இந்த வாரம் அப்படி. ஒசாமா கொலை, ஜெயா மம்தா வெற்றி, பாஜக நிலை

ஒசாமா கொலை.

காஷ்மீரில் நடக்கும் பயங்கரவாத செயல்களுக்கும் இந்தியாவின் இதர பகுதிகளில் நடந்த/ நடக்கும் பயங்கரவாத செயல்களுக்கும் ஒசாமாவுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. ஏனெனில் ஒசாமாவின் அல்குவேதாவுக்கு இந்தியா ஒரு பொருட்டே இல்லை. அவரது குறியெல்லாம் ஐரோப்பிய அமெரிக்க நாடுகள்தான். அமெரிக்கா அரேபிய புனித பூமியில் கால் வைத்தததால் கோபம் கொண்டு அழிக்க கிளம்பியவர் அவர்.

ஒசாமா இரட்டை கோபுரங்களை தாக்கி அழித்தது வரை இந்தியாவில் நடந்துகொண்டிருந்த பயங்கரவாத செயல்கள் பயங்கரவாத செயல்களாக அமெரிக்காவாலும் ஐரோப்பாவாலும் பார்க்கப்பட்டதே இல்லை. அவையெல்லாம் சுதந்திர போராட்டம் என்றுகூசாமல் பாகிஸ்தானும் அவர்களுக்கு சொம்படித்த ஐரோப்பா அமெரிக்கா அரசியல்வாதிகளும் சொல்லிக்கொண்டிருந்தார்கள். ஒசாமாவுக்கு பின்னர்தான் அவர்களில் சிலர் இந்தியாவில் நடப்பதும் பயங்கரவாதம்தான் என்று பேச ஆரம்பித்தார்கள். அந்த வகையில் ஒசாமா இந்தியாவுக்கு கொஞ்சம் நல்லது செய்திருக்கிறார் என்றே சொல்லிவிடலாம். எதிர்மறையில் இருந்தாலும்.

ஆனால், இந்தியாவின் ஓட்டுவங்கி அரசியல்வாதிகளும் உதவாக்கரை அறிவுஜீவிகளும் இருக்கும் வரைக்கும் பயங்கரவாதத்தை சுதந்திர போராட்டம் புண்ணாக்கு என்று வரையறுக்க ஆட்கள் இருந்துகொண்டே இருப்பார்கள். முனீர் ஹோடாவை நியமிக்கும் கருணாநிதியிலிருந்து, மதானிக்கு ஆஜர் ஆகும் ஊழல் எதிர்ப்பு சாந்திபூஷன்கள் வரை.

ஆனால் ஒரு நேரத்தில் இதே ஓட்டுவங்கித்தனம் பயங்கரவாதத்துக்கும் எதிராக திரும்பும். அதற்கு இந்தியர்களின் விழிப்புணர்வு மட்டுமே காரணமாக இருக்கும்.

ஜெயலலிதா – மம்தா பானர்ஜி வெற்றி.

ஜெயலலிதாவின் வெற்றி மம்தா பானர்ஜியின் வெற்றியை விட எண்ணிக்கை அளவில் பெரியதாக இருக்கலாம். ஆனால், இந்த தேர்தலில் மம்தா பானர்ஜியின் வெற்றிதான் வரலாற்று ரீதியில் மிகப்பெரிய, ஆச்சரியமான, இந்திய ஜனநாயகத்தின் மீது மீண்டும் நம்பிக்கை வைக்க பொருத்தமான வெற்றி.

மம்தா பானர்ஜி சமீபத்தில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசும்போது, சிபிஎம் அரசு இதுவரை சுமார் 75000 எதிர்கட்சி தொண்டர்களை கொன்றிருக்கிறது என்று சொன்னார். இது ஒரு ஸ்வீப்பிங் ஸ்டேட்மண்ட், இப்படியெல்லாம் ஒரு அரசியல்வாதி மேடையில் பேசலாமா என்று ஒரு நண்பரிடம் கேட்டேன். அவர் ஒரு காலத்தில் தீவிர கம்யூனிஸ்டாக இருந்தவர். கல்கத்தாவில் சில காலம் பணியாற்றியவர். அவர், “அது ஏறத்தாழ சரியாகத்தான் இருக்கும்” என்றார். அதிர்ச்சியில் உறைந்துவிட்டேன்.

திண்ணையில் முகப்பில் ரவுடி கும்பலால் கொல்லப்பட்ட மூன்று பேர்களை பற்றிய செய்தி இருக்கிறது. அவர்கள் எதிர்கட்சியினர் அல்ல. இரண்டு அரசியல் கும்பல்கள் மோதிகொண்டபோது உயிரிழந்த அப்பாவிகள். ஆனால், தமிழ்நாட்டில் எதிர்கட்சியினர் என்ற ஒரே காரணத்துக்காக கொல்லப்பட்டவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.

ஆனால் வங்காளத்தில் எதிர்கட்சியினர் என்ற ஒரே காரணத்துக்காக கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 75000 என்பதும் அது ஒரு செய்தியாகவே நாம் படிக்கவில்லை என்பதும் அவலமான நிகழ்வு.

சுமார் 34 வருடங்கள் அடாவடி தேர்தல் மூலமாக மட்டுமே ஆட்சியிலிருந்த கம்யூனிஸ்ட் கட்சியும் அதன் கூட்டாளிகளும் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்கள். அதனை நாம் கொண்டாட வேண்டும்.

கொல்லப்பட்டவர்களுக்கான நீதி ஒரு காலத்தில் பெறப்படும் என்று நம்பிக்கை கொள்கிறேன்.

தமிழ்நாட்டில் பாஜக தீவிரமாக முயன்றும் எந்த தொகுதியையும் கைப்பற்றவில்லை. கன்யாகுமரி சேர்ந்த சில தொகுதிகளில் இரண்டாவதாகவும் கணிசமான வாக்குக்களை பெற்ற மூன்றாவதாகவும் வந்தாலும், அதன் மொத்த வாக்கு எண்ணிக்கை 2.4 சதவீதமாகவே நின்றிருக்கிறது.

முதலாவது ஒரு அனைத்திந்திய கட்சி என்ற ஒரே காரணத்துக்காக இந்தி பேசும் ஒரு சில அரசியல்வாதிகளை தமிழ்நாட்டுக்கு கூட்டிகொண்டு வந்து பேச வைக்கும் வழக்கத்தை விட வேண்டும். அதனாலெல்லாம் வாக்குக்கள் விழாது. காசுதான் வீண்.

இரண்டாவது பாஜகவுக்கு மக்களை ஈர்க்கும் பேச்சாளர்களோ அல்லது கூட்டத்தை சேர்ப்பவர்களோ இல்லை. அதிமுக கூட்டணியின் இரண்டு பெரிய தலைகளான ஜெயலலிதா, விஜயகாந்த் இருவருமே மக்களிடம் வெகுவாக அறியப்பட்டவர்கள். கூட்டம் சேர்க்கக்கூடியவர்கள். திமுக போன்ற பெரும் பேச்சாளர்களை கொண்ட கட்சிகளே குஷ்புவிடமும் வடிவேலுவிடமும் கூட்டத்தை கூட்டுவதற்காக தஞ்சமடையும்போது எந்த வித கலாச்சார புள்ளியும் இல்லாத பாஜகவுக்கு கூட்டம் சேர்வது கடினம். தனது செய்தியை மக்களிடம் கொண்டுசெல்லும் வழிமுறையும் இல்லை. தமிழக பாஜக சிந்திக்க வேண்டும்.

மூன்றாவது ஒரு ஆறுமாதத்துக்கு ஒரு முறையாவது தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் மாநாடு நடத்தவேண்டும்.

இவையெல்லாம் பாஜகவுக்கு மட்டும் அல்ல. காங்கிரஸுக்கும் பொருந்தும்.

அடுத்து ஐந்து வருடங்கள் உழைத்தால், காங்கிரஸும் பாஜகவும் திமுக அதிமுகவுக்கு மாற்றாக அமையலாம்.

Series Navigationவாக்குறுதிகளை மீறும் காப்புறுதி நிறுவனங்கள்பாதல் சர்க்கார் – நாடகத்தின் மறு வரையறை