என் கைரேகை படிந்த கல். தகிதா பதிப்பகத்தின் மிகச்சிறந்த கவிதைத் தொகுப்பு

தகிதா பதிப்பகத்தின் மிகச்சிறந்த கவிதைத் தொகுப்பு இது. யாழி என்ற கிரிதரனின் எழுத்துக்களைப் படித்து வியப்படைந்து போனேன். மிகச் சில வரிகளில் பெரும் அர்த்தங்கள் செறிந்து மிக அருமையாய் இருந்தது. நல்ல நூல்களை அடையாள படுத்திய தகிதாவுக்கும் நன்றிகள். விலை ரூபாய் 50.

விகடன்., கல்கி., வாரமலர்., புதிய ழ , வடக்குவாசல் போன்றவற்றில் வெளிவந்துள்ளன இக்கவிதைகள்.

மிக அதிகமாக சின்னஞ்சிறு கவிதைகளில் என்னை ஈர்த்த நூல் இது எனலாம். எல்லா இடங்களிலும் குரைப்பொலிகளோடு இருப்பவற்றோடான சமரசம் செய்துகொள்வதில் தொடங்கும் ஆச்சர்யம் நூல் முழுமைக்கும் வியாபித்தது. கலைக்கப்படாத வீடு சிந்தனையைத் தூண்டியது. எதற்கு சம்பாதிக்கிறோம் என.

சிபாரிசு என்னை மிகவும் கவர்ந்தது அதன் எளிமையான அர்த்தத்தால். எவனோ தொரட்டி பிடித்து என் வாய்ப்பைப் பறித்டுச் செல்வது போல உணர்ந்தேன். தீண்டாமை பற்றிய தீவிரமான கவிதைகள் சிலவும் உண்டு. வர்ணமும்., சந்தர்ப்பவாதமும்., பஞ்சபூதங்களும் சில.

வர்ணங்களுக்காக
தன் வக்கிரச் சுவடுகளைப்
பதிய வைத்தபடி
எரிகின்றது வேள்வித்தீ.

கருப்புக் காய்கள் இரண்டாம் நகர்த்தலுக்கே தள்ளிவைக்கபடுதலும.. இன்னுமா இதெல்லாம் என வருந்த வைக்கிறது. அதே சமயம் திணிப்பை எதிர்த்துக் கடிக்கும் செருப்புக் கவிதை பலே.

காக்கையி்ன் கூட்டை சங்கீதக்குயில்கள் பயன்படுத்துவது பற்றி நல்ல சாடல். என்றும் வலியோன் ., தந்திரமிக்கவன் அடுத்தவனை ஏய்த்துப் பிழைப்பதான உருவம் கிடைக்கிறது இக்கவிதையில்.

கடவுளையே சாத்தானாக்குவது கவிஞனுக்கு வசப்படுமோ.. உண்மைதான். தோற்ற சாத்தானுக்கு பதிலாக கடவுளோடு சமரிட்டால் கடவுளே சாத்தானாகிறார். ஆண்டானே சூதுக்கு வசப்படுதல் இருக்கலாம். ரகசியங்களை வெளியிடும் நண்பர்களின் துரோகம்வலித்தது.

பலிகளுக்குப் பின் தாமதமாய் வரும் சமாதானம் வெண்புறாக்களாய் உருவகப்படுத்தப்பட்ட விதம்.. வதம்.

அவன் இவன் அடிக்கடி நினைவோட்டத்தில் சிக்கி என் மனரேகை படிந்த கவிதை..

அவனைப்பற்றிய
அபிப்ராய பேதங்களை
அடுக்கத் தொடங்கினேன்
இவனிடம்.
சற்றும்
எதிர்பார்க்காத
படி
இவன்
அவனாயிருந்தான்.

என எண்ணவோட்டத்தின் மாற்றத்தை படம் பிடித்தது துல்லியம். யுத்தத்தில் ஒற்றைச் சொல்லைக் கேடயமாக்கவா ., வாளாக்கவா.. என கவிதைகள் பல முன்னிருப்பவரிடம் கேட்பது போலும் நடந்தது பகிர்வது போலும் உள்ளன.

ஏழையின்., அந்தகனின்., பிச்சைகாரனின். ரோட்டோர ஓவியனின் காதுகள் அலுமினியத்தட்டில் விழும் காசுச் சத்தத்துக்காக பசித்திருப்பதுமான கவிதைகள் தவிக்க வைத்தன..

குளத்தில் கல்லெறிந்து உடைந்த நிலாவும். பானைச் சில்லாய் கிணற்றுள் பயணப்படுவதும்., ரேணுகையின் உலோகக்குடமும்., நாய்க்கு உணவள்ளி வைக்கும் பிச்சைக்காரியும்., அழகு.

பருவமும்., ஒப்பனையும் பொறிக்கும் வாய்ப்பற்ற முட்டையுடைய பறவை விட்டுச் சென்ற இறகும் ., அற்றகுளமும். சாதிகளால் ஆன தேசமும் சிற்றிலும் கொஞ்சம் அதிர வைத்த கவிதைகள். தாகம் என்னுடைய தாகத்துக்காக நான் சேமிப்பதை அடுத்தவர் எடுத்துச் செல்வதும் ., நான் நானாக இருப்பதும் ., காதல் ஏக்கமும்., கசிய வைத்தது.

தூக்கத்தின் வண்ணம்
நிறம் இழக்கிறது
ஒரு திரியின் நுனியில்
கழுவேற்றப்படுகிறது
இருள்..

இருளைக் கழுவேற்றும் இந்தக் கவிதை ரொம்ப வித்யாசம். யாழியின் கைரேகை படிந்த கற்களை என் கைகளில் வைத்திருந்த கொஞ்ச நேரத்தில் என் கையிலும் ரேகைகளைப் படிய வைத்த கற்கள் இவை.. கவிதைகள் இவை..

டாக்டர் அப்துல்கலாம் வடக்கு வாசலில் குறிப்பிட்ட இவர் கவிதையை முடிவில் குறிப்பிடுகிறேன்.

நேற்றைத் தாங்கிய
குறிப்புகளில்
இன்று
எழுதிய பின்னும்
தெரி்யாத நாளைக்கே
மிச்சமாய்
நிறைய பக்கங்கள்..

தொடரட்டும் .. அந்தப் பக்கங்களிலும் உங்கள் கைரேகை படிந்த கவிதைகள்.. வாழ்த்துக்கள் யாழி. அருமையான தொகுதியைக் கொடுத்தமைக்கு.. தகிதாவுக்கும் மணிவண்ணனுக்கும் கூட.

Series Navigationபிரயாண இலக்கியம் – தி ஜானகிராமனும் மற்றோரும் – இரண்டுமுற்றுபெறாத கவிதை