கலாசாரத் தொட்டில்

This entry is part 37 of 42 in the series 25 மார்ச் 2012

– ஜெயந்தி சங்கர்

நீர்நிலைகளை ஒட்டியே உலகக் கலாசாரங்கள் தோன்றி வளர்ந்திருக்கின்றன. மாபெரும் சீனக்கலாசாரமும் ஆற்றோரப் பள்ளத்தாக்கில் தான் தோன்றிருக்கிறது. சீனக் கலாசாரத்திலும், உலகக் கலாசாரத்திலும் மஞ்சள் ஆறு மிக பிரமாண்ட மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறது. யாங்ட்ஸூ மற்றும் மஞ்சள் ஆகிய இரு ஆறுகளும் கலாசாரத் தோற்றத்துக்கும் வளர்ச்சிக்கும் பெரும்பங்காற்றியுள்ளன. குறிப்பாக, மஞ்சள் ஆறு இதற்காற்றிய பங்கு அளவற்றது. நன்கு தூளான சுண்ணாம்பு கலந்த ஆற்று நீர் மஞ்சளாக இருப்பதால் இப்பெயர் வந்திருக்கக் கூடும் என்பார்கள். இவ்வாற்றில் அடிக்கடி ஏற்படும் வெள்ளப் பெருக்கின் காரணமாக ‘சீனாவின் துயரம்’ என்ற பெயரும் இதற்குண்டு.
இன்றைய சீனம் மிக பிரமாண்ட நிலப்பரப்பு. ஆனால், கி.மு 4000 வாக்கிலோ இந்தப் பகுதியில் எண்ணற்ற மொழிகள் கொண்ட எண்ணற்ற இனக் குழுக்கள் வாழ்ந்தன. காலப் போக்கில் எல்லாம் மறைந்து முக்கிய குழுக்களும் மொழிகளும் மட்டுமே ஆதிக்கம் செலுத்தின. நெடுங்காலத் தொடர் மாற்றங்களினால் தான் ஒரே இனமாகவும் ஒரே கலாசாரமாகவும் பரிணாமம் கொண்டது.
மஞ்சள் ஆறு வடக்கில் ஓடுகிறது. தெற்கில் ஓடுவதோ யாங்ட்ஸூ. யாங்ட்ஸூக்கு மேற்கில் ‘மேற்கு ஆறு’ம் யாங்ட்ஸூக்கு கிழக்கில் ‘செவ்வாறு’ம் ஓடுகின்றன. செவ்வாற்றின் பெரும்பகுதி இன்றைய வியட்நாமிற்குள் ஓடுகிறது. கி.மு 4000 வாக்கில் அடர் காடுகளுடன் மிதமான வெப்பமும் கொண்டிருந்த இப்பகுதியெங்கும், குறிப்பாக மஞ்சள் ஆற்றின் தென் பகுதி வளைவில் வாழ்ந்த மக்கள் எல்லோருமே விவசாயத்தில் ஈடுபட்டனர். தினை வகைகள் விளைவித்தனர். சீக்கிரமே, தெற்குப் பகுதிகளில் ஹுவேய் ஆற்றுக்கு அருகில் நெல் விதைக்க ஆரம்பித்து விட்டனர். அன்றைய காலகட்டத்தில் வாழ்ந்தவர்கள் ஆதிவாசிகளே. வீட்டு விலங்குகளை வளர்க்கத் தெரிந்திருந்த போதிலும், தொடர்ந்தும் வேட்டையிலேயே அதிக நாட்டம் கொண்டிருந்தனர். அன்றைய இப்பகுதி கிராமங்களில் வீட்டு விலங்குக்கு நிகராக வனவிலங்குகளும் இறைச்சிக்கும் தோலுக்கும் பயன்படுத்தப்பட்டன. பதிவுகள் இல்லாத காரணத்தால், இக்கால மக்களைக் குறித்து அதிகமாக அறிவதற்கில்லை. கிடைத்த சொற்ப பொருட்களிலிருந்து ஆய்வாளர்களால் அதிகமாக எடுத்துரைக்கவும் முடியவில்லை. ஆதிவாசி இனங்களுக்கிடையே சண்டைகளும் பூசல்களும் இருந்தனவென்றும் மூதாதையர் வழிபாடு நடைமுறையில் இருந்ததென்றும் அனுமானிக்கிறார்கள்.
பல்வேறு சோதனைகளையும் இக்கட்டுகளையும் கடந்து தான் இப்பகுதி தொடர் சீனக் கலாசாரத்துக்கு வழி வகுத்துள்ளது. இலக்கிய ஆக்கங்களிலும் ஓவியங்களிலும் தூரிகையெழுத்தோவியங்களிலும் பதாகைகளிலும் மஞ்சள் ஆறு தான் தேசத்தின் தாய் என்று உருவகப்படுத்தப் படுகிறது. மஞ்சள் ஆற்றின் பிள்ளைகள் என்றே தம்மைக் கருதும் சீனர் மஞ்சள் ஆறு மட்டுமில்லா விட்டால் தமக்கு ஆன்மபலமே இல்லை என்று திடமாக நம்புவர்.
