ஐம்புல‌ன் அட‌க்க‌ம்

ஐம்புலனை அடக்கிச்

செறித்த அதிகாலை

ஆழ்ந்த உறக்கத்தின்

சோம்பலைத் தின்று

கனவு முளைத்தது.

பெருமான் பெருமாள்

முல்லா இயேசு புத்த‌ன்

வந்து அமர்ந்தனர் என்

ஞான முற்ற‌த்திற்கு.

அவ‌ர்க‌ளுக்கான‌ தேநீர்

த‌யாரிப்பின் மும்முர‌த்தில்

தொலைவில் இருந்த‌

க‌ண்ணாடி போதித‌ர்ம‌னை

உள்வாங்கியிருந்த‌து.

தேநீர் புசித்து புன்முறுவல்

சிந்தி புறப்படலாயினர்

நானும் உடன் புறப்பட்டேன்

அவர்கள் வீடு நோக்கி.

பெருமான் வீட்டுக்

கோபுரநிழல் ந‌ந்திவாக‌ன‌ம்

நவ‌க்கிர‌க‌ம் கால‌பைர‌வர்

அறுபத்து மூவ‌ர்

அகிலாண்டேஸ்வரி

க‌ட‌ந்து மூல‌வரைத் தேடிக்

க‌ர்ப்ப‌கிர‌க‌த்தில் கால‌டி

வைக்கையில் மாராப்பு

விலகி ஒருத்தி

என் கண் பட்டாள்.

சாத்தான்கள் துரத்தத்

தொடங்கின-கனவு

தொலைந்து போன‌து.

-சோமா (sgsomu@yahoo.co.in)

Series Navigationஎல்லாம் தெரிந்தவர்கள்உம்மா கருவண்டாய் பறந்து போகிறாள்…ஹெச்.ஜி.ரசூலின் – பின்காலனிய கவிதைநூல்