உங்களின் ஒருநாள்….

 

இப்படித் தொடங்குகிறது

உங்களின் ஒருநாள்…..

காலையில் கண் விழித்ததும்

போர்வையை உதறி

எழுந்து போகிறீர்கள்; உடனேயே

சுருக்கங்களின்றி மடிக்கப் பட்டுவிடும்

உங்களின் படுக்கை……!

 

துர்நாற்றத்தை சகிக்க முடியாது

ஒருபோதும் உங்களால்;

கழிவறை சுத்தமாய்

ஓடோனில் மணக்கத் தயாராக இருக்கிறது

உபயோகப் படுத்தி வெளியேறுகிறீர்கள்…..!

 

தினசரியை மேய்ந்து கொண்டிருக்கையில்

காஃபி வருகிறது உங்களைத் தேடி…..!

ஆவி பறக்கும் அடித் தொண்டையில் கசக்கும்

அற்புதமான பானம்!

அருந்தி முடித்ததும் அப்புறப் படுத்தப் படுகிறது

அவசரமாய் காலிக் கோப்பை;

ஈக்கள் மொய்க்கும் காலிக்கோப்பை

உங்களின் எதிரிலிருப்பதை ஒரு கணமும்

அனுமதிக்க முடியாது உங்களால்…….!

 

தோட்டத்தில் கொஞ்சம் உலாத்துகிறீர்கள்

மனதைக் கிளர்த்தும்

வாசல் கோலத்தை ரசித்தபடி;

வெந்நீர், சோப், துண்டு, பற்பசை எல்லாம்

தயாராக இருக்கிறது குளியலறையில்…..!

குளித்துவிட்டு வெளீயேறுகிறீர்கள்……

உங்களின் உள்ளாடையும் ஈரத்துண்டும்

உலர்த்தப் படுகிறது

கொடியில் நேர்த்தியாய்…..!

 

இஸ்திரி பண்ணிய இளஞ்சூட்டுடன்

தயாராக இருக்கிறது

உங்களின் இன்றைய உடை

கம்பீரமாய் அணிந்து வருகிறீர்கள்….!

 

காலை உணவு டேபிளில்

காத்திருக்கிறது சூடு குறையாமல்….

சாப்பிட்டதும் பிளேட்டிலேயே கை கழுவி

அவசரமாய் அலுவலகத்திற்குக் கிளம்புகிறீர்கள்

பளபளவென்று துடைத்து

வாசலில் நிறுத்தி வைக்கப் பட்டிருக்கும்

எந்திரப் புரவியிலேறி…..

 

 

மதிய உணவைக் கொறித்தபடி

பெண்ணியம் பற்றியும் – அவளின்

பாலியல் சுதந்திரம் பற்றியும்

அளவளாவுகிறீர்கள் அலுவலக நண்பர்களுடன்;

தீப்பொறி பறக்கிறது

உங்களின் உரையாடலில்…..!

 

உண்டு முடித்ததும் ஸ்பூனைக் கூட கழுவாமல்

டிபன் பாக்ஸை மூடி

பைக்குள் போட்டுக் கொள்கிறீர்கள்;

எச்சில் பாத்திரங்கள்

கழுவுவதற்காகத் திறக்கப்படும் போது

வெளியேறும் துர்நாற்றத்தை ஒருநாளும்

சுவாசித்திருக்க மாட்டீர்கள் நீங்கள்…….!

 

வேலை முடிந்து கொஞ்சம் விளையாடி விட்டு

இரவு தாமதமாகத் தான்

வீட்டிற்குத் திரும்புகிறீர்கள்…..

சூடுபடுத்தப்பட்டு

பரிமாறப் படுகிறது இரவு உணவு;

தொலைக்காட்சியில்

தோன்றியபடி உலாவுகிறீர்கள் கொஞ்ச நேரம்;

தூங்கப் போகிறீர்கள் அப்புறம்…..!

 

ஆழ்ந்த உறக்கத்தில் நீங்கள்

புரண்டு படுக்கும் போது – அப்போதுதான்

சமையலறையை ஒதுங்க வைத்து விட்டு

அலுப்புடன் படுத்திருக்கும் மனைவியை மோதி

விழித்துக் கொள்கிறது உங்களின் ஆண்மை….

மேயத் தொடங்குகிறீர்கள்; அவளின்

சுய விருப்பங்கள் பற்றிய

சுரணை எதுவுமின்றி……!

 

அடுத்த நாள் தொடங்குகிறது…..

அவசரமாய் நீங்கள்

வேலைக்குக் கிளம்பும் போது

இறைஞ்சலுடன் உங்களின் எதிரில்

வரும் மனைவி

செலவுக்குக் கொஞ்சம்

சில்லரை வேண்டுமென்கிறாள்….

 

‘வெட்டியாய் வீட்டிலிருந்து கொண்டு

கண்டபடி காசைச் செலவழிக்காதே….’ என்று

கடிந்து கொண்டு காற்றாய்

சீறிக் கிளம்புகிறீர்கள்……!

 

 

டெலி: 091 9952081538

Series Navigationமிதிலாவிலாஸ்-2வலி மிகுந்த ஓர் இரவு