அ. முத்துலிங்கம் – ஒரு வித்தியாசமான புலம் பெயர்ந்த ஈழத் தமிழ்க்குரல்

This entry is part 2 of 45 in the series 26 பிப்ரவரி 2012

ஈழத் தமிழ்க்குரல் என்றுமே ஒரு வேதனையும் போராட்டமும் கொந்தளிக்கும் குரல் தான். என்றுமே. அதுவும் உரத்த குரலாகத் தான் இருந்து வந்துள்ளது. அப்படித்தான் இருப்பதும் சாத்தியம். அது வாழ்க்கையின் அனுபவத்திலிருந்து வெளிக்கிளர்வது. வேறு எப்படியாகவும் அது இருக்க முடியாது. இன்றும் சரி, இலங்கை சுதந்திரம் பெற்று, சேனனாயக தமிழருக்கு குடியுரிமை மறுக்கத் தொடங்கி, பின் வந்த பண்டாரநாயக சிங்களத்திற்கு முதலிடம் கொடுக்கத் தொடங்கிம், பின் அடுத்தடுத்து வந்த தமிழ் இனத்தையே குறி வைத்த அடக்கு முறை அடுத்தடுத்து தொடர்ந்த பின் வருடங்களில் யாழ்ப்பாண நூலக எரிப்பும் வன்முறைகளும் 1983 லிருந்து ஈழத்தமிழர் புலம் பெயரத்தொடங்கிய வரலாறும், பின் வந்த போரின் பயங்கரங்களும் படு கொலைகளும் இன்று இன்னும் குறைந்தது ஒரு தலைமுறைக்காலத்துக்கு தம் குரல் இழந்து, செயல் இழந்து கண்ணியமும் சம உரிமையும் இழந்து தம் வாழ்ந்த மண்ணிழந்து வாழும் நிர்ப்பந்தத்துக்குள்ளாயிருக்கும் ஈழத் தமிழர் தம்மைப் பற்றி உற்சாகத்துடன் வாழும் எதிர்கால நம்பிக்கையுடன் சொல்ல ஏதும் அற்றிருக்கும் போது அவரகள் எழுத்து புலம் பெயர்ந்த நாட்டிலிருந்தும் கூட ஒரு சோகக் கதையாகத்தான் இருக்க முடியும்.
பெர்ட்டோல்ட் ப்ரெக்ட் ஒரு இடத்தில் இதற்கு எதிராகச் சொல்வது போலத்தோன்றும். வார்த்தைகள் சரியாக நினைவில் இல்லை. ஆனால் இப்படித்தான் அது அர்த்தப்படும். “அவரிடம் கேட்கப்பட்ட கேள்வி: Will there be singing and dancing in times of war?
அதற்கு ப்ரெக்டின் பதில்: Yes. There will be singing and dancing: but that will be about War

கிரேக்க நாடகங்கள் பெரும்பாலானவை, எனக்குத் தெரிந்தவை எல்லாமே தொடர்ந்த அடுத்தடுத்த போர்களின், அவை விளைவித்த நாசத்தின், பின்னணியில் பிறந்தவை தான். உதாரணத்துக்கு ஒன்று யூரிபிடிஸின் நாடகம் Trogen Women பெலப்பனேசியன் போரில் ஏதென்ஸ் நகரமே சூறையாடப்பட்டு நகரம் அதன் ஆண்மக்களை இழந்த தன் பெண்களின் சோகத்தையும் அவலத்தையும் சொல்வதுதான் ட்ராய் நகரத்துப் பெண்கள். தம் கணவரை இழந்த பெண்களின் கூட்டுப் புலம்பல் தான் அந்நாடகமே. ஒரு விதத்தில் பார்க்கப் போனால் பகவத் கீதையே ஒரு குடும்பமும், ராஜ்யமும் தமக்குள் போரிட்டு அழிவை நோக்கி விரைந்து கொண்டிருக்கும் போது பிறந்த தர்மோபதேசம் தானே. ஆப்பிரிக்க கவிதைகள் எல்லாமே உரத்த குரலில் தம் அடிமை வாழ்வுக்கு எதிரான போருக்கான அறைகூவல் என்று சொல்ல முடியாதா?.
பரவலாக அமைதி நிலவியதாகத் தோன்றிய அறுபதுகளில் கொழும்புவில் வாழும் தமிழரின் யாழ்ப்பாண ஏக்கம் தொடர்கிறது. இது எஸ்.பொன்னுத்துரையின். உரத்த குரல்களில் பிரதான்யமானது எஸ்.பொவினது. அன்றைய அப்பையாவின் யாழ்ப்பணத்துக்கான ஏக்கம் இன்று கனடாவில், ஐரோப்பிய நாடுகளில் வாழும் அப்பையாக்களின் ஏக்கம். அன்று சடங்கு நாவலின் அப்பையாவுக்கு யாழ்தேவி இருந்தது. இன்று இல்லை. ஈழப் போரில் தன் மகனை இழந்தவர் எஸ்.பொ. மு. தளைய சிங்கம் தமிழர் கௌரவத்துடன் வாழ வேண்டும் தனி ஈழத்தைக் குறிக்குமுகமாக இனி தனக்கென ஒரு தனி வீடு வேண்டும் என்று முதல் குரல் கொடுக்கிறார் தன் தனி வீடு நாவலில். படிப்படியாக ஒர் இனம் மற்ற இனத்தை தன் பெரும்பான்மையின் அதிகாரச் செறுக்கில் ஒடுக்க வளர்த்து வந்த கொடுமையின் பெருக்கைச் சொல்லும் வரலாறு தான் ஈழத்தமிழரின் வரலாறு. அந்த வரலாறு பதிவு செய்யும் இலக்கியம் தானே பின் வந்த ஈழ எழுத்துக்கள் அனைத்தும், ஈழத்திலும் புலம் பெயர்ந்த நாடுகளிலும்.
இதை எழுதி வரும்போது தான் எனக்குத் தோன்றுகிறது, இப்படி நீட்டி முழக்கி இவ்வளவு சொல்லியிருக்க வேண்டாம் என்று. புறநானூற்றின் எத்தனைப் பாட்டுக்கள் போருக்குச் சென்ற தமிழர்களின் வீரத்தையும், மரணத்தையும் போர்க்களங்களைப் பற்றியும் பாடுகின்றன!.கலிங்கத்துப் பரணி என்ன சொல்கிறது?. போகட்டும். . பரணி என்றால் என்ன அர்த்தம்? அது பிறந்தது எதற்கு? ஈழத்துப் பரணி என்று இப்போது எழுதப்படும் வாய்ப்பு இல்லைதான். தான் வதைபடும் வாழ்வை அனுபவத்தை எழுதாமல் வேறு என்னத்தை எழுதுவான் ஒரு எழுத்தாளன்?
அப்படித்தான் அ. முத்துலிங்கமும். பெரும்பாலும் இந்த ஈழ அனுபவத்தை அவர் நேரிடையாக பகிர்ந்து கொண்டவர் அல்லர் என்ற போதிலும். அ. முத்துலிங்கம் ஈழத்தமிழர் தான்.. கொக்குவிலைச் சேர்ந்தவர். நமக்குத் தெரிந்த இந்த ஈழ சரித்திரம் பூராவும் அவருக்கு இன்னும் நன்றாகவே தெரியும். அதன் பாதிப்புக்கு இரையானவர் தான். தன் பிறந்த மண்ணையும் ஊரையும் இழந்தவர் தான். ராஜ பக்‌ஷே அவரைத் திரும்ப கொக்குவில் பிரஜையாக ஏற்றுக் கொள்வாரோ என்னவோ தெரியாது. முதலில் திறந்த வெளியில் முள்வேலிகளுக்குள் சிறைப்படுத்தப் பட்டிருக்கும் பல ஆயிரக்கணக்கான தமிழர்களுக்கு முதலில் குடி உரிமை கிடைக்கிறதா அவர்கள் தம் வீடு திரும்புகிறார்களா பார்ப்போம்..
ஆனால் முத்துலிங்கத்திடமிருந்து ஏதும் ஆவேசமும் உக்கிரமும் நிறைந்த உரத்த குரல் எதிர்ப்போ கண்டனமோ எழவதில்லை. சுபாவத்தில் மிகவும் அடங்கிய குரல்காரர். அவர் உரத்துப் பேசி யாரும் கேட்டிருக்க முடியாது. உரத்த வாய்விட்ட சிரிப்பு கூட அவரிடமிருந்து எழுவதில்லை. எதிலும் அமைதி. கொண்டாட்ட மானாலும், கண்டனமானாலும் சரி
.
அறுபதுகளிலிருந்து எழுதி வருகிறார். இடையில் சில காலம் எழுதாதிருந்திருக்கிறார். எழுதத் தொடங்கிய போதும், இடை விட்டுப் பின் தொடர்ந்த போதும் சரி அவர் எழுத்தும் அவரும் குணம் மாறவில்லை. இவ்வளவு நீண்ட காலமாக ஒரே குரலில் சன்னமான, ஒரு மெல்லிய புன்னகை உதிரக் காணும், குரல். சிறுகதைகளும் கட்டுரைகளும் ஆனாலும் எங்கும் எதிர்பாராத இடத்தில், இழப்பின் சோகத்தின் தாக்கத்தை நாம் பயங்கரமாக உணர்வோம். ஒரு நாள் ஒரு நாவிதருடன் நடந்த நீண்ட . உரையாடல் தான் சுவருடன் பேசும் மனிதர்.. சற்று ,மாறுதலுக்காக ஒரு புதிய சலூனுக்குப் போனால் அங்கு ஒரு இராக்கியர் தான் இவருக்கு முடி வெட்ட வந்தவர். சதாம் ஹுஸேன் காலத்தில் இங்கு கனடாவுக்கு குடியேறியவர். அவர் அராமிக் அவரது தாய் மொழி. சிரியன் கிறிஸ்துவர். அவர்கள் இராக்கைச் சுற்றியுள்ள பல நாடுகளில், இஸ்ரேல், பாலஸ்தீனம், சிரியா, லெபனான் என இப்படி கிட்டத்தட்ட ஒரு மில்லியன் பேர் சிதறி வாழ்கிறார்கள். பொறி இயல் படித்தவர் அகதியாக கனடா வந்தவர். முடி திருத்தும் தொழில் கற்றுக்கொண்டுள்ளார். தனக்கு அரபி தெரியும் என்று காட்டிக்கொள்ள விரும்பவில்லை. யேசு பேசிய மொழி தான். ஆனாலும் அது அழிந்து கொண்டு வரும் மொழி. அராமிக் பேசும் நாடு என ஒன்றில்லை. பேசுவார் இன்றி இருந்த ஹீப்ருக்கு இப்போது அரசு மொழி அந்தஸ்து தந்து இஸ்ரேல் வாழ்வழித்து வருகிறது. என்று அவர் தன் ஆதங்கத்தைச் சொல்லிக்கொண்டே வந்தவர் தன் வாடிக்கையாளரைக் கேட்கிறார். “உங்கள் நாடு எது?. உஙகள் மொழி எது?” என்று. தான் தமிழர் என்றும் இலங்கையில் அரசாளும் சிங்களவரால் விரட்டப்பட்டு அகதிகளாக வாழும் தமிழரில் ஒருவர் என்கிறார். இதற்லி அந்த இராக்கி, “தமிழும் அழிந்து தான் போகும். ஒரு சில மில்லியன் பேரே பேசும் மால்டீஷ்,(மால்டா), திவேஹி (மாலத்தீவு), ஐஸ்லாண்டிக் (ஐஸ்லாந்து) இவையெலலாம் அழியாது. ஆனால் தனக்கென ஒரு நாடு இல்லாத தமிழ் அழிந்துவிடும் என்று சொல்கிறார். ஆனால் தான் நம்பிக்கை இழக்க விரும்பவில்லை என்று முத்துலிங்கம் கதையை முடிக்கிறார்.
அவர் நம்பிக்கை கிடக்கட்டும். நம்பிக்கையில் வாழ வேண்டியவர் அவர். நம்மைப் பற்றிப் பேசுவோம். நாடு இல்லை, சரி. ஒரு மாநிலம் இருக்கிறது. ஆனாலும் தமிழ் நாட்டில் தமிழில் யார் பேசுகிறார்கள்? தொலைக்காட்சியில்?, தெருவில்?, கல்விக் கூடங்களில்? குழந்தைகள்? ஏன்? சென்னை ரிக்‌ஷாக்காரர்கள்? தமிழ் பேசும் நடிகைகள் தேவை என்று தினம் விளம்பரங்கள் தொலைக் காட்சியில் வருகின்றன. தமிழ் தலைப்பு கொண்ட சினிமாப் படங்களுக்கு வரி விலக்கு தரப்படுகிறது. தமிழ் நாட்டில் தமிழை வாழ வைக்க என்னென்ன வெல்லாமோ செய்ய வேண்டியிருக்கிறது
கதையில் வெகு அமைதியாக ஒரு பெரும் சோகத்தை, இழப்பைச் சொல்லிவிடுகிறார். முழக்கங்கள் தேவையாயிருக்கவில்லை.
முத்துலிங்கம் தன் வாழ்வின் பெரும்பகுதியை உலக நாடுகள் பலவற்றிலும் வேலை நிமித்தம் வாழ்ந்திருக்கிறார். சுற்றியலைந்திருக்கிறார். அவ்வாழ்க்கையின் சன்ன மெல்லிய குரல் பதிவுகள் தான் அவரது கதைகள் அனேகமும். அவை அனைத்தும் சோக நிகழ்வுகளாகவே பெரும் பாலும் நிறைந்துள்ளன. அத்தோடு ஒரு வாழ்க்கை விடம்பனமும் மெல்லிய புன்னகையும். இஸ்லாமாபாதில் அவர குடியிருந்த இடம் ராணுவ அதிகாரிகள் வாழும் பங்களாக்கள் கொண்டது. அங்கு அவருக்கு சினேகிதமான ஒரு பெட்டிக்கடைக்காரன். 18 வயதிலிருந்து 20 வருடங்களாக அங்கு இருப்பவன். பேப்பர், பாண், சிகரெட் இத்யாதி விற்று வாழ்பவன். அங்கு ஒரு கல்யாண நிகழ்ச்சிக்காக இடைஞ்சலாக இருந்த அவனை விரட்டி அவன் பெட்டிக்கடையையும் உடைத்து எறிந்தார்கள்.. கல்யாணம் பெரிய ஷாமியானா போட்டு, வெகு தடபுலாக, ஃபதே அலி கான் கச்சேரியோடு நடந்து முடிந்தது. சுற்றிக் குடியிருக்கும் எல்லோருக்கும் கல்யாண வீட்டில் தான் சாப்பாடு ஐந்தாறு நாட்கள் ஆயின பந்தலைப் பிரிக்க. பின் தான் பெட்டிக் கடைக்காரன் வந்தான். அவனுக்கு பதே அலிகான் கேட்க முடியாது போய்விட்ட துக்கம். கல்யாண மாப்பிள்ளையை சிறுவயதில் தன் தோளில் சுமந்ததாகச் சொல்கிறான் நவாஸ். இருப்பினும்………அவன் விரட்டப்பட்டான். கேட்பார் வருந்துவார் யாரும் இல்லை. மாப்பிள்ளை கலைந்த தலையும் கசங்கிய உடையுமாக பெட்டிக்கடைக்காரனிடம் “சிகரெட்” என்கிறான். நவாஸ் ஒரு கிகரெட் எடுத்துக்கொடுக்கிறான். கதை “பத்து நாட்கள்” .

வேடிக்கையான சில கற்பனைகளும் உண்டு. ”நீ குடியிருக்கும் இடத்தின் புவியீர்ப்பை அனுபவிக்கிறாயே அதற்குக் கட்டணம் கொடு” என்று ஒரு அதிகாரம் கட்டணம் வசூலிக்கிறது. புவியீர்ப்பு இல்லாது வீடு கட்டமுடியுமா? தெருவில் தான் நடக்கமுடியுமா? 48-வது அகலக்கோடு என்று ஒரு கதை. அந்த கற்பனைக் கோட்டுக்கு ஒரு புறம் போனால் செவ்வாய்க் கிழமை. மறுபுறம் புதன் கிழமை. இந்தக் கோடு எத்தனையோ நாடுகளை பிரித்தும் ஊடுருவியும் செல்கிறது. பிரிக்கும் நாடுகளில் அமெரிக்காவும் கனடாவும். நயாகரா வீழ்ச்சிக்கு ஒரு புறம் அமெரிக்கா. மறு புறம் கனடா. இரண்டு நாடுகளையும் இணைக்கும் பாலமும் ஒன்று உண்டு. கீழே விழுந்து கிடக்கும் மேபில் இலை காற்றில் கனடாவுக்கும் அமெரிக்காவுக்குமாக அலைந்து கொண்டிருக்கும். தனக்குத் தான் மறதி அதிகமாயிற்றே, திசை மயக்கமும் உண்டே என்று சுற்றுலா வந்த சிவமூர்த்தி பஸ்ஸிலிருந்து இறங்கியவர் இறங்கிய இடத்தின் அடையாளங்களைக் குறித்துக்கொண்டு கடைத்தெருவைச் சுற்றி வந்தவர் திரும்பிப் பார்த்தால் பஸ்ஸைக் காணோம். விசாரித்துப் பார்த்தால் பஸ் போய்விட்டது என்கிறார்கள். பிரசினை என்னவென்றால அவர் இறங்கியது கனடாவில். ஊர் சுற்றிவிட்டு வந்து விசாரித்தது அமெரிக்காவில். அவர் மறதி அவரைத் திரும்பவும் ஏமாற்றிவிட்டது 48-வது அகலக்கோடு கதையில்

பலதரப்பட்ட அனுபவங்கள். வெளிநாட்டு அனுபவங்கள். வெளி நாடுகளில் சொந்த மனிதர்களின் வேற்று பண்பாட்டு அனுபவங்கள். தாட்பாள்களின் அவசியம் என்று ஒரு கதை. அம்மா இலங்கையிலிருந்து வந்தவர் கனடா வாழ்க்கையுடன் தன்னைப் பழக்கப்படுத்திக் கொள்வதற்கு மிகவும் கஷ்டப் படுகிறார். முதலில் அதற்கேற்ப பழக்கப்படுத்திக் கொள்ளவே அவருக்கு இஷ்டமில்லை. அதில் தாட்பாளும் ஒன்று. வேண்டாத விருந்தினர்களை அம்மா உபசரிக்கத் தொடங்குகிறார் .அவர்கள் மதமாற்றத்துக்கு பிரசாரம் செய்கிறவர்கள். அவர்களை நம்பும் அம்மா வெகுளி. அம்மா இலங்கைக்குப் போனபின்னும் அவர்கள் வந்து அம்மாவைப்பற்றி விசாரிக்கிறார்கள். அம்மாவுக்கு சொர்க்கத்தில் இடம் நிச்சயம் செய்ய அவர்கள் பிரார்த்தனை செய்வதாக அம்மாவுக்கு வாக்குறுதி கொடுத்திருக்கிறார்கள் என்று அம்மா வேறு சந்தோஷமாகச் சொல்லியிருக்கிறார். “இப்போது “உங்களுக்கு சொர்க்கம் போக விருப்பமா? என்று இவரிடமும் கேட்டார்களாம். “ஏதோ இவர்களிடம் எக்ஸ்ட்ரா டிக்கட் ஒன்று மிஞ்சியிருப்பது போல. ”பாதைகள் எங்கு பிரிகின்றன என்று சொன்னால் நானே விசாரித்துப் போய்க் கொள்கிறேன்” என்று இவர் பதில் சொல்ல, பிரசாரகர்களுக்கு இது உவப்பாக இருக்கவில்லை. “உங்கள் தாயார் மிக தயாள குணத்தவர்” என்று சொல்லி இவர் சொர்க்கத்துக்கு லாயக்கில்லாதவர் என்ற தீர்மானத்துடன் வெளியேறுகின்றனர்.
முத்துலிங்கத்தின் கேலியும் நகை உணர்வும் நாம் சொல்லும் நமுட்டுத் தனமானது. அதிகம் போனால் ;க்ளுக் என்று மெலிதாகக் கேட்கலாம். அட்டகாசமாகச் சிரித்து சுற்றியிருப்பவர்களையெல்லாம் நம்மைத் திரும்பிப்பார்க்க வைக்காது.
வேட்டை நாய் என்று ஒரு கதை , ஒரு உக்ரேனியன் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மலர்ந்து திருமணத்தில் போய் முடிகிறது. அவள் பல பாஷைகள் பேசுபவள். எல்லாவற்றிலும் 1000 வார்த்தைகளே பேசுபவள். படு கஞ்சம். பணத்திலும் வார்த்தைகளிலும். வேட்டை நாய் வாங்கப் போய் அவளைக் கூட வைத்துக்கொண்டு கழிவு விலையில் தான் ஒரு நாயை. வாங்க முடிகிறது. அதை வேட்டைக்கு அழைத்துச் சென்றால், சுட்ட பறவையை நோக்கி அது முக்கால் தூரம் விரைந்து பின் திரும்பிவிடும். ஏன்? கழிவு விலையில் வாங்கியது. கொடுத்த காசுக்கேற்ற வேலை. முழு விலையும் கொடுத்திருந்தால் பறவை விழுந்து கிடக்கும் தூரம் வரை சென்று பறவையைக் கவ்விக்கொண்டு வரும். ஒரு சமயம் திருமணம் செய்துகொள்ள காதலர் இருவரும் அவள் யுக்ரெய்ன் வழக்கப்படி மூன்று ரகஸ்யங்களைப் பரிமாறிக்கொள்ள வேண்டுமாம். இவள் ஒரு ரகஸ்யம் சொல்லி நிறுத்தி விடுகிறாள். அடுத்த ரகஸ்யம் என்ன? சொல்லவில்லையே என்றால், அது அடுத்த ஆளுக்கு. ஒரு ஆளுக்கு ஒரு ரகஸ்யம் தான் என்கிறாள். இப்படிப் போகிறது அந்தக் கதை. ஒரு சமயம் இருவருக்கும் சண்டை. தெருவில் தபால் வண்டி ஒட்டிப் போகும் ஒரு மீசைக்காரனைக் காட்டி “ பார், அது உன் தகப்பனாக இருக்கக் கூடும்,” என்று இவன் சொல்ல, நான் சொன்ன புனிதமான ரகஸ்யத்தை நீ கேலி செய்துவிட்டாய்” என்று அவளுக்குக் கோபம். அவனைப் படுக்கையில் விழுத்தாட்டி, அவன் மேல் தவளை போல் கால் பரப்பி தன் முகத்தை அவன் அருகே கொண்டு போனாள். உக்ரேனிய மிருகம் அவனை முகரக் குனிவது போல் இருந்தது. ஆனால் அவள், கழிவு விலையில் வாங்கப் பட்டவள் போல் பாதியிலேயே நின்று விட்டாள். இவளோடு தான் தன் வாழ்வைக் கழிக்க வேண்டும் என்று அவன் தீர்மானித்த போது அவர்கள் திருமணம் செய்துகொண்டு 45 நிமிடங்கள் தான் ஆகியிருந்தன. என்று முடிகிறது கதை.
உடனே திரும்பவேண்டும் கதை நமக்கு பல ஆச்சரியமான புதிய தகவல்களைத் தரும் ஆப்பிரிக்காவின் மேற்குக் கரையோரம் இருக்கும் சியாரா லியோனேயில் வேலை. மனைவி கைக்குழந்தையுடன் வாசம். குழந்தைக்கு மலேரியா காய்ச்சல்.. மேற்குக் கரையோரம் இருக்கும் நைரோபிக்கு உடனே அலுவலக வேலையாகப் போக வேண்டும். நைரோபிக்கு போய் திரும்பி வந்த விமானப் பயணமும் ஹோட்டல் வாசமும் ஒரு சாகஸப் பிரயாணம் மாத்திரமல்ல, அக்கால ஆப்பிரிக்க பயணங்களும் வாழ்க்கையும் தீவிர சாகசங்களை வேண்டுவதாக இருக்கும் போல. திரும்பி சியாரா லியோனே வந்து மனைவியையும் குழந்தையையும் பார்க்க நாட்கள் பல தாமதமாகிவிட்டது. “இனி ஒரு நிமிஷம் இங்கு இருக்க முடியாது. நான் திரும்பிப் போகிறேன்” என்று மனைவி சொல்ல, ”அது தான் சரி உடனே திரும்பிவிடவேண்டும்” என்றும் தீர்மானமாகி அடுத்த நாள் காலை அதைத் தான் செய்யப் போகிறேன்” என்கிறார் முத்துலிங்கம்.

கதையின் அடுத்ததும் கடைசியுமான வரி:
”நாங்கள் ஆப்பிரிக்க மண்ணை விட்டுக் கிளம்ப மேலும் 21 வருடங்கள் பிடித்தன”
பதினேழாம் நூற்றாண்டு இலங்கைக் கதை “லூசியா” கண்டியைத் தலைநகராகக் கொண்டு இரண்டாம் ராஜசிங்கன் என்னும் சிங்கள அரசன் ஆண்டுகொண்டு இருந்த காலம். போர்ச்சுகீசியரும் ஆங்கிலேயரும் ஊடுருவி தம்மை ஸ்தாபித்துக்கொள்ள முயன்று கொண்டிருந்த காலம் தகப்பன் கண்டிச் சிறையில். இறந்து விட மகன் 18 வயது ராபர்ட் நாக்ஸ்க்கு தகப்பன் சொன்ன கடைசி அறிவுரை. உனக்கு ஆங்கிலம் தெரியும் என்று காட்டிக்கொள்ளாதே. ஏசுவிடம் விசுவாசமாக இரு”. தப்பித்த ராபர்ட் சிங்களம் கற்று, சிங்கள நாட்டு பழக்க வழக்கங்களையும் தெரிந்து கொள்கிறான். அவனும் அவனது இரண்டு நண்பர்களும் கண்டி வழக்கப்படி சிந்திரிக்மல் என்னும் பெண்ணை மணந்து கொள்கிறார்கள். அவள். வீட்டு வேலை எல்லாம் செய்கிறாள். இவர்கள் வியாபாரத்தில் நிறைய பணம் சேர்த்து செல்வந்தர் ஆகிறார்கள். ஆனால் அரசனின் கொடுமை தாளாது இங்கிலாந்து திரும்ப விரும்புகிறார்கள். ராபர்ட்டுக்கு ஓடிப்போக விருப்பமில்லை. கண்டி அரசனுக்கு ஆங்கிலம் பேசும் ஆலோசகன் தேவை. அரச அதிகாரி திவச அவனைப் பிடித்துக்கொண்டு போய் விடுகிறான். அப்போது சிந்திரிக்மல், அவனிடம் குழந்தை லூசியா அவனது குழந்தை தான் என்று சொல்கிறாள். போகும் முன் லூசியாவுக்கு ராபர்ட் சொன்ன புத்திமதி, “ நான் திரும்பி வருவேன். அது வரை யாரையும் தலை நிமிர்ந்து பார்க்காதே. உனக்கு ஆங்கிலம் தெரியும் என்று யாரிடமும் சொல்லாதே” டச்சுக்காரர்கள் தோற்று வருகிறார்கள். ஆங்கிலேயர் வெற்றி பெற்று வருகிறார்கள். அப்போது நான் தப்பி, கிழக்கிந்திய கம்பெனியில் சேர்ந்து நான் திரும்புவேன்” என்று சொல்லிச் செல்கிறான். அது 1679-ம் வருடம். லூசியா 14 வயதுச் சிறுமி. ராபர்ட்டுக்கு வயது 37. ஆனால் திசாவின் கண்களில் லூசியா பட்டு விடவே அவள் அரண்மனைப் பணிக்கு இட்டுச் செல்லப்படுகிறாள். அரசனுக்கு பணிவிடை செய்ய. அரண்மணையில் அவள் ஆங்கிலம் அறிந்தவள் என்பது வெளிப்பட, அரசன் முன் நிறுத்தப்பட்டு அவள் அரசனின் 37-வது ஆசை நாயகியாகிவிடுகிறாள். அரசனின் படுக்கைக்கு சென்றவள். அரசனின் அகோர பூத உடலில் அவளது சிறிய உடல் புதைந்து போகிறது. ஏழு வருடங்கள் இப்படிக் கழிகின்றன. ராஜசிம்ஹன் இறந்து போகிறான். அப்போது லூசியாவுக்கு வயது 22.
ராபர்ட் இங்கிலாந்துக்குத் தப்பி ஓடிவிட்டான் தான். அவன் லூசியாவுக்குச் சொன்னபடி டச்சுக்காரர்கள் தோற்று ஆங்கிலேயர் வருவார்கள் ஆட்சி செய்வார்கள். ஆனால் அதற்கு இன்னும் 118 வருடங்கள் லூசியா காத்திருக்க வேண்டியிருக்கும்” என்ற கடைசி வரியுடன் கதை முடிகிறது. வாக்கேயக் காரர்களின் முத்திரை போல, கதையின் கடைசி வரி முத்துலிங்கத்தின் முத்திரை போலும்.
இக்கடைசி வரிகள் வரலாறு அவர்களை ஏமாற்றவிருப்பதையும், அவர்களுக்குத் தெரியாத வரவிருக்கும் சோகத்தையும் சொல்கிறது. அந்தச் சோகமும் ஏமாற்றமும் நிறைந்த வரலாறு தான் இன்றைய ஈழத்தமிழரை எதிர்நோக்கியிருப்பதும். எத்தனை வருடங்கள் இவர்கள் காத்திருக்க வேண்டுமென்பது முத்துலிங்கத்துக்குத் தெரியாது. அவரும் சொல்லவில்லை.
இவை ஒரு சிலவே. முத்துலிங்கம் சிறுகதைகளே எழுதியுள்ளார். கட்டுரைகளையும் நேர்காணல்களையும் தான். சிறுகதைகளெ ஆனாலும் அவற்றின் பரப்பும் எண்ணிக்கையும் விஸ்தாரமானது. உலகம் முழுதையும் உலக மக்கள் அனைவரையும் காட்சிகளாக வாழ்க்கைத் துணுக்குகளாக நம் முன் நிறுத்தும். தோழமையோடு, அவ்வப்போது சிறிது நமட்டுச் சிரிப்போடு, மெல்லிதாக எட்டிப் பார்க்கும் புன்னகையோடு. அந்த உலகம் தனித்துவமானது. வேறு யாரிடமிருந்தும் கிடைக்காதது.
ஈழத் தமிழ் எழுத்தாளர்களிலேயே தனித்துவம் மிக்கவர். ஆர்ப்பாட்டமில்லமல், இரைச்சலிடாமல், நம் முன் நின்று விடுகிறவர். ஈழம் தமிழுக்குத் தந்துள்ள ஒரு கொடை.
_________________________________________________________________
அமெரிக்காக்காரி: (சிறுகதைத் தொகுப்பு) – அ. முத்துலிங்கம் காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோயில் பக்கங்கள் 173. விலை ரூ 125.

Series Navigationதாகூரின் கீதப் பாமாலை – 1 எங்கு போய் மறைந்தாள் ?நினைவுகளின் சுவட்டில் – (87)
author

வெங்கட் சாமிநாதன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *