இருள் குவியும் நிழல் முற்றம்

This entry is part 44 of 46 in the series 26 ஜூன் 2011

சல்மா முதல்முறை அமெரிக்கா வந்திருந்த பொழுது. கோபால் ராஜாராம் வீட்டில் ஒரு சந்திப்புக்கு ஏற்பாடாகியிருந்தது. பேச்சு சல்மாவின் இரண்டாம் ஜாமங்களின் கதை நாவல் பற்றித் திரும்பியது. அதற்கு ரவிக்குமார் எழுதிய முன்னுரையைப் படித்துவிட்டு நாவலைப் படிக்க வேண்டாம் என்று நெடுநாள் வைத்திருந்ததாகவும், பின்னர் சில பக்கங்கள் படித்துத்தான் பார்ப்போமே என்று படிக்க ஆரம்பித்து நாவல் மிகவும் பிடித்துப் போனதாகவும் கோபால் ராஜாராம் சொன்னார். ரவிக்குமாரின் விமர்சன, தத்துவப் பார்வையின் தகுதிகள் குறித்து கோபால் ராஜாராமுக்குக் கேள்விகள் எதுவும் இல்லை. ஆனால் ஒரு புனைகதைக்கு முன்னுரை எழுத தேர்ந்தெடுக்கப்படுகிற நபர், சித்தாந்த ரீதியில் அப்புனைகதையை அணுகுவதில் உள்ள ஆபத்துகள் குறித்து கோபால் ராஜாராமுக்குக் கவலைகள் இருந்தன. (இன்னும் இருக்கும் என நம்புகிறேன்.) அப்படிப்பட்ட முன்னுரைகளால், அச்சித்தாந்தம் பிடிக்காதவர் அப்படைப்பை நிராகரிக்கும் வாய்ப்பு உண்டாகிறது என்பது ஒருபுறம். அம்முன்னுரை, ஒரு வாசக ரசனையின் அடிப்படையில் எழுதப்படாமல் போகும்போது எல்லாப் பின்புலங்களையும் சேர்ந்தவர்கள் முன்னுரையின் அடிப்படையில் ஒரு புத்தகத்தை வாங்கலாமா, வாசிக்கலாமா என முடிவெடுக்க முடியாமல் போய்விடுகிறது. அதுமட்டுமா, நாவல் காட்டும் வாழ்வின் தரிசனத்தை அம்முன்னுரை கோடுகாட்டாவிட்டால் அம்முன்னுரையால்தான் பயனென்ன?  இரண்டாம் ஜாமங்களின் கதையை ஜெயமோகன் சில வரிகளில் நிராகரித்து விட்டார். சுந்தர ராமசாமி பள்ளிக்கு நெருக்கமான எழுத்தாளர்கள் – இரண்டாம் ஜாமங்களின் கதையைப் பதிப்பித்த காலச்சுவடுடன் நல்லுறவில் தொடர்கிற எழுத்தாளர்கள் பலருக்கும் கூட – அந்நாவல் பற்றிப் பெரிய அபிப்ராயம் இல்லை. (நேர்ப்பேச்சில் நான் அறிய நேர்ந்தது இது!). ஆகத் தமிழ்ச் சூழலில் அதிகம் கவனிக்கப்படாத நாவல் அது. இப்படி ஒரு நாவல் எதிர்மறையாக அறியப்படும்போது அதற்கு அதன் முன்னுரையும் வாசகர்க்கு உதவாவிட்டால் கஷ்டம்தான். ஆனால், கோபால் ராஜாராம் அந்நாவலை இந்த நூற்றாண்டின் சிறந்த நாவல்களில் ஒன்றாக அன்று மதிப்பிட்டார். (என் நினைவின் வலிமை குறித்து எனக்கு அவ்வப்போது சந்தேகம் வரும்தான். ஆனால், இந்த நூற்றாண்டின் சிறந்த நாவல்களில் ஒன்று போன்ற வார்த்தைகள் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிடக் கூடியவை அல்ல. எதற்கும் இதைப் பிரசுரிப்பதற்குள் ராஜாராமுக்கும் அனுப்பி அவர் அப்படிச் சொன்னதைச் சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.) அதிரடியான வாக்கியங்களுக்குப் பெயர் போனவர் அல்ல கோபால் ராஜாராம். அவர் ஒரு பார்வையை முன்வைத்தால் அதற்குப் பின்னணியில் காரணங்களைச் சொல்லுவார். வாசிப்பைப் பொருத்தவரை அவர் பார்வை மிகவும் நுணுக்கமாகவும், பிறர் கவனிக்கத் தவறியவற்றில் ஒன்றிரண்டை கவனித்துச் சொல்வதாகவும்கூட இருக்கும். இரா. முருகனின் அரசூர் வம்சம் அவரைப் பொருத்தவரை ஜெயமோகனின் விஷ்ணுபுரத்தைவிட மேலான நாவல். இப்படி ராஜாராமிடம் பேசப்பேச சில புதுகோணங்கள் புலனாகும். நேர்ப்பேச்சுகளில் பேசும்போது ராஜாராம் இவற்றுக்குச் சொல்கிற காரணங்களை எழுத்தில் எழுதுங்களேன் என்று எல்லாரும் சொல்லத்தான் செய்கிறோம். எழுதுவார் என எதிர்பார்ப்போம்.
இந்தப் பின்புலத்தில் – பெருமாள் முருகனின் நிழல் முற்றத்தைப் படிக்க எடுத்தால் வ. கீதாவின் முன்னுரை. வ. கீதாவின் தகுதிகள் குறித்து எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், ரவிக்குமாருக்குச் சொன்ன அதே காரணங்கள் வ. கீதாவுக்கும் பொருந்தும். ஆனாலும், அம்முன்னுரையைத் தாண்டி என்னை நாவலைப் படிக்கத் தூண்டியது, பெருமாள் முருகனை எனக்குத் தனிப்பட்ட முறையிலும் தெரியும் என்ற காரணமே. அதனால், பெருமாள் முருகனைப் படிக்க எனக்கு எந்த முன்னுரையும் பரிந்துரையாக வேண்டியதில்லை. இல்லையெனில், படித்திருக்க மாட்டேன். அப்படிப்பட்ட முடிவுக்கு என்னுடைய முன்முடிவுகளும் ஒரு காரணமாக இருந்திருக்கும். நாவலாசிரியர் மட்டும் அதற்கு பொறுப்பல்ல என்பதும் உண்மைதான். நாவலின் பின்னுரையாக, நாஞ்சில் நாடன். நாஞ்சில் நாடனை முன்னுரையாகவும், வ. கீதாவைப் பின்னுரையாகவும் போட்டிருக்கலாம் என எனக்குத் தோன்றுகிறது. வ. கீதாவின் வார்த்தைகளில் அவர் நாவலை மொழிபெயர்ப்பாளராகவே அணுகியிருக்கிறார். காட்சியனுபவங்களைச் சார்ந்த நாவலின் மொழி, நாவல் காட்டும் குறியீடுகள், சினிமா எடிட்டர் மாதிரி கத்தரித்து நீக்கும் சேர்க்கும் பாணியை நாவலுக்குரியதாக மாற்றியது என வ. கீதா வடிவம் சார்ந்தே பெரிதும் பேசுகிறார். நாஞ்சில் நாடனின் பின்னுரையோ வடிவ, தத்துவ போதங்களைத் தாண்டிச் சில பக்கங்களில் நாவல் காட்டும் தரிசனம் குறித்துப் பேசுவதாக அமைந்திருக்கிறது. ஒரு படைப்பு சுட்டும் தரிசனத்தை அடையாளம் காட்டுகிற முன்னுரைகளே படைப்புக்குப் பெருவலிமை சேர்க்கும்.
நகரமும் கிராமமும் இல்லாத ஓர் இரண்டும் கெட்டான் ஊரின் தியேட்டரில் பணிபுரிந்து – அங்கேயே வாழும் (அல்லது வாழ்க்கையை அழித்துக் கொள்கிற) – பதின்ம வயதினரைப் பற்றிய கதை. சிறுவயதில் அப்படி வாழ்ந்தவர்களை நேரடியாகக் கதாசிரியர் பார்த்திருப்பதால் நாவலின் காட்சிகள் இயல்பாக நகர்கின்றன. நாஞ்சில் நாடன் சொல்வதுபோல பெருமாள் முருகன் சூழலுக்குத் தகுந்த கொச்சை மொழியைப் பயன்படுத்தியிருக்கிறார். அதேநேரத்தில், பெருமாள் முருகன் தமிழாசிரியர். அதைக் காட்டும் வண்ணம் அருமையான கவித்துவமான சொல்லாட்சிகளும் நாவலில் உள்ளன. (இருட்டு அடைந்து கிடந்தது சந்தை, பல மடிப்புகள் விழுந்து இறைஞ்சன சதைகள், ஆகியன சில உதாரணங்கள்). அதே நேரம் சினிமா தியேட்டர் தொடர்பான கதையில் அது தொடர்பான உவமைகளும் பொருத்தமாக இருக்கின்றன. (போஸ்டர் பசையை ஊற்றி ஒட்டிவிட்ட மாதிரி, சினிமா புரொஜெக்டர் திரையில் தரும் நிழல் மாதிரி). சுவாரஸ்யமாக எழுதுவது இலக்கியம் இல்லை என்று ஒரு கருத்துண்டு. கனத்த விஷயத்தைச் சொல்லும்போது அதற்கேற்ற சோகத்துடன் சொல்ல வேண்டும் என்று நினைப்பவர்களும் உண்டு. இந்நாவலின் ஒரு குறை, கொச்சை மொழி, கவித்துவமான மொழி என இரண்டும் கலந்திருந்தும், வாசிப்பின் சுவாரஸ்யம் பற்றி யோசிக்கும்போது எங்கோ கொஞ்சம் எனக்கு இடறுகிறது. இது காட்சிகளை வெட்டி ஒட்டி இணைக்கும் பாணியினாலா என்ற கேள்வியும் எழுகிறது.
நிழம் முற்றம் என்பது பெயரானாலும், கதை மாந்தர்களின் வாழ்வில் தொடர்ச்சியாக இருள் குவிந்து கூடுவதையே நாவல் முன்னெடுத்துச் செல்கிறது. பீடி சிகரெட்டில் ஆரம்பித்து, பின்னர் கஞ்சாத் தூள், கள்ளு, சாராயம், பாலியல் தொழிலாளி மீதான ஆசை, திருட்டு, ஒருபால் புணர்ச்சி, வன்முறை என்று விரியும் நிகழ்வுகள் இதையே சொல்கின்றன. பல இடங்களில் பதின்ம வயதுக் குழந்தையின் தந்தையாகப் படிக்கிற எனக்கு மனம் பதைபதைத்தாலும், கதாசிரியர் எந்தச் சார்பும் இன்றித் – தான் பேசாமல் – கதையில் மட்டுமே கவனம் செலுத்தி இருப்பது தனிச்சிறப்பு.
மோசமான வாழ்க்கையிலும் ஒருவர் தனக்குரிய சிறிய சந்தோஷங்களை உருவாக்கிக் கொள்ள முடியும். அது மனித இயல்பு. சல்மாவின் இரண்டாம் ஜாமங்களின் கதை இதை மிகச் சரியாகக் காட்டிய நாவல்களில் ஒன்று. அப்படிப் பார்த்தோமேயானால், இந்நாவலின் கதை மாந்தர்களின் சந்தோஷங்கள் என்று வரும்போது, கள்ளு குடித்தபின் கிணற்றில் குதித்து விளையாடியது, சக்திவேல் குழந்தையுடன் விளையாடியது தவிர அதிகம் இல்லை. பதின்ம வயதில் சோகங்களைப் புறந்தள்ளி இன்பம் தேடும் மனநிலையே இருக்கும். தியேட்டர் மற்றும் பொருளாதாரச் சூழலில் கதை மாந்தர்கள் போதையை இன்பம் சுகிக்கும் பொருளாகவே அணுகுகிறார்கள். அதனாலேயே, கடன் வாங்கிக் கூட போதைப் பொருளை வாங்க வைக்கிறது. அவர்களுக்குத் தெரிந்த இன்பம் இதுதான். அவர்கள் வாழ்க்கையை நல்ல முறையில் மாற்றுகிற இன்பமான காரியங்களுக்குக் கொடுப்பினை இருப்பின் அவர்கள் போதையை விட்டிருக்கக் கூடும்.  கதை மாந்தர்கள் நண்பர்களுக்குள் சண்டை போடுவது, நக்கலாகப் பேசுவது ஆகியவற்றை நான் சில்லறை சந்தோஷங்களுக்குள் அடக்கவில்லை. ஏனெனில், அக்காட்சிகள் அவர்கள் வாழ்வின் சில்லறை சந்தோஷத்தைக் காட்டுவதை விட, சோகங்களைக் காட்டுவதாகவே என் வாசகப் பார்வைக்குப் படுகிறது.
நாஞ்சில் நாடன் சரியாக அடையாளம் கண்டுகொண்ட மாதிரி, ஜீவித நியாயத்துக்காகப் பிற நியாயங்களைப் பற்றிக் கவலைப்படாத பதின்ம சிறுவர்களின் வாழ்க்கையை அருகில் இருந்து படம் பிடித்துக் காட்டுகிறார் பெருமாள் முருகன். ஆனாலும், அச்சிறுவர்களுக்குள்ளும் நியாய உணர்வு முழுவதும் மறைந்து போய்விடவில்லை. சக சிறுவன் விசுவம் வீட்டில் உள்ள பெண்ணிடம் வம்பு செய்வதைப் பாட்டி சொல்லும்போது, அவன் கையைக் காலை உடைக்க வேண்டும் என்ற கோபம் பொங்குகிற நாயகனையும் அவன் நண்பனையும் காண்கிறோம். தந்தை தன்னைப் பார்க்க வரும்போது திட்டினாலும், “நீ வராதே, நானே வந்து பார்க்கிறேன்” என்று சொல்லியனுப்புகிற மகனைப் பார்க்கிறோம். மகன் சென்று பார்க்கப் போவதில்லை என்பது மகனுக்கும் தந்தைக்கும் தெரிந்த விஷயம்தான். ஆனாலும், முறைசார் கல்விக்கு அப்பாற்பட்ட, எவ்வளவு மாறிப் போனாலும் நரம்புகளில் வேரோடிப் போன சிறு நாகரீகங்களும், பிறர் மனம் நோகாவண்ணம் சொல்லப்படுகிற பொய்களும் மனிதர்களை விட்டு நீங்குவதில்லை.
தமிழ்ச் சினிமா நம் வாழ்க்கையில், கலாசாரச் சூழலில், பண்பாட்டில் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள், சீர்கேடுகள் பற்றி நம்மிடையே நிறைய ஆய்வுகள், படைப்புகள் உண்டு. சினிமா தியேட்டர் – முக்கியமாக சிறு நகரங்கள், கிராமங்கள் சார்ந்த தியேட்டர்கள் – அதனுடன் வாழ்க்கையைப் பிணைத்துக் கொண்ட மனிதர்கள் மேல் செலுத்தும் பாதிப்புகள் பற்றிய பதிவுகள் எத்தனை உண்டு என்று தெரியவில்லை. எந்தப் பதிவுமே இல்லை போலும் என நினைப்பவர்களுக்காகப் பெருமாள் முருகன் நிழல் முற்றத்தைக் காத்திரமாக பதிவு செய்திருக்கிறார்.

Series Navigationதிண்ணைப் பேச்சு- நன்றி ரிஷான்ஷெரீஃப்பழம் இசைக்கருவி மோர்சிங் தமிழில் – நாமுழவு
author

பி கே சிவகுமார்

Similar Posts

Comments

  1. Avatar
    லெட்சுமணன் says:

    வசந்த பாலன் “வெயில்”- படத்தில் தியேட்டரில் வேலை செய்பவரை பற்றி பதிவு செய்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *