கம்பனின் சகோதரத்துவம்

ஹாங்காங்கில் மார்ச் 17ஆம் தேதி நடந்த இலக்கிய வட்டத்தின் போது பேசியது.

சித்ரா சிவகுமார்

உலகம் யாவையும் தாமுள வாக்கலும், நிலை பெறுத்தலும், நீக்கலும் நீங்கலா, அலகிலா விளையாட்டு உடையார் – அவர் தலைவர், அன்னவர்க்கே சரண் நாங்களே.

கம்பனின் கடவுள் வாழ்த்துடன் கம்பன் பற்றிய என் கருத்தினை உங்கள் முன் வைக்க முயற்சிக்கிறேன்.

பள்ளி நாட்களிலும் கல்லூரியிலும் கம்பன் பற்றி என் ஆசிரியர்கள் மிகச் சீரிய முறையில் அறிமுகப்படுத்தினர் என்றே சொல்ல வேண்டும். பாடல்களின் பொருளை மட்டுமே சொல்லிப் பாடம் நடத்தாமல், அந்தப் பாடல்களில் இருந்த நயத்தினையும் எடுத்திக் காட்டியது என் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்களே.

கம்பனின் கவிதைகளில் ஊறித் திளைத்தவர்கள், அவனைப் பற்றி பெருமிதத்துடன் பேசியதை நான் கம்பன் விழாவில் தான் கண்டேன். அப்போதெல்லாம் கம்பன் விழாவிற்குச் செல்வது என்பது நான் அறியாத ஒன்று. ஒரு முறை கம்பன் விழா நடத்திய போட்டியில் வென்ற காரணத்தால், எனக்கு கம்பன் விழாவினைக் காணும் வாய்ப்பு கிட்டியது. கம்பன் பாடல்களில் இத்தனை நயமா என்பதை நான் உணர்ந்தது அப்போது தான். அதன் பிறகு வந்த சில வருடங்களில் கம்பன் விழாக்காட்சிகளைத் தொலைக்காட்சியில் காட்டும் போது தவறாமல் கண்டேன். அதன் பிறகு கம்பன் பற்றி எண்ணவும் இல்லை, கேட்கவும் இல்லை.

ஹாங்காங் வந்த பிறகே, இலக்கிய வட்ட அன்பர்கள் மூலமாக இலக்கியத்தில் இருந்த ஆர்வத்தை சற்றே படித்து, கேட்க வாய்ப்பு கிட்டியது. இரண்டு வருடங்களுக்கு முன் நடிகர் திரு. சிவக்குமார் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்ட போது, அவர் கம்பன் பற்றி, அவரது ஆராய்ச்சியைப் பற்றி சொன்ன போது, கம்பன் பற்றி படிக்க வாய்ப்பு எப்போது ஏற்படும் என்று எண்ணினேன். அவர் கம்பன் பற்றி பேசிய சி.டியை பெற்றதும், அதைக் கேட்டு சில விசயங்களைத் தெரிந்து கொண்டேன்.

வழக்கறிஞர் திரு. இராமலிங்கம் அவர்கள் வந்த போது, கம்பன் பற்றி அதிகமாகக் கேட்டேன். அவர் தந்த புத்தகத்தை இரண்டே நாட்களில் படித்தேன்.

பிறகு திரு. பிரசாத் அவர்கள், மரத்தடியில் வைக்கும் விசயங்களைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இதற்கு நான் இவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த முறை இலக்கிய வட்டத்தில் கம்பன் பற்றிய உரையாடல் என்றதும், பலரும் பல விதத்தில் பேசுவார்கள் என்று எண்ணி, நானும் ஏதாவது ஒரு ஐந்து நிமிடங்கள் சொல்லலாம் என்று எண்ணிக் கொண்டேயிருந்தேன். திரு. குருநாதன் அனுப்பிய மின்னஞ்சல் பெற்ற சில நாட்களில், சகோதரர்களின் தன்மையைப் பற்றி சற்றே தெரிந்து கொண்டால் என்ன என்று ஒரு நாள் காலை மனத்தில் உதித்தது. உடனே அதற்கான தலைப்பும் மனதிலே தோன்றியது. கம்பனின் சகோதரத்துவம். உடன் கணவரிடம் சொன்னேன். அவரும் நல்ல தலைப்பு தான், முயற்சி செய் என்றார். திரு. குருநாதன் அவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி ஒப்புதல் பெற்றேன். முடிவாக நிகழ்ச்சி பற்றி மின்னஞ்சலைக் கண்ட போது, இருவர் மட்டுமே பேசுவதாக இருப்பதைக் கண்டதும் பயந்தே போனேன். சில கருத்துக்களை மட்டுமே ஒரு ஐந்து நிமிடங்கள் பேசலாம் என்று எண்ணிய எனக்கு, உங்கள் முன்னிலையில் பல கருத்துக்களைக் கூற வேண்டும் என்று எண்ணத் தொடங்கினேன்.

நான் கம்பனின் சகோதரத்துவம் என்பதை எப்படிப் பேசலாம் என்று எண்ணிய போது, இராமன்-இலக்குவன், இராமன்-பரதன், வாலி-சுக்கிரீவன், இராவணன்-கும்பகர்ணன், இராவணன்-வீடணன் மற்றும் உடன் பிறவாத போதும் சகோதரர்களாக ஏற்றுக் கொள்ளப்பட்ட இராமன்-குகன், இராமன்-வீடணன் என்று பட்டியல் நீண்டுச் சென்றது.

அதற்காக, கம்பராமாயணத்தின் மூலத்தை இணையத்தில் முதல் நாள் தேடிய போது, எதுவுமே கிட்டாமல், திரு. குருநாதனின் உதவியை நாடினேன். அவர் சென்னை லைப்ரரி ஆன்லைன் பற்றிக் கூறிய பின் தான், கம்பராமாயணத்தின் மூலத்தைப் படிக்க ஆரம்பித்தேன். பிறகு வேறு ஒரு நாள் இணையத்தில் தேடிய போது, விக்கிபீடியாவில் பதம் பிரித்து மூலத்தைப் போட்டிருத்தைக் கண்டு, வேகமாக வேண்டிய பாகங்களை படிக்க ஆரம்பித்தேன். படிப்பதற்கு மிகவும் நன்றாக இருந்தன பாடல்கள்.

நான் அதில், குறிப்பிட்ட அறுவரைப் பற்றி மட்டுமே தெரிந்து கொண்டு சொல்ல முடிவு செய்தேன். இராமன்-இலக்குவன்-பரதன், இராவணன்-கும்பகர்ணன்-வீடணன் இவர்கள் இடையேயான சகோதரத்துவத்தை கம்பன் எப்படி வெளிக்காட்டினான் என்பதே அது.

தசரசனுக்கும் கோசலைக்கும் பிறந்தவன் இராமன். இராமனுடன் பிறந்தவர்கள் மூவர். இலக்குவன், பரதன், சத்ருகனன்.

பிராமண அந்தணரான விச்ரவருக்கும், கைகேசிக்கும் பிறந்தவன் இராவணன். இராவணனுடன் பிறந்தவர்கள் எண்மர். மூத்த சகோதரன் குபேரன், இளைய சகோதரர்கள் வீடணன், கும்பகர்ணன், கரன், துசனன், மகிரவன். சகோதரிகள் கும்பினியும், மூக்கறுபட்ட சூர்பனகையும்.

‘மெய்ப்பொருளுக்கே, ‘இராமன்’, உதித்திடு மற்றைய ஒளியை, ‘பரதன்’ என்று கம்பன் குழந்தைகளுக்கு பெயரிடும் போதே இராமன் எத்தகையவன், பரதன் அதற்கு இணையானவன் என்பதை எடுத்துக் காட்டி விடுகிறான். மேலும் இராமனும் இலக்குவனும் இணைபிரியாதவர்கள், பரத சத்துருகனனும் இணைபிரியாதவர்கள் என்று சகோதர பாசத்தை விளக்கவும் செய்வது, பின்னர் நேர இருக்கும் நிகழ்ச்சிகளின் போது அவர்களது பாசம் எத்தகையது என்று தெரிந்து கொள்ள உதவுகிறது.

‘கோல் வரும் செம்மையும், குடை வரும் தன்மையும்,
சால் வரும் செல்வம்’ என்று உணர் பெருந் தாதைபோல்,
மேல் வரும் தன்மையால், மிக விளங்கினர்கள், தாம் –
நால்வரும் பொரு இல் நான்மறை எனும் நடையினார்

நான்மறை எனும் நடையினார் என்று குமரர்கள் நால்வரும் விளங்கிய காட்சியையும்

நதியும், மை தவழ் பொழில்களும், வாவியும், மருவி,
‘நெய் குழல் உறும் இழை’ என நிலைதிரிவார்.

என்று இராமனும் இலக்குவனும் இணைபிரியாதவர்கள்

பரதனும் இளவலும், ஒருநொடி பகிராது,
இரதமும் இவுளியும் இவரினும், மறைநூல்
உரைதரு பொழுதினும், ஒழிகிலர்.

என்று பரத சத்துருகனனும் இணைபிரியாதிருந்த காட்சியை விளக்குவான் கம்பன்.

இராமனைக் காட்டிற்குச் செல்ல கைகேயி பணித்த போது, இராமனின் நிழலென விளங்கும் இலக்குவன் தன் அண்ணனுக்கு நேர்ந்த கதியினை கேட்டு எப்படி கோபப்பட்டான் என்பதில் இலக்குவனின் பாசம் வெளிப்படுகிறது.

“யாவராலும் மூட்டாத காலக் கடைத்தீயென’ மூண்டு எழுந்தான்.
‘கண்ணின் கடைத் தீயுக, நெற்றியில் கற்றை நாற, விண்ணிற் சுடரும் சுடர் தோன்ற, மெய்ந்நீர் விரிப்ப, உள் நிற்கும் உயிர்ப்பு எனும் ஊதை பிறக்க” நின்றானாம் இலக்குவன்.

‘என்னத்த! என், நீ இறையோரை முனிந்திலாதாய், சன்னத்தன் ஆகித் தனுஏந்துதற்கு ஏது?’

என்று இராமன் இலக்குவன் ஏன் போர் கோலம் பூண்டான் என்று கேட்க

அம் மௌலி சூட்டல் செய்யக் கருதித் தடைசெய்குநர் தேவர் ஏனும்;

துய்யைச் சுடுவெங்கனலின் சுடுவான் துணிந்தேன்

என்று இலக்குவன் கோபத்துடன் சொல்ல, தன்னுடன் கிளம்பி நின்ற சகோதரனை வர வேண்டாம் என்று இராமன்,

‘அன்னையர் அனைவரும், ஆழி வேந்தனும்

முன்னையர் அல்லர்; வெந் துயரின் மூழ்கினார்;

என்னையும் பிரிந்தனர்; இடர் உறாவகை,

உன்னை நீ என்பொருட்டு உதவுவாய்’

என்று கேட்டதும் இலக்குவன் மனம் ஒடிந்து,

‘ஈண்டு, உனக்கு அடியனேன் பிழைத்தது யாது?’

‘நீர் உளஎனின் உள, மீனும் நீலமும்;

பார் உளஎனின் உள, யாவும்; பார்ப்புறின்,

நார் உள தனு உளாய்! நானும் சீதையும்

ஆர் உளர் எனின் உளம்? அருளுவாய்!’

‘ஐய! ஆணையின் கூறிய மொழியினும் கொடியது ஆம்’, ‘செய்துடைச் செல்வமோ, யாதும் தீர்ந்து, எமை, கை துடைத்து ஏகவும் கடவையோ?-ஐயா!

என்று கூறும் இடத்தில் இராமனே தனக்கு எல்லாம் என்பதைப் புரிய வைக்கிறான் இலக்குவன்.

பிறகு பரதன் செய்தியறிந்து இராமனைக் காண வரும் போது, சதோதரனின் தன்மையை அறியாது, பரதன் மேல் இலக்குவனுக்கு எப்படி கோபம் ஏற்பட்டது என்று சொல்கிறான் கம்பன்.

‘மின்னுடன் பிறந்தவாள் பரத வேந்தற்கு, “என்
மன்னுடன் பிறந்திலென்; மண்கொண்டு ஆள்கின்றான்,
தன்னுடன் பிறந்திலென்; தம்பி முன்னலென்;
என்னுடன் பிறந்தயான் வலியன்” என்றியால்.

பரதன் தன் தாய் செய்த தவறுக்கு வருந்தி,

‘நோவது ஆக இவ் உலகை நோய் செய்த
பாவகாரியின் பிறந்த பாவியேன்,
சாவது ஓர்கிலேன்; தவம் செய்வேன் அலேன்;
யாவன் ஆகி, இப் பழிநின்று ஏறுவேன்?

தவ வேடம் பூண்டிருந்த பரதனை இராமன்,

‘வரதன் துஞ்சினான்; வையம் ஆணையால்,
சரதம் நின்னதே; மகுடம் தாங்கலாய்,
விரத வேடம், நீ என்கொல் வேண்டினாய்?
பரத! கூறு’

என்று கேட்கிறான்.

அரசை இராமன் ஏற்க வேண்டும் என்று பரதன் வேண்டி நிற்க

‘உந்தை தீமையும், உலகு உறாத நோய்
தந்த தீவினைத் தாய் செய் தீமையும்,
எந்தை! நீங்க, மீண்டு அரசு செய்க’

“அரசு உன்னுடையதே” என்று இராமன்

‘வரன் நில் உந்தை சொல் மரபினால், உடைத்
தரணி நின்னது என்று இயைந்த தன்மையால்,
உரனின் நீ பிறந்து உரிமை ஆதலால்,
அரசு நின்னதே; ஆள்க”

கூற, பரதன் தனக்குக் கிடைத்த அரசை தான் இராமனுக்குத் தருவதாக,

‘முன்னர் வந்து உதித்து, உலகம் மூன்றினும்
நின்னை ஒப்பு இலா நீ, பிறந்த பார்
என்னது ஆகில், யான் இன்று தந்தனென்;
மன்ன! போந்து நீ மகுடம் சூடு’

என வேண்டுகிறான்.

‘எந்தை ஏவ, ஆண்டு ஏழொடு ஏழ் எனா
வந்த காலம் நான் வனத்துள் வைக, நீ
தந்த பாரகம் தன்னை, மெய்ம்மையால்
அந்த நாள் எலாம் ஆள், என் ஆணையால்.

“நீயே தான் ஆள வேண்டும்” என்று பரதனுக்கு இராமன் ஆணையிடுகிறான். ஆனால் பரதன் “எனக்கு அரசு வேண்டாம் காட்டில் வாழப் போகிறேன்” என்கிறான்.

முனிவனும், ‘உரைப்பது ஓர் முறைமை கண்டிலெம்
இனி’ என இருந்தனன்; இளைய மைந்தனும்,
‘அனையதேல் ஆள்பவர் ஆள்க நாடு; நான்
பனி படர் காடு உடன் படர்தல் மெய்’ என்றான்.

இராமன் மறுத்து,

வானவர் உரைத்தலும், ‘மறுக்கற்பாலது அன்று;
யான் உனை இரந்தனென்; இனி என் ஆணையால்
ஆனது ஓர் அமைதியின் அளித்தி, பார்’ எனா,
தான் அவன் துணை மலர்த் தடக் கை பற்றினான்.

‘ஆம் எனில், ஏழ்-இரண்டு ஆண்டில் ஐய! நீ
நாம நீர் நெடு நகர் நண்ணி, நானிலம்
கோ முறை புரிகிலை என்னின், கூர் எரி
சாம் இது சரதம்; நின் ஆணை சாற்றினேன்.’

என்று ஆணையிடுகிறார். இராமனின் பாதுகை யை ‘செம்மையின் திருவடித்தலம் தந்தீக’ என்று வேண்டுகிறான் பரதன். இராமன் தந்த பாதுகத்தை பெற்றுக் கொண்டு,

அடித்தலம் இரண்டையும், அழுத கண்ணினான்,
‘முடித்தலம் இவை’ என, முறையின் சூடினான்;
படித்தலம் இறைஞ்சினன், பரதன் போயினான்

என்று பாதுகையையே ஆட்சியின் கிரீடமாக எண்ணி எடுத்துச் சென்றதாக கம்பன் வருணிக்கிறான்.

இராமனின் பாதுகை ஆட்சி செய்ய, பரதன் நந்தியம் பதியிலேயே தங்கி விடுகிறான் என்றும் கம்பன் சொல்கிறான்.

பாதுகம் தலைக்கொடு, பரதன் பைம் புனல்
மோது கங்கையின் கரை கடந்து முந்தினான்;
போது உகும் கடி பொழில் அயோத்தி புக்கிலன்;

இப்படி இராமன் மேல் கொண்ட அன்பினாலும் பக்தியினாலும் ஆட்சியை ஏற்காமல் பரதன் இருந்ததாக காதையில் வருகிறது.

இதையே நாம் இராவணனின் சகோதரர்களின் தன்மைகளை ஆராயும் போது, பல ஒற்றுமைகளைக் காணலாம். இராவணன் சீதையைக் கவர்ந்து வந்து, போருக்கும் ஆயத்தமாக நிற்கும் போது, அவனது சகோதரர்களான வீடணனும் கும்பகர்ணனும் இராவணனுக்கு பலவாறு அறிவுரை தருகிறார்கள். இராவணன் அவர்களிடம் கோபமாகப் பேசுகிறான்.

கும்பகர்ணனை இலக்குவனுக்கும் வீடணனை பரதனுக்கும் நான் ஒப்பிட்டுப் பார்க்க விரும்புகிறேன். வீடணன் இராவணனுடன் தீமைக்கு துணை போகாமல் இராமனுடன் சேர்ந்து கொள்ளும் எண்ணம் ஏற்பட்ட பிறகும், கும்பகர்ணனை இராமனுடன் சேர்க்க வேண்டும் என்று எண்ணி, அவனிடம் பேசச் செல்கிறான். அப்போது, எப்படி பரதன் இராமனிடம், “எனக்குக் கிடைத்த அரசை நான் உனக்குத் தருகிறேன்” என்று சொன்னானோ, அதேப் போன்று,

‘எனக்கு அவன் தந்த செல்வத்து இலங்கையும் அரசும் எல்லாம்
நினக்கு நான் தருவென்; தந்து, உன் ஏவலின் நெடிது நிற்பென்’

என்று கம்பன் கூறும் இடத்தில் சகோதரர்கள் உயர்ந்து நிற்கிறார்கள்.

எப்படித் துயர்வரினும் இராமனுடன் இருந்தே தீர வேண்டும் என்று இலக்குவன் முயல்கிறானோ, அதே போன்று கும்பகர்ணன் தனக்கு உயிரே போனாலும், தன் சகோதரனுக்காக உயிர் தரத் துணிந்து நிற்கிறான் என்பதை கம்பன் காட்டுகிறான். வீடணன் கும்பகர்ணனை இராமனுடன் சேரச் சொல்ல வந்த போது, கும்பகர்ணன்,

காலன் வாய்க் களிக்கின்றேம்பால் நவை உற வந்தது என், நீ? அமுது உண்பாய் நஞ்சு உண்பாயோ?

இராமனை விட்டு நீங்குவது அமுது உண்ணாமல் நஞ்சுண்பதற்கு ஒப்பாகும் என்றும்,

‘ஐய! நீ அயோத்தி வேந்தற்கு அடைக்கலம் ஆகி, ஆங்கே
உய்கிலைஎன்னின், மற்று இல் அரக்கராய் உள்ளோர் எல்லாம்
எய் கணை மாரியாலே இறந்து, பாழ் முழுதும் பட்டால்,
கையினால் எள் நீர் நல்கி,கடன் கழிப்பாரைக் காட்டாய்.

என்று தங்களுக்குப் பின் இலங்கையை ஆள வீடணனையன்றி யார் இருப்பார் என்று வருந்துகிறான்.

எவ்வளவு கூறியும் திருந்தாத இராவணனைப் பற்றி கும்பகர்ணன் சொல்வதாகக் கம்பன் சொல்லும் வார்த்தைகள் இன்றளவும் ஒரு சிறந்த அறிவுரையாக அனைவரும் ஏற்க வேண்டிய ஒன்று என்று நான் எண்ணுகிறேன்.
‘கருத்து இலா இறைவன் தீமை கருதினால், அதனைக் காத்துத் திருத்தலாம் ஆகின் அன்றோ திருத்தலாம்? தீராது ஆயின்,பொருத்து உறு பொருள் உண்டாமோ? பொரு தொழிற்கு உரியர் ஆகி, ஒருத்தரின் முன்னம் சாதல், உண்டவர்க்கு உரியதுஅம்மா’.
‘ஆகுவது ஆகும், காலத்து; அழிவதும், அழிந்து சிந்திப் போகுவது; அயலே நின்று போற்றினும், போதல் திண்ணம்; சேகுஅறத் தெளிந்தோர் நின்னில் யார் உளர்? வருத்தம் செய்யாது, ஏகுதி’
என்று வீடணனை வருந்தாமல் செல் என்று அறிவுறுத்துக்கிறான் கும்பகர்ணன்.

மேலும் தன்னால் போர் செய்யாமல் இராமனுடன் சேர்தல் ஆகாத காரியம் என்பதை கும்பகர்ணன் சொல்வதைக் கம்பன் அழகான பாடல் மூலம் எடுத்துச் சொல்வார்.

‘நீர்க் கோல வாழ்வை நச்சி, நெடிது நாள் வளர்த்துப் பின்னைப்
போர்க் கோலம் செய்து விட்டாற்கு உயிர் கொடாது, அங்குப் போகேன்;
தார்க் கோல மேனி மைந்த! என் துயர் தவிர்த்தி ஆகின்,
கார்க் கோல மேனியானைக் கூடிதி, கடிதின் ஏகி,

என்று கூறும் கும்பகர்ணன், வீடணனை துயர் நீங்கி நல்லவர்களுடன் கூடுதல் நலம் என்று அறிவுரை கூறுகிறான்.

இராமன் காடு புகத் துணிந்த போது, இலக்குவன் கோபம் கொண்டு பேசுவான். அதேப் போன்று இராவணன் தவறு செய்யும் போது சகோதரர்கள் கும்பகர்ணனும் வீடணனும் தவறினை இடிந்துரைக்கிறார்கள்.

‘பழியினை உணர்ந்து, யான் படுக்கிலேன், உனை; ஒழி, சில புகலுதல்; ஒல்லை நீங்குதி; விழி எதிர் நிற்றியேல், விளிதி’என்றனன்- அழிவினை எய்துவான், அறிவு நீங்கினான்.

என்று இராவணன் கோபமாக வீடணனிடம் சொல்லும் போது, அமைதியாக வீடணன்

‘புத்திரர், குருக்கள், நின் பொரு இல் கேண்மையர், மித்திரர், அடைந்துளோர், மெலியர்,
வன்மையோர், இத்தனை பேரையும்,இராமன் வெஞ் சரம் சித்திரவதை
செயக் கண்டு, தீர்தியோ?

‘எத்துணை வகையினும் உறுதி எய்தின, ஒத்தன, உணர்த்தினேன்; உணரகிற்றிலை; அத்த! என் பிழை பொறுத்தருள்வாய்’

என்று கூறிவிட்டு வீடணன் செல்வதாகக் கம்பன் காட்டுகிறான்.

உறக்கத்திலிருந்த எழுப்பப்பட்டு, இராவணனைக் காண அழைத்துவரப்பட்ட கும்பகர்ணனை, இராவணன் போருக்கு ஆயத்தப்படுத்தும் போது
அன்ன காலையின், ‘ஆயத்தம் யாவையும் என்ன காரணத்தால்?’
என்று இயம்புகிறான் கும்பகர்ணன்.

அதற்கு இராவணன்
‘வானரப் பெருந் தானையர், மானிடர், கோ நகர்ப் புறம் சுற்றினர்; கொற்றமும் ஏனை உற்றனர்; நீ அவர் இன் உயிர் போனகத்தொழில் முற்றுதி, போய்’ என்றான்.

அப்போது கும்பகர்ணன் இராவணனிடம்

‘திட்டியின்விடம் அன்ன கற்பின் செல்வியை விட்டிலையோ?
இது விதியின் வண்ணமே!’
ஆனதோ வெஞ் சமம்?
அலகில் கற்புடைச் சானகி துயர் இனம் தவிர்ந்தது இல்லையோ?
வானமும் வையமும் வளர்ந்தவான் புகழ் போனதோ?
புகுந்ததோ, பொன்றும் காலமே?’

‘யான் உனக்கு ஒன்று உளது உணர்த்துவது; உணர்ந்து கோடியேல், நன்று அது; நாயக!
நயக்கிலாய் எனின், பொன்றினைஆகவே கோடி; போக்கு இலாய்!

‘கல்லலாம் உலகினை; வரம்பு கட்டவும் சொல்லலாம்; பெரு வலி இராமன் தோள்களை வெல்லலாம் என்பது, சீதைமேனியைப் புல்லலாம் என்பது போலுமால்-ஐயா!

‘தையலை விட்டு, அவன் சரணம் தாழ்ந்து,
நின் ஐயறு தம்பியோடு அளவளாவுதல் உய்திறம்;
அன்று எனின், உளது,வேறும் ஓர் செய் திறம்;

‘பந்தியில் பந்தியில் படையை விட்டு, அவை சிந்துதல் கண்டு,
நீ இருந்து தேம்புதல் மந்திரம் அன்று; நம் வலி எலாம் உடன்உந்துதல் கருமம்’

என்று உணரக் கூறினான்.

அப்போது இராவணன் சினந்து உரைக்கிறான்:
‘உறுவது தெரிய அன்று, உன்னைக் கூயது; சிறு தொழில் மனிதரைக் கோறி, சென்று; எனக்கு அறிவுடை அமைச்சன் நீஅல்லை, அஞ்சினை; வெறுவிது, உன் வீரம்’
‘இறங்கிய கண் முகிழ்த்து, இரவும் எல்லியும் உறங்குதி, போய்’

‘மானிடர் இருவரை வணங்கி, மற்றும் அக் கூனுடைக் குரங்கையும் கும்பிட்டு,
உய் தொழில் ஊனுடை உம்பிக்கும்உனக்குமே கடன்; யான் அது புரிகிலேன்; எழுக போக!’ என்றான்.

இதைக் கேட்ட கும்பகர்ணன் உடனே

‘தருக, என் தேர், படை; சாற்று, என் கூற்றையும்; வருக, முன் வானமும் மண்ணும் மற்றவும்; இரு கை வன் சிறுவரோடுஒன்றி என்னொடும் பொருக, வெம் போர்’

எனக் கிளம்பினான்.

பின்னர் இராவணனை மாற்ற முடியாமல் போன காரணத்தால், போருக்குச் செல்ல முடிவு செய்யும் கும்பகர்ணன், இறுதியில், வல் நெடுஞ் சூலத்தை வலத்து வாங்கி,

‘இன்னம் ஒன்று உரை உளது’

மேலும் கூறுகிறான்:

‘வென்று இவண் வருவென் என்று உரைக்கிலேன்; விதி நின்றது; பிடர் பிடித்து உந்த நின்றது; பொன்றுவென்; பொன்றினால்,பொலன் கொள் தோளியை, “நன்று” என, நாயக விடுதி;
என்று தான் இறப்பது உறுதி என்று கூறுகிறான்.

‘என்னை வென்றுளர் எனில், இலங்கை காவல! உன்னை வென்று உயருதல் உண்மை;
ஆதலால், பின்னை நின்றுஎண்ணுதல் பிழை; அப் பெய்வளை தன்னை நன்கு அளிப்பது தவத்தின் பாலதே.
‘இற்றைநாள் வரை, முதல், யான் முன் செய்தன குற்றமும் உள எனின் பொறுத்தி; கொற்றவ! அற்றதால் முகத்தினில்விழித்தல்; ஆரிய! பெற்றனென் விடை’ என,
பெயர்ந்து போயினான்.

இப்படி அரக்கர்களேயானாலும் தன்னுடைய சகோதரனுக்காக உயிர் துறக்கத் துணிந்து போருக்குச் சென்றான் கும்பகர்ணன்.

பத்தாயிரம் பாடல்கள் உள்ளன. ஒவ்வொன்றிலும் கம்பனின் சொல் நயத்தை பொருள் நயத்தை கருத்துக்களை எடுத்துச் சொல்ல பல விசயங்கள் உண்டு. அத்தனையும் சொல்ல இங்கே நேரம் கிடையாது. கம்பனில் நான் கண்ட சகோதர பாசத்தை உங்களுடன் எனக்குத் தெரிந்த வகையில் பகிர்ந்து கொண்டேன்.

Series Navigationபெண்மனம்