அவன் …அவள் ..அது ..

அவன்
ஏதோ ஓர் அடர்வண்ணம்
நிரப்பியே அவன் எழுதுகிறான்
பலசமயம் அவை புரிவதாயில்லை ..
எழுத்துக்கள் ஒன்றோடு ஒன்று
முரண்பட்டும் , ஒட்டிக்கொண்டும்

கையெழுத்து வேண்டாம் என
மசிநிறைத்த தட்டச்சு இயந்தரத்தில்
பிரதி எடுக்கிறான் அப்போதும்
அவன் வார்த்தைகள் ஒன்றோடு ஒன்றாய்
அப்பிக்கொள்கின்றன

அவள் ..

எழுதிய வார்த்தைகளினூடே
கூறா மொழிகளையும்
சேர்த்தே படிக்கிறாள் ..

விழிகளின் மொழிகளை
இளவர்ணங்களில் தோய்த்தெடுத்து
அறைகளின் சுவர்களில் பூசி வைக்கிறாள்
ஒட்டிக்கொண்ட வார்த்தைகள்
அழகாய் தனித்து தெரிந்தன
அடர் நிறமாய் …

அது …

சிரித்து கொண்டிருந்தது
அது …
இவனுக்கும்
அவளுக்கும் இடையே …
சிக்கல்களின் துவக்கம் …

தொடக்கங்கள் வாதித்து
பின்னூட்டங்கள் கொடுக்கையில்
கசப்புகள் வெளிவரதுவங்கின ….
வெளிறிபோன நிறமிகளின்
அடர் வர்ணமென …

ஷம்மி முத்துவேல்

Series Navigationகாணாமல் போனவர்கள்கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காதலராய் உள்ள போது (கருங்கல்லும், மதுக் கிண்ணமும்) (கவிதை -46)