மஞ்சள் ஆறு என்ற பிரயோகம் முதலில் மேற்கு ஹான் காலத்தில் (கி.மு 206 – மி.பி 9) உருவான ‘ஹான் புத்தகம்’ என்ற நூலில் குறிக்கப்பட்டுள்ளது. நடக்கவே முடியாத செயல்களைக் குறிக்கும் போது ‘மஞ்சள் ஆறு தெளிவாக ஒடும் போது’ என்ற சொற்றொடரைப் பயன்படுத்துவர். இவ்வாற்றை ‘சேற்று நீரோட்டம்’ என கவித்துவமாக குறிப்பிடப்படுவதுண்டு. எழுத்து, வேட்டை, பொறிவைத்தல், மீன்பிடித்தல் போன்றவற்றைக் கண்டுபிடித்த ஃபூ ஸி, விவசாயத்தையும் வணிகத்தையும் கண்டுபிடித்த ஷென் நோங், அரசாங்கத்தையும் தாவோ தத்துவத்தையும் கண்டுபிடித்த மஞ்சள் மாமன்னர் ஆகிய இம்மூவரும் ‘மூன்று கலாசார நாயகர்கள்’ என்று வரலாறு மற்றும் புராணங்களில் கொண்டாடப் படுகிறார்கள்.
அந்தக் காலகட்டத்தைத் தொடர்ந்து, யாவ் (கி.மு 2350), ஷுன் (கி.மு 2250) மற்றும் யு (கி.மு 2205) ஆகிய மூன்று அரசரிஷிகளும் கலாசார அடித்தளத்திற்கு மிக உதவியதற்கான பதிவுகள் பலவுண்டு. கூரிய அறிவு, தெளிவு, நன்னடத்தையுடன் நாடாண்டனர். பின்னாளில் வந்த மன்னர்கள் அரசாட்சி முறைகளில் நன்மையும் தீமையும், உயர்வும் தாழ்வும் மாற்றி மாற்றி வெளிப்படுத்திருந்தனர். வரலாற்று வல்லுனர்கள் இம்மூவரின் காலத்தையே மிக உன்னதமான ஆட்சிக்காலம் என்று வகுக்கிறார்கள். யான், சமூகத்தில் நல்லிணக்கமும் நல்லொழுக்கமும் முளைத்து வளரச் செய்தவர். நான்கு பருவங்கள், எடையளவுகள், கால அளவுகள் ஆகியவற்றை முறைப்படுத்தியவர் ஷுன். இம்மூவரில் இறுதியாக ஆண்ட மன்னர் யு, மஞ்சள் ஆற்றின் சீற்றத்தால் ஏற்பட்ட பிரமாண்ட வெள்ளத்திலிருந்து மக்களைக் காப்பாற்றினார். ஸியா என்ற அரச பரம்பரை (கி.மு 2205-1766) உருவாகக் காரணமானார். நற்குணங்களும் ஞானமும் கொண்டு தான் முடியாட்சி தொடங்கியது. கொடுமையும் நிலையற்ற குணமும் கொண்ட ச்சியே என்ற அரசருடன் உன்னதங்கள் யாவும் சரிந்தழிந்தன. நாநூறாண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் கி.மு 1766 வாக்கில் ஸியா முடியாட்சி தகர்க்கப்பட்டு ஷாங் முடியாட்சி தோற்றுவிக்கப்பட்டது.
தொல்லியல் மற்றும் அகழ்வாராய்ச்சிக் கண்டுபிடிப்புகளில் இதுவரை இவற்றை நிரூபிக்கக் கூடிய எதுவுமே கிடைக்கவில்லை. அதனால், இவற்றையெல்லாம் புராணங்களில் வைத்து தான் இன்னமும் பார்க்கிறார்கள். இரண்டு முக்கிய விஷயங்களை மறக்கலாகாது. வரலாறுகள் எப்போதுமே முழு உண்மைகளின் மீது கட்டமைக்கப் படுவதில்லை. கலாசாரம் மிக முக்கியமானதென்று வரலாறை நம்பும் போது அதன் முக்கியத்துவம் முழு உண்மைகளை விடவும் அதிகமாகி விடுகிறது. இரண்டாவதாக ஷாங் முடியாட்சி, ஸியா அரசாட்சிக்கு அடுத்ததாக வந்தது. அகழ்வாராய்ச்சி ஆதாரங்கள் கிடைத்த 1920கள் வரை இந்த முடியாட்சியும் புராணங்களில் தானே வைக்கப்பட்டிருந்தது. இதைப் போலவே ஸியாவைக் குறித்தும் அதற்கு முன்பான காலங்கள் குறித்தும் ஆதாரங்கள் எதிர்காலத்தில் கண்டிப்பாகக் கிடைக்கும் என்பதே அகழ்வாளர்களின் நம்பிக்கை.
ஷாங் மