ஏக்கங்களுக்கு உயிருண்டு

This entry is part 6 of 13 in the series 22 ஜனவரி 2017

சான்ஃபிரான்ஸிஸ்கோ விமான நிலையத்தில் நான் இறங்கிய போது இரவு மணி 8. கிட்டத்தட்ட 24 மணிநேரம் பறந்து பூமியின் சுற்றளவில் மூன்றில் ஒரு பகுதியைக் கடந்திருக்கிறேன். கழிந்து போன ஒரு நொடி மீண்டும் கிடைக்காதாம். கடிகாரம் பின்னோக்கி ஓடாதாம். யார் சொன்னது? என் கடிகாரத்தை 16 மணிநேரம் பின்னோக்கித் திருப்பிக் கொண்டேன். கனமான கம்பளிச் சட்டையை ஜாக்கெட் என்று சொல்கிறார்கள். கம்பளித் தொப்பி, தேவையானால் கையுரை. குளிரை எதிர்த்துப் போராடவே நேரம் சரியாக இருக்கிறது. இவர்கள் வாழ்க்கைப் போராட்டத்தையும் எப்படித்தான் எதிர்கொள்கிறார்களோ? ஆச்சரியப் பட்டேன். சுங்கம் தாண்டி வெளியேறுகிறேன். பச்சைத் திராட்சையை அள்ளி இறைத்ததுபோல் எங்கும் பளீரென்ற அமெரிக்க முகங்கள். ஆங்காங்கே கருப்புத் திராட்சை போல் கருப்பின மக்கள். இசையோடு அவர்கள் பேசும் ஆங்கிலம் புரிவது கடினம்தான். எனக்கு. உங்களுக்கு எப்படியோ? வெளியே வந்து என் மகள் முகத்தைத் தேடுகிறேன். எங்கிருந்தோ ‘அத்தா’ என்று கத்திக்கொண்டு என் கழுத்தில் கைகளைப் பின்னி இரு கால்களையும் என் முதுகுக்குப் பின்னால் பின்னிக் கொண்டார். அப்போது என் மகள் தூக்கி எறிந்த கைத் தொலைபேசியை எடுத்து வந்த ஒரு அமெரிக்கப் பெண் என் மகளிடம் கொடுத்த போதுதான் என் மகளை நான் சுமந்து கொண்டிருக்கிறேன் என்பதை நான் உணர்கிறேன். உதயத்திற்காகக் காத்திருக்கும் மக்களிடையே நெருப்புப் பந்தாகக் கிளம்பும் கன்னியாகுமரிச் சூரியனை ஆர்வத்தோடு பார்ப்பதுபோல் 5 ஆண்டுகளுக்குப் பிறகு என் மகளைப் பார்க்கிறேன். அடுத்த சில நிமிடங்களில் காரை அடைந்துவிட்டோம்.
இதோ வீட்டுக்குப் போய்க் கொண்டிருக்கிறோம். சான்ஃபிரான்ஸிஸ்கோவில் டப்ளின் நகரில் இருக்கிறது வீடு. சாலைகளையும் சோலைகளையும் கடந்து போய்க் கொண்டிருக்கிறது கார். ஆழ்கடலில் நீர்மூழ்கிக் கப்பலிலா பயணிக்கிறேன்? விளக்குகளின் ஒளியில் விளக்கு மட்டும்தான் தெரிகிறது. அந்த ஒளி வேறு எங்கும் பரவவில்லையா? காரின் முன் விளக்கு 20 அடி தூரத்தைக் காட்டுகிறது. வானத்தை எட்டிப் பார்த்தேன். நட்சத்திரங்கள் ஒளிந்துகொண்டன. இரவுச் சிங்கைக்கும் இந்த ஊருக்கும்தான் எத்தனை வித்தியாசம்? மொத்தமும் இருட்டாகவே தெரிகிறது. குளிர் வெளிச்சத்தைத் தின்றுவிடுகிறது என்று நினைக்கிறேன். வீடு போய்ச் சேர்ந்தோம். காரும் சரி வீடும் சரி சூழ்நிலையிலிருந்து துண்டிக்கப்பட்டுத்தான் இருக்கிறது. வெளியே 5 டிகிரி குளிர். காருக்குள்ளேயும் வீட்டுக்குள்ளேயும் சிங்கையின் இதமான வெப்பம். சாளரங்கள் வழியே பார்க்கலாம். திறக்க முடியாது. அல்லது திறக்கக் கூடாது. கதவைத் திறந்தால் உடனே மூடிவிடவேண்டும். மொத்த வீடும் வெப்பக் கட்டுப்பாட்டில்.
இரவு நன்றாகத் தூங்கினேன். அடுத்த நாள் எழுந்தபோது மகள் மருமகன் வேலைக்குப் போய்விட்டார்கள். பேரன் பேத்தி பள்ளிக்கூடம் போய்விட்டார்கள். சாப்பாட்டு மேசையில் ஒரு தட்டில் இரண்டு துண்டு ரொட்டி அப்படியே இருக்கிறது. இரண்டு மூன்று குவளைகளில் பாதி குடித்த மிகுதிப் பால். ஒரு கோப்பையில் ஒரு துண்டு கோழி இறைச்சியுடன் கறி. ரொட்டித்துண்டுகளுக்கு தடவிக் கொள்ளும் ஜாம்கள் வெண்ணெய்கள் திறந்தபடி. ஒரு கிண்ணத்தில் சீரியல் ஊறிய பால். எல்லாம் திறந்தபடியே . அப்படியே மாலை வந்து அதே சாப்பாட்டைத் தொடர்ந்து கொள்ளலாம். எதையும் மூடிவைக்கத் தேவையே இல்லை. ஈ, கொசு, கரப்பான், பல்லி எதையுமே பார்க்கமுடியாது. மோல்ட் என்று ஒரு வகைப் பூச்சிகள் சாளர விளிம்புகளில் இருக்கும். அதற்குப் பறக்கவோ நகரவோ தெரியாது. மாசுகள் அண்டாத சுத்தமான காற்று. ஏன் மூடிவைக்க வேண்டும். நான் எழுந்தபோது காலை மணி 10. குளிரை எதிர்க்க என்னைத் தயார்ப் படுத்திக் கொண்டு வீட்டுக்கு வெளியே வருகிறேன். பக்கத்துக்கு 15 வீடுகள். மொத்தம் 30 வீடுகள் மட்டுமே உள்ள விசாலமான தெரு. தெருவில் நடக்கிறேன். ஆளில்லாத் தீவுக்குள் வந்துவிட்டதுபோன்ற உணர்வு. முகங்களையே பார்க்க முடியவில்லை. எப்போதாவது ஒரு கார் கடந்துபோகிறது. அல்லது எதிரே வருகிறது. அந்த தெருவைத் தாண்டினால் ஒரு பெரிய பள்ளத்தாக்கு. இறங்கி ஏறினால் 10 கிலோ மீட்டர் இருக்கலாம். பள்ளத்தாக்கைத் தாண்டி மலைகள். அதன் மேல் மேயும் மாடுகள் பூனைக் குட்டி போல் தெரிகிறது. எல்லா இடத்திலும் அளவாக வெட்டப்பட்ட பசும் புல் கண்களை நலம் விசாரிக்கிறது. அது வெட்டப்பட்டதா? அல்லது இயற்கையிலேயே அப்படித்தானா? பள்ளத்தாக்குக்குப் பக்கவாட்டில் வெகு தூரத்தில் ஒரு ஆறு நகர்கிறது.ஆற்றின் அடுத்த கரையில் ஒரு புதிய ஊர் தொடங்குகிறது. வாழ்வதற்குச் சிறந்த இடமாக 7 இடங்கள் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறதாம். அந்த ஊர் மூன்றாவது இடத்தில் இருக்கிறதாம். அந்த ஊரைப் பார்க்க வேண்டும் என்று மகளிடம் கேட்டுக் கொண்டேன்.
மாலை மணி 3. ஓல்ட் நேவி என்ற கடைத் தொகுதிக்குச் செல்கிறோம். நமக்கு இங்கே முஸ்தபா மாதிரி அமெரிக்க இந்தியர்களுக்கு இந்த ஓல்ட் நேவி. சில டீ சட்டைகள், பேண்டுகள் வாங்கினோம். 69 டாலர் வந்தது. 100 டாலரை நீட்டினேன். அந்தப் பெண் உடனே தொலைபேசியில் மேனேஜரை அழைத்தார். அந்த ஆள் ஓடோடி வந்து அந்த 100 டாலரை வாங்கி அதன்மேல் ஒரு மாவைத் தடவி ஒரு விளக்கொளியில் ஆராய்ந்தார். ‘சரி. வாங்கிக் கொள்’ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். அங்கு யாரும் பணத்தைப் பயன்படுத்தி நான் பார்க்கவே இல்லை. அட்டையில்தான் காசு கொடுக்க வேண்டும். சம்பளம் நேரடியாக வங்கிக் கணக்குக்குப் போய்விடும். கணக்கிலிருந்து அட்டை வழியாகக் கடைகளுக்குப் போகும். கடையிலிருந்து அட்டை வழியாக மீண்டும் வங்கிக்குச் பயணித்துவிடும். யாரிடமும் காசைப் பார்க்க முடியாது. 10,20 டாலர்கள் வேண்டுமானால் சிலரிடம் இருக்கலாம். சில சாலைக் கட்டணங்களை ரொக்கமாகக் கட்டவேண்டி இருப்பதால். நான் கொண்டு சென்ற காசை என் மகள் ஆச்சரியத்தோடு பார்த்தார். ‘அடடா! இதுதான் 100 டாலரா? எவ்வளவு நாளாச்சு பார்த்து?’ நீங்கள் யாருக்காவது 1000 டாலர் கொடுத்தால் அதை அவர் அங்கு செலவு செய்ய முடியாது.அப்படி டாலரைச் செலவு செய்தால் அந்தப் பணம் அவர்கள் வங்கிக் கணக்கிலிருந்து ஏடிஎம்மில் எடுக்கப்பட்டிருக்கிறதா என்று குடைவார்கள். வரிகட்டாத பணம் எவரிடத்திலும் காணமுடியாது. அமெரிக்க நாட்டின் செல்வாக்குக்கு அர்த்தம் புரிந்தது. ஒரு சக்கர வண்டி வாழ்க்கை அங்கு சாத்தியமே இல்லை. இரு சக்கர வாழ்க்கைதான். இருவரும் சம்பாதிக்காமல் வாழ்க்கை வண்டி திணறும். வீட்டுக்கு குறைந்தது 2 கார்கள். ஒரு கடைத் தொகுதிக்கு முன் 1000 கார்கள் சர்வ சாதாரணமாக நிறுத்தப் பட்டிருக்கும். கடைத் தொகுதிக்குள் சென்றால் மக்கள் கூட்டம் ‘உய்’ என்று மொய்த்துக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம். அட! மக்கள் இங்குதான் இருக்கிறார்களா? என்னுடைய மேக்3 ரேஸரில் உள்ள மூன்றடுக்கு பிளேடு தொலைந்துவிட்டது. ஒரு பிளேடு வாங்கவேண்டுமென்று மகளிடம் சொன்னேன். ‘காஸ்கோ’ என்ற கடைத் தொகுதிக்கு என்னை அழைத்துச் சென்றார். அந்தக் கடைத் தொகுதி சுமார் 20 ஏக்கர் இருக்கலாம். இரண்டடுக்கு மூன்றடுக்கு மின்தூக்கி எல்லாம் மறந்துவிடுங்கள். மொத்தக் கடைத் தொகுதியும் தரையிலேயே விரிந்து கிடக்கிறது. காஸ்கோவில் உறுப்பினர்களாக இருந்தால் மட்டுமே அந்தக் கடைத் தொகுதிக்குள் நுழைய முடியும். ஒரே ஒரு பிளேடுதான் கேட்டேன். 16 பிளேடுடன் ரேஸரும் சேர்த்து A4 அளவில் 35 டாலருக்கு என் மகள் வாங்கினார். அந்த பிளேடுகள் ஆயுள் முழுக்க எனக்குப் போதும். அவ்வளவு எனக்குத் தேவையில்லையே. எதையுமே சிறிதாகவோ, கொஞ்சமாகவோ நீங்கள் வாங்கவே முடியாது. ஒரு க்ராக் காலணி கேட்டேன். ‘அவுட்லுக் மால்’ என்ற கடைத் தொகுதிக்குச் சொன்றோம். ஒரு காலணி 65 டாலர். இரண்டு 120 டாலர். இரண்டு வாங்கினால் மூன்றாவது இனாம். எனக்கு மட்டும் வாங்கப் போய் என் மகளுக்கு, என் பேத்திக்கென்று 3 காலணியோடு வீட்டுக்கு வந்தோம். ஒரு நர்சரி மாணவிக்கு ஒரு தொலைபேசி, ஒரு டாப்லேட், ஒரு மடி கணினி, 30 லெகோ பொம்மைகள், 40 டிரன்ஸ்ஃபார்மர் ஸ்டைல் பொம்மைகள், எக்ஸ் பாக்ஸ், இன்னும் இன்னும் ஒரு அறை கொள்ளாத சாமான்கள். ஒரு குழந்தைக்கு கிருஸ்துமஸ் தினத்திலும் பிறந்த நாளிலும் 40 அன்பளிப்புகள் சர்வ சாதாரணம். பால் வாங்கினால் ஒரு காலன்தான். ஒரு பாகிஸ்தானியர் கடைக்குச் சென்றோம். ஒரு ரொட்டியை வாங்கி துண்டுபோல் நீங்கள் இடுப்பில் கட்டிக் கொள்ளலாம். அவ்வளவு பெரியது. அதை அப்படியே சாப்பிடலாம். அதற்குள்ளேயே ‘தொட்டுக்க’ வும் உண்டு. இரண்டு வாரத்துக்குக் கூட வைத்துக் கொள்ளலாம். இந்தியர் கடையும் உண்டு. கத்தரிக்காய் தக்காளி, மான் மார்க் அப்பளம், ருசி ஊறுகாய் அங்கே வாங்கலாம். நாய் இல்லாத வீடுகள் அரிது. நாம் சாப்பிடும் சாப்பாட்டைவிட நாய்களுக்குத் தரும் சாப்பாடு விலை அதிகம் தெரியுமா? ‘நடை’ செல்பவர்கள் நாயையும் அழைத்துச் செல்கிறார்கள். ஆங்காங்கே பிளாஸ்டிக் பையும் தொட்டியும் வைக்கப் பட்டிருக்கும். நாய் வேலையைக் காட்டினால் அதை எடுத்து அந்தத் தொட்டியில் போட்டுவிடவேண்டும். நாயை ‘ஒண்ணுக்கு’ விடுவதற்காகவே மதியம் வீட்டுக்கு யாராவது வரவேண்டியுள்ளது. சராசரியாக மாதம் ஒன்றுக்கு 600 டாலர் நாய்க்காகவே செலவழிக்கிறார்கள். நாய்க்கு ஏதாவதென்றால் மருந்து மாத்திரைக்கு 500 டாலர் வரலாம். அவர்கள் அஞ்சுவதில்லை. இவ்வளவு கஷ்டத்தில் ஏன் வளர்க்கிறீர்கள்? என்று ஒரு நண்பரைக் கேட்டேன். அவர் சொன்னார். என் மன உளைச்சலை நான் எங்கே இறக்கிவைப்பது? நான் 50000 பேருக்கு சம்பளப் பட்டியல் தயார் செய்யும் வேலையைப் பார்க்கிறேன். ஒருத்தர் டேவிட் சாலமன் பெயரை டேவிட் என்று சட்டப்படி மாற்றிக் கொண்டுவிட்டார். எங்களுக்குத் தெரிவிக்கவில்லை. பாதி மாதம் அவருக்கு சேவிட் சாலமன் என்ற பெயரில் சம்பளம். பாதி மாதம் சாலமன் என்ற பெயரில். இதைக் கண்டுபிடிக்க 24 மணிநேரம் நான் தூங்கவே இல்லை. இது ஒரு சாம்பிள்தான். இதுபோல் எத்தனையோ’ .வீட்டுக்கு வந்தவுடன் நாய் மேலே தாவுகிறது. மூஞ்சியை நக்குகிறது. அதோடு விளையாடுகிறேன் உளைச்சல்கள் இறங்கிவிடுகின்றன’ என்றார். ‘99’ என்ற ஒரு கடைத் தொகுதி. அது ஒரு ஈரச்சந்தை. தேக்கா மார்க்கெட் மாதிரி. மீன், கோழி, இறைச்சி, மசாலாச்சாமான்கள் அங்குதான் வாங்க வேண்டும். அந்தக் கடைக்குச் சென்றோம். மீன் பிரிவில் ஊர்ப் பையன்கள் இருவர் நின்றுகொண்டிருந்தார்கள். அவர்களை நான் பார்த்த அதே நேரத்தில் அவர்களும் என்னைப் பார்த்தார்கள். புன்சிரிப்பு முதலில் சந்தித்துக் கொண்டன. மெதுவாக அவர்களை நோக்கி முன்னேறினேன்.
‘நீங்க தமிழ்தாட்லேருந்து வந்திருக்கீங்களா தம்பீ?’
‘ஆமா சார்’
அப்போது என் மகள் ‘நீங்கள் பேசிக் கொண்டிருங்கள் மற்ற சாமான்களை நான் வாங்குகிறேன்’ என்று சொன்ன வார்த்தைகள் மனதுக்கு மருதாணி போட்டது.
‘எந்த ஊரு தம்பி’
‘வைரிவயல்.’
‘அறந்தாங்கிக்குப் பக்கத்திலே தானே. பொங்கலுக்குப் பொங்கல் கரிச்சான் ஜோடி, பெரிய ஜோடி, குதிரைப் பந்தயம், சைக்கிள் பந்தயம் எல்லாம் நடக்குமே அந்த வைரிவயல்தானே?’
‘ஆமா சார்.’
ஊர் கிராமமாக இருந்தால் பக்கத்திலுள்ள அறிமுகமான ஊரைச் சொல்லி அதற்குப் பக்கத்திலுள்ள கிராமம் என்பார்கள். அந்தப் பையன் எடுத்த எடுப்பில் வைரிவயல் என்றது பிறந்த ஊரின் மீது அவருக்கிருந்த மரியாதையைக் காட்டியது.
‘நா அறந்தாங்கி தான் தம்பி. எவ்வளவு தூரத்தில வந்து நாம சந்திக்கிறோம்.வைரிவயல்ல சாத்தின்னு ஒரு அம்மா இருந்தாங்க தம்பீ. டீக்கடை யாபாரம். வாராவாரம் சனிக்கிழமை எங்க மளிகைக் கடைக்கு சாமான் வாங்க வருவாங்க. என்னெப் பெத்த ராசான்னுதான் என்னக் கூப்புடுவாங்க. அதெல்லாம் 1960 கள்ல தம்பி. ஒங்களுக்கெல்லாம் தெரிய ஞாயமில்ல. அந்த அம்மாவ என்னால மறக்கவே முடியாது தம்பீ’
‘அந்த டீக்கடை சாத்தியம்மா பேரந்தான் சார் நான், நா தஞ்சாவூர்ல கேட்டரிங் படிச்சிட்டு ஹைதராபாத்தில வேல பார்த்துட்டு அங்கேருந்து அவங்களோட இங்கே இருக்கிற ஹோட்டலுக்கு வேலக்கி வந்து இப்ப ஒங்க முன்னால நீக்கிறேன்னா அதுக்கு அவங்கதான் சார் காரணம்.’
ஒரு நிமிடம் அந்த சாத்தியம்மாவின் முகம் பளிச்சென்று எனக்குள் விரிகிறது. அந்தப் பையனின் முகத்தைப் பார்க்கிறேன். அட அதே முகம். இன்னும் இளமையாக. அந்த நெற்றிப்பொட்டு மரு கூட அப்படியே. என் நினைவுகள் அந்த 1960 களுக்குப் பயணித்துவிட்டன.
1965. வார இறுதிகளில் நான் மளிகைக் கடையில்தான் இருப்பேன். ஒவ்வொரு சனிக்கிழமையும் நான் சாத்தியம்மாவைப் பார்த்து விடுவேன். பார்த்த மாத்திரத்தில் என் முகத்தை இரு கைகளால் தடவி விரல்களைத் தன் கன்னங்களில் சொடுக்கி, பெரிதாகக் கேட்கும் சொடக்குச் சத்தத்தில் ‘என்னப்பெத்த ராசாவுக்கு ஏகப்பட்ட திஷ்டி’ என்பார்.இரவு வெகு நேரம் ஆகிவிட்டால் எங்கள் வீட்டில் தங்கிவிட்டு அடுத்த நாள் கூட ஊருக்குப் போயிருக்கிறார். வைரிவயல் பந்தயம் பார்க்க ஒரு தடவை என்னை அழைத்துப் போயிருக்கிறார். தன் கடைக்கு முன்னால் ஒரு பெரிய மர நாற்காலியைப் போட்டு அதில் உட்கார வைத்துவிட்டார். எனக்கு முன்னால் மறைத்துக் கொண்டு யாரும் நிற்கவில்லை. பந்தயத்துக்குத் தயாராய் நிற்கும் மாடுகளைக் குதிரைகளை மிக அருகில் பார்த்தது இப்போதும் எனக்கு பசுமையான ஞாபகங்கள். அப்போது அறந்தாங்கியில் பெரியம்மை பரவியிருந்த காலம். நாக்கில்லா மணிபோல் ஊரே ஓசையில்லாமல் ஆடிக்கொண்டிருந்தது. வீட்டின் வாசலில் வேப்பிலைக் கொத்து தொங்கினால், புரிந்துகொள்ளுங்கள் அங்கே யாருக்கோ அம்மை போட்டிருக்கிறது. அதில் நான் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த சமயம். எனக்கு ஞாபகம் இருக்கிறது. வீட்டு வாசலில் வேப்பிலைக்கொத்து தொங்கவிட்டிருந்தார்கள். எண்ணெய் தாளிப்புகள் அறவே கிடையாது. அம்மை நோய் என்ற பெயரையே உச்சரிக்க மாட்டார்கள். மாரியம்மா இறங்கியிருக்கிறாள் என்றுதான் சொல்வார்கள். அம்மைக் கொப்புளத்தைக் கூட ‘முத்துப் போட்டிருக்கிறது’ என்றுதான் சொல்ல வேண்டும். எனக்கு உடம்பெல்லாம் முத்துப் போட்டிருந்தது. வாழை இலையில் படுக்க வைக்கும் அளவுக்கு நிலமை மோசம். சோறு, அரிசி வாங்க வரும் பக்கீர்மார்கள் கூட வீட்டுப் பக்கம் வரமாட்டார்கள். உற்றார் உறவினர் என்று யாருமே வீட்டுப்பக்கம் எட்டிப் பார்க்க மாட்டார்கள். என் தலைமாட்டில் அம்மா மட்டும்தான். கரண்டியில் பால் எடுத்து வாயில் ஊற்றிக் கொண்டிருப்பார்கள். சில சமயம் அந்த வேலையை என் அத்தம்மா செய்வார். அந்த இருவர் தவிர வேறு யாரும் என் படுக்கை அருகில் வந்ததில்லை. அத்தம்மா ஒரு வெகுளி. பள்ளிவாசலுக்குப் போய் ஹஜ்ரத்தை ஓதிப்பார்க்கக் கூப்பிட்டார்கள். ‘நாங்க வரக்கூடாதும்மா ஒரு குவளையில தண்ணி கொண்டு வாங்க. ஓதித் தர்றேன். அதத் தலமாட்டில வச்சு அப்பப்ப கொஞ்சம் குடிக்கக் குடுங்க’ என்று சொல்லிவிட்டார். அப்போதுதான் எங்க அத்தா கேள்விப்பட்டார். ‘அம்மன் தாலாட்டு’ பாடினால் அம்மை இறங்கிவிடும் என்று. வைரிவயல் சாத்தியம்மா அம்மன் தாலாட்டு நன்றாகப் பாடுவார் என்றும் அத்தா கேள்விப்பட்டார். அப்போதெல்லாம் மத வேறுபாடுகள் மனிதர்களைப் பிரித்ததில்லை. இழைகளாகக் கிடந்த பல மதங்கள் கயிறாக முறுக்கப்பட்டுக் கிடந்த காலங்கள். மத நல்லிணக்கத்திற்கே அறந்தாங்கி அப்போது முன்னோடியாக விளங்கியது. ஒரு ராவுத்தர் வடம் பிடிக்க தேர் இழுத்தார்கள். உடையார்கள், வேளாளர்கள், தலித்துகள் பள்ளிவாசலுக்கு நெல் உபயம் தந்திருக்கிறார்கள். வீரமாகாளியம்மன் கோயில் திருவிழாவுக்கு ராவுத்தர்கள் அள்ளிக் கொடுத்திருக்கிறார்கள். திருவிழா சமயங்களில் தலித்துகள், உடையார்கள் எல்லாம் எங்கள் வீட்டில் தங்கி விடிந்து ஊருக்குப் போயிருக்கிறார்கள். மதம் என்பது வேறு. நம்பிக்கை என்பது வேறு. மொகரம் மாதங்களில் முஸ்லிம்கள் நெருப்புக் குண்டத்தில் இறங்குகிறார்கள். தைப்பூசத்தில் இந்துக்கள் இறங்குகிறார்கள். 500 ஆண்டுகளாக ஸ்பெயின் நாட்டில் கொழுந்து விட்டெரியும் நெருப்புக் குண்டத்தில் குதிரை வீரர்கள் குதிரைகளோடு பாய்கிறார்கள். அதே மாதிரிதான் என் அத்தா நம்பினார். அத்தாவுக்குத் தேவை நான் பிழைக்கவேண்டும் என்பது மட்டுமே. உடனே சாத்தியம்மாவுக்கு ஆளனுப்பினார். அடுத்த இரண்டு மணிநேரத்தில் சாத்தியம்மா என் தலைமாட்டுக்கு வந்துவிட்டார். கைகளில் புதிதாகப் பறித்த வேப்பிலைக் கொத்து. அந்தக் கொத்தை என் தலையிலிருந்து கால்வரை மூன்றுமுறை விசிறினார்.
என்னெப் பெத்த ராசாவெ
மண்ணெ ஆளும் ரோசாவெ
காத்திரு தாயீ
ஆறு தப்பு நூறு பிழை
அடியார்கள் செஞ்சாலும்
தாயே மனம் பொறுத்து
தயவாகக் காத்திரு தாயீ
என்னெப் பெத்த ராசாவெ
காத்திரு தாயீ
வேப்பில தான் தடவி விசிறி
முத்து அழித்து விடு
பரா சக்தியே
முத்து அழித்து விடு
அம்மை முத்து
அழித்துவிடு
இறக்கிடு தாயே
இறங்கிடு தாயே
என்னெப் பெத்த
ராசாவெ காத்திடு தாயே
காத்திடு தாயே
………… ….. ….
ஒவ்வொரு வார்த்தையும் கணீரென்று புறப்பட்டு அறைச் சுவர்களை மோதித் திரும்பி மொத்த உடம்பையும் உலுக்கியது. வார்த்தை ஒவ்வொன்றும் மயிலிறகால் முத்துக்கை வருடுவதுபோல் இருந்தது. அன்றுமட்டுமா? தினமும் வந்தார். அடுத்த பத்து நாளில் அம்மை முழுதும் இறங்கிவிட்டது. தலைக்கு தண்ணீர் ஊற்றினார்கள். முத்துக்கள் வடுக்களாக இருந்தன. மிகப் பெரிய கண்டத்திலிருந்து எழுந்துவிட்டேன். நான் முஸ்லிம் மதம். சாத்தியம்மா வேளாளர். அந்த ‘என்னெப் பெத்த ராசா’ எந்த மதம். அதற்குப் பிறகு சில மாதங்களில் தேர்வு. பின் தஞ்சாவூருக்கு படிக்கச் சென்றுவிட்டேன். தேர்வை முடித்துவிட்டு அறந்தாங்கி சென்றதும் முதல் வேலையாக சாத்தியம்மாவைப் பார்க்க வேண்டும் என்று ஏங்கிக் கொண்டிருந்தபோதுதான் சாத்தியம்மா இறந்துவிட்ட சேதி கேட்டு துடித்துப் போனேன். பார்க்க வேண்டும் பார்க்கவேண்டும் என்ற என் ஏக்கம் எனக்குள்ளேயே வெந்து செத்துவிட்டது. இப்போதுதான் தெரிகிறது அந்த ஏக்கம் சாகவில்லை. உயிரோடு உலாவிக் கொண்டுதான் இருந்திருக்கிறது. இதோ 15000 கிலோ மீட்டர்கள் தாண்டி 50 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த அம்மாவின் பேரனோடு பேசிக் கொண்டிருக்கிறது.

அந்தப் பையன் அங்குதான் நின்றுகொண்டிருக்கிறார். என் மகள் இன்னும் வரவில்லை. 100 டாலரை அந்தப் பையனுக்குக் கொடுத்தேன். இல்லை அந்த ஜாக்கெட்டின் பாக்கெட்டில் திணித்தேன். ‘தம்பீ நா யாரு தெரியுமா? ஒங்க பாட்டியப் பெத்த ராசா தம்பீ. என்றோ எனக்குள் எரிந்து கொண்டிருந்த ஏக்கம் இன்று உயிராகியிருக்கு தம்பீ. இது நா தரல. சாத்தியம்மா தர்றாங்க. ஒன்னும் நெனக்காதீங்க தம்பீ. அடுத்த முறை நா அறந்தாங்கி வரும்போடு கண்டிப்பா ஒங்க வீட்டுக்குப் போவேன்.’

யூசுப் ராவுத்தர் ரஜித்

Series Navigationஇது கனவல்ல நிஜம்உமர் கயாம் ஈரடிப் பாக்கள்
author

யூசுப் ராவுத்தர் ரஜித்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *