கண்ணீர் அஞ்சலிகளின் கதை

Spread the love

 

நான் ஏன் ஓர் அச்சகத்தின்  உரிமையாளன்

ஆனேன்….?

ஊரிலுள்ள எல்லோரையும் வழியனுப்பத்தானோ….

எதையும் செய்துபார்க்க வேண்டும் எனு ஆவலினால்

இதையும் செய்துவிடத் துணிந்தேன்.

முதல் போணியே முன் ஏர் ஆகிவிட்டது.

கண்ணீர் அஞ்சலி போஸ்டருக்கு

என் அச்சகமே ராசி என்றாகிவிட்டது.

எனது அச்சகம் வந்த பின்புதான் ஊரில்

அதிகமாய்ச் சாவுகள் நேர்கிறதா

அதிகமாய்ச் சாவுகள் நேர்வதால்தான்

எனது அச்சகம் வளர்கிறதா….

முட்டையிலிருந்து கோழி

கோழியிலிருந்து முட்டை….

சாவுகளில்தான் எத்தனை வகைகள்….!

வயதாகிச் சாவு, குழந்தைச் சாவு,

வாழ்ந்து சாவு, வாழாமல் சாவு,

காதல் தோல்வித் தற்கொலை,

வரதட்சிணைக்கெனவே ஸ்டவ் வெடித்தல்,

சில நாள் நலியாயிருந்து வைகுந்தம்,

பலநாள் போக்குக் காட்டிவிட்டுப் பரலோகம்,

சிவலோக பதவி, இயற்கை எய்துதல்,

காலமாதல், அகால(மரண)மாதல்,

கர்த்தருக்குள் நித்திரை, மவுத் ஆதல்,

எல்லாவற்றுக்கும் மேலாக

எப்படிப்பட்ட

கல்நெஞ்சத்தையும் துளைத்துவிடும்

கொத்துக் கொத்தான

சுனாமிச் சாவு….

எல்லாக்காவியங்களுக்கும்

எனது அச்சகம்தான்

ஏடும் சுவடியும் சப்ளை செய்கிறது;

சொத்துக்காரக் கிழவன்

பிள்ளைகளுக்கிடையே

ஆளுக்கு ஒரு சொத்தைப்

பகிர்ந்துவைப்பதைப் போல்

இந்த ஊரே

கண்ணீர் அஞ்சலி அச்சுவேலையை

எனக்கு ஓதுக்கிவிட்டு

கல்யாணம் காட்சிகளை

மற்ற அச்சகத்தார்க்கு

சாசனம் செய்து வைத்தது போல் ஒரு

மயக்கம் எனக்குள் இருக்கத்தான் செய்கிறது….

தற்சமயம் எனக்குள் ஒரே ஒரு கேள்விதான்-

கண்ணீர் அஞ்சலி அச்சிட்டு அச்சிட்டு

காசு சேர்த்துச் சேர்த்து

வீடும் காரும் வாங்கி விட்டேன்;

கல்யாணப் பெண்ணும் கிடைத்துவிட்டது….

என் திருமணப் பத்திரிகை

அச்சிடும் வேலையை நானே செய்யாட்டுமா

இல்லை….?

**** **** **** ****

Series Navigationஆணோ பெண்ணோ உயிரே பெரிதுபிரயாணம்