‘ஒலிம்பிக்ஸ்’ க்கு முன்பே ஓர் ஒப்புதல் வாக்குமூலம்

மகேஷ் பூபதி மற்றும் ரோஹன் போபண்ணா இருவருமே லியான்டர் பேஸ்ஸுடன் ‘ஒலிம்பிக்ஸ்’ 2012ல் விளையாட ஒப்பாமற் போனதில் ஒரு சர்ச்சை துவங்கியது. பின்னர் இவர்கள் இருவருக்கும் பதில் விஷ்ணு வர்த்தன் என்பவரை லியான்டருக்கு ஜோடியாக அனுப்ப AITA முடிவு செய்த போது அதை அவர் ஏற்க மறுத்தார். இடையே சம்பந்தப் பட்ட மத்திய மந்திரி புகுந்து இரண்டு குழுக்களை அனுப்ப வழி இருக்கும் போது ஏன் இந்த சர்ச்சை என ஒரு போடு போட்டார். உடனே AITA “ஸானியா மிர்ஸா கலப்பு இரட்டையர் பிரிவில் லியான்டருடன் விளையாடுவார் பூபதி-போபண்ணா & ஸானியா-லியான்டர் இரு குழு செல்லும் “என்று அறிவித்தது. என்னை பலி கடா ஆக்கி இந்த சர்ச்சையை முடித்திருக்க வேண்டுமோ என ஸானியா எதிர் வினை புரிந்தார். இவ்வாறாக ‘ஒலிம்பிக்ஸ்’ 2012 இந்தியாவில் களை கட்டியது.

மேற் குறிப்பிட்ட நான்கு வீரர்களும் பல போட்டிகளில் வென்ற சிறப்பான சாதனையாளர்கள். இவர்கள் உலகத் தர வரிசையில் பின்னாடி இருப்பினும் இரட்டையர் போட்டிகளில் வெல்வதில் நம்பிக்கை நட்சத்திரங்களாக இருப்பவர்கள். இவர்களின் நாட்டுப் பற்றையோ அரசாங்கம் மற்றும் AITA வின் கட்டுப் பாட்டில் வழி நடக்கும் பாங்கையோ குறை சொல்லவே இயலாது. மறுபக்கம் இவர்களைப் போன்ற வசதி படைத்த (பணம், குடும்பப் பின்னணி) வீரர்களை நாம் கிரிக்கெட்டில் மட்டுமே காண இயலும். மற்ற எல்லா விளையாட்டுகளிலும் மிகவும் வசதிக் குறைவான கிராமியப் பின்னணி கொண்ட வீரர்கள் அரசாங்கம் ஒப்புக்குத் தரும் ஆதரவையும், நிதியையும் வைத்துக் கொண்டு தமக்கு விளையாட்டில் உள்ள அப்பழுக்கற்ற ஈடுபாட்டால் மட்டுமே தாக்குப் பிடிக்கின்றனர். பதக்கத்தை வென்ற ஒவ்வொருவரும் மனச்சோர்வு தரும் இந்திய அரசு மற்றும் விளையாட்டு ஒழுங்கு அமைப்புகளின் எதிர்மறையான அணுகு முறையை மீறி மேலே வந்து வென்றவர்கள் என்பதில் எள்ளளவு ஐயமுமில்லை. காமன் வெல்த் போட்டிகள் இரண்டு ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் நடந்த போது ஏற்பாடுகளில் இருந்த கேவலங்கள், பின்னர் வெளி வந்த ஊழல்கள் என நாம் தலை குனிய நிறையவே நிகழ்ந்தன.

டென்னிஸின் புகழ் பெற்ற இந்த நான்கு வீரர்களும் மனப் புழுக்கத்துடன் இத்தனை நாட்கள் இருந்தார்கள் என்பது இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஏவுகணைகள், ராக்கெட்டுகள் என்று இந்தியா ஆயுத பலம் காட்டாமல் உலக சாதனை ஏதேனும் புரிய விரும்பினால் அதற்கு ஒரே வழி விளையாட்டுத் துறை தான். ஜப்பான், இரு கொரிய நாடுகள், சில ஆப்பிரிக்க நாடுகள், ஜப்பான் பல ஐரோப்பிய நாடுகள் என இந்தியாவுக்கு நிகரான அல்லது இந்தியாவை ஒப்பிட மிகவும் சிறியவையான நாடுகளெல்லாம் பதக்கங்களை வெல்லும் போது, இத்தனை பெரிய ஜனத்தொகை, நல்ல பொருளாதார ஸ்திரத் தன்மையும் வளர்ச்சியும் ஆன இந்தியா பதக்கப் பட்டியலில் இடம் பெறுவதே பெரிய கேள்வியாய் உள்ளது. அப்படியே வென்றாலும் ஒன்றோ இரண்டோ தான். தஙகம் இல்லாமல் வேறு பதக்கத்தோடு அடக்கமாகத் திரும்புவது சகஜம்.

அரசியல்வாதிகள் புகுந்து விளையாடும் ஒரு துறையாக விளையாட்டுத் துறை அமைந்து விட்டது. சினிமாவில் ‘ப்ன்ச்’ வசனம் பேசும் நடிகர்களுக்குக் கை தட்டும் ரசிகர் கூட்டம் போல் கிரிக்கெட் வீரருக்கு மட்டுமே அமைகிறது. ஏனைய விளையாட்டுக்கள் எவை எவை அதில் நாம் சிறக்கத் தேவையான கட்டமைப்பு மற்றும் பயிற்சியாளர் இருக்கிறார்களா என்பது அனேகரது அக்கறையில் கிடையாது. தமிழ் நாட்டையே எடுத்துக் கொண்டால் சென்னையில் கிண்டியில் உள்ள நீச்சல் குளம் மற்றும் வடசென்னையில் உள்ள ஜவஹர்லால் விளையாட்டு அரங்கம் தவிர் உலகத்தரம் வாய்ந்த ‘அத்லெடிக்ஸ்’க்குத் தேவையான ஆடுகளங்கள் வேறு ஊர்களில் இல்லை. பல பல்கலைக்கழகங்களில் போதுமான அளவு நிலம் இருக்கிறது. மைதானங்களே இருக்கின்றன. ஆனால் மாணவர்களை ஊக்கப் படுத்தி வீரராக உருவாக்கும் திட்டமோ முனைப்போ கிடையாது.

தலைவர்களுக்குத் தெருக்குத் தெரு சிலை, தோரண வாயில் என்று செய்த செலவில் 10% விளையாட்டுத் துறைக்கு செலவழித்திருந்தாலும் பல விளையாட்டுக்களில் எத்தனையோ வீரர் உருவாகி இருப்பர். குழந்தைப் பருவத்திலிருந்தே ஒரு வீரரை உருவாக்க வேண்டி இருப்பதால் மாவட்ட அளவில் நல்ல உலகத் தரம் வாய்ந்த ஆடு களங்கள், மாநில அளவில் ஓய்வு பெற்ற உலக சாதனைப் பின்னணி உள்ள வீரர் பயிற்சியாளர் என்னும் ஏற்பாடு உருவானால் மட்டுமே இன்னும் பத்து வருடம் கழித்து பிற நாடுகளுக்கு சவாலாக நாம் ஒலிம்பிக்ஸ்ஸில் களமிறங்க முடியும். பள்ளிகளில் மாவட்ட அளவில் திறம் பட பதக்கம் வெல்லும் மாணவர் மேற்படிப்பு மற்றும் வேலைக்கு அரசு உத்திரவாதம் தரத் தான் வேண்டும். இல்லையென்றால் இப்போது இருப்பது போல் “படித்து வேலைக்குப் போகும் வழியைப் பார் விளையாட்டு வேண்டாம் ” என்று கூறும் பெற்றோர் மனப்பாங்கு மாறாது.

இன்னொன்று டென்னிஸ் வீரர்களுக்குள் கருத்து வேறுபாடு இருந்து நமக்கெல்லாம் இப்போது தான் தெரியுமே ஒழிய AITA மற்றும் அரசாங்கத்திற்குத் தெரியாமலிருக்க வாய்ப்பில்லை. அவர்கள் அதைப் பற்றி கவலை கொண்டு பெரிய அளவு விரிசல் வராமல் தடுத்திருக்கலாம். டென்னிஸோ அல்லது வேறு விளையாட்டுக்களோ நாம் ஒலிம்பிக்ஸ்’ க்கு முன்பே ஓர் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து விட்டோம். அரசியல் சூதாட்டத்தைத் தவிர வேறு போட்டிகளில் எமக்கு அக்கறையில்லை.

Series Navigationநிகழ்வுப்பதிவு போரூர் த.மு.எ.ச.வின் குறும்படத் திரையிடல்முள்வெளி அத்தியாயம் -16