இஸ்ரேலின் நியாயம்

”பாலஸ்தீனத்தை கைவிடலாமா?” என்ற தி இந்து தலையங்கம் இவ்வாறு கூறுகிறது.

பாலஸ்தீன விடுதலைக்காக ஒரு காலத்தில் உரக்கக் குரல்கொடுத்த இந்தியா, நடுநிலைமையிலிருந்தும் அணி சாராத தன்மையிலிருந்தும் விலகுவது நியாயமில்லை. உலகின் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகக் குரல்கொடுப்பதும், அப்பாவிகளுக்கு ஆதரவாகக் களமிறங்குவதும் வெறும் சர்வதேச அரசியல் மட்டுமல்ல, தர்மமும்கூட. ”

ஆங்கில தி இந்து வில் வெளியான தலையங்கம் இவ்வாறு கூறுகிறது

However deplorable some of Hamas’ warfare techniques may be, there is a counter-view that in the overcrowded, narrow environs of the Gaza strip the Palestinian militant group has no operational option but to enmesh with the people.

(ஆங்கில தலையங்கத்திலிருந்துதான் தமிழ் தலையங்கம் மொழிபெயர்க்கப்பட்டிருக்கவேண்டும் என்று கருதுகிறேன். இருந்தாலும், தமிழ் தலையங்கம் ஆங்கில தலையங்கத்தில் இருக்கும் ஒரு சில இஸ்ரேல் சார்பு விஷயங்களையும் நீக்கி பாலஸ்தீன கொடி பிடிப்பதை பார்க்கலாம். நீங்களே இவ்விரண்டு தலையங்களையும் படித்து ஆறு வித்தியாசங்களுக்கு மேல் கண்டுபிடியுங்கள்)

மற்றொரு ஒரு பக்கச் சாய்வான செய்தியை புதியதலைமுறை தொலைக்காட்சி செய்தியில் பார்க்கலாம்.

 

“சமீபத்தில் 1947இல்” என்று இணையத்தில் டோண்டு ராகவன் எழுதிக்கொண்டிருந்தார். இஸ்ரேலுக்கு ஆதரவாக தமிழில் எழுதிய ஒரே ஒருவர் இவர்தான் இருப்பார் என்று நினைக்கிறேன். யாரோ ஒரு சிலர் இஸ்ரேல் தரப்பு நியாயத்தை எழுதியிருக்கலாம். மற்றபடிக்கு, தமிழ்நாட்டில் பத்திரிக்கை, தொலைக்காட்சி எல்லாவற்றிலும் நிரம்பியிருப்பது இஸ்ரேல் எதிர்ப்பும், பாலஸ்தீன ஆதரவுமே.

பாலஸ்தீன மக்கள் பாவப்பட்டவர்களாக பார்த்து, பணக்கார நம்பியாரிடம் அடிவாங்கும் ஏழை எம்ஜியாராக கற்பனை செய்துகொண்டு பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக வரிந்துகட்டிக்கொண்டு பேசும் பலரில் ஒரு சதவீதத்தில் மூணே அரைக்கால் வீதத்தில் சுமார் 100 பேர்கள் தேறி, இஸ்ரேல் கன்ஸுலேட்டின் முன்னால் போராட்டம் பண்ணுவார்கள். தமிழ்நாட்டில் வஹாபி இயக்கங்களை சேர்ந்த ஓரிரண்டு கட்சிகளைச் சேர்ந்த தமிழர்கள், அமெரிக்க தூதரகத்தின் முன்னால் ஆயிரக்கணக்கில் கூடி கல்லெறிவார்கள். அப்படி எறிந்தால், அதற்கு இந்த அறிவுஜீவி பத்திரிக்கையாளர்கள் அதற்கான நியாயங்களை எழுதுவார்கள். உடல் சிதைந்த குழந்தைகள், முதியவர்கள் பெண்கள் என்று படங்களை வெளியிட்டு பச்சாத்தாபம் தேடுவார்கள். இரண்டு பக்கத்திலிருந்து ஊடக திரிப்புகளும், செய்தி போரும் நடந்தாலும், இடதுசாரிகள் துணையினாலும், இஸ்லாமியர்களது ஆதரவாலும், இஸ்லாமிய நாடுகளை பகைத்துகொள்ள விரும்பாமையாலும், பாலஸ்தீன செய்தி போரே வெற்றி பெற்றுள்ளது என்பதை அறியலாம். அந்த ஊடக தகிடுதித்தங்களை விட்டுவிட்டு இந்த இஸ்ரேலிய பாலஸ்தீன பிரச்னையின் சமீபத்திய வெடிப்பு ஏன் என்று புரிந்துகொள்ள முயலலாம். அதற்கு முன்னால், வரலாறு முக்கியம்.

##

இஸ்ரேலிய நாடு டேவிட், சாலமன் போன்றவர்கள் கையில் இருந்த காலத்தில் முழு இஸ்ரேலுமே யூதர்களாக இல்லை.

இதுதான் டேவிட் சாலமனின் இஸ்ரேலிய அரசு. இதில் பிலிஸ்தியா என்று கூறப்பட்டுள்ள இடத்தை கவனியுங்கள்.

david-Kingdom_of_Israel

ஆனால், சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னால், ரோமர்கள் முதலாவது யூதப்போரை நிகழ்த்தும்போது (இயேசுவின் காலம்) மிகக்குறைந்த அளவில் இருந்த சமாரியர்களையும், அங்கு வந்து தங்கிய கிரேக்கர்கள், சிரியர்களை தவிர மற்ற அனைவரும் ஜெருசலமை புனிதமாக கருதிய யூதர்களே.

லட்சக்கணக்கான யூதர்கள் கொல்லப்பட்ட அந்த போரின் முடிவில், மிகுந்திருந்த லட்சக்கணக்கான யூதர்களை அடிமைகளாக்கி விற்றது. யூதர்கள் என்று தங்களை அடையாளப்படுத்திகொள்பவர்களை கடுமையாக தண்டித்தது. அங்கிருந்து தப்பிய யூதர்களும், இந்தியாவை தவிர மற்ற எல்லா இடங்களிலும் கொடுமைக்குள்ளானார்கள். அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டார்கள். விவசாயம் செய்வது அவர்களுக்கு தடை செய்யப்பட்ட ஒன்று. அதாவது நிலம் வாங்க முடியாது. வட்டி கொடுத்து வாங்குவது, சாராயம் காய்ச்சுவது போன்ற விளிம்பு நிலை வேலைகள் இஸ்லாமிய நாடுகலிலும் கிறிஸ்துவ நாடுகளிலும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டன. யூதர்களுக்கு எதிரான ஒரு கருத்துருவாக்கம் இன்றளவுக்கும் கிறிஸ்துவ முஸ்லீம் அவற்றின் ஆதரவாக இருக்கும் இடதுசாரிகளிடம் பார்க்கலாம்.

அந்த பேரழிவு ஆறாத வடுவாக யூதர்களிடம் இன்றும் இருக்கிறது. அங்கிருந்து அனைத்து யூதர்களும் சிதறடிக்கப்பட்டார்கள். யூத அடையாளமே அந்த நிலத்தில் இருக்கக்கூடாது என்று எடுத்துகொண்ட ரோமானியர்கள், இஸ்ரேல் என்று அவர்கள் அழைத்த நிலத்தை, பாலஸ்தீனம் என்று பெயர் மாற்றம் செய்தார்கள். இன்று காஸா என்று அழைக்கப்படும் நிலம் மட்டுமே ஒரு காலத்தில் பாலஸ்தீனம் என்று அழைக்கப்பட்டது. பிலிஸ்தியர்கள் என்ற பெயரில் இவர்கள் பழைய ஏற்பாடு பைபிளில் குறிப்பிடப்படுகிறார்கள். இடத்தின் பெயர் மட்டுமே பாலஸ்தீனம்.

மீண்டும் யூதர்கள் கிளர்ந்து எழுந்தார்கள் பொதுவருடம் 132த்தில் பார் கோக்பா என்பவரால் இரண்டாவது யூத சுதந்திர போர் துவக்கப்பட்டது. அதுவும் பெரும் தோல்வியில் முடிந்தது. நான்காவது நூற்றாண்டில் அங்கு கிரேக்கர்களும் ரோமானியர்களும் நுழைந்து குடியேறினார்கள். சமாரியர்கள் மிகச்சிறிய சிறுபான்மையினராக குறுகினார்கள்.

பொதுவருடம் 635இல் இந்த பகுதி முழுவது இஸ்லாமிய படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டது. அதன் பின்னால் சுமார் 1300 வருடங்களில் பெரும்பாலும் இஸ்லாமியரே ஆட்சி புரிந்திருக்கின்றனர். மிகக்குறுகிய காலம் ஜெருசலம் சிலுவைப்போர் வீரர்களிடம் இருந்திருக்கிறது.

இங்கே ஆட்சியை பிடித்த உம்மயாத், அப்பாஸித் வம்சங்கள் மதமாற்றத்தை ஊக்குவித்தாலும், கட்டாய மதமாற்றத்தை அதிகம் ஊக்குவிக்கவில்லை. அதே நேரத்தில் இஸ்ரேலில் தங்களது அரபு மக்களை குடியேற்றுவதிலும், இஸ்ரேலை முழுக்க இஸ்லாமிய மயமாக்குவதிலும் அரபு மொழி மயமாக்குவதிலும் தீவிரமாக ஈடுபட்டார்கள். (2)

ஒரு சில அரசர்கள் சிறுபான்மை சமாரியர்களை கூட விட்டுவைக்கவில்லை. இப்னு பிராசா என்பவரால் இந்த சமாரியர்களும் முஸ்லீம்களாக மதமாற்றம் செய்விக்கப்பட்டார்கள். (1) இந்த வரலாற்றினால், இஸ்ரேலிலிருந்து யூதர்கள் வெளியேறிகொண்டே இருந்தார்கள். ஐரோப்பா, இந்தியா போன்ற நாடுகளுக்கு குடிபெயர்ந்தார்கள்.

இன்றைய பாலஸ்தீனர்களை அந்த நிலத்தின் பழங்குடி மக்கள் என்று வர்ணிப்பது ஒரு நகைச்சுவை. இந்த பாலஸ்தீனர்கள் பெரும்பான்மை கடந்த 500 ஆண்டுகளில் இஸ்லாமிய கிறிஸ்துவ ஆட்சிகாலத்தில் அங்கு வந்தேறியவர்கள்தாம். அந்த இடத்தை கைப்பற்ற கிறிஸ்துவர்களும் அரபிகளும் சிலுவைப்போர்கள் புரிந்திருக்கிறார்கள். அரபு தேசங்களிலிருந்து அங்கு போர் புரிய வந்து வெற்றி கொண்டவர்கள் அங்கே தங்கினார்கள். ஒட்டோமான் ஆட்சியின் போது கிறிஸ்துவத்திலிருந்து இஸ்லாமிய மதமாற்றம் ஊக்குவிக்கப்பட்டது. துருக்கியிலிருந்தும் எகிப்திலிருந்தும் மக்கள் அங்கு குடியேற்றப்பட்டனர்.

பொதுவருடம் 1551இல் இஸ்ரேல் ஒட்டோமான் துருக்கி அரசு இஸ்ரேலை கைப்பற்றியது. ஒட்டோமான் அரசாங்கம் இஸ்ரேலுக்குள் துருக்கியினரும் எகிப்து அரபுகளும் வர ஏற்பாடு செய்தது.

ஆக, இதே 2000 வருட காலத்தில், இஸ்லாமிய அரசாங்கங்கள் கொடுத்த பாதுகாப்பினால், எகிப்திலிருந்தும், பஹ்ரேனிலிருந்தும், துருக்கியிலிருந்தும், அரபு தேசங்களிலிருந்தும் இங்கே முஸ்லீம்கள் வந்து ஆக்கிரமித்துகொண்டே இருந்திருக்கிறார்கள்.(4)

இங்கிருந்து சென்று கிறிஸ்துவ நாடுகளில் தஞ்சம் புகுந்த யூதர்களும் கடுமையான எதிர்ப்பையும் வெறுப்பையுமே சந்தித்தார்கள். முக்கியமாக. ருஷ்யர்களும் கிழக்கு ஐரோப்பியர்களும் யூதர்களை கடுமையாக வெறுத்தார்கள். அதற்கு காரணம், அவர்கள் விளிம்பு நிலை வேலைகளை செய்ய வைக்கப்பட்டதும், விவிலியத்தின் யூத வெறுப்பு பிரச்சாரமுமே என்றால் மிகையாகாது. (வட்டி கொடுப்பதும் வாங்குவதும் கிறிஸ்துவர்களுக்கு தடை செய்யப்பட்ட விஷயம். ஆனால், ஒரு நாட்டின் பொருளாதாரத்துக்கு வங்கி, வட்டி ஆகியவை இன்றியமையாதவை. ) விளிம்புநிலை வேலைகளைத்தான் அவர்கள் செய்யவேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டார்கள். அந்த வேலைகள் செய்ததாலேயே அவர்கள் பொதுமக்களால் வெறுப்புக்குள்ளாக்கப்பட்டார்கள். கிறிஸ்துவம் யூத மதத்திலிருந்து தோன்றியிருந்தாலும், கிறிஸ்துவ மதத்தில் நிறுவனப்பட்ட யூத வெறுப்பு மிகவும் ஆழமானது, பலத்த விளைவுகளை உருவாக்கியது. யூதர்களை தனியாக அடைத்து சேரிகள் உருவாக்கியதிலிருந்து, அவர்கள் நாஸி வதை முகாம்களில் விஷவாயு செலுத்தி கொல்லப்பட்டதுவரை கிறிஸ்துவம் யூதர்கள் மீது நடத்திய வன்படுகொலை சொல்லும் தரமன்று.

http://en.wikipedia.org/wiki/Antisemitism_in_the_New_Testament

http://en.wikipedia.org/wiki/Religious_antisemitism

மேற்கண்ட இணைப்புகளில், மிகவும் குறைந்த அளவுக்கு அவர்கள் மீதான கிறிஸ்துவ வெறுப்பின் மத அடிப்படையும், அதன் விளைவுகளும், போப்புகள் அது சம்பந்தமாக வெளியிட்ட அறிக்கைகளின் குறிப்புகளும் இருக்கின்றன.

1881இல் ரஷிய அரசர் கொல்லப்பட்டார். ரஷிய ஆளும் வர்க்கம் உடனே இந்த பழியை யூதர்கள் மீது போட்டது. யூதர்களுக்கு எதிராக சட்டங்கள் இயற்றப்பட்டன. அவர்களை அழித்தொழிக்க கும்பல்கள் கிளம்பின. இதனால், கிழக்கு ஐரோப்பா, ரஷியாவிலிருந்து சுமார் 3.5 மில்லியன் யூதர்கள் வெளியேறினார்கள். இதில் 2 மில்லியன் யூதர்கள் அமெரிக்காவுக்கு சென்றார்கள். வெறும் 25000 பேர்களே ஒட்டோமான் ஆண்ட பாலஸ்தீனத்துக்கு சென்றார்கள்.
(இது முதல் ஆலியா என்று அழைக்கப்படுகிறது)

1917இல் பாலஸ்தீனத்தை இங்கிலாந்து கைப்பற்றியது. 1922இல் லீக் ஆஃப் நேஷன்ஸ் (முன்னால் ஐ.நா) பாலஸ்தீனம் மீது இங்கிலாந்தின் ஆளுமையை உறுதி செய்தது.

ஜெர்மனியில் நாஸிஸத்தின் எழுச்சி, மேலும் அதிகமாக யூதர்களை இஸ்ரேலுக்கு துரத்தியது. ஏறத்தாழ 1 மில்லியன் யூதர்கள் இஸ்ரேலுக்கு இந்த காலத்தில் வந்தார்கள். இந்த சமயத்தில் இஸ்ரேலில் யூதர்களின் எண்ணிக்கை 33 சதவீதமாக இருந்தது. இங்கு வந்த யூதர்கள் ஏராளமான வேலை வாய்ப்புக்களை உருவாக்கியதால், அதில் பயன்பெற்றுகொள்ள சுமார் 50000 அரபுகள் இஸ்ரேலுக்குள் வந்ததாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இரண்டாம் உலகப்போரின் முடிவில், பாலஸ்தீன பகுதியிலிருந்து தான் விலகிகொள்வதாகவும், யூதர்களுக்கும் பாலஸ்தீனர்களுக்கும் சுமுகமான ஒரு முடிவை தன்னால் எட்ட முடியவில்லை என்றும் இங்கிலாந்து கூறியது.

யூத தோரா எதிர்பார்க்கும் மெஸியாவை நம்பாமல், தாங்களே முயன்று, ஒரு யூத நாட்டை ஏற்படுத்தி அங்கு சென்று தங்கமுடியும் என்ற நம்பிக்கையுடன் தோற்றுவிக்கப்பட்ட இயக்கமே ஜயனிஸம். இதனை தோற்றுவித்தவர்கள், சேர்ந்தவர்கள், தலைவர்கள் ஆகியோரில் பெரும்பான்மையினர் கம்யூனிஸ்டுகள். மத ஆர்வமற்றவர்கள். பலர் நாத்திகர்கள். இரண்டாம் உலகப்போரின் முடிவில் ஜயனிஸ்டுகள், யூதர்களுக்கென்று ஒரு நாட்டை, அவர்கள் சுயாதீனத்துடன் வாழ புராதன வீடான இஸ்ரேலில் அமைக்க வேண்டும் என்று முனைந்தார்கள். யூத மத கொள்கையின்படி, கடவுளின் அருள் படைத்த மெஸியா ஒருவர் (அல்லது இருவர்.ஒருவர் ராணுவ தலைமை, மற்றவர் ஆன்மீக தலைமை) இஸ்ரேலிய நாட்டை அமைப்பார்கள். (அன்றைய) ரோமர்களை தோற்கடிப்பார்கள். அதன் பின்னால், உலக நாடுகள் இஸ்ரேலுக்கு தலைவணங்கும். இது பழைய ஏற்பாடு என்று அழைக்கப்படும் தோராவிலும், புதிய ஏற்பாடு என்று அழைக்கப்படும் இயேசு கிறிஸ்து கதையிலும் காணலாம்.

டேவிட் பென் குரியன் தலைமை ஏற்ற யூத அமைப்பு (Jewish Agency) பன்னாட்டு அரசியல் தலைவர்களிடம் பேசி, நடையாய் நடந்து தங்களுக்கென்ற ஒரு நாட்டை பெற்றார்கள். இஸ்ரேல் அன்று இங்கிலாந்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. இங்கிலாந்து அப்படி ஒரு யூத நிலத்தை உருவாக்க ஒப்புகொண்டது. அது பெல்பார் அறிவிப்பு என்று அழைக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபை முன்னாள் இஸ்ரேலை, அன்னாள் பாலஸ்தீனத்தை இரண்டாக பிரித்தது. (பிரித்த படத்தை காண்க)

UN_Partition_Plan_For_Palestine_1947
இந்த படத்திலிருந்தே இரண்டு நாடுகளுமே சீரான தொடர்ந்த தெளிவான எல்லைக்கோடுகள் இல்லாமல் ஒருவரை ஒருவர் தாக்கும் அமைப்புடனேயே இருப்பதை காணலாம். (இந்தியாவை உடைத்து பாகிஸ்தானை இந்தியாவின் இரண்டு பக்கமும் வைத்ததை நினைவு கூருங்கள்.)

வளமையான மூன்று பகுதிகள் பாலஸ்தீன பகுதிகளாக அறிவிக்கப்படுகின்றன. பாலைவனமான பகுதிகள் இஸ்ரேல் என்று அறிவிக்கப்படுகின்றன. (வளமையான சிந்து பகுதியும், கங்கை டெல்டா பகுதியான வங்காளமும் பாகிஸ்தானாக அறிவிக்கப்பட்டன என்பதையும் நினைவு கூருங்கள். நியாயமாக பார்த்தால், சிந்து நதிக்கு இந்தப்பக்கம் இருந்த பஞ்சாப் இந்துக்கள் அதிகம் கொண்டது. சிந்து நதிக்கு இந்தப் பக்கம் இருந்த சிந்து மாகாண பகுதி அதிக இந்துக்களை கொண்டது. சிந்து நதியே எல்லைக்கோடாக ஆக்கப்பட்டிருக்கவேண்டும். ஆனால் பிரிவினையின் போது முழு சிந்து மாகாணமுமே பாகிஸ்தானாக அறிவிக்கப்பட்டது. அது பின்னர் ஒரு நேரத்தில் எழுதப்பட வேண்டியது.)

பாலஸ்தீனர்களுக்கு சுதந்திரமான ஒரு நாடும், இஸ்ரேலியர்களுக்கு சுதந்திரமான ஒரு நாடும், ஜெருசலம் தனி நகரமாகவும் பிரிக்கப்படும் என்று ஐ.நா முடிவெடுத்தது.

இதனை யூதர்கள் ஒப்புகொண்டார்கள். பாலஸ்தீனர்கள் சார்பாக அரபு லீகும், அரபு ஹயர் கமிட்டி என்பதும் நிராகரித்தன. டிசம்பர் 1947இல் அரபு லீக் யூதர்களை தாக்க அறைகூவல் விடுத்தது. ஏராளமான யூதர்கள் தாக்கப்பட்டார்கள். உள்நாட்டு போர் துவங்கியது. பாலஸ்தீனர்களது அரபு பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது. சுமார் 250000 பாலஸ்தீன அரபுகள் வெளியேறினர்.

14 மே 1948இல் டேவிட் பென் குரியன், ஐநா கொடுத்த எல்லைக்கோடுகளோடு, சுதந்திர இஸ்ரேல் நாட்டை பிரகடனம் செய்தார்.

அடுத்த நாள், எகிப்து, சிரியா, ஜோர்டான், ஈராக் ஆகிய நாடுகள் இந்த புது நாட்டின் மீது போர் தொடுத்தன. இது 1948- அரபு இஸ்ரேலிய போர் என்று அழைக்கப்படுகிறது. சவுதி அரேபியா தன் படைகளை எகிப்து கீழ் பணியாற்ற அனுப்பி வைத்தது.

இதுதான் இஸ்ரேலும் அதன் அருகாமை அரபு நாடுகளும், முஸ்லீம் நாடுகளும்.

israelarab

ஒரு வருட போருக்கு பின்னால், போர் நிறுத்த ஒப்பந்தம் உருவானது. ஜோர்டான் மேற்குக்கரை என்று சொல்லப்படும் west bank ஐ தன்னுடன் இணைத்துகொண்டது. எகிப்து காஸா பகுதியை தனக்கென எடுத்து தன்னுடன் இணைத்துகொண்டது. இந்த போரினால், சுமார் 7 லட்சம் பாலஸ்தீனர்கள் இஸ்ரேலிலிருந்து ஓடினார்கள், அல்லது துரத்தப்பட்டார்கள் என்று மதிப்பிடப்படுகிறது.
http://en.wikipedia.org/wiki/Green_Line_(Israel)

இந்த போரின் முடிவில் இஸ்ரேலின் எல்லைகள் விரிவாக்க அங்கீகரித்தன ஜோர்டனும் எகிப்தும்.

150px-Israel_green_lines

மேற்குக்கரையை ஜோர்டன் எடுத்துகொண்டது. கீழே காஸா பகுதியை எகிப்து தன்னுடன் இணைத்துகொண்டது.

 

ஆறுநாள் போர்.
http://en.wikipedia.org/wiki/Six-Day_War

இஸ்ரேல் தோற்றத்தின் முதற்கொண்டு இஸ்ரேலுக்கும், அருகாமையிலிருந்த அரபு நாடுகளுக்கும் ஜோர்டான் ஆற்றின் நீரை எப்படி பகிர்ந்துகொள்வது என்ற பிரச்னை இருந்தது. இஸ்ரேலுக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட போகக்கூடாது என்று சிரியா, ஜோர்டான் ஆகிய நாடுகள் முனைந்தன. இஸ்ரேல் தனக்கு அந்த ஆற்று நீர் வேண்டும் என்று பல முயற்சிகள் எடுத்தது. அரபு தேசியவாதிகளான நாஸர் போன்றோர்கள் இஸ்ரேல் என்ற ஒரு நாடே இருக்ககூடாது என்று முனைந்தார்கள். அருகாமையில் உள்ள எந்த நாடுமே இஸ்ரேலை ஒரு சுதந்திர நாடாக அங்கீகரிக்கவில்லை. செங்கடலில் இஸ்ரேல் கப்பல்கள் வரக்கூடாது என்று எகிப்திய படைகள் தடுத்தன. 1966இலிருந்தே எகிப்திய படைகளும் இஸ்ரேலிய படைகளும் எல்லையில் மோதிக்கொண்டே இருந்தன. மே 1967இல் அரபு நாடுகள் தங்களது படைகளை இஸ்ரேலுக்கு எதிராக ஒருங்கிணைக்க துவங்கின. இதனை கண்ட இஸ்ரேல், அவர்கள் தாக்குமுன்னர் தாம் தாக்க வேண்டுமென்று அதிரடியாக 5 ஜூன் 1967இல் சிரியா, எகிப்து, ஜோர்டன், ஈராக் ஆகிய நாடுகளை ஒரே நேரத்தில் தாக்கியது. ஆறு நாள் நடந்த போரில், சினாய் தீபகற்பம், மேற்குக்கரை, காஸா, கோலன் உச்சிகள் ஆகியவற்றை கைப்பற்றியது. எதிரி நாடுகள் படுதோல்வி அடைந்தன. கிரீன் லைன் என்று அழைக்கப்பட்ட முன்னால் எல்லைக்கோடு இஸ்ரேலின் அதிகாரப்பூர்வ எல்லையாகவும், இந்த ஆறு நாள் போரில் கைப்பற்றப்பட்ட பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகள் என்றும் அறிவிக்கப்பட்டன.

Six_Day_War_Territories

இதுதான் ஆறு நாள் போர் முடிவில் இஸ்ரேலின் அதிகாரத்தின் கீழ் உள்ள பகுதிகள்.

இதுதான்போரின் முடிவில் இஸ்ரேலின் எல்லைகள். இதில் மேற்குக்கரை, கோலன் உச்சிகள், சினாய் தீபகற்பம், காஸா அனைத்துமே இஸ்ரேல் வெற்றிகொண்ட பகுதிகளாக இருப்பதை கவனியுங்கள்.

##

பாலஸ்தீனத்திலிருந்து வெளியேறி மத்திய கிழக்கில் பரந்து கிடந்த மாணவர்களால் 1959இல் துவக்கப்பட்ட வன்முறை அமைப்பு ஃபாடா. அதன் தலைவராக இருந்த யாசர் அராஃபத்தை பலரும் அறிந்திருப்பார்கள்.

PLO பிஎல் ஓ என்ற அமைப்பு 1964இல் அரபு லீகால் கெய்ரோ, எகிப்தில் தோற்றுவிக்கப்பட்டது. இதன் ஆரம்பமே, வன்முறை மூலம் பாலஸ்தீனத்துக்கு இஸ்ரேலியர்களிடமிருந்து விடுதலை பெற்றுத்தருவதை உறுதி செய்தது. இது அரபிய தேசியத்தை அடிப்படையாக கொண்டது (இஸ்லாம் அல்ல). அரபியர்கள் அனைவரும் ஒரே நாட்டின் கீழ் ஒரே தலைமையின் கீழ் வாழவேண்டும் என்ற நோக்கத்தை கொண்ட அரபு தேசிய வாதத்தின் ஊற்றுக்கண்ணாக இருந்தவர்கள் மார்க்ஸியர்கள். இதில் முக்கியமானவர் ஜார்ஜ் ஹபாஷ். (பாலஸ்தீனத்தை சேர்ந்தவர். பிறப்பால் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்துவர்) இன்றும் கூட ஃபடா தன்னை மதச்சார்பற்றதாகவும், அரபு தேசியவாதத்துடனும் சோசலிசத்துடனும் பிணைத்துகொள்கிறது. 1967இல் ஆறு நாள் போரின் முடிவில், ஃபாடா பிஎல் ஓவுடன் இணைந்தது. யாசர் அராபத் பி எல் ஓவின் தலைவரானார்.

ஆறு நாள் போருக்கு பிறகு பி எல் ஓ ஒரு பயங்கரவாத இயக்கமாக தன்னை அடையாளப்படுத்திகொண்டது. இஸ்ரேலின் சாதாரண குடிமக்களை தாக்குவதையும், இஸ்ரேலிய விளையாட்டு வீரர்களை கொல்வதையும், இஸ்ரேலிய விமானத்தை கடத்துவதையும் முழு நேர வேலையாக எடுத்துகொண்டது.

1973இல் யூதர்கள் யோம் கிப்பூர் விரதம் அனுசரித்துகொண்டிருந்தபோது, எகிப்தும், சிரியாவும் ஒருங்கிணைந்து இஸ்ரேல் மீது அதிரடி தாக்குதலை தொடுத்தன. எகிப்து சினாய் தீபகற்பத்தை ஆக்கிரமிக்க முயன்றது. சிரியா கோலன் உச்சிகளை கைப்பற்ற முனைந்தது. இஸ்ரேல் தன்னை தற்காத்துகொண்டாலும், பெருத்த உயிர் இழப்புகளை தாங்கவேண்டி வந்தது. இதனால் பிரதமர் கோல்டா மேயர் பதவி துறந்தார்.

1978இல் கேம்ப் டேவிட் அமைதி ஒப்பந்தத்தை அமெரிக்கா முன்னின்று ஏற்படுத்த, இஸ்ரேல் பிரதமர் மெனக்கம் பெகினும் எகிப்து தலைவர் அன்வர் சதாத்தும் கை குலுக்கினார்கள். 1979இல் இஸ்ரேல் எகிப்து அமைதிக்காக, தான் வெற்றிபெற்ற  சினாய் தீபகற்பத்தை எகிப்துக்கு விட்டுக்கொடுத்தது இஸ்ரேல். அதுவரை அங்கே உருவாகியிருந்த  இஸ்ரேலிய குடியிருப்புகளை (Israeli settlements) வலுக்கட்டாயமாக நீக்கி அவர்களை இஸ்ரேலுக்குள் அழைத்துகொண்டது.

(இஸ்ரேலிய குடியிருப்புகள் காஸா பகுதியிலும், மேற்குக்கரை பகுதியிலும் அதுவரை இருந்த இஸ்ரேலிய அரசுகள் உதவியுடன் கட்டப்பட்டு வந்திருக்கின்றன. 2005இல் தானாக முன்வந்து  அந்த குடியிருப்புகளை நீக்க முனைந்தது. இது சுயமான போர்தவிர்ப்பு திட்டம்  unilateral_disengagement_plan.  பாலஸ்தீனம் அமைதிவழியை தேர்ந்தெடுக்காமல், தானாக நாடு பிரகடன கோரிக்கையை 2011இல்  ஐநாவில் வைத்தபோது, அதற்கு எதிர்ப்பாக, மேலும் இஸ்ரேலிய குடியிருப்புகளை மேற்குக்கரையிலும் காஸாவிலும் கட்டுவோம் என்று அறிவித்தது)

மார்ச் 1978இல் பி எல் ஓ பயங்கரவாதிகள் இஸ்ரேலிய குடிமக்கள் 47 பேரை கொன்றார்கள். அதற்கு பதிலடியாக தெற்கு லெபனாலில் பி எல் ஓக்களுக்கு இருந்த முகாம்களை அழிக்க தெற்கு லெபனானை கைப்பற்றியது இஸ்ரேல்.

oslo-agreement1992இல் யிட்சக் ராபினும், யாசர் அராபத்தும் ஓஸ்லோ ஒப்பந்தத்தை ஒப்புகொண்டார்கள். மேற்குக்கரை, காஸா இரண்டையும் சுயாதீனம் கொண்ட நிலங்களாக பி எல் ஓவிடம் கொடுப்பதாக ஒப்புகொண்டது. அதற்கு பதிலாக பி எல் ஓ, இஸ்ரேலுக்கு அங்கீகாரம் வழங்கியது. பி எல் ஓவுடன் அமைதிக்காக, நிலங்களை கொடுக்க இஸ்ரேல் ஒப்புகொண்டது. இதே போல சிரியாவிடம் நிரந்தர அமைதி கிடைத்தால் கோலன் உச்சிகளை கொடுப்பதாகவும் யிட்சக் ராபின் கூறியிருக்கிறார். ஜோர்டனும் இஸ்ரேலை அங்கீகரித்தது. ஆனால், பி எல் ஓவின் தொடர்ந்த தற்கொலைப்படை தாக்குதல்களால், இந்த ஒப்பந்தங்களுக்கான ஆதரவு இஸ்ரேலிய பொதுமக்களிடம் குறைய ஆரம்பித்தது. இந்த அமைதி ஒப்பந்தங்கள் இஸ்ரேலிய மக்களிடம் கோபத்தையும் ஏற்படுத்தின. 1995இல் யிட்சக் ராபின் இந்த ஒப்பந்தங்களை எதிர்த்த இஸ்ரேலியரால் சுட்ட்டுக்கொல்லப்பட்டார்.

பிறகு பிரதமரான யஹூத் பராக், தெற்கு லெபனானிலிருந்து இஸ்ரேலிய படைகளை திரும்ப பெற்றார். அமைதிக்காக, யாசர் அராபத்துடன் 2000 கேம்ப் டேவிட் பேச்சுவார்த்தைகளை நடத்தினார். சுதந்திர பாலஸ்தீன நாட்டுக்கான வரையறையை யாசர் அராபத்திடம் அளித்தார். அந்த வரையறையை யாசர் அராபத் நிராகரித்தார்.

ஏரியல் ஷரோன் பிரதமராக ஆனதும், காஸா பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலிய போர்வீரர்களை திரும்ப பெற்றார். மேற்குக்கரையை சுற்றிலும் சுவரெழுப்பினார். இது இரண்டும் யாசர் அராபத் ஆரம்பித்த இரண்டாவது இண்டிபாடாவை தோல்வியுறச்செய்தது.

செப்டம்பர் 2007இல் சிரியாவின் அணு உலையை தாக்கி அழித்தது.
**
யாசர் அராபத்தின் மறைவுக்கு பிறகு மஹ்மூது அப்பாஸ் பி எல் ஓ, ஃபாடா இரண்டுக்கும் தலைவரானார். இவர் யாசர் அராபத்த்தை விட மிதவாதியாகவும் அறியப்படுகிறார்.

abbas

 

அரசியல் இஸ்லாமை அடிப்படையாக கொண்ட முஸ்லீம் பிரதர்ஹூட் அமைப்பின் தோற்றமும் வளர்ச்சியும் சவுதி பணம், வளைகுடா வஹாபி ஆதரவு என்ற அடிப்படையில் தோன்றி, எகிப்து போன்ற நாடுகளில் வலுப்பெற்றது.

yassinமுஜமா அல் இஸ்லாமியா என்ற இஸ்லாமிய சேவை அமைப்பை நடத்திவந்த ஷேக் அஹ்மது யாஸின் காஸா பகுதியில் முஸ்லீம் பிரதர்ஹூட் அமைப்பின் பிரதேச கிளையை நடத்திவந்தார். இவரது சேவைஅமைப்புக்கு இஸ்ரேல் அரசாங்கமே 1979 வரைக்கும் சேவை அமைப்பாக அங்கீகாரமும், காஸா பகுதி மக்களுக்கு உதவ இவர்களுக்கு பண உதவியும் அளித்திருக்கிறது. இந்த அமைப்பு காஸா பகுதியில் மசூதிகளை கட்டவும், பள்ளிக்கூடங்களை கட்டவும், நூலகங்களை அமைக்கவும் இஸ்ரேல் உதவியிருக்கிறது. யாஸினுக்கு மருத்துவ உதவிக்காக இவரை இஸ்ரேலுக்கு அழைத்து சென்று மருத்துவ உதவியும் செய்திருக்கிறது.

இந்த அமைப்பில் பாலஸ்தீனர்கள் பெருவாரியாக சேர்ந்துவந்தார்கள். 1984இல் யாசீன் தனது மசூதிகளில் ஆயுதங்களை பதுக்குவதாக இஸ்ரேல் அறிந்து அந்த மசூதிகளை ரெய்டு செய்து ஏராளமான ஆயுதங்களை கைப்பற்றியது. இந்த ஆயுதங்கள் அனைத்தும், இஸ்ரேலுக்கு எதிராக பயன்படுத்தப்படாது, ஃபாடாவுக்கு எதிராக உபயோகப்படுத்தத்தான் என்று யாசீன் உறுதி கொடுத்ததும், யாசீனை விடுதலை செய்தது.

1987இல் சில பாலஸ்தீனர்கள் சாலைவிபத்தில் இறந்ததை காரணமாக வைத்து முதலாவது இண்டிபாடா தோன்றும்போது, யாசீனும் மற்ற சிலரும் இணைந்து ஹமாஸை உருவாக்கினார்கள். 1989இல் இஸ்ரேலிய ராணுவவீரர்களை கடத்தி சென்று கொன்றார்கள். உடனே யாசீனை கைது செய்து சிறையிலடைத்தது இஸ்ரேல். 400 ஹமாஸ் இயக்கத்தினரை நாடு கடத்தி தெற்கு லெபனானுக்கு அனுப்பியது.

ஹமாஸ் முழுக்க முழுக்க தன்னை இஸ்லாமிய அமைப்பாக அடையாளப்படுத்திகொள்கிறது.

1993இல் ஓஸ்லோ ஒப்பந்தம் பாலஸ்தீன சுயாட்சியை நிறுவியதை ஹமாஸ் தீவிரமாக எதிர்த்தது. 1997இல் ஜோர்டனிலிருந்து இரண்டு மொஸாத் ஏஜெண்டுகளை விடுவிப்பதற்காக இவரை பதிலுக்கு விடுவித்தது. விடுதலை ஆன நேரம் முதற்கொண்டு இஸ்ரேலின் மீது தொடர்ந்து வன்முறை தாக்குதல்களை நடத்தவேண்டும் என்று ஹமாஸுக்கு ஆணை அளித்துகொண்டே இருந்தார். 2003இல் இவரது வீட்டின் மீது ராக்கெட்டுகளை இஸ்ரேல் அனுப்பி கொல்லமுயன்றது. 2004இல் இவர் மீது ஹெலிகாப்டர் ராக்கெட் குண்டுகளை வீசியதில் இவர் கொல்லப்பட்டார்.

2006இல் நடந்த பாலஸ்தீன தேர்தலில் 132 இடங்களில் 76ஐ கைப்பற்றியதன் மூலம் பாலஸ்தீன அரசியலில் படாவுக்கு இருந்த முக்கிய இடத்தை ஹமாஸ் எடுத்துகொண்டது. பெப்ருவரி 2006இல் 10 வருட போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேலுடன் செய்துகொள்ள தயார் என்றும், அதற்கு பதிலாக பாலஸ்தீன மேற்குக்கரை, காஸா, கிழக்கு ஜெருசலம் முழுவதிலிருந்து இஸ்ரேல் விலகிக்கொள்ள வேண்டும் என்றும் கூறியது. தேர்தலுக்கு பின்னால், அமெரிக்கா, ருஷ்யா, ஐரோப்பிய ஐக்கியம், ஐநா ஆகியவை, ஹமாஸ் முழுக்க முழுக்க வன்முறையை நிராகரிக்கவேண்டும் என்றும், இஸ்ரேலை முழுமையாக அங்கீகரிக்கவேண்டுமென்றும், முந்தைய பாலஸ்தீன அரசுகள் செய்த ஒப்பந்தங்களை மதிக்கவேண்டும் என்றும் கோரின. அதனை ஹமாஸ் நிராகரித்தது. இதனால், பாலஸ்தீன பகுதிகளுக்கு உதவி செய்வதை நிறுத்துவதாக இந்த நான்கும் அறிவித்தன.

மார்ச் 20, 2006இல் படாவுக்கும் ஹமாஸுக்கும் இடையே வன்முறை வெடித்தது. ஹமாஸ் காஸா பகுதியிலிருந்து கஸாம் ராக்கெட்டுகளை இஸ்ரேலுக்குள் அனுப்பி தாக்க ஆரம்பித்தது.
பெப்ருவரி 2006இல் சவுதி அரேபியா ஹமாசுக்கும், படாவுக்கும் இடையே அமைதியை உருவாக்க முனைந்தது. மார்ச் 2007இல் ஹமாசும் படாவும் இணைந்த ஐக்கிய அரசு மஹ்மூது அப்பாஸ் தலைமையில் பொறுப்பேற்றது. ஆனால், படாவுக்கும் ஹமாசுக்கும் இடையே நடந்த காஸா போரில், படா போர்வீரர்கள் ஹமாஸால் கொன்று குவிக்கப்பட்டனர். சுமார் 600 பாலஸ்தீனர்கள் இந்த போரில் இறந்தார்கள். இருபுறமும் சித்திரவதையும், போர்குற்றங்களும் நிகழ்த்தப்பட்டன என்று மனித உரிமைக்கழகம் கூறியது.

ஜூன் 2008இல் ஹமாசுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகாரப்பூர்வமற்ற போர் நிறுத்ததை எகிப்து கொண்டுவந்தது. இஸ்ரேலின் மீது ராக்கெட்டுகளை அனுப்புவதை ஹமாஸ் நிறுத்துவதற்கு ஈடாக, கப்பல் போக்குவரத்தை காஸா பகுதிக்கு அனுமதிக்க இஸ்ரேல் ஒப்புகொண்டது. டிசம்பர் 19இல் 50 ராக்கெட்டுகளை இஸ்ரேலுக்குள் ஹமாஸ் அனுப்பி போர் நிறுத்ததை உடைத்தது. டிசம்பர் 27இல் பதில் தாக்குதல் நடத்திய இஸ்ரேல், வான்வெளி தாக்குதல்கள் மூலம் ஹமாஸ் ராணுவ தளங்களை தாக்கியது. ஆனால் 280 பேரும், 600க்கு மேற்பட்டோரும் காயமடைந்தார்கள்.

2011இல் சிரியா உள்நாட்டு போர் துவங்கியதும், அதுவரை சிரிய அரசாங்க உதவியுடன் இருந்த ஹமாஸ், சிரிய அரசாங்கத்துக்கு எதிராக திரும்பியது. (சிரியாவை ஆள்வது அலவாயிட்டுகள் எனப்படும் ஷியா பிரிவினர். சிரியாவில் பெரும்பான்மை சுன்னி பிரிவை சேர்ந்தவர்கள். ஹமாஸ் எனப்படும் இந்த முஸ்லீம் பிரதர்ஹூட் கிளை சுன்னி வஹாபி பிரிவை சேர்ந்தது) 2012இல் பகிரங்கமாக, சிரிய அரசாங்கத்தை எதிர்க்கும், சுன்னி பிரிவினருக்கு ஆதரவளித்தது. இதனால், சிரிய அரசாங்கம் ஹமாஸ் அதிகாரிகளையும் இயக்கத்தினரையும் டமாஸ்கஸிலிருந்து வெளியேற்றியது.

2014இல் மீண்டும் ஹமாஸும் படாவும் இணைந்து தேசிய ஐக்கிய அரசை உருவாக்க முனைந்தார்கள். ஹமாஸ் இணைந்திருக்கும் பாலஸ்தீன தேசிய ஐக்கிய அரசுக்கு தான் எதிரி என்று இஸ்ரேல் ஏற்கெனவே அறிவித்திருந்தது. ஏனெனில் மெஹ்முது அப்பாஸ் இஸ்ரேலுக்கு அங்கீகாரம் தர ஒப்புகொண்டவர். ஆனால் ஹமாஸ் இஸ்ரேலுக்கு ஒருபோதும் அங்கீகாரம் தரமுடியாது என்றும், அதன் அழிவே தன் நோக்கம் என்றும் அறிவித்த இயக்கம்.

ஹமாஸுக்கு இருந்த சிரிய ஆதரவும், ஈரானிய ஆதரவும் இப்போது இல்லை. 2013இல் எகிப்தில் ஆட்சி செய்து வந்த தோழமை முஸ்லீம் பிரதர்ஹூட் ஆட்சி ராணுவ அதிரடியால் நீக்கப்பட்டது. ஆகவே எகிப்தின் ஆதரவும் இல்லை. காஸா எல்லையில் தோண்டப்பட்ட சுரங்கங்கள் மூலம் ஹமாஸ் ஆயுதங்களை கடத்தி வந்துகொண்டிருந்தது. அவை அனைத்தையும் எகிப்திய ராணுவ அரசாங்கம் மூடிவிட்டது. அதனால்தான் வேறுவழியின்றி படாவுடன் ஐக்கிய தேசிய அரசை உருவாக்க ஒப்புகொண்டது.

ஜூன் 12, 2014இல் மூன்று இஸ்ரேலிய இளைஞர்கள் கடத்தப்பட்டார்கள். இஸ்ரேல் அரசு ஹமாஸை குற்றம் சாட்டியது. 30 ஜூன் 2014இல் கொல்லப்பட்ட இவர்களது சடலம் கிடைத்தது.

இந்த இளைஞர்களை கடத்தியவர்கள் பெரிய ஹீரோக்கள் எனவும், இது இஸ்ரேலுக்கு பலத்த அடி என்றும் ஹமாஸ் பேசியது.

இஸ்ரேலியர்களிடம் இது கோவத்தை உண்டுபண்ணியது. பாலஸ்தீன அரபுகளை பல இடங்களில் தாக்க ஆரம்பித்தார்கள். ஜூலை 2ஆம் தேதி ஒரு பாலஸ்தீன சிறுவன் கடத்தப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டான். அவன் உயிரோடு எரிக்கப்பட்டான் என்று இஸ்ரேல் அரசாங்கம் நடத்திய போஸ்ட் மார்ட்டம் தெரிவித்தது. பாலஸ்தீன பிரதமர் நேடன்யாஹூ குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்றும் அனைவரும் சட்டத்தை மதித்து நடக்கவேண்டும் என்றும் எச்சரிக்கைவிடுத்தார்.

கடத்தப்பட்ட இஸ்ரேலிய இளைஞர்களை கண்டுபிடிக்க, மேற்குக்கரையில் இருந்த ஹமாஸ் உறுப்பினர்கள் சுமார் 200 பேரை கைது செய்தது. மேற்குக்கரையில் தன்னை ஒழித்துக்கட்ட இஸ்ரேலின் முயற்சி இது என்று ஹமாஸ் கருதியது. இதற்கு பதிலடியாக காஸா பகுதியிலிருந்து ராக்கெட்டுகளை இஸ்ரேலுக்குள் அனுப்பி தாக்க துவங்கியது.

இஸ்ரேலுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் இருந்தபோது கூட, தன்னுடைய ராக்கெட்டுகளை வேறொரு பெயர் கொண்ட இன்னொரு அமைப்புக்கு கொடுத்து அதன் மூலம் இஸ்ரேலை தாக்கிவந்திருக்கிறது. கேட்டால், அந்த அமைப்புக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்று கூறிவிடும்.

ஆகவே இந்த சூழ்நிலையில் மீண்டும் ராக்கெட்டுகள் மூலம் இஸ்ரேலை தாக்குவதன் மூலம் இஸ்ரேலின் பதிலடி தாக்குதலை நிச்சயம் பெறலாம். அது மிகப்பெரிய மனித பேரிடரை காஸா பகுதியில் உருவாக்கும். அதன் மூலம் மீண்டும் அரபு நாடுகள், மற்றும் மனித நேய ஆர்வலர்களின் ஆதரவை பெறலாம் என்பதே அதன் கணக்கு.

அதனால்தான் ஹமாஸ் இஸ்ரேலிய சிறுவர்களை கடத்தி கொன்றது.

எதிர்பார்த்தது போலவே இஸ்ரேல் பதிலடியாக தனது ராக்கெட்டுகளை காஸா பகுதிக்குள் அனுப்பி பாலஸ்தீன ஹமாஸ் ராணுவ தளங்களையும் ராக்கெட் விடும் இடங்களையும் தாக்க முனைந்தது. இதுவரை 200க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் இதனால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஹமாஸ் ராக்கெட்டுகளால், ஒரு இஸ்ரேலியர் கொல்லப்பட்டிருக்கிறார்.
http://en.wikipedia.org/wiki/Operation_Protective_Edge

இந்த போர் இன்னமும் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

என் கருத்து.

பாலஸ்தீனம், இஸ்ரேல் என்ற இரு நாடுகள் இருப்பதை நவீன இஸ்ரேல் தான் தோன்றிய 1947இலிருந்து  அங்கீகரித்தே வந்திருக்கிறது என்பதை அறியலாம்.

ஆனால், ஓஸ்லோ ஒப்பந்தம் வரைக்கும், பாலஸ்தீன அரபுகளோ, அல்லது மற்ற அரபு தேசங்களோ இஸ்ரேல் என்ற ஒரு நாடே இருக்கக்கூடாது என்பதில் தீவிரமாகவே கருத்துகொண்டிருக்கின்றன. ஓஸ்லோ ஒப்பந்தத்தில் யாசர் அராபத் இஸ்ரேலை அங்கீகரித்ததால் கோபம் கொண்டு, மற்ற அரபு நாடுகள், முக்கியமாக சவுதி அரேபியா, பணம் உதவி செய்து ஹமாஸை வளர்த்துவிட காரணம்.

இஸ்ரேல் இருப்பதால் யூதர்கள் வெறுக்கப்படவில்லை. யூதர்கள் இருப்பதாலேயே இஸ்ரேல் வெறுக்கப்படுகிறது. யூதர்கள் மீதான வெறுப்பு என்பது பைபிளின் புதிய ஏற்பாட்டில் மிதமாகவும், குரானில் தீவிரமாகவும் இருக்கிறது. இந்த மத அடிப்படையே, யூதர்கள் மீதான கிறிஸ்துவர்களின் வெறுப்புக்கும், முஸ்லீம்களின் வெறுப்புக்கும் காரணம். தமிழ்நாட்டு முஸ்லீம்களுக்கும் யூதர்களுக்கும் என்ன தொடர்பு? இஸ்லாம் யூதர்கள் மீது வெறுப்பினை போதிப்பதாலேயே யூதர்களுக்கு ஒரு சம்பந்தமும் இல்லாத இந்தோனேஷியர்களும், மலேசியர்களும், இந்திய முஸ்லீம்களும், பாகிஸ்தானிய முஸ்லீம்களும் பங்களாதேஷ் முஸ்லீம்களும் யூதர்கள் மீது வெறுப்பினை கக்குகிறார்கள்.
இந்த முன்னாள் முஸ்லீம் கிண்டல் செய்வது போல, இஸ்லாமின் அடித்தளத்தில் இருக்கும் இந்த வெறுப்பு, முஸ்லீமாக உணருபவர், உண்மையை பார்க்கமுடியாமல் செய்துவிடுகிறது.

நிலத்துக்கான சண்டையும் இல்லை இது. இஸ்ரேல் எவ்வாறு முழுக்க முழுக்க அரபு நிலங்களால் சூழப்பட்டிருப்பதையும், இஸ்ரேலின் நிலம் எவ்வளவு சிறியது என்பதையும் இந்த படத்தில் பார்க்கலாம். இதனை கிளிக் செய்து பெரியதாகவே பாருங்கள்.

arab-israeli-conflict-6

ஆனால் வெற்றி கொண்ட நிலங்களை திருப்பி கொடுப்பதன் மூலம் அமைதியை பெற்று விடலாம் என்று இஸ்ரேல் மடத்தனமாக நினைக்கிறது. சினாய் தீபகற்பத்தையும், காஸா, மேற்குக்கரை போன்ற நிலங்களையும், தெற்கு லெபனானையும் திருப்ப கொடுத்தும், அதற்கு அமைதி கிட்டவில்லை என்பதுதான் உண்மை. இதுவரை அரபுகள் வெற்றி கொண்ட நிலங்களை தாங்களாக எப்போதுதான் திருப்ப கொடுத்திருக்கிறார்கள்? அமைதிக்காகவோ, அல்லது நட்புறவுக்காகவோ அரபுகள் தாங்கள் வெற்றி கொண்ட நிலங்களை தாங்களாக திருப்ப கொடுத்த வரலாறு இருக்கிறதா?

மேலே இருக்கும் வரைபடத்தில் கரும் பச்சையில் இருக்கும் நாடுகளே இஸ்ரேலுடன் போர் புரிந்த அரபு நாடுகள். இளம் பச்சையில் இருக்கும் அனைத்தும் அரபு நாடுகள்தாம்.  இதில் சவுதி அரேபியா, ஈராக், யேமன், ஓமன் தவிர மற்ற எல்லா அரபு நாடுகளும் அரபியர்கள் ஆக்கிரமித்த நாடுகள்தானே? எகிப்தில் ஆண்ட கருப்பினத்தவர்கள் துரத்தப்பட்டு இன்று எகிப்து அரபு தேசமாக கருதப்படுகிறது. லிபியா, சூடான்,  துனிசியா, மொராக்கோ, மௌரிட்டானியா ஆகிய நாடுகளில் பெரும்பான்மையும் ஆளும் வர்க்கமும் அரபுகள்தானே? அங்கிருக்கும் கருப்பினத்தவர் அடிமைகளாகத்தானே இருக்கிறார்கள்? மௌரிட்டானியாவில் இன்னமும் அரபுகளின் கீழ் அடிமைகளாக இருக்கும் கருப்பினத்தவர்கள், தங்கள் அடிப்படை உரிமைகள் கூட இழந்து, சொந்த நாட்டிலேயே அடிமைகளாகத்தானே வாழ்கிறார்கள்? அந்த அடிமை முறையை இன்னமும் ஒழிக்க முடியவில்லையே? இந்த அரபுகள் தாங்கள் ஆக்கிரமித்திருக்கும் இந்த கருப்பின நாடுகளிலிருந்து வெளியேறி, அந்த நிலங்களை கருப்பினத்தவர்களிடம் மனமுவந்து கொடுத்துவிடுவார்களா? குறைந்தது, அந்த நாடுகளில் அடிமைகளாகவும் இரண்டாம் தர குடிமக்களாகவும் உள்ள கருப்பின மக்களுக்கு சம உரிமை தருவார்களா?

இந்த இணைப்புகளையும் பார்த்துகொள்ளுங்கள்

http://en.wikipedia.org/wiki/Slavery_in_Mauritania

http://en.wikipedia.org/wiki/Slavery_in_Libya

http://histclo.com/act/work/slave/cou/me/egypt/sce-khe.html

http://en.wikipedia.org/wiki/Arab_slave_trade

 

பாலஸ்தீன மக்கள் அந்த நிலத்தின் பழங்குடி மக்களும் இல்லை. இஸ்ரேலியர்கள் 5000 வருடங்களுக்கு முன்னால் இந்த நிலத்துக்கு வந்தபோது அவர்கள் அங்கிருந்த மற்றவர்களுடன் போர் புரிந்தது அவர்களே தங்கள் பைபிளில் எழுதி வைத்ததுதான். ஆனால், 2000 வருடங்களுக்கு முன்னால், அந்த நிலம் முழுவதுமே ஏறத்தாழ யூத மயமாகத்தான் இருந்தது. அதற்கு பின்னால் இஸ்லாமிய ஆட்சிகளின் போது வந்தேறியவர்களே பெரும்பான்மை அரபுகள். அது அரபு நிலமும் அல்ல. இஸ்ரேல் எப்போதுமே அரபு நிலம் அல்ல. 2000 வருடத்துக்கு முந்தைய ஆவணங்களில் எதிலும் பாலஸ்தீனமோ இஸ்ரேலோ அரபு நிலமாக குறிக்கப்பட்டதே கிடையாது.

அந்த நிலத்துக்கு யாரேனும் ஒருவர் சொந்தம் கொண்டாட முடியுமென்றால் அது இஸ்ரேலியராகத்தான் இருக்க முடியும். அரபுகள் அல்ல.

இஸ்ரேலுக்கு எதிராக வன்முறையை துறப்பதும், இரண்டு நாடுகளாக இஸ்ரேலும் பாலஸ்தீனமும் வாழ்வதும் மட்டுமே ஒரு நிரந்தர தீர்வாக இருக்கமுடியும். ஆனால், அரபு நாடுகளோ, அல்லது அரபு மக்களோ, அரபு பெருந்தனக்காரர்களோ, இஸ்ரேலை அழிக்க வேண்டும் என்று பி எல் ஓ, ஹமாஸ் என்று வன்முறை இயக்கங்களை தோற்றுவித்துகொண்டே இருந்தால், அந்த பிரச்னைக்கு முடிவேதும் இராது. போர் வேண்டாம், அமைதி வேண்டும் என்பதற்காக, ஒரு பயங்கரவாத இயக்கத்திடம் சரணடைவது ஒரு தீர்வும் அல்ல. அந்த பயங்கரவாத இயக்கத்தின் ஒரே குறிக்கோள், இஸ்ரேலின் அழிவும், யூதர்களின் இனப்படுகொலையுமாக இருக்கும்போது, அந்த குறிகோளை பெயரளவுக்கு கூட நீக்கமுடியாது என்ற நிலைப்பாட்டை எடுக்கும்போது, இப்படிப்பட்டவர்களிடம் அமைதி பேச்சுவார்த்தை செய்து மடத்தனமே அன்றி வேறல்ல.

ஜெர்மனியும் ஐரோப்பாவும் யூதர்களை படுகொலை செய்ததற்கு அங்கேயே ஒரு நாடு போட்டு கொடுத்திருக்கலாமே? ஏன் பாலஸ்தீனர்களது இடத்தை பிடுங்கி யூதர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று பேசுபவர்களும் இருக்கிறார்கள். ஜெர்மனியும் ஐரோப்பாவும் மட்டுமே யூதர்களை படுகொலை செய்யவில்லை. பாலஸ்தீனத்தில் இருந்த யூதர்களை துரத்தியதில் ரோமானியர்களுக்கு எவ்வளவு பங்கிருந்ததோ, அதே விட அதிகமாக அங்கு 1300 ஆண்டுகள் ஆட்சி செய்த அரபுகளுக்கும் இருக்கிறது. ஆனால் இதற்கு முன்னோடியாக உமரின் ஒப்பந்தம், முஸ்லீமல்லாதவர்களை இரண்டாம் தர குடிமக்களாக ஆக்கி, அவர்களுக்கு பல உரிமைகளை ரத்து செய்கிறது. திம்மி என்ற பெயரில் அவர்கள் உயிருடன் இருக்க அனுமதிக்கிறது.

http://www.fordham.edu/halsall/source/pact-umar.asp

(இதன் அடிப்படையில்தான் தாலிபான், இந்துக்களையும் சீக்கியர்களையும் மஞ்சள் கயிறு கட்டிகொள்ள வேண்டும் என்று ஆப்கானிஸ்தானில் ஆணையிட்டிருந்தார்கள்)

இதற்கு ஒப்புகொண்டு பல யூதர்கள் பாக்தாதிலும், இஸ்ரேலிலும் வாழ்ந்திருக்கிறார்கள். பாக்தாதில் பத்தாம் நூற்றாண்டில் சுமார் 50000 யூதர்கள் இருந்ததாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன. இந்த திம்மி அடிப்படையில் பல முஸ்லீம் நாடுகளில் இரண்டாம் தர குடிமக்களாக ஜிஸியா என்ற வரி கொடுத்துகொண்டு வாழ்ந்திருக்கிறார்கள். ஆகையால் இஸ்ரேல், அரபு மேலாதிக்கத்தில் இருந்தாலும், அங்கு தொடர்ந்து யூதர்கள் வாழ்ந்தே வந்திருக்கிறார்கள்.

இஸ்ரேல்/பாலஸ்தீன பிரிவினைக்கு பின்னர்தான் யூதர்கள் மீது பாலஸ்தீனர்கள் தாக்க ஆரம்பித்தார்கள் என்பதும் கட்டுக்கதை.  1928இலேயே பாலஸ்தீனர்கள் கும்பல் கும்பலாக சென்று யூத படுகொலைகளை செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.

http://www.camera.org/index.asp?x_context=2&x_outlet=118&x_article=1691 


இந்திய முஸ்லீம்களும் இந்திய முஸ்லீம்களின் தலைவர்களும், இந்திய முஸ்லீம்களின் ஓட்டுக்களை பெற விழையும் இந்திய கட்சிகளின் தலைவர்களும் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் இஸ்ரேலுக்கு எதிராகவும் பெரிய கூக்குரல் இடுவார்கள். முஸ்லீம்களின் மரணம் என்பதை முன்னிருத்தி பச்சாத்தாபம் தேடுவார்கள்.

இவ்வாறு கூக்குரலிட்ட எவருக்கும், சிரியாவில் 150000 சுன்னி முஸ்லீம்கள் சியா முஸ்லீம்களால் படுகொலை செய்யப்பட்டது கண்ணில் படாது. டார்பரில் கருப்பின முஸ்லீம்கள் அரபு முஸ்லீம்களால் லட்சக்கணக்கில் கொல்லப்பட்டது கண்ணில் படாது. ஈராக்கின் சதாம் உசேன், குருது இன மக்கள் மீது நடத்திய வேதியல் குண்டுகள் மூலம் கொல்லப்பட்ட லட்சக்கணக்கானோர் கண்ணில்படாது. அல்குவேதா ஷியா பிரிவினர் மீது நடத்திக்கொண்டிருக்கும் இனப்பப்டுகொலை கண்ணில் படாது. பலுச்சிஸ்தான் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் குண்டுமழை பொழிந்து ஆயிரக்கணக்கில் முஸ்லீம்களை கொல்வது கண்ணில் படாது. தெற்கு சூடானில் கருப்பின முஸ்லீம்கள் மீது அரபு முஸ்லீம்கள் நடத்திய இனப்படுகொலை கண்ணில் படாது. நைஜீரியாவில் இஸ்லாமிய போகோ ஹராம் அமைப்பு ஆயிரக்கணக்கான கிறிஸ்துவர்களை கொல்வதும், பள்ளிச் சிறுமிகளை கடத்திச் சென்று பாலுறவு அடிமைகளாக்க முனைவதும் கண்ணில் படாது. புதியதாக சிரியாவிலும், ஈராக்கிலும் உருவாகியிருக்கும் காலிபேட் அங்கிருக்கும் கிறிஸ்துவர்களையும் ஷியா பிரிவினரையும் கொன்றொழிப்பதும், மசூதிகளை இடிபப்தும் கண்ணில் படாது. ஹமாஸ் இஸ்ரேலுக்குள் அனுப்பும் ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகள் கூட கண்ணில் படாது. ஆனால், பதிலுக்கு இஸ்ரேல் அனுப்பும் ராக்கெட்டுகளில் இறப்பவர்கள் மட்டுமே கண்ணில் படும்.

ஏன் அவை கண்ணில் படவில்லை என்பதற்கும், ஏன் இஸ்ரேலின் தாக்குதல் மட்டுமே கண்ணில் படுகிறது என்பதற்கும், அது மட்டுமே முஸ்லீம்களால் முக்கியமாக பார்க்கப்படுகிறது என்பதற்கும் சில காரணங்கள் உள்ளன. அவற்றை புரிந்துகொள்வது நமக்கு அவசியம்.

முதலாவது யூத எதிர்ப்பு என்பதும் யூத வெறுப்பு என்பதும், இஸ்லாமில் கோட்பாட்டளவில் ஆழமானது. குரானின் வரிகள் யூத எதிர்ப்பை பறை சாற்றுகின்றன. அதனால், யூதர்களுடன் யுத்தம் என்பது முன்னரே அறிவிக்கப்பட்ட ஒன்று. அது குரானை நியாயப்படுத்துகிறது. குரான் இந்த போரை முன்னறிவித்ததாக முஸ்லீம்களால் பேசப்பட்டு அவர்களது மதம் சரியானது என்று அவர்களாலேயே நியாயப்படுத்தப்படும்.

http://en.wikipedia.org/wiki/Islam_and_antisemitism

இரண்டாவது, இஸ்ரேலுடன் போர் என்பதும் யூதர்களுடன் போர் என்பதும், முஸ்லீம்களை ஒருங்கிணைக்கும் ஒரு வழி. யூதர்களுடன் முஸ்லீம்கள் போர் புரிவது என்பது எல்லா முஸ்லீம்களுக்கும் விடப்படும் ஒரு அறைகூவல். யூதர்கள் முஸ்லீம்களை கொல்கிறார்கள் என்ற ஒரே வரியில், அனைத்து முஸ்லீம்களையும் தங்கள் பின்னால் நிற்க வைக்க முடியும். ஆனால், சிரியாவில் ஷியாக்களால் கொல்லப்படும் சுன்னி முஸ்லீம்களை பற்றி பேசினால், அது முஸ்லீம்களிடையே ஒற்றுமை இன்மையையே காட்டும். அது மேலும் முஸ்லீம்களை பிளவு படுத்தும். ஆப்பிரிக்காவில் அரபு முஸ்லீம்களால் கொல்லப்படும் கருப்பின முஸ்லீம்களை பற்றி பேசினால், இவர்கள் பேசும் சமத்துவ இஸ்லாமில் கருப்பின முஸ்லீம்களின் நிலை வெளியே சந்தி சிரிக்கும். அப்போது, இவர்களது பிரச்சாரம் என்ன ஆவது? அல்குவேதாவும், தாலிபானும், புதியதாக உருவாகியிருக்கும் காலிபேட்டும் சியா பிரிவினரை கொல்கிறார்கள் என்று பேசுவார்களா இவர்கள்? அல்லது அதற்காக வருத்தப்படுவார்களா? இந்த போராட்டம் செய்யும் முஸ்லீம் கட்சிகள் உண்மையிலேயே சுன்னி வஹாபி பிரிவை சேர்ந்தவர்கள்தாம். ஆகையால், கொள்கையடிப்படையில் ஷியாக்களை முஸ்லீம்கள் அல்ல என்று கருதுபவர்கள். இப்படி இருக்கையில், இவர்கள் தாலிபானை எதிர்த்தும், அல்குவேதாவை எதிர்த்தும், காலிபேட்டை எதிர்த்தும் போராட்டமா நடத்தப்போகிறார்கள்?

மூன்றாவது, இஸ்ரேல் முஸ்லீம்களை தாக்குகிறது என்பதை வைத்து யூதர்களை வில்லன்களாகவும், முஸ்லீம்களை அப்பாவிகளாகவும், அடி வாங்குபவர்களாகவும், பாதிக்கப்பட்டவர்களாகவும் காட்டலாம். இதன் மூலம், இந்த இஸ்லாமிய இயக்கங்கள் நடத்திய பயங்கரவாத செயல்களை அனைத்தையும் ஊற்றி மூட வழி கண்டுபிடித்தாய்விட்டது. தமிழ்நாட்டின் அல் உம்மா அமைப்பால், கோயம்புத்தூரில் 1998இல் நடந்த குண்டுவெடிப்புகளில் 58 குழந்தைகள், முதியோர், பெண்கள் இளைஞர்கள் கொல்லப்பட்டார்கள். 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் படுகாயம் அடைந்தார்கள். இதுவரை எத்தனை முறை அந்த குண்டுவெடிப்புகளை கண்டித்து தமிழ்நாட்டில் இவர்கள் ஊர்வலம் நடத்தியிருக்கிறார்கள்? பாலஸ்தீனத்தில் இறந்த 200 பேருக்காக ஊர்வலம் போகும் இடதுசாரிகளும், முஸ்லீம் இயக்கங்களும் ஒரு தடவையாவது தமிழ்நாட்டில் கொல்லப்பட்ட அப்பாவிகளுக்காகவாவது, அல்லது அந்த வன்முறையை கண்டிக்கவாவது ஊர்வலம் போயிருக்கிறார்களா? இந்து அமைப்புகள் ஊர்வலம் போனால், தமிழ்நாட்டு அரசுகள் உடனடியாக அவற்றை தடை செய்துவிடும். ஆகையால், இந்து இயக்கங்கள் ஊர்வலம் போயிருக்கிறார்களா என்று கேட்க வேண்டாம்.(7) இன்றைக்கு எத்தனை எத்தனையோ பாலஸ்தீன குழந்தைகள் கொல்லப்பட்டதை படம்பிடித்து போட்டு பச்சாத்தாபம் தேடும் ஊடகங்கள் ஒரு முறை கூட கோயம்புத்தூரில் கொல்லப்பட்ட நிலையில் கிடந்த மக்களை காட்டவில்லை என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். அவ்வாறு படம் போடுவதை கோயம்புத்தூரின் குடும்பத்தினர்களே எதிர்த்திருப்பார்கள் என்பதும் உண்மை.

முஸ்லீம்களை அப்பாவிகளாகவும் அடிவாங்குபவர்களாகவும் இஸ்ரேலியரை குழந்தைகள் என்று கூட பார்க்காமல் கொல்லுபவர்களாகவும் காட்ட முனைவது இந்த ஊடக பிரச்சாரத்தில் எல்லை மீறுவது சாதாரணமாக செய்திகளையும் சமூக வலைத்தளங்களையும் பார்ப்பவர்கள் அனைவருக்கும் தெரிகிறது.

சிரியாவில் கொல்லப்பட்ட முஸ்லீம் குழந்தைகளை, இஸ்ரேலால் கொல்லப்பட்டவர்களாக காட்டுவதும், காலிபேட் அட்டூழியம் செய்து படம் வெளியிடுவதை இஸ்ரேல் செய்ததாக படம் வெளியிடுவதும் சமூக வலைத்தளங்களில் காணக்கிடைக்கிறது.

உதாரணங்கள்.

syria

இது 2 ஜூலை அன்று வெளிவந்த படம்

அதே படம் 10 ஜூலை அன்று இஸ்ரேல் கொன்ற பாலஸ்தீன சிறுவனாக மாறுகிறது

palestin

இது ஒரு உதாரணம் மட்டுமே. இது போன்று இரு புறங்களிலும் ஊடகப்போர் நிகழ்த்தப்படுகிறது.

ஆனால் இதில் முக்கியமாக ஈடுபடுவது ஹமாஸ்தான். அதுவும் குழந்தைகள் பெண்கள் இறப்பதை வைத்து அனுதாபம் தேடுவதையும், பெண்களையும் குழந்தைகளையும் மனிதக்கேடயங்களாக பயன்படுத்துவதையும் அது அங்கீகரிப்பது மட்டுமல்ல, அதனை ஒரு ஸ்ட்ராடஜியாகவே வைக்கிறது.

குழந்தைகளை சேர்த்து வைத்துகொண்டு அங்கிருந்து ராக்கெட்டுகளை அனுப்பும் ஹமாஸ்

ஹமாஸ் பேச்சாளர் பெண்களையும் குழந்தைகளையும் சாவுக்கு அழைக்கும் பேச்சு

இன்னொன்று..மனிதக்கேடயங்களாக சிறுவர்களையும் குழந்தைகளையும் பயன்படுத்திகொள்கிறோம் என்ற ஒப்புதல் வாக்குமூலம்.

காஸாவுக்குள் ஏன் ராக்கெட்டுகளை கொண்டுவருகிறார்கள்? ஏன் இவர்கள் படையாக சென்று இஸ்ரேலிய போர்வீரர்களுடன் போரிடக்கூடாது? யார் இவர்களுக்கு இஸ்ரேலின் மறுமுனை அளவுக்கு தாக்கும் ராக்கெட்டுகளை கொடுக்கிறார்கள்? இங்கிருந்து ராக்கெட்டுகளை விட்டு இஸ்ரேலில் எத்தனை பேரை அழித்திட முடியும்? அதுவும் இரும்பு கோட்டை (iron dome) என்ற பாதுகாப்பு வளையத்தை இஸ்ரேல் வைத்துகொண்டிருக்கும்போது இந்த ராக்கெட்டுகளின் பயன் என்ன? அப்படி இஸ்ரேலை தாக்குவதன் மூலம், இஸ்ரேலை பதிலடி அடிக்க வைத்து, அதன் மூலம் குழந்தைகளை சாகவைத்து பச்சாத்தாபம் தேடும் முயற்சியா? என்று ஒரு கேள்வியும் கேட்காமல் தி இந்து போன்ற இடதுசாரி பத்திரிக்கைகள் காஸாவிலிருந்து ராக்கெட்டுகளை விடுவதை நியாயப்படுத்துவது எதனால்?

புதிய தலைமுறை செய்தியை திரும்ப படியுங்கள். அதில் எங்கேனும் காஸா பகுதியிலிருந்து ராக்கெட்டுகளை ஹமாஸ் தான் முதலில் இஸ்ரேலுக்கு அனுப்பி தாக்குவதை ஆரம்பித்தது என்ற உண்மை இருக்கிறதா? அல்லது ஹமாஸ் ராக்கெட்டுகளை இஸ்ரேலுக்கு அனுப்புகிறது என்பதாவது இருக்கிறதா? அந்த செய்தியில் இஸ்ரேல் தாக்குவதும் ஹமாஸ் சமாதானத்துக்கு விழைவதும்தானே இருக்கிறது? ஏன் இப்படி ஒரு பக்கச்சார்பான செய்திகள்?

##

இந்த பின்னணியில் காங்கிரஸ் கட்சி, இந்த விஷயத்தை கையில் எடுத்துகொண்டு, பாராளுமன்றத்தை நடக்கவிடாமல் செய்து, முஸ்லீம்களின் ஆதரவை பெற முனைகிறது. தமிழ்நாட்டில் தமுமுக போன்ற கட்சிகள் இஸ்ரேலுக்கு எதிராக போராட்டங்களை அறிவிக்கின்றன. இவை அனைத்துமே மிகவும், cynical manipulation of the tragedy.

”1947இல் ஐநா கொடுத்த திட்டத்தை பாலஸ்தீனர்கள் ஏற்றுகொள்ளாதது மிகப்பெரிய தவறு. அப்போது ஏற்றுக் கொண்டிருந்தால், பாலஸ்தீனம் அன்றிலிருந்து ஒரு சுதந்திரமான தனிநாடாக இருந்திருக்கும்” என்று மஹ்மூத் அப்பாஸ் சில வருடங்களுக்கு முன்னால் கூறினார். நான் அப்படி கருதவில்லை. பாலஸ்தீனர்கள் ஏற்றுகொண்டிருந்து தனிநாடாக அமைத்திருந்தாலும், அது இஸ்ரேலுடன் சமாதானமாக சென்றிருக்காது. காரணம், இஸ்லாமில் இருக்கும் யூத வெறுப்பு அடிப்படை. அன்று அவர்கள் இஸ்ரேலை ஏற்றுகொள்ளாததற்கும், இன்றும் அந்த புண்ணை அவர்கள் நோண்டி நோண்டி மேலும் புண்ணாக்கிக்கொண்டிருப்பதற்கும் ஒரே ஒரு காரணம்தான். அது இஸ்லாமிய பின்னணி. ஹமாஸ் தலைவர் சமீபத்தில் சொன்னது போல, இஸ்ரேலை அழிப்பது மட்டுமே நோக்கமல்ல, ஒவ்வொரு யூதரும் கடுமையான முறையில் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்படுவதையே முஸ்லீம் தலைவர்கள் எதிர்பார்க்கிறார்கள். கடைசி யூதரும் கொல்லப்படுவதையே அவர்களது மதம் அவர்களுக்கு ஆணையிடுகிறது.

வாழ்நாளில் ஒரு முறைகூட ஒரு யூதரை இந்த பாகிஸ்தானி முஸ்லீம் பார்த்திருந்திருக்க மாட்டார். ஆனால், இவர் ஏன் யூதர்கள் அனைவரையும் கொல்ல வேண்டும் என்று கோருகிறார்? இதேதான் தமிழ்நாட்டு முஸ்லீம்களும், இந்தோனேஷிய முஸ்லீம்களும், மலேசிய முஸ்லீம்களும் பேசுவார்கள். இவ்வாறு பேசிய வீடியோக்களை நிறைய யூட்யூபில் பார்க்கலாம். 1400 ஆண்டுகளுக்கு முன்னால் யூதர்களுக்கும் அரபியர்களுக்கும் இருந்த ஒரு பகைமை,  நிறுவனப்படுத்தப்பட்டு, மத ரீதியான அங்கீகாரத்துடன், அந்த மதத்தை தேர்வு செய்பவர்கள் அனைவர் தலையிலும் ஏறி உட்கார்ந்துகொள்கிறது.

கிறிஸ்துவ மதமும், கிறிஸ்துவ மக்களும் பெருமளவு யூத வெறுப்பை விட்டுவிட்டு வந்துவிட்டார்கள். அது போல, ஒரு காலம் முஸ்லீம்களுக்கும் வரலாம். ஆனால், அது இன்றைக்கோ நாளைக்கோ வந்துவிடும் என்று நம்பும் அளவுக்கு நான் முட்டாளல்ல. ஆனால், இஸ்ரேலிய மக்களுக்கு வாழும் உரிமை இருக்கிறது, அவர்களுக்கு ஒரு சுதந்திர சுயாதீனமான ஆட்சியை தக்க வைத்துகொள்ள உரிமை இருக்கிறது என்று அரபு நாடுகளும், இஸ்லாமியரும் ஒப்புகொள்ளும் வரைக்கும் அந்த காலம் வராது. அந்த காலம் வரும் வரைக்கும், அந்த இடத்துக்கு அமைதியும் வராது.

 

(1)M. Levy-Rubin, “New evidence relating to the process of Islamization in Palestine in the Early Muslim Period – The Case of Samaria”, in: Journal of the Economic and Social History of the Orient, 43 (3), p. 257-276, 2000, Springer
(2)Michael Haag (2012) The Tragedy of the Templars: The Rise and Fall of the Crusader States. Profile Books Ltd. ISBN 978 1 84668 450 0 [3]
(3) http://en.wikipedia.org/wiki/Demographics_of_Palestine
7)http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/police-prevent-bid-to-pay-homage-to-blast-victims/article1456866.ece

Series Navigation