ஏழாம் அறிவு….

Spread the love

கணினியில் இணையத்தை இணைத்து, திண்ணை இணைய வார இதழுக்குள்  நுழைந்தததும்…கண்கள்  “மஞ்சள் கயிறு” கதையைத் தேடியது. சென்ற வாரம் முழுதும் மனதை ஆக்கிரமித்து வார்த்தை வார்த்தையாக ஊறிப் பிரசிவித்த கதை. எல்லா உடல் வலிகளையும் வீட்டு வேலைகளையும்  உதறித் தள்ளி விட்டு பொறுமையாக கருமமே கண்ணாயினவளாக சுமந்த கதைக்கரு,  ஜம்மென்று  கண்ணாடி அறைக்குள் அமர்ந்து என்னைப் பார்த்துக் கண்ணடித்தது.. மனசுக்குள் ஏதோ ஒரு நிறைவு.  பத்தாம் வகுப்பு பரீட்சை எழுதி விட்டு முடிவுகளுக்குக் காத்திருந்த மனநிலை பாஸான திருப்தியில் முண்டியடித்துக் கொண்டு இறங்கி வெளியேறியது போலிருந்தது அந்த மன நிறைவு.

மாய்ஞ்சு மாய்ஞ்சு எழுதினயே…..”மஞ்சள் கயிறு” வந்திருக்கா? அம்மாவின் சந்தேகக் குரலுக்கு ரொம்ப சந்தோஷமாக நானும் “இதோ இங்க வாயேன்…நீ இந்த தடவையாவது படியேன்…” என்று கெஞ்சும் குரலில் கேட்க…..”போடி நோக்கு வேற வேலையில்லை….நேக்கு டிவி யில் இப்போ ” சீதா” சீரியல் வரும்… பார்க்கணும் என்று ஆளை விட்டால் போதும்ன்னு நகர்ந்து விட…! இந்த முறையும் எனக்கு ஏமாற்றம் தான்..அம்மா நான் எழுதும் போது “எதுக்கு இப்படி உடம்பக் கெடுத்துண்டு…எதையோ யோசித்து யோசித்து தட்டிண்டு இருக்க….எங்களை மாதிரி கோயிலோ கச்சேரியோ’ ன்னு சாதாரணமா இரேன்….என்று வழக்கமாகப் பின்பாட்டு பாடீண்டு தான் இருப்பா.என்ன கதை ? படித்துக் காட்டுன்னு கூட சொல்ல மாட்டாள்.அதனால் தான் ஒரு கதையின் கருத்து என்னவாக இருக்கும் என்று திண்ணையில் பின்னூட்டங்கள்  வரும் வரை மனது காத்துக் கொண்டிருக்கும்.

தீப்பொறியிலிருந்து மயில்தோகை மாதிரி விரியும் கதையை மீண்டும் படிக்கும் போது எனக்குள் வழக்கம் போலவே…”நானா….எழுதியது நானா..? என்று எனக்குள் எதிரொலி கேட்கும்.பின்ன இருக்காதா…? சில வருடங்களுக்கு முன்னால் வரைக்கும் என் நிலைமை என்ன என்று எனக்குள் எப்படியெல்லாம் ஒரு நிலைமை இருந்திருக்குன்னு இப்போ நினைத்தால்…எனக்கே சிரிப்பு வரும்.,

எனக்கு எது  தெரியாது என்பது தெரியாமல், எனக்கு எதைத்  தெரிஞ்சுக்கணும்னு தெரியாமல், எனக்கு என்ன தெரியும் என்பதும் தெரியாமல், எனக்கு என்ன தெரிய வேண்டும் என்பதும் தெரியாமல், ஒரு பேதையாய் இருந்திருக்கிறேன்.ஏன் எனக்குத் தெரியாது? ன்னு யோசித்தால் அதுவும் தெரியாது..! இப்படித் தானாகவும் தெரியாமல்…எதைப் பற்றியும் தெரிந்து கொள்ளவும் .முயலாமல்….என்ன குழப்பமா இருக்கா…..? எனக்கும் அப்படித்தான் இருந்தது. ஒரு விஷயத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் எழும் முன்பு இருக்கும் நிலையில் தான் மனசு இருந்தது.

ஆனாலும்…”மனசுலோனி மர்மம் தெலுசுக்கோ..” ன்னு ஒரு ஆசை கூடவே ஊதிக் கொண்டே கனன்று கொண்டிருக்கும் கங்கைப் பொறி கிளம்ப வைத்துக் கொண்டு தான் இருந்தது. ஏன் என்று கேட்கும் வரை கேள்விக்கு பதில் கிடையாது…இல்லையா? நான் ஒரு சுகமான பேதையாக காலத்தை கழிச்சிருக்கேன். ஒரு குறைந்த இடைவெளிச் சந்தர்பத்தில் இப்போது  பல பாத்திரங்கள் உருவாகி உயிர் கொடுத்து உலவ விட்டவள் பல வருடங்கள் வீணாக்கியதை எண்ணி வருத்தப் பட்டு என்ன பிரயோஜனம்…?

இந்த நேரத்தில் தான் எதற்கும் ஒரு காலம் உண்டு…என்ற தத்துவம் கண்  திறக்கும். நமக்குள் இல்லாமல் இருக்கும், தெரியாமல் மறைந்துள்ள ஏழாம் அறிவு சிறகு விரிக்கும்…அது தான் ஒரு சிலர் வாழ்வில் மலரும் “பொற்காலம்”.

சூர்யா…முருகதாஸ் கூட்டணியில் திரைப் படமாக முடிந்து, பாக்ஸ் ஆஃபீஸில் ஏகத்துக்கு வசூலைக் கொட்டிக் கொடுத்த ஏழாம் அறிவோ ….போதி தருமரைப் பற்றிய வரலாற்றுக் கதையோ, இந்த  இரண்டுக்கும்  நான் இப்போ  சொல்லிக் கொண்டிருக்கிற ஏழாம் அறிவோடு  எந்த சம்பந்தமும் இல்லை.

இதற்கெல்லாம் முன்னாடியே….ஆறறிவுக்கு அப்பாற்பட்டு ஏழாம் அறிவுன்னு ஏதாவது இருக்கா..? அறிவே இல்லாமல் எனக்குள்ளே எதையோ ஆராய்ச்சி பண்றது போல என் அறிவுக்கு எட்டாத, நான் பார்க்காத அந்த அமானுஷ்ய அறிவை இது ஏழாம் அறிவாய் இருக்குமோன்னு…. என்னையே நான் பல நேரங்களில் கேட்டுக் கொண்டதற்கு பல காரணங்கள் இருந்தது உண்டு.

நான் அலசிக் கொண்டிருக்கும் அந்த வெள்ளைத் துணி….அதான்…என்னோட ஏழாம் அறிவு..! எனக்கே ஆச்சரியமா இருக்கும்.எப்போதாவது என்னைத் தட்டி எழுப்பி “நானும் உன்னோட இருக்கேன்னு” சொல்லி பயமுறுத்தும்.  சில சமயங்களில் என்னைத் துரத்தும்…சில சமயங்களில்” இது என்னாகும்….சொல்லேன்…சொல்லே

ன்…” என்று நான் அதன் பின்னால் செல்வேன்.ஏழாம் அறிவு லாஜிக்கில் அடங்காது, ஏதாவது ஒரு பிரச்சனை என்று வந்தால் மாஜிக் போல வந்து தீர்வு தரும்….நான் அதனுடன் கெஞ்சும் போது, ரொம்ப அலட்டிக் கொண்டு, பிகு செய்யும்., தான் இருக்கும் இடமே தெரியாமல் ஒளிந்து கொண்டு என்னைக் காலை வாரும் இந்த ஏழாம் அறிவு. சமயம் பார்த்து கவிழ்த்து விடும் போது, நானும் விடாமல் குழம்பிக் கொண்டிருப்பேன். அது மட்டும் கிணற்றில் போட்ட கல்லு மாதிரி அமுங்கிக் கிடக்கும்.

இருபது வருடங்களுக்கும் மேலாக தெலுங்கை பேச்சு வழக்கு மொழியாகக் கொண்ட செகந்திராபாத்தில் என் வாழ்க்கை வண்டி ஓடிக் கொண்டிருந்தது. என்னதான் தெலுங்கு சுந்தரமாக இருந்தாலும் எனக்கு மட்டும் தமிழ்தான் சுந்தரி. தமிழுக்காக மனதுக்குள் ஏங்கிக் கொண்டிருப்பேன் தாயைப் பிரிந்த குழந்தை போல் தான்……. வெளியில் எங்கு சென்றாலும்  தெலுங்கும், உருதும் தான் காதில் விழும்..தொலைக்காட்சி தொடர்கள் இருந்தாலும்…. அதில் மனம் செல்லாது .ஆனால் அப்போது ஒரு வரப்ரசாதமாக “worldspace radio”  உலகம் முழுதும் கேட்கும்படியாக தொடர் சேவையில் தமிழ்க் குரல் கேட்கும். ஒவ்வொரு ஞாயிற்றுக்  கிழமையும் நேர்காணல் நிகழ்ச்சி என்றொரு நிகழ்ச்சி ஒலிபரப்பாகும்.

அன்றும் மாலை நேரத்தில் தமிழ்  எழுத்தாளர்கள் நேர்முகப் பேட்டியில்….திரு.பாலகுமாரன் அவர்களைப் பற்றி அவர் பேசியதை எதேச்சையாக கேட்க நேர்ந்தது. அவரது வாழ்க்கையை பருவம் பருவமாகச் சொல்லிக் கொண்டு வந்தவர்….தற்போது அவருக்குள் இருக்கும் ஆன்மீக சிந்தனைகள் வரை மிக அழகாக சொல்லிக் கொண்டிருந்தார்.மிகவும் வெளிப்படையான, உண்மையான, கருத்துக்களோடு தெளிவாகச் சொன்ன விதம் என் மனதை ஈர்க்க முழுதுமாகக்  கேட்டுக் கொண்டிருந்தேன்.

அதுவரை அவரது எந்தக் கதையையோ, எழுத்தையோ நான் படித்ததில்லை…அவரது பேச்சைக் கேட்டது,,,,படிக்கவேண்டும் என்ற ஆவலும் என்னுள் எழுந்தது.  எனக்குள் புத்தகம் வாசிக்க வேண்டும் என்ற விதையை ஒரு பேட்டியின் மூலம் விதைத்தவர்ஆன்மீக மேதை திரு.பாலகுமாரன்…அவர்கள். அதன் பின்பு மிகுந்த பிரயத்தனப் பட்டு அவரது ஒரு பழைய ஆரம்ப காலத்துப் புத்தகம் கண்ணில் பட அதைப்  படிக்கும் வாய்ப்பு கிட்டியது. அந்த ஒரு புத்தகத்தையே திரும்பத் திரும்பப் படித்தபடி இருப்பேன். சலிக்கவே சலிக்காது.

அந்த நடைப்பிரவாகத்தில்  மனம் நடந்தபோது எழுத்தின் ஆற்றலும் புரிந்தது. அதன் பின்பு தான் எண்ணத்தாலும்..எழுத்தாலும் ஈர்க்கப்பட்டு எனக்குள் தோன்றும் சிறு சிறு விஷயங்கள் கவிதைகளாக எழுதி இணைய குழுமங்களுக்கு அனுப்பிக் கொண்டிருந்தேன். இப்படியாக எனது எழுத்துக்கள் மெல்ல மெல்ல இணையத்தில் தவழ ஆரம்பித்தன.  இந்நிலையில், அந்த அதிசய நிகழ்ச்சி நேர்ந்தது எதிர்பாராமல்  !ஒரு முறை..2009 ஆம் வருடம் என் தம்பி குடும்பத்தோடு நானும் சேர்ந்து சிதம்பரம் செல்வதற்காக போகும் போது வழியில், அந்த அற்புத சந்திப்பு நிகழ்ந்தது.

பாண்டிச்சேரியில் ஹோட்டல் “சத்குரு ” வில்  டிஃபன் சாப்பிட உள்ளே நுழைந்தோம்.  கை அலம்புமிடத்தில் சென்று நான்  காத்து நிற்க, எனக்கு எதிராக இருந்த ஒரு கதவைத் திறந்து ஒரு வயதானவர் தாடியோடும்  மிகுந்த தேஜஸோடும்  மெல்ல நடந்து வெளியே வந்தார்.

வந்தவர் எதிரே சரியாக நான் நின்றிருந்த படியால் அவரது கண்கள் நேராக என்னைப் பார்க்க நானும் அந்தக் கண்களை ஒரு நொடி  உள்வாங்கிப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த நொடியில் ….என் மனதில் ஏதோ ஒரு மின்னல் கீற்று  பளிச்சென அடித்தது…ஒரு புதிய உணர்வு இது. உண்மையிலேயே சில மணித் துளிகள் அப்படியே உறைந்து போய் நின்று விட்டேன் .  என்னை எதனால்…இது போன்ற  வித்தியாசமான ஓர் ஆத்ம உணர்வு வந்து மின்னதிர்வாகத் தாக்கியது. …என்று இன்றும் புரியவில்லை.

அதற்குள் அவர் மெல்ல அவரது கைகளை அலம்பித் துடைத்தபடியே சென்று விட்டார், எனக்குள் மட்டும் ஏதோ ஒரு கேள்வி…? இவர் ஞானியா? சித்தரா? யோகியா? யாரிவர்..? பார்த்தால் ரொம்ப சாதாரணமானவராகத் தெரிகிறார் அதே சமயம் ரொம்ப உயர்ந்தவர் போலவும் இருக்காரே, இவர் யாராயிருக்கும்? என்று  என் ஆழ் மனத்தில் எழுந்த கேள்வி….என்னென்னவோ, கேள்விகள் கேட்டபடியே,  ஏதோ போன பிறப்பின் ஒரு தொடர்பாக இருக்குமோ? என்பது வரையில் அந்த  உணர்வு எண்ண வைத்தது. நானும்  கையலம்பி விட்டு  அவர் எங்கு அமர்ந்திருக்கிறார் என்று என் கண்கள் தேட,சிறிது நேரம் முன்பு வெறும் மூன்றடி இடைவெளியில் நின்ற அவர் இப்போது வெகு தூரத்தில் மக்கள் கூட்டத்தில் ஒருவராக அமர்ந்திருந்தார்.எனக்குள் மட்டும் ஏதோ ஒரு உந்துதல்..  என் கால்கள் என்னைத் தூக்கி கொண்டு தானாக அவர் அமர்ந்திருந்த இருக்கையை நோக்கி விரைந்து சென்று நின்றது.நான் வேறெங்கேயோ போய்க் கொண்டிருக்கிறேன் என்று எண்ணி என்னை அழைத்துக் கொண்டே என் தம்பி பெண்ணும்  என்னைத் தொடர்ந்து வந்து கொண்டிருந்தாள்

அந்தப் பெரியவரை  யாரும் தெரிந்தவர்  என்றோ பிரபலமானவர் என்றோ அடையாளம் கண்டுபிடிக்கவில்லை. நானும் அவரை இது வரை எந்தப் புகைப்படமாகக் கூடப் பார்க்கவில்லை.. நான் அவரது அருகில் சென்று….குனிந்து …
” ஐயா…நீங்கள் தான் எழுத்தாளர் பாலகுமாரனா?  இல்லை என்றால் மன்னித்துக் கொள்ளுங்கள்….எனக்கு அவரைத் தெரியாது….ஆனாலும் உங்களைப் பார்த்ததும் எனக்குள்…நீங்க அவராத்தான் இருக்கணும்னு ஏதோ  உணர்வு சொல்றது….! ஒருவேளை நீங்கள் தான் பாலகுமாரன் என்றால் என்னை ஆசீர்வாதம் செய்யுங்கள்…நான் உங்கள் ரசிகை…என்று தடால் என்று அவரது காலில் விழுந்தேன்.உங்கள் ரசிகை…என்று தடால் என்று அவரது காலில் விழுந்தேன் அவரது பதில்வரும் முன்னே. என்னைச் சுற்றி ஒரு சலசலப்பு இருந்தது எனக்கு கனவு மாதிரி இருந்தது.

எனது செய்கையை அவரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்…நான் தான்…நான் தான்…எனக்கு ஆச்சரியமா இருக்கு…..எப்படியம்மா….நீ.? என்று கேட்டபடியே…அந்த ஆச்சரியத்திலேயே எனக்கு அவரது குடும்பத்தை…..இவர்கள் எனது மனைவியர், இவர் என் மகன்..என்று அறிமுகப் படுத்தி வைத்தார், என்னால் நம்பவே முடியவில்லை…இது முற்றியும் எதிர்பாராத ஓர் ஆத்மத் தேடலின் சந்திப்பு. எனக்குள் ஏதோ மின்னதிர்ச்சி…யாரைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தேனோ அவரை நேரில் சந்தித்துப் பேசிக் கொண்டிருக்கிறேன்..அவரும் என்னைப் பற்றி விசாரித்துக் கொண்டிருந்தார். நான் சமீபத்தில் உங்களது பேட்டி கேட்டேன்…என்று விபரம் சொன்னேன்…அதைப் பற்றியும் சொல்லிக் கொண்டிருந்தார். தற்போது திருக்கடையூர் சென்று வருவதாகவும் சொன்னார். இதெல்லாம் போதாதா எனது ஆத்மாவின் சந்தோஷத்திற்கு. ஒரு இனம் புரியாத மகிழ்வு அந்தத் தருணங்களில்.. இதற்கு முன்பு நான் யாரையும் பார்க்க வேண்டும் என்று ஆசை பட்டதும் கிடையாது. அவர் என்னிடம் நீங்கள் திருவண்ணாமலை சென்று யோகிராம் சுரத் குமார் அவர்களின் நினைவு மண்டபத்தை சந்தித்து விட்டு வாம்மா என்றார்.

இவளும் கவிதை எழுதுவாள் என்று என் தம்பி மனைவி அவரிடம் சொல்ல,,,,அவர் என்னைப் பார்த்து…”கவிதை எல்லாம் வேஸ்ட்….கதை எழுது….எங்கே உனது கைகளை நீட்டு என்றார்…சில நிமிடங்களில் உற்றுப் பார்த்துவிட்டு உனக்குக் கதை எழுத வரும்…கதை எழுது…சரியா என்று சொல்லி ஆசீர்வாதம் செய்தார்.அவர் ஏன் அப்படி என்னைத் தூண்டினார் ?   இறைவனின் தூதராய் எனக்கு ஒரு புத்துலகை அவர் அப்போது திறந்து வைத்தாரா ?   அந்த நிமிடம்…எனக்குள் சரஸ்வதியே ஆசி வழங்கியது போல் இருந்தது. பின்பு என் தம்பி மகளையும் ஆசீர்வாதம் செய்து எங்கே உன் கைகளைக் காமி என்றார்….நானோ…எனக்கு கதை எல்லாம் எழுதத் தெரியாது ஐயா என்றேன்,,,,,பின்பு…”ம்ம்…நீ கதை எழுது….தெரியுமோ…தெரியாதோ....எழுது…” என்று சொன்னார். அவரது கையெழுத்தை வாங்கிக கொண்டு..அதைப் பார்த்தால் அதில் கூட அவர் யோகிராமைப்  படம் போல் வரைந்து தான் தந்து கையொப்பமிட்டிருந்தார்.

ஞானப் படைப்பாளிக்கு,

உங்களுக்கு  எழுதி அனுப்பாத கடிதம் இது.   அதற்கு என்னை மன்னித்து விடுங்கள்..   கை    எழுதியதை மனம் அனுப்ப விரும்பாது அந்த நிமிடத்தின் சாட்சியாக என்னிடமே வைத்துக் கொண்டேன்.  என் ஏழாம் அறிவு பற்ற நினைத்த  ஓர் உன்னத படைப்பாளியை என் ஏழாம் அறிவே கண்டுபிடித்து என்முன் நிறுத்திய எதிர்பாராத நிகழ்ச்சி ஓர் அற்புதக் காட்சி.
நீங்கள் ஒரு சிறந்த  எழுத்தாளன்……எத்தனையோ…இதயங்களை உங்கள்  பேனா முனையில்  இயக்கி ஆள்பவர்…..உங்கள்  வார்த்தைகளின் சக்தியை உணர்ந்தவர்கள் வேறெதையும் நாட மாட்டார்கள். ஒன்றல்ல….இரண்டல்ல….ஓராயிரம் வார்த்தைகளின் உத்வேகம்…. ஒரு சாதாரண இதயத்துள்ளே புகுந்து அதன் ஆணிவேரை அசைத்துப் பார்த்து சிரிக்கிறதே..!!!
இன்னும் என் மனசு அந்த இடத்தை விட்டு நகரவே இல்லை……தங்களது  தெய்வீக காருண்ய பார்வையில் இருந்து விலகவே இல்லை….ஒரு நொடி வீச்சு…..அது இறைவனின்….பேச்சு…..!!! வாழ்ந்து கொண்டே இருக்கும் போதே….என்றோ தான்….யாருக்கோ….எப்பொழுதோ.…எப்படியோ…. “ஞானக் கண்” திறந்து அந்த ஞானப் பறவை தெரிந்துவிடும்…….
அத்துடன் வாழ்வின் ‘தடம்’  மாறிவிடும்!!!…அது போல்….
எனக்குள் இது என்ன?….!!!!!  உங்களுக்கும்  தோன்றவிருக்கும் எண்ணம் முழுதும்…….எனக்குள்ளே தங்கிவிடு….. என்பது போல்..!!!!
தங்களின்  அமுதப் படைப்புகள் ஓர் ஆத்ம பலத்தை அமைத்துள்ளன.  ஏழாம் அறிவு அதைக் கட்டி வைத்ததா ?
ஒரு வாசகி.

அவரை எதிர் பாராமல் சந்தித்து ஆசி பெற்ற நிமிடங்கள் மட்டும் மனதில் பசுமையாக நிலைத்து விட்டது. எனக்குள் இன்னும் ஆச்சரியம்….”எப்படி முன்னப் பின்னப் புகைப்படத்தில் கூட அந்த உருவத்தில்  பார்க்காத ஒருத்தரை அவர் தான் இவர் என்று அவ்வளவு அழுத்தமாக என் அந்தர் ஆத்மா சொல்ல சொல்ல முடிந்தது…” எனது இதே ஆச்சரியம் அவருக்குள்ளும் நிச்சயம் இருந்திருக்கும். அதன் பின்பு கூட வெறும் கவிதைப் படியைத் தாண்டிச் செல்லாமல் இருந்தவள் சமீபத்தில் தான் திண்ணையில் கதை எழுத ஆரம்பித்து இப்போது பதினான்கு கதைகள் வரை எழுதி விட்டேன்.. இன்னும் எழுதிக் கொண்டிருக்கிறேன்.அன்று அவர் என்னை அறியாமல் எனக்குள் ஒரு சிறு எண்ணத்தை வித்தாக விதைத்து விட்டிருக்கிறார். அவரது ஏழாம் அறிவு முன்பின் தெரியாத என்னிடம் கதை எழுது என்று அசரீரியாக சொன்னது போலிருந்தது. மூன்று வருடங்கள் கழித்து இன்று மெல்ல மெல்ல வடிவம் எடுக்கிறது ஒரு நல்வாக்கு, அருள்வாக்கு.

முதலும் கடைசியுமாக ஒரு சில நிமிட சந்திப்பில் தான் ஒரு பெரிய எழுத்தாளர் என்ற எந்த தோரணையும் இன்றி எங்களுக்கு அவர் யோகிராம் சூரத்குமார் அவர்களின் பெயரைச் சொல்லி எனக்கு வழங்கிய ஆசியால் தான்…என்று என் உள்மனம் நம்புகிறது.  வருடங்கள் கடந்து சென்றாலும் இன்று கூட நேற்று நடந்தது போல் தான் பசுமையாக இருக்கிறது. எந்த ஒரு காரியமும்  ஒரு காரணமின்றி நடக்காது என்பதை நம்பும் எனக்கு……. இந்த அனுபவத்தை  ஏழாம் அறிவாக எழுதும் போது ஒரு புல்லரிப்பு தோன்றுகிறது…

என்னையும்  மீறி ஒரு ஆத்ம சக்தி என்னைச்  சுற்றி நின்று ஆட்சி செய்து கொண்டே இருக்கிறது என்பதை என்னால் நிறைய விஷயங்களில் உணர்ந்து கண்கூடாக பார்க்க முடிந்தாலும்..இன்னுமோர் நிகழ்ச்சியில் இதுபோல் நெகிழ்ந்தே போனேன்.

ஏழு வருடங்களுக்கு முன்பு இது நிகழ்ந்தது.

ஸ்கந்தகிரி முருகன் கோவிலுக்குச் சென்று வெளியில் வரும்போது கோவில் வாசல் கடையில் கண்ணில் பட்ட “ஞான ஆலயம்” தமிழ் இதழை “அட..இங்க இந்த பத்திரிகை வர ஆரம்பிச்சாச்சா” என்று ஆச்சரியத்தோட வாங்கி கொண்டேன். வேலைகள் முடிந்து “ஞான ஆலயத்தை” ஒவ்வொரு பக்கமாய் படித்துக் கொண்டே வரும்போது “ஒருவருக்கொருவர்” என்ற பகுதி வித்தியாசமாக இருந்தது. அனைத்தும் வாசகர்களிடம் இருந்து வந்த கடிதங்கள்…வேண்டுதல்கள்..பற்பல….இவர் அதில் பிரசுரமாகி இருந்தன. அதில் என் கண்ணில் பட்ட அந்த   ஓர் அதியசக் கடிதத்தைப் படித்ததும் ,கடிதத்தைப் படித்ததும் , யார் இப்படி ஒரு கடிதம் போட்டிருப்பார்கள்…? என் மனதின் கேள்வி…மீண்டும் படிக்கத் தூண்டியது. அதில்…

“எனக்கு அறுபத்தி ஐந்து வயதாகிறது., ஆன்மீகத்தில் நாட்டம் அதிகம். என்னிடம் நிறைய பக்தி காஸெட்டுகள்   இருக்கிறது ஆனால் போட்டுக் கேட்க நல்லதாக ஒரு டேப் ரிகார்டர் தான் இல்லை., இதைப் படிக்கும் யாராவது நல்ல மனம் கொண்டு எனக்கு ஒரு டேப் ரிக்கார்டர் அனுப்பி உதவுங்கள்…”
பெயர் வெளியிட  விரும்பாத வாசகி.

இந்தக் கடிதம் எங்கோ ஓரிடத்தில் இருக்கும்  என் கண்ணில் ஏன்  பட வேண்டும் ?   படிக்க வைத்து எனக்கொரு துடிப்பை உண்டாக்க வேண்டும் ?  யாராவது டேப் ரெக்கார்டை இப்படி வெளிப்படையாய்க் கேட்பாரா ?

இந்த வேண்டுகோளைப் படித்ததும் எனக்குள் என்னவோ ஒரு பதற்றம். இது யாராக இருக்கும்…? எவ்வளவு தேவை இருந்தால் அவர்கள் இப்படி பொதுவில் கேட்டு இருப்பார்கள்? யார் வாங்கி அனுப்புவார்கள்? பெயரும் இல்லை முகவரியும் இல்லை…அதைக் கண்டு பிடிக்க வேண்டுமென்றால் ஞான ஆலயத்துக்கு எழுதியோ போன் செய்தோ தான் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்…அவர்கள் எங்களுக்கு அனுப்புங்கள் நாங்க உரிய இடத்தில் சேர்த்து விடுவோம் என்று தான் சொல்வார்கள். என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே சட்டென ஒரு பொறி தட்டியது போல ஒரு ஆச்சரிய முடிவு.

“அட….அசடே….இந்த விளம்பர வேண்டுகோளைப் படித்தால் உன் மனசு என்ன சொல்லணும்…..? இது போதாதா..? இவர் யாருன்னு கண்டுபிடிக்க. உனக்குத் தெரிந்த முகவரி தான். வாங்கி அனுப்பி வைச்சுடு. என் உள்ளுணர்வு  உத்தரவு போட்டது. மேற்கொண்டு நான் எதைப் பற்றியும் சிந்திக்க வில்லை. என் பையனை அழைத்து “இங்க பாரேன் இப்படி ஒரு வேண்டுகோள்….இந்த பத்திரிகையில்  வந்திருக்கு” ஒரு டூ இன் ஒன் டேப் ரெக்கார்டர் வாங்கணும் கடைக்கு வா…என்று அவனையும் கூட அழைச்சுண்டு போய்….வேற யாரும் வாங்கி அனுப்பரதுக்குல்லே நானே தான் வாங்கி அனுப்பனும்னு ஒரு வைராக்கியத்தோட அடுத்த ஒரு மணி நேரத்தில் “நேஷனல் பானாசோனிக்” வாங்கி  சென்னை முகவரிக்கு கொரியர் செய்து விட்டு நிம்மதியானேன். அத்தோடு உள்ளே ஒரு கடிதத்தையும்  கூடவே  அழுத்தமாக எழுதி வைத்தேன்.

அன்புள்ள பெயர் வெளியிட விரும்பாத ஞான ஆலயம் வாசகிக்கு,
உங்களுக்குத் தெரிந்த நான் மிகவும் வருத்தமுடன் எழுதிக் கொள்கிறேன்.
உங்களுக்குத் தேவையானதை இது வேண்டும் என்று கேட்டால் “இந்தா என்று வாங்கித் தர நாங்கள் இத்தனை பேர்கள் இருக்கிறோம்” மறந்தாச்சா?
இல்லை கேட்கத் தோணலையா?
இதுபோல “ஒருவருக்கொருவர்” படித்து நானே யூகித்து உங்களுக்கு வேண்டியதை இத்துடன் வாங்கி அனுப்பி இருக்கேன். கிடைத்த விபரம் சொல்லவும்.
யாராயிருக்கும்….? நீங்களே கண்டு பிடியுங்கள்..
இப்படிக்கு…
பெயர் வெளியிட விரும்பாத சேவகி

பின்குறிப்பு: இவ்வளவு பெரிய உலகத்தில் இப்படி ஒரு கடிதத்தை படித்ததும் நீங்களாகத் தான் இருக்கும் என்று என் ஏழாம் அறிவு சொன்னது. ஒரு வேளை அது நீங்கள் இல்லையென்றால் தான் எனக்குள் ஆச்சரியம். ஆத்மாவில் எழும் இந்த ஏழாம் அறிவு தவறு செய்வ தில்லை.

யாரிடமும் மூச்சு விடாமல் அமைதியாக இருந்தேன். இது நான் பின்னால் அறிந்தவை.

இரண்டு நாட்கள் கழிந்து சென்னையில் அந்த  வீட்டில்…:

“கொரியர் பார்சல்” என்று அழைப்பு மணி அடிக்க..
கதவைத் திறந்தவள் அதீத சந்தோஷத்தோடு பார்சலை வாங்கி…அட ரொம்ப ஆச்சரியமா இருக்கே…நான் ஞான ஆலயத்துக்கு சும்மா கேட்டுப் பாப்போம் ன்னு எழுதி அனுப்பினா யாரோ நிஜம்மாவே என்னோட அட்ரஸ்
கண்டு பிடிச்சு அனுப்பியிருக்கா பாரேன்…..அப்போ இதெல்லாம் பொய்யில்லை….யார் அனுப்பியிருக்கான்னு பார்க்கலாம்னு பார்க்கும்போது கிடைத்த கடிதத்தைப் படிக்கும் அதே நேரத்தில்….

அவர்கள் வீட்டு  தொலைபேசி மணி அழைக்க….

ஹலோ…யாரது…?.அந்த அறுபத்தி ஐந்து வயது வாசகியின் குரல்….எதிர் முனையில்….

கிடைத்ததா..? நீங்கள் கேட்டது..இந்த டேப் ரெக்கார்டர்.. தானே  என்று. நான் இந்த முனையிலிருந்து கேட்க..

ஒ..ஆமாம்.இப்போதான் பார்சல் வந்து கொடுத்துட்டுப் போனான்….என்று மகிழ்ச்சியில் சொன்னவள் என் குரலை சட்டென அடையாளம் கண்டு கொண்டு…. யார் நீங்கள்  ?  ஏய்….அட….நீயா? எப்ப்டீடீ..நான் என்று கண்டுபிடிச்சே ?  …என்று சந்தோஷமா ஆச்சரியப் பட…எதிர்முனையில் .அந்தக் குரலே குதூகலித்தது..

“ஒரு போன் பண்ணி நேக்கு இதை வாங்கி அனுப்புன்னு சொல்லியிருந்தால் கூட நான் இதைத் தான் செய்திருப்பேன்..” அதை விட்டுட்டு….தலையைச் சுத்தி மூக்கை தொட்டுண்டு….எனக்கு வரக் கோபத்தில்….
பெயர் வெளியிட விரும்பாத வாசகியாம்……இதெல்லாம் தேவையா…இந்த வயதில்..?  நானும் கேலியோடு சொல்ல…

அன்று அந்த விளம்பரத்தைப் பார்த்ததும் இருந்த “அடப் பாவமே” எங்கோ பறந்து போனது.

“ஆச்சரியமாயிருக்கு…..நாந்தான்னு எப்படி சரியாத் தெரிஞ்சுண்டு அனுப்பினே…ஞான ஆலயத்துக்கு போன் பண்ணி கேட்டியா….என்று என்னை என் அம்மா சந்தேகம் கேட்க…

அடப் போம்மா….எல்லாம் என் ஏழாம் அறிவு சொன்னது தான்.. .என்று பெருமையோடு சொல்ல.

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் தரலாமே  என்று அம்மா வாயார வாழ்த்தினாள் என்னை.

இன்றும்  “ஞான ஆலயம் ” வாங்கும்போது ஒருவருக்கொருவர்…பகுதியை ஒரு கடிதம் விடாமல் படிக்கத் தவறுவதே இல்லை.

மின்னல் ஒருமுறைதான் அடிக்குமாம்.  இது ஏழாம் அறிவோ, ஐந்தாம் அறிவோ எனக்குத் தெரியாது.  நிச்சயம் இது ஆறாவது அறிவு இல்லை.

அந்த டேப் ரெகார்டரில் பாடலைக் கேட்கும்போது  அம்மாவைப்  பார்த்தால் , அந்தக் கடிதத்தை பத்திரமாக வைத்திருக்கும் எனக்கு  வருடங்கள் கடந்த நிலையிலும் சிரிப்பு தான் வருகிறது. ஒரு நிகழ்வு ஞாபகச் சின்னமாகியது.
==========================================================================================

Series Navigationதுரத்தல்கல்விக் கனவுகள் – பணம் மட்டும் தானா வில்லன்? (பகுதி -3 நிறைவுப் பகுதி)