடந்து சென்று, அங்கிருந்ததிலேயே உயரமான மரத்திற்கு அருகே சென்றாள்.
திடீரென, “வாருங்கள்.. வாருங்கள்.. என் பின்னால்..” என்று அனைவரையும் கூவி அழைத்தாள்.  அவளைத் தொடர்ந்த மற்ற தோழிகளும் ஒன்று சேர்ந்து, மரத்தின் மீது ஏறி, உச்சாணிக் கிளையை அடைந்தனர்.  அங்கிருந்து தங்கள் கைகளை நீட்டி நிலவைத் தொட முயன்றனர்.  அவர்கள் கைகளில் அழகிய மலர்கள்.  ஆனால், அவர்கள் எதிர்பார்த்த வண்ணம் நிலவு பக்கத்தில் இருக்கவில்லை.  மிகவும் தொலைவில் இருந்தது.
“சே.. என்ன அவமானம்.. நம்மால் எப்போதும் விண்மீனாக ஆகவே முடியாது போலிருக்கிறது..” என்று சலித்துக் கொண்டாள் ஒருத்தி.
அவர்களில் மூத்தவள், அனைவரையும் தரையிறங்க உதவினாள்.
வீடு திரும்பிய நையாவிற்கு அன்று உறக்கம் வரவேயில்லை.  நிலவின் மெல்லிய வெள்ளிக்கிரணம் முகத்தில் பட்ட இதத்தை பற்றியே எண்ணிக் கொண்டிருந்தாள்.
இன்னும் உயரமான இடத்திற்குச் சென்று நிலவை அடைய முயல வேண்டும் என்று முடிவு செய்ததும் தான் சற்றே உறக்கம் வந்தது.
அடுத்த நாள் மாலை, வழக்கம் போல் பெண்கள் ஆற்றங்கரைக்குச் செல்லவில்லை.  அதற்கு பதிலாக, அவர்கள் மிக உயரமான குன்றின் மேல் ஏறினர்.  நிலவு வந்த போது, அதைத் தொட முயன்றனர்.  மறுபடியும், அவர்கள், தொட முடியாத மிகத் தொலைவில் இருந்தது நிலவு.  ஏமாற்றத்துடன், பெண்கள் வீடு நோக்கி நடக்கலானார்கள்.
“சே.. நிலவு நம் கைகளுக்கு எட்டாத இடத்தில் அல்லவா இருக்கிறது?” என்றாள் மூத்தவள்.
“நாம் அதைத் தொடும் முயற்சியை விட்டுவிட வேண்டும். நாம் காட்டிலே வாழ வேண்டியவர்கள், மேலே வானத்தில் அல்ல..” என்று மற்றவர்களுக்கு அறிவுரை கூறும் வகையில் எடுத்துச் சொன்னாள்.
“நீ சரியாகச் சொன்னாய்.. நாம் நிலவை மறந்து, காட்டிலே வாழும் ஆண்களைப் பற்றி எண்ணலாம்.  அவர்கள் தான் உண்மை.  அவர்கள் நம்மை விரும்பி நம்மை மகிழ்ச்சியுடன் வைத்துக் கொள்வார்கள்..” என்றாள் மற்றொருத்தி.
ஆனால் அவர்கள் பேசியது எல்லாம் நையாவின் செவிகளுக்கு எட்டிய போதும், மனதை எட்டவேயில்லை.  அவள் தன் கனவை விட்டு வெளியே வர விரும்பவில்லை.  அவள் நிலவைப் பெரிதும் விரும்பினாள்.  “நான் யாரையும் மணந்து கொள்ள மாட்டேன்.. எனக்கு நிலவு தான் வேண்டும்” என்று எண்ணிக் கொண்டேயிருந்தாள்.
மற்ற பெண்கள் அனைவரும் வீடு திரும்பி, உறங்கச் சென்ற பின், நையா மட்டும் மெதுவாக ஆற்றங்கரைக்கு வந்து சேர்ந்தாள்.  இரவு கும்மிருட்டாக இருந்தது. ஆற்றின் மிக மெல்லிய சலசலப்பு மட்டுமே இருந்தது.  நையா கரையில் அமர்ந்து கொண்டு வானத்தை நோக்கினாள்.  நிலவு வழக்கத்தை விடவும் அதிக பிரகாசமாக இருப்பதாக உணர்ந்தாள்.  அதன் ஒளி ஒவ்வொரு மலரையும் தொட்டது.  இதழ்களையும் இறகுகளையும் பிரகாசிக்கச் செய்தது. ஒவ்வொரு சிறு உயிரினங்களையும் தொட்டு பளபளக்க வைத்தது.
வெள்ளிக் கிரண வெள்ளத்தில் தன்னை முழுக்க நனைத்துக் கொண்டு கனவுலகில் சிறிது நேரம் மிதந்தாள் நையா.
“ஓ நிலவே.. நிலவே.  நான் உன் அருகே வர முடியவில்லை. நீ ஏன் கீழிறங்கி வரக் கூடாது?” என்று கேட்டாள்.
அப்போது, காற்று நின்று, ஆறு அப்படியே ஸ்தம்பித்து நின்றது.  நையா நிலவின் பிம்பத்தை ஆற்றின் நடுவே கண்டாள்.
நிலவு வானத்திலிருந்து தனக்காகவே கீழே இறங்கி வந்து விட்டதாக எண்ணி நையா, “ஏய்.. ஏய்.. எனக்காக பொறு.. நான் உன்னருகே வருகிறேன்..” என்று கத்தினாள்.
உடனே ஆற்றங்கரை அருகே சென்றாள்.  கரையிலே நடக்க நடக்க நிலவும் நகர்ந்தது.  நிலவு நகர்வதைக் கண்டு, அதைத் தொடும் ஆவலில் வேகமாக நடந்தாள்.  நிலவின் பிம்பமும் ஆற்றின் நடுவே வேகமாக நகர ஆரம்பித்தது.
“நிலவே எனக்காகப் பொறு.. உன் வேகத்திற்கு என்னால் வர முடியவில்லை.  நில்.. நில்..” என்று சொல்லிக் கொண்டே சென்றவள், கடைசியில் மேலும் நடக்க முடியாமல், ஓரிடத்தில் நின்றாள்.
அப்போது நிலவின் பிம்பமும் ஓரிடத்தில் நின்றது.  இருண்டு, குளிர்ந்து, ஆழமாக இருந்த ஆற்றின் மத்தியில் நின்றது.
“நான் வருகிறேன் நிலவே.. வருகிறேன் நிலவே..” என்று கூறிக் கொண்டே நையா, தன் கைகளை விரித்து கொண்டே ஆற்றில் இறங்கினாள்.  பாவம் நையா.  குளிர்ந்த நீர் அவளது உடலை மறத்துப் போகச் செய்தது.  ஆற்றினுள்ளே இருந்த கொடிகள் அவளது கால்களை உள்ளே இழுத்தன.  அவள் நிலவின் பிம்பத்தை பிடிக்க முயன்று தோற்றாள்.  குளிர்ந்த நீர் அவள் கண்களைப் பறித்தது.  வாயில் நீர் புகுந்தது.  விரைவில் ஆற்றின் மத்திக்கு வந்து விட்டிருந்தாள். ஆற்றின் வேகம் அவளை இழுத்துச் செல்ல ஆரம்பித்தது.
மறுநாள் நையாவின் தோழிகள் அவளைக் காணாமல் தேடினர். காலையில் வழக்கமாகச் செல்லும் எல்லா இடங்களுக்கும் சென்று தேடினர். அவளைக் காண முடியவில்லை.  இறுதியில் ஆற்றின் கரைக்கு வந்தனர்.  நையா முழுகிய இடத்தில், ஆற்றின் மத்தியில், முன்பு பார்த்தேயிராத ஒரு புதிய செடி இருப்பதைக் கண்டனர்.
சிவந்த, மனம் மிகுந்த மிகப் பெரிய அல்லி மலர் ஒளியில் பளபளத்தது. நையா நிலவைப் பிடிக்க கையேந்தியதைப் போன்று அதன் இதழ்கள் முழுவதும் விரிந்து காணப்பட்டதாகப் பெண்கள் எண்ணினர்.
“இது நிலவின் வேலை தான். நிலவு தன்னுடைய பிம்பம் நீரின் மேல் படும் போது வரவேற்க வேண்டி, நையாவை நீர்ச் செடியாக மாற்றி விட்டது” என்று சொல்லிக் கொண்டனர்.
Series Navigationமுள்வெளி அத்தியாயம் -21மீண்டும் அமைதி சமாதானம் அறிவிக்கப்படுகிறது