ஆனந்த பவன் நாடகம் – காட்சி-2

This entry is part 23 of 30 in the series 24 ஆகஸ்ட் 2014

Ananda Bhavan pic -3 a

இடம்: ஹோட்டல் ஆனந்தபவன்


நேரம்: காலை மணி எட்டு


பாத்திரங்கள்: ராஜாமணி, ஜமுனா, கெமிஸ்ட்ரி லெக்சர் ராமபத்ரன்

(சூழ்நிலை: ராஜாமணி கேஷில் உட்கார்ந்து பில் வாங்கிக் கொண்டிருக்கிறான். கூட்டம் அதிகரித்துள்ளது)

 

 

(கெமிஸ்ட்ரி லெக்சரர் ராமபத்ரன் ஹோட்டலுக்குள் நுழைகிறார். அவர் ஓர் ஆல் ரவுண்டர் கிரிக்கெட், செஸ், கர்நாடக சங்கீதம், வேத அத்யயனம், கம்யூனிஸம், நவீன இலக்கியம் சினிமா எதற்கும் ஈடு கொடுப்பார். அவர் வர வர கேஷிலிருந்து எழுந்து நிற்கிறான் ராஜாமணி)

 

 

ராமபத்ரன்: என்ன டெண்டுல்கர்… காலையிலே ப்ராக்டீஸுக்குப் போகலியா? உட்காரு… உட்காரு… இதென்ன கெமிஸ்ட்ரி கிளாஸா…?

 

ராஜாமணி: இல்லே சார்… பார்ட்னர்ஸ் கெடைக்கலே.

 

ராமபத்ரன்: அட உட்காருப்பா! நேத்து ஃபீல்டிலே உன் ப்ளேவைக் கவனிச்சேன்… நாட் பேட் இன்னும் ‘அலெட்ர்’டா இருக்கணும். பேட்ஸ்மேனுக்கு ஸ்டைல் முக்கியம் எனர்ஜியும் அக்யூரஸியும் முக்கியம். சும்மா சும்மா ஆனந்த பவன் மசாலா தோசையும் ஆமவடையும் ஒரு கை பார்த்துண்டிருந்தா போறாது. யூ ஷுட் லிஸன் ப்ளேயர்ஸ்… மெட்ராஸிலே டெஸ்ட் மாட்ச் போறியா?

 

ராஜாமணி: ஸீஸன் டிக்கெட் கெடைக்கலே சார்!

 

ராமபத்ரன்: கெடைக்கலேன்னு சொல்லலாமா கிரிக்கெட் ப்ளேயரா இருந்துண்டு! முண்டியடிச்சு வலை போட்டு ஊரெல்லாம் அரிச்சாவது ஒரு டிக்கெட் வாங்கணுமோல்லியோ?

 

ராஜாமணி: (உண்மையான ஏக்கம். தொனிக்கும் குரலில்) ஐ ட்ரைட் மை பெஸ்ட்.

 

ராமபத்ரன்: எங்கிட்டே ஒரு டிக்கெட்டு இருக்கு! என்னைக் கேட்டியோ?

 

ராஜாமணி: (ஆவலோடு) சார்… சார்… (கல்லாவை விட்டு எழுந்திருக்கிறான்)

 

ராமபத்ரன்: ஸிட்டவுன்… ஸிட்டவுன்… மை பாய்… எவ்வளவு ரூபா கொடுப்பே?

 

ராஜாமணி: கேக்கற ரூபாயைக் கொடுத்துடறேன் சார்!

 

ராமபத்ரன்: ஈஸிட் (மெல்ல விசிலடிக்கிறார். அவனையே குறுகுறுவென்று பார்க்கிறார்)

 

ராஜாமணி: என்ன ஸார் அப்படிப் பார்க்கறீங்க?

 

ராமபத்ரன்: ஃபைவ் தௌஸண்ட் ருபீஸ் (சொல்லிவிட்டு மீண்டும்

விசிலடிக்கிறார்)

 

ராஜாமணி: மை காட்

 

ராமபத்ரன்: ஈஸி மை பாய் ஈஸி… இவ்வளவுதானா உன் இன்ட்ரஸ்ட்?

 

ராஜாமணி: இன்ட்ரஸ்டுக்கு எல்லை இல்லே சார்… ஆனா சக்திக்கு எல்லை உண்டே!

 

ராமபத்ரன்: ஓகே! எனக்காக என்னுடைய அத்திம்பேர் பிள்ளை அனுப்பியிருந்தான். நான் போய்ப் பார்க்கறதை விட நீ போய்ப் பார்த்தா யூஸ் ஃபுல்லா இருக்கும். இந்தா டிக்கெட்…

 

ராஜாமணி: பணம் எவ்வளவு தரணும் சார்?

 

ராமபத்ரன்: ரெண்டு பட்டர் மசாலா போடச் சொல்லு.

 

ராஜாமணி: (குறும்பாக) ரெண்டு பட்டர் மசாலா இருபத்தி நாலு ரூபா பில் சார்.

 

ராமபத்ரன்: அப்ப உன் பில்லை வாங்கிக்கோ… என்னுடைய டெஸ்ட் மாட்ச் டிக்கெட் கோஸ்…ப்ரீ

 

ராஜாமணி: ஸார்… ஸார்…

 

ராமபத்ரன்: கிக் வெரிதிங் அண்ட் எவரிபடி டுவார்ட்ஸ் ப்ராக்ரஸ்… தென் கீப் கொய்ட். இங்கிலீஷ் தெரியுமா?

ராஜாமணி: சொல்லுங்க சார்.

 

ராமபத்ரன்: எல்லாவற்றையும் எல்லாரையும் முன்னேற்றத்தை நோக்கி உதைத்துத் தள்ளு அப்புறம் வாயை மூடிக்கொண்டு சும்மா இரு. யார் சொன்னது தெரியுமா?

 

ராஜாமணி: யார் சார்?

 

ராமபத்ரன்: விவேகானந்தர். பீ எ அப் பாட்ஸ் மன்… இல்லே ஐ வில் கிக் யூ அப்.

 

ராஜாமணி: ஸார்… ஸார்

 

(ராமபத்ரன் ஹோட்டலுக்குள் நுழைந்து விட்டார்) ச்சே! வாட்

எ க்ரேட் மேன்? யாரம்மாது என்ன வேணும்?

 

(ரங்கையரின் மகள் ஜமுனா தயங்கிக் கொண்டு வெளியே நின்றவள் மெல்ல உள்ளே வருகிறாள்)

 

ராஜாமணி: நீயா ஜம்னா? வெளியே தயங்கிட்டு நிக்கவே நான் யாரோன்னு நெனச்சேன்… என்ன வேணும்.

 

ஜமுனா: அப்பாவைப் பார்க்கணும்.

 

ராஜாமணி: (அவளைப் பார்த்து நெடுங்காலமானதால் ஆச்சரியத்தோடு முழுமையாகப் பார்க்கிறான். மனசிற்குள்) அடேயப்பா… ஜமுனா என்னம்மா வளர்ந்துட்டா ஸிம்ப்ளி த்ரில்லிங்! என்ன கலர் என்ன ஃபிகர்… ஓஹ் (தன்னை மறந்து பார்க்கிறான்)

 

ஜமுனா: ராஜு… ராஜு.

 

ராஜாமணி: (சுயநினைவுக்கு வந்து) ஆங்… ஆங் என்ன சொன்னே! எங்க அப்பா தானே… எங்கப்பா குளிக்கறதுக்கு வீட்டுக்குப் போயிருக்கார்.

 

ஜமுனா: (களுக்கென்று சிரிக்கிறாள்)

 

ராஜாமணி: (மனசிற்குள்) ஒரு தேவதை சிரிக்கிறாள்.

 

ஜமுனா: ராஜு… உங்கப்பா இல்லே. எங்கப்பாவைப் பார்க்கணும்!

 

ராஜாமணி: என்னம்மா வளர்ந்துட்டே ஜமுனா! ஒன்னைப் பார்த்து ரொம்ப நாளாச்சா அதான் ஸிம்பளி ஐம் ஸ்டன்ட் (மணியை கணகண வென்று அடிக்கிறான்) மாதவா… ரங்கையரைக் கூப்பிடு ம்ம் (ஜமுனாவைப் பார்த்து) ப்ளஸ்டூ முடிச்சிட்டே இல்லே ஜம்னா?

 

 

ஜமுனா: போன வருஷம் தான் முடிச்சேன்…

 

ராஜாமணி: மேற்கொண்டு படிக்கலியா?

 

ஜமுனா: அப்பா வேண்டாம்னுட்டார். வீட்ல அம்மாதான் இல்லியே… அண்ணா ராகவனும் மெர்ச்சண்டி ஷிப்ல ஒலகத்தைச் சுத்திண்டிருக்கான். வீட்ல யாரும் இல்லே! வீட்டைப் பார்த்துக்க ஆள் வேண்டாமோ?

ராஜாமணி: தனியா ஆத்துலே உட்கார்ந்திருக்க ‘போர்’ அடிக்குமே.

 

ஜமுனா: போர்லாம் அவாவா மனசுதான்! ஒரு வேளை வச்சுண்டா போதே போறாது.

 

(ரங்கையர் வெளியே வருகிறார்)

 

ரங்கையர்: என்னம்மா?

 

ஜமுனா: யாரோ ஒருத்தி ஆத்துக்கு வந்திருக்காப்பா.. சேப்பா ஒல்லியா ஒசரமா இருக்கா! நாப்பது நாப்பத்தஞ்சு வயசு மதிக்கலாம்.

 

ரங்கையர்: யாரைத் தேடிண்டி வந்திருக்கா?

 

ஜமுனா: ரங்கையன் வீடு இது தானேன்னு கேட்டா ஆமாம் வாங்கோண்ணேன்! வந்து அஞ்சு நிமிஷத்துலே மளமளன்னு பேசி ஒரு சொந்த மனுஷியாட்டம் நடந்துக்கறா…

 

ரங்கையர்: அப்படியா… பேரு என்ன சொன்னா?

 

ஜமுனா: ஆனந்த லட்சுமின்னு சொன்னா.

 

ரங்கையர்: (திகைப்புடன்) ஆனந்த லட்சுமியா? இருக்காதே… அவளா இருக்க முடியாதே!

 

ஜமுனா: அவளே தாம்பா சொன்னா.

 

ரங்கையர்: நெத்தியிலே பொட்டு வச்சாப்ல ஒரு பச்சை குத்தியிருக்கோ…

 

ஜமுனா: கரெக்ட்பா

 

ரங்கையர்: (ராஜாமணியிடம்) நான் கொஞ்சம் வீடு வரைக்கும் போய்ட்டு வர்றேன் ராஜா… அண்ணா வந்தா யாரோ தெரிஞ்சவா வந்திருக்காண்ணு போனதா சொல்லு.

 

ராஜாமணி: போய்ட்டு வாங்கோ.

 

(ரங்கையர் படியிறங்கும்போது ஜமுனா சாந்தமாக ராஜாமணியைத் திரும்பிப் பார்த்து கண்ணால் விடைபெறுகிறாள்)

 

ஜமுனா: (மெல்லிய குரலில்) வர்றேன் ராஜு.

 

ராஜாமணி: ஓ எஸ்…

 

(திரை)

Series Navigationஒரு கல்யாணத்தில் நான்சிங்கப்பூரில் 34 ஆம் ஆண்டுத் திருமுறை மாநாடு -2014 – பங்கேற்பாளரின் அனுபவக் குறிப்புகள்
author

வையவன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *