இருப்பு!

Spread the love

முற்றத்துக்
கயிற்றுக் கொடிக்கும்
வீட்டிற்கு மென
மாறிமாறி
உலர்த்தியும்
விட்டுவிட்டுப் பெய்த
தூறலின் ஈரம்
மிச்ச மிருந்ததால்

இரண்டு ஆண்டுகளுக்குமுன்
இறந்துபோன
வாப்பாவின்
சட்டை யொன்றை
உம்மாவிடம் கேட்க
‘வாப்பாவுக்கு
ரொம்பப் பிடித்த’தாக
தந்தச் சட்டை…
நான் பிரயோகித்துப்
புறக்கனித்துக்
கழட்டிப்போட்ட ஒன்று!

தென்னந் தோப்பில்
கரும் பச்சையாய்
செழிப்பா யிருந்த
ஒரு வரிசை மரங்களைக் காட்டி
புருவம் சுருக்க
‘அவை
வாப்பா நட்ட’வை என்றான்
தோட்டக் காப்பாளன்!

முன் முற்றத்தில்
தலைவாசலுக்கு வலப்புறம்
பந்தல் பிடித்து
மாடிவரைப் படர்ந்த
‘அவர் நட்ட’
மல்லிகைக் கொடியில்
மொட்டவிழும் போதெல்லாம்
வீட்டினுள்
வாப்பா வாசம்!

எதிர்மனையில்
‘அவர் நட்ட’
வேப்பமர நிழலில்
உம்மா அமர்ந்து
வெற்றிலை போடும்போதும்
‘அவர் விதைத்த’
சப்போட்டா
பழங்கள் கொழிக்க
பறித்துப் பாதுகாக்கும்போதும்
உம்மா
ஒற்றையாய் உணர்வதில்லை!

அவர் மாற்றியமைத்த
மாடி பால்கனி…
பிரித்து வேய்ந்த
பின்முற்றத்துக்
கீற்றுக்கொட்டகை…
வீட்டின்
இடமும் வலமுமாய்
‘இட்டு வளர்த்த’
கொய்யாவும் மாதுளையும்…
பேரனின்
முழங்காலைச் சிராய்த்ததால்
கற்கள் பொதிந்த
தெருவையே
‘மெழுகிய’
சிமென்ட் தளம்…

குடும்ப அட்டைத் தலைவராகப்
புகைப் படம்…
சொத்துப் பத்திரங்களின்
கீழே
இடது கோடியில் கையெழுத்து…
காரின்
உட்கூரை வேலைப்பாடுகள்…
வீட்டுக்
கதவின் கைப்பிடி…

உம்மாவின்
வெண்ணிற ஆடை…
வெறும் கழுத்து…
என
எங்கும்
எதிலும்
வாப்பாவின் இருப்பு!

Series Navigationகாகிதத்தின் மீது கடல்கூடியிருந்து குளிர்ந்தேலோ …