என்னின் இரண்டாமவன்

Spread the love

எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ

சில் வண்டுகள் ரீங்காரமிடும் ஓர்
இரவும் பகலுமற்ற இடைத்தருணத்தில்
அவன் வருகையை தவிர்க்கவியல்வதில்லை
மெல்லிய புகை தன் சூழ மிதக் குளிரினூடே
ஏதோ ஒன்றைப் பகர நினைப்பதாய் அமர்வான் என்னருகாய்!
மிக வலியதாய் பாதித்தலுக்குட்பட்ட அந்நாளுக்கான
சில அவசியச் செய்திகளை அசைபோட்டுக் கிடப்பான்
ஒன்றுமற்றுப் போன விஷயமொன்றிற்காய்
யோசனையிட மெனக்கெடுவதாய் நடிப்பான்
எப்படி இருந்திருக்கக் கூடாதென்றும்
எப்படியெல்லாம் இருந்திருக்க வேண்டுமென்றும்
அறிவொழுகும் தன் தலை வழியாய்
புத்தி சொல்லிக் கிடப்பான் சில கணங்கள் வரை
என்னாடை உடுத்திக் கொண்டும்
என்னுடலை ஏற்றுக்கொண்டும்
என்னின் மொத்தமென்று சொல்லியபடியலையும் அவன்
போதை களைந்து மீள்கையில்
ஒளிந்து போகிறான் ஒவ்வொரு முறையும்

Series Navigationபாரதிக்கு இணையதளம்இரு வேறு நகரங்களின் கதை