உறவுப்பாலம்

சித்ரா சிவகுமார்

ஆங்காங்

ஆங்கிலேயர்களின் 100 ஆண்டுகளுக்கு மேலான ஆட்சிக்குப் பிறகு 1997இல், ஆங்காங் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது.  1996லிருந்து இங்கு வாழ்ந்து அதன் வளர்ச்சியைக் கண்கூடாகக் காணும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது.  பற்பல வளர்ச்சிப் பணிகள் நடந்த வண்ணம் இருக்கின்றன.  அதில் மிகவும் பிரம்மாண்டமான திட்டம் தான் சீனாவின் மூன்று முக்கிய நகரங்களுக்கு உறவுப்பாலம் அமைப்பது. பேச்சு வார்த்தைகளால் அல்ல.  கடல் வழி பாலம் அமைத்து, அவற்றை இணைப்பது.  ஆம்.. ஆங்காங், மக்காவ், ஜூஹாய் ஆகிய மூன்று நகரங்களையும் இணைக்கும் பெருந்திட்டம் அது.

நான் ஆங்காங் சர்வதேச நிலையத்தின் அருகே இருக்கும் குடியிருப்புப் பகுதியில் வசிக்கிறேன்.  பாலம் கட்டும் பணிகள் கடந்த இரண்டு வருடங்களாக நடந்து வருகின்றன.  குடியிருக்கும் மக்கள் சுற்றுப்புறச் சூழல் கருதி எதிர்த்து நின்ற போதும், இந்தப் பாலம் மற்ற பல நல்ல வளைவிகளை ஏற்படுத்தும் என்ற காரணத்தால், அரசாங்கம் அந்தப் பணியை ஆரம்பித்து, மிகவும் செவ்வனே செய்து வருகிறது என்றே சொல்லலாம்.

ஒரே நேரத்தில், சிறிது பெரிதென 100க்கும் மேற்பட்ட கப்பல்கள் கடலில். ஒவ்வொன்றும் பாலம் கட்டும் பணியில் ஏதாவது ஒரு வேலை செய்த வண்ணம் இருக்கின்றன.  ஆரம்பத்தில் ஒரேயொரு கப்பல் தான் பணி செய்தது.  ஆனால் இன்றோ நூற்றுக்கும் மேல்.  இன்னும் பாலத்தைக் கண்ணால் காண முடியவில்லை என்றாலும் எண்ணற்ற பணிகள் கடலுக்கடியில் இராட்சத வேகத்தில் நடந்த வண்ணம் இருப்பது மட்டும் உறுதி.

இதில் மற்றொரு சுவையான விசயம், கடலில் மண்ணையிட்டு நிரப்பி நிலப்பரப்பை உருவாக்குவது தான்.  கடல் இருந்தாற்போல் இருந்து, நிலம் ஆகிக் கொண்டு இருக்கிறது.  130 ஹேக்டேர் நிலப்பரப்பைக் கொண்ட ஒரு செயற்கைத் தீவை உருவாக்கும் நிமித்தம், இந்த வேலையும் நடந்து வருகிறது. இங்கு தான் எல்லையைக் கடக்கும் வசதிகள் நிறுவப்பட உள்ளன. பல நாடுகளில் மனிதன் நிலப்பரப்பிற்காக கடலை நிரப்பி நிலமாக ஆக்கிப் பயன்படுத்த முயல்கிறான் என்று புத்தகத்தில் படித்ததுண்டு. அதைக் கண்கூடாகக் காணும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது பெருமகிழ்ச்சியைக் கொடுக்கிறது.  மற்றொரு பக்கம் கடலை இப்படி நிலப்பரப்பாகச் செய்து, கடல் வாழ் உயிரினங்களுக்கு சங்கடங்களை ஏற்படுத்துவதில் வருத்தமும் எனக்குண்டு.

இந்தத் திட்டம் எச்.இசட்.எம்.பி (HZMB) என்று பெயரிடப்பட்டு, 2009 ஆண்டு டிசம்பர் திங்கள் 15 ஆம் தேதி, சீனத் துறைமுகப் பொறியியல் நிறுவனத்தால் (China Harbour Engineering Company Limited)  தொடங்கப்பட்டது.  2016இல் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. பாலம் 50கி.மீ நீளமானது.  சர்வதேச நகரமான சீனாவின் சிறப்புப் பகுதியாக விளங்கும் ஆங்காங், அதன் அருகே 65 கி.மீ தொலைவிலிருக்குத் மற்றொரு சீனச் சிறப்புப் பகுதி மக்காவ், மேலும் 61 கி.மீ தொலைவிலிருக்கும் தொழில் நகரமான ஜூஹாய் பகுதியை இணைக்கும் திட்டம் இது.  ஆங்காங் வந்த போது, ஆங்காங் தீவையும் கவ்லூன் தீபகர்ப நிலப்பகுதியையும் இணைக்கும் கடலடி சுரங்கப்பாதை பிரமிப்பைத் தந்தது. இத்திட்டம் நிறைவேறும் போது மற்றொரு பிரமிப்புக் காத்திருக்கிறது என்பது உறுதி.

Series Navigationமரணத் தாள்இந்திய ஆய்வியல் துறையைக் காப்பாற்ற அணிதிரள்வோம்