ஊழ்

This entry is part 9 of 20 in the series 17 டிசம்பர் 2017

எந்த நாட்டிலும், எந்த நேரத்திலும் எடுத்துக்கொள்ள வசதியாக ஒன்றரை லட்சம் அமெரிக்க டாலர்கள் தயாராக இருக்கிறது. துருக்கியின் அடனாவுக்குப் போய்வர விமான நுழைவுச்சீட்டு, விசா வந்துவிட்டது. திரும்பிவரும் சீட்டு தேவையில்லாமலே கூடப் போய்விடலாம். நாளைக் காலை அடனாவுக்குப் பயணமாக வேண்டும். தினமும் மழுங்கச் சவரம் செய்யும் முகத்தில் ஒரு மாதத் தாடி. அவர் முகம் அவருக்கே அடையாளம் தெரியவில்லை. கடவுச்சீட்டில் இருக்கும் முகம் அவருடையதுதான் என்று சொல்ல குடிநுழைவு அதிகாரியிடம் போராட வேண்டும் அந்த சிக்கந்தர். அவருக்கு என்ன வேலை தெரியுமா? மருத்துவமனைகளுக்கு குத்திவிட்டு குப்பையில் வீசும் ஊசிகளை வியாபாரம் செய்கிறவர். நேர்மையாளர். எல்லாச் செலவும் போக ஒரு நாளைக்கு 1000 ரிங்கிட்டை சட்டைப் பையில் வைத்துக் கொண்டு 5 நட்சத்திர உணவகத்தில் ஐந்தாறு பேரேடு விரும்பியதெல்லாம் சாப்பிடலாம். அவர் தலையில்தான் இப்போது விழுந்திருக்கிறது. இடி. மோனலிசா ஓவியமாய்ப் புன்னகைத்தது சிக்கந்தர் குடும்பம். அந்த ஓவியத்தில் யாரோ ஆணியில் கிறுக்கத் தொடங்கி யிருக்கிறார்கள்.
காலை மணி 10. இன்னும் சிறிது நேரத்தில் சிக்கந்தர் பயணம் செய்யும் விமானம் புறப்பட்டுவிடும். இருக்கையில் வந்தமர்ந்தார் சிக்கந்தர். உயிரோடிருக்கிறாரா இல்லையா என்று அசைத்துப் பார்க்கத் தோன்றும் நிலை. என்ன நடக்கப்போகிறது என்று நமக்கு மட்டுமல்ல, சிக்கந்தருக்கே கூடத் தெரியாது. விமானம் முன்னோக்கிப் பறக்க அவர் நினைவுகள் பின்னோக்கிப் பறக்கிறது.
சிக்கந்தருக்கு ஒரே மகன் கமால். ‘ஏ’ நிலை முடிக்கும் வரை பள்ளியில் அவனுக்குப் பிறகுதான் மற்றவர்கள். பள்ளியிலிருந்து ஒரு குழு வெளிநாடு செல்ல வேண்டுமா? தலைமை ஏற்பவன் அவன்தான்.வெளிநாட்டிலிருந்து ஒரு குழு அவன் பள்ளிக்கு வருகிறதா? வரவேற்கும் பொறுப்பு அவனுக்குத்தான். சிக்கந்தர் எப்போதாவது பள்ளிக்குச் சென்றால் எல்லாரும் அவனைப் பெருமையுடன் பார்ப்பார்கள். ஒரு அறிவு ஜீவியின் தந்தையென்று. அது ஒரு சுகமான அனுபவம் என்பார் சிக்கந்தர். ‘ஏ’ நிலை முடித்து லண்டனிலுள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் பட்டப்படிப்பில் சேர்ந்துவிட்டான் கமால். லண்டனிலும் அவனுடைய பிரிவில் அவனுக்குப் பிறகுதான் மற்ற மாணவர்கள். உண்மையிலேயே மோனலிசா ஓவியமாகத்தான் இருந்தது அந்தக் குடும்பம், இன்னும் ஒரு மாதத்தில் அவனுக்கு இறுதித் தேர்வு. விடுமுறைக்காக கோலாலம்பூர் வந்த கமாலிடம் தலைகீழ் மாற்றம். ஒரு தீபம் தலைகீழாக எரிகிறது. முகத்தில் கைப்பிடி அளவு தாடி. நெற்றியில் 50 காசு அளவில் தொழுகை அடையாளம் கறுப்பேறி இருந்தது. அவன் அறைக் கதவு எப்போதும் மூடியே இருக்கிறது. தொழுகை விரிப்பு விரித்தபடியே இருக்கிறது. கணினியில் எதைஎதையோ தேடுகிறான். பிறகு அன்னாந்து எதையோ பார்க்கிறான். ஒரு தடவை சிக்கந்தர் சொன்னார். ‘உன் வயசுக்கு தாடி தேவையில்லை கமால். எடுத்துவிடு.’ உடனே சொன்னான் கமால். ‘நான் சொர்க்கத்தை நோக்கி நடந்து கொண்டிருக்கிறேன். நீங்கள் சத்திரமாகத் தங்கியிருக்கும் இந்த உலகத்தை நினைத்துக் கொண்டும் வாழ்ந்து கொண்டும் இருக்கிறீர்கள். ‘ கேட்ட மாத்திரத்தில் இருதயம் ‘கிரைண்டர்’ போல் ஓவென்று அலறித் துடித்தது சிக்கந்தருக்கு. அடுத்துப் பேசுவதற்கே நடுக்கம் வந்துவிட்டது. உடனே ரஹீமைத் தொடர்பு கொண்டார். ரஹீமின் மகன் இப்படித்தான் மாறி பின் திருந்திவிட்டான். ரஹீம் சொன்னார். ‘அப்படியே விட்டுவிடு. லண்டனுக்குப் போகட்டும். ஏதோ ஒரு தீவிரவாதக் கும்பல் அவன் மூளையைச் சலித்துத் திருப்பிப் போட்டிருக்கிறது. இந்த நேரத்தில் நீ எது சொன்னாலும் ஆபத்து. விட்டுவிடு. தேர்வு முடியும் அடுத்த அரைமணி நேரத்தில் நாம் நாலைந்து பேர் போய் அவனைப் பொட்டலம் கட்டி தூக்கி வந்து விடுவோம். அவர்கள் திருப்பிப் போட்டதுபோல் நம்மாலும் திருப்பிப் போடமுடியுமே. அதுவரைக்கும் ஒன்றும் பேசாதே.’அனுபவ யோசனை. ஏற்றுத்தான் தீரவேண்டும்.
விடுமுறை முடிகிறது. கமால் லண்டனுக்குப் பயணமாகிறான். போய்ச் சேர்ந்ததும் ‘நலமாக வந்து சேர்ந்தேன்.’ என்ற செய்தி வரவில்லை. இரவு முழுவதும் தூங்காமல் கிடந்தது சிக்கந்தருக்கு முதல் அனுபவம். அடுத்த நாள் காலைவரை வரவில்லை. உடனே லண்டனில் கமால் தங்கியிருக்கும் விடுதிக் காப்பாளரை அழைத்தார் சிக்கந்தர். காப்பாளர் சொன்னார். ‘கமால் இங்கு வரவே இல்லையே.’ அந்த ஆணி இப்போது மோனலிசா ஓவியத்தை ஆழமாக உழுகிறது. எங்கு போய் எப்படித் தேடுவது.? ரஹீம் ஒரு முகநூல் சேதியைக் கொண்டுவந்தார். முகப் பக்கத்தில் கமாலின் படம் போட்டு இந்தச் செய்தி பதிவாகி இருந்தது. ‘நான் சொர்க்கம் நோக்கிப் போகிறேன். பெற்றோர்களே! என்னைத் தேடாதீர்கள். உங்களை நான் சொர்க்கத்தில் சந்திப்பேன்.’ ஒரு மண்புழு எப்படி நாகப்பாம்பானது. ரஹீமே ஒரு யோசனை சொன்னார். ‘மருத்துவமனையின் அவசரச் சிகிச்சைப் பிரிவில் மருத்துவ உடையுடன் உன் மனைவி மிக ஆபத்தான நிலையில் இருப்பதுபோல் ஒரு படம் எடுத்து அதே முகப்பக்கத்தில் பதிவிடுவோம்.‘ ஏற்றுக் கொண்டார் சிக்கந்தர். ஏற்பாடுகள் முடுக்கி விடப்பட்டன. பச்சை வண்ண மருத்துவமனை உடுப்பில் சிக்கந்தர் மனைவி ஓர் அவசர சிகிச்சைப் பிரிவு கட்டிலில் கிடத்தப்பட்டார். ஆளுயர ஆக்ஸிஜன் சிலிண்டர் தலைக்குப் பக்கத்தில். உடம்பு முழுதும் ECG மின் தகடுகள். மூக்கில் ஒரு ரப்பர் குழாய் செருகப்பட்டது. சுற்றுலும் நாலைந்து மருத்துவர்கள் முகமூடிகளுடன். சுற்றிலும் மானிட்டர்கள் ஏதேதோ படங்களைக் காண்பித்துக் கொண்டிருந்தன. படம் எடுக்கப்பட்டது. அதற்கு கீழே எழுதப்பட்டது. ‘மகனே! உன் அம்மாவைப் பிழைக்க வைக்க உன்னால் மட்டுமே முடியும். வந்து முகத்தைக் காட்டிவிட்டுப் போய்விடு’ அதே முகப்பக்கத்தில் பதிவிடப்பட்டது. இரண்டு மூன்று நாட்களாக வான்குடை இல்லாமல் விமானத்திலிருந்து விழுந்து கொண்டிருப்பவர் போல் இருக்கிறார் சிக்கந்தர். அந்த முகப்பக்கத்தில் கமாலிடமிருந்து பதில் வந்தது. ‘விட்டுவிடுங்கள். நான் அம்மாவை சொர்க்கத்தில் சந்தித்துக் கொள்கிறேன்.’ கேட்ட மாத்திரத்தில் சிக்கந்தர் தரையில் விழுந்து சுக்கு நூறாகத் தெறித்தது போல் ஆகிவிட்டார். ரஹீம்தான் மீண்டும் சொன்னார். ‘சிக்கந்தர் அமைதியாக இருங்கள். என் மகனுக்காக நான் என்னவெல்லாம் செய்தேனோ அதை கமாலுக்காகவும் செய்வோம். பணயமாக ஒரு லட்சம் அமெரிக்க டாலர் தயாராக இருக்கட்டும். துருக்கியில் தாரிக் என்பவன் எனக்கு உதவி செய்தான். அவனுக்குத் தேவை 2000 அமெரிக்க டாலர்தான். உடனே தாரிக்கிடம் பேசுகிறேன். அவன் பதில் கிடைத்த்தும் நீங்கள் அடனாவுக்குப் புறப்பட வேண்டும். அவன் 7 அடி உயரம். தூணுக்குப் பக்கத்தில் நின்றால் அவனும் தூண் போலவே தெரிவான். கணடுபிடிக்க சிரமமே இல்லை. அவன் மற்றவற்றைப் பார்த்துக் கொள்வான்.’ அதற்கு முன் கமாலை மீட்க ஒரு நல்ல காரணம் வேண்டும் சன்மானம் உறுதி செய்யப்பட வேண்டும். அவர்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் காரணம் ஏதும் இருக்கிறதா சிக்கந்தர்?’ இதுவரை யாருக்குமே சொல்லப்படாத ஒரு விஷயத்தை இப்போது சிக்கந்தர் சொன்னார். கமாலுக்கு வலிப்பு நோய் இருக்கிறது. அபாயகரமான சூழ்நிலைகளைக் கண்டால் அவனுக்கு வலிப்பு வரும் அதற்காக அவனிடம் ஒரு மாத்திரை இருக்கிறது. அந்த மாத்திரை அவனிடம் இருக்கிறதா என்று தெரியவில்லை ரஹீம். ‘ ‘இது சரியான காரணம். நிச்சயமாக அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள். ‘ஏ4 தாளில் கமால் படத்துடன் இப்படி எழுதுங்கள். என் மகன் கமாலுக்கு ‘வலிப்பு’ நோய் இருக்கிறது. உங்களுக்கு அவன் பயன்படமாட்டான். தயவுசெய்து என் மகனை என்னிடம் ஒப்படையுங்கள் 1000,000 அமெரிக்க டாலர் உடனே தருகிறேன். மேலும் தேவை யென்றாலும் தருகிறேன். இப்படிக்கு தந்தை சிக்கந்தார். ‘ எல்லாம் தயாராகிவிட்டது. கமால் படத்துடன் அந்தச் செய்தி அச்சிடப்பட்டு 300 பிரதிகள் தயார்.
இதோ பறந்து கொண்டிருக்கிறார் சிக்கந்தர்., இறங்கியவுடன் தாரிக்கைப் பார்க்க வேண்டும். அடுத்து என்ன என்பதை அவன்தான் முடிவு செய்ய வேண்டும். சே! இந்த விமானம் ஏன் இவ்வளவு மெதுவாகப் பறக்கிறது. ம். சீக்கிரம். சீக்கிரம். உட்காரமுடியாமல் சிக்கந்தர் நெளிந்தார். இதோ! தரை தென்படுகிறது. விமானம் இறங்கப் போகிறது. எல்லாம் விடுவிடுவென முடிகிறது. வெளியேறினார் சிக்கந்தர்.எதிரே 7 அடியில் நிற்கிறான் தாரிக். அருகே சென்று ‘நான் சிக்கந்தர்’ என்றார். தாரிக் கை கொடுத்து அணைத்து சலாம் சொன்னான். 7 அடி உயரம் நெஞ்சோடு எப்படி அணைப்பது. சிக்கந்தரின் தலைக்கு மேல்தான் அவனுக்கு நெஞ்சே ஆரம்பமாகிறது. இருவரும் வெளியேறினார்கள். சிக்கந்தர் தங்கவேண்டிய இடம் நோக்கி கார் விரைந்தது. தாரிக் சொன்னான். ‘இறங்கியதும் 2000 யு எஸ் கொடுத்துவிடவேண்டும். நாளைக்காலை 10 மணிக்கு வருவேன்.தயாராக இரு’
‘எங்கே போக வேண்டும்?’
‘எதுவுமே கேட்கக்கூடாது என்று ரஹீம் சொல்லவில்லையா? நான் சொல்வதை மட்டும் செய்..’ அனைத்தையும் உள்ளிழுத்துக் கொண்டு ஆமை போல் அசையாமல் கிடந்தார் சிக்கந்தர். 2000 யு எஸ் சுடச்சுட தாரிக்கின் கைக்கு மாறியது. சிக்கந்தர் இறங்கிக் கொண்டார். தாரிக் சென்றுவிட்டான்.
அடுத்த நாள். சரியாக 10 மணி. தாரிக் வந்துவிட்டான். சிக்கந்தர் ஏறிக்கொண்டார். கார் பறந்தது. தாரிக் சொன்னான். ‘இந்த்த் தொலைபேசியை வைத்துக் கொள். இதில் என் நம்பரை மட்டும்தான் சேமித்திருக்கிறேன். வேறு எந்த எண்ணும் இருக்காது. என்னிடம் மட்டும்தான் பேசவேண்டும். நாம் போய்ச்சேர 5 மணி நேரம் ஆகலாம்.’ ஒரு மலையை உடைத்து சல்லி சல்லியாகப் பரப்பிப் போட்டதுபோல் இருக்கிறது இரண்டு பக்கமும். இடை இடையே கோரைப் புற்கள். சில ஆடுகள் மேய்கின்றன. அவை எங்கிருந்து வந்தன? எங்கே போகும்? புரியவில்லை. சில மனிதர்கள் கணுக்கால்வரை ஜிப்பாவுடனும், தலையில் சிவப்புத் துண்டு தலைப்பாகையுடனும் கைகளில், தோளில், தலையில் எதைஎதையோ தூக்கிக் கொண்டு போகிறார்கள். எங்கே எதை வாங்கி எங்கே போகிறார்கள்? புள்ளியாகச் சில வீடுகள் தூரத்தில் தெரிகின்றன. கார் தொடர்கிறது. மக்கள் கொஞ்சம் கூட்டமாகத் தெரியத் தொடங்குகிறார்கள். சில வீடுகளும் அருகருகே தெரிகிறது. நாம் வரவேண்டிய இடம் இந்த இடமாகத்தான் இருக்க வேண்டும். 5 மணிநேரம் ஆகிவிட்டதே. சிக்கந்தர் அப்படி நினைக்கும்போதே கார் மெதுவானது. ஒரு தெருவுக்குள் ஓடி சந்துக்குள் புகுந்து ஓரம் கட்டி நின்றது. மொத்தக் காரும் புளுதி. இருவரும் இறங்கினார்கள். ஒரு குட்டையான வீடு. சுவரெல்லாம் காரை பெயர்ந்திருந்தது. வாசற்படியில் 80 வயதுக் கிழவர் அமரந்திருந்தார். அவர்தான் தாரிக்கின் அப்பாவாக இருக்க வேண்டும். பெண்கள் வாடையே இல்லை. நாக்குபோல் ஒரு ரொட்டியும் , ஒரு குவளைப் பாலும் பெரியவர் தந்தார். ‘ இங்கேயே இரு’ யாராவது வந்தால் ஒளிந்துகொள். நான் வரும்வரை இந்த இடத்தைவிட்டு நகராதே.’ தாரிக் வெளியேறினான். யாரையோ அவன் சந்திக்க வேண்டும். அல்லது யாருடனாவது பேசவேண்டும். அதற்குத்தான் தாரிக் போகிறான். அவன் பேசுவது யாருக்கும் தெரியக்கூடாது என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். பெரியவர் அருகே வந்து கையைப் பிடித்தார். லேசான நடுக்கம் இருந்தது. அது சிக்கந்தரின் நடுக்கமா? பெரியவரின் நடுக்கமா? கைகளால் தலையைத் தடவி, ‘தன்றாக இரு. எல்லாம் நல்லபடியாக நடக்கும்’ இரு கைகளையும் உயர்த்தி துஆ கேட்டார். சிக்கந்தர் கேவிக்கேவி அழுகிறார். பெரியவர் அவரை அணைத்து சமாதானப் படுத்துகிறார். ஒரு மணிநேரம் கழிந்தது. இதோ! தாரிக் வருகிறான். தாரிக் சொன்னான். ‘பேச வேண்டியவனிடம் பேசிவிட்டேன். நீ கொண்டு வந்திருக்கும் தாள்களை அவனிடம் சேர்க்க வேண்டும். நான் போகிறேன். அடுத்து என்ன என்பதைச் சொல்வேன். என்னிடமிருந்து அழைப்பு வந்தால் தாமதிக்காமல் உடனே தொல்பேசியை எடுத்துவிடு.நான் சொல்வதைத் தவிர வேறு எதுவும் செய்யாதே.’ 200 தாள்களை அள்ளிக்கொண்டு அதே காரில் தாரிக் புறப்பட்டான். ஆள் நடமாட்டம் அதிகமாக இல்லை. அந்த வீடு இருப்பது துருக்கியின் எல்லையாகத்தான் இருக்க வேண்டும். இரவு முழுவதும் அந்தத் தொல்பேசி அவன் கைகளில் அவன் கண்கள் அதன் திரையில். அதிர்வை உணர வேண்டும் அல்லது எண் மின்னுவதைப் பார்க்க வேண்டும். உடனே எடுக்க வேண்டும். மரண அவஸ்தை என்பது இதுதானோ? அவன் அழைப்பைத் தவற விட்டுவிடக் கூடாது என்ற பயத்திலேயே அவர் பிதுங்கிக் கொண்டிருந்தார்.
அடுத்த நாள் அதிகாலை தாரிக்கின் எண் மின்னியது. தாரிக் சொன்னான் ‘ உடனே அங்கிருந்து போய்விடு. திரும்பிப் பார்க்காதே. ஓடாதே. சுற்றுமுற்றும் பார்க்காதே. 5 கிலோ மீட்டர் நீ போய்விடவேண்டும். அதற்குப் பிறகு எப்படியாவது நீ தங்குமிடத்திற்குச் சென்று விடு. ஒரு படை அங்கே வர இருக்கிறது அவர் களிடம் மாட்டிக் கொண்டால் நீ போர்க் கைதியாகிவிடுவாய். உடனே செல்.’ தொலைபேசி வைக்கப்பட்டது. பெரியவரும் சிக்கந்தரை விரட்டினார். உடனே வெளியேறினார் சிக்கந்தர். வேகவேகமாக நடக்கிறார் 5 கிலோமீட்டர் தாண்டியிருக்கலாம். கமால் கிடைத்துவிடுவான் என்ற நம்பிக்கை மட்டும் இல்லாதிருந்தால் எப்போதோ அவர் மடிந்திருப்பார். நடையில் கொஞ்சம் வேகம் குறைந்தது. ஒரு கார் வருகிறது. உள்ளே அப்பா, அம்மா, மகள். ‘யாரோ பாவம். அவர் அடானா போகிறவராகத்தான்இருக்க வேண்டும். உதவி செய்வோம்.’ அம்மாவும் மகளும் முகமூடியை சரிசெய்து மூக்கை மறைத்துக் கொண்டார்கள். ‘ஆம். பாவம் . உதவி செய்வோம்.’ அம்மாவும் சொன்னார். மகள் கத்தினாள். ‘அவன் உடம்பில் குண்டு இருக்கலாம். காரை விரட்டுங்கள். ‘ நிற்பதுபோல் வந்த கார் திடீரென்று புளுதியைக் கிளப்பிக் கொண்டு பறந்தது. பின்னாலேயே இன்னொரு கார். துருக்கி ராணுவத்தைச் சேர்ந்த ஒரு ஜீப். அதன் மூக்கில் துருக்கிக் கொடி பறக்கிறது. அருகே வந்து நின்றது. நாலைந்து பேர் ராணுவ உடையில். ஒருவன் மட்டும் முதலில் இறங்கினான். அவன் கையில் உலோகம் கண்டுபிடிக்கும் பொறி. நீளமாக முனை வட்டமாக இருந்தது. அவன் நெருங்கினான். ‘பயப்படும்படியாக எதுவும் இல்லை. வரலாம். ‘ மிடுக்காக ஒருவர் மட்டும் சிக்கந்தரிடம் வந்தார்
‘நீ யார்? எங்கிருந்து வருகிறாய்?
சிக்கந்நர் தன் கடவுச் சீட்டைக் காட்டினார்.
‘எதற்காக வந்தாய்?’
கமால் பற்றிய சேதியுடனான அந்த ஏ4 தாளை நீட்டினார்.
‘உனக்கு அறிவிருக்கிறதா? அவனாக வந்தவன் எப்படித் திரும்புவான்.
இரண்டு கைகளையும் உயர்த்தி ‘அல்லாஹ, யா அல்லாஹ்’ என்று கதறினார் சிக்கந்தர். ஒரு அதிகாரி அருகில் வந்து தோளைத் தட்டி சமாதானப்படுத்தினார்.’ நீ மலேசியாவைச் சேர்ந்தவன். எங்களின் நட்பு நாடு. எங்களால் முடிந்ததைச் செய்கிறோம். உன் மகனைக் கண்டுபிடிக்க ஏதேனும் உபாயம் உன்னிடம் இருக்கிறதா?’ சிக்கந்தர் அந்த முகப்பக்க முகவரியைக் கொடுத்தார். ‘சரி. வண்டியில் ஏறு. உன்னால் எங்களுக்கு ஆபத்தில்லை. முடிந்த உதவியைச் செய்கிறோம். ‘ லேசான தென்றல் சிக்கந்தரின் கண்ணிமைகளைத் தாலாட்டிவிட்டுச் சென்றது. நாலைந்து நாட்களுக்குப் பின் ஒரு நல்ல செய்தியை இப்போதுதான் சிக்கந்தர் கேட்கிறார். வண்டி விரைந்தது. ஒரு ராணுவ அலுவலகத்தின் முன் நின்றது. காவலுக்கு இரண்டு பேர் வெளியே. வேறு நடமாட்டங்கள் இல்லை. உள்ளே நிறையப் பேர். மயான அமைதி. ஊமைப் பள்ளிக்கூடம்போல் இருந்தது. அந்தப் பெரிய அதிகாரி சிக்கந்தரை தன் அறைக்குக் கூட்டிப் போனார். அந்த முகப்புத்தக முகவரியைச் சொல் . வேறு ஏதாவது செய்தி இருக்கலாம் . தேடிப்பார்ப்போம். பிறகு நீ தங்குமிடத்திற்குப் போகலாம். உன் மகன் எப்படியாவது கிடைக்கவேண்டும். நாங்களும் உனக்காகத் துஆ செய்கிறோம்.
கணினியில் அந்த முகப்புத்தகம் திறக்கப்படுகிறது. சில இறுதி ஊர்வலங்கள். சில புதிதாகச் சேர்ந்த முகங்கள். புதிதாகச் சேர்ந்த சில பேரின் செய்திகள். கூட்டமாகத் தொழுகைகள், பிரார்த்தனைகள் என்று படங்கள் விரிகிறது. அட! உன் மகன் படம் வந்திருக்கிறது. சிக்கந்தர் கண்களை அகலத் திறந்தார். கணினித் திரை அந்த அதிகாரியைப் பார்த்தபடி இருக்கிறது. செய்தியைப் படித்துவிட்டு புருவத்தைச் சுருக்கினார் அவர் . பிறகு கணினித் திரையை சிக்கந்தர் பக்கம் திருப்புகிறார்.
‘நம் புதிய போராளி அல்லாஹ்வின் சொர்க்கபுரிக்குச் சென்றுவிட்டார். நல்லபடியாக அவர் அனுப்பி வைக்கப்பட்டார். அதற்குக் கீழே மொத்த உடலையும் வெள்ளைத்துணியால் மூடி கமாலின் முகத்தை மட்டும் காண்பித்திருந்தனர்.
‘மகனே, நா பெத்த மகனே, ஐயா, ஐயா, அல்லா………… ’ இரண்டு கைகளையும் அப்படியே மேலே தூக்கியபடி பின்னால் சாய்ந்தார். அந்த நாற்காலியும் சேர்ந்து சாய பின்னால் விழுந்தார் சிக்கந்தர். அதற்குப் பிறகு அந்த உடம்பில் அசைவே இல்லை. அந்த மோனலிசா ஓவியத்தைக் கிறுக்கிய ஆணி அந்த புன்னகைக்கும் உதட்டைக் குத்திக் கிழிக்கிறது.
யூசுப் ராவுத்தர் ரஜித்

Series Navigationகடைசி கடுதாசிஎன்னோடு வாழ வந்த வனிதை மூலம் : பீட்டில்ஸ் பாடகர்
author

யூசுப் ராவுத்தர் ரஜித்

Similar Posts

Comments

  1. Avatar
    govarthana says:

    சிக்கந்தருக்கு மட்டும் அல்ல மொத்த உலகத்தின் சிக்கலின் பதிவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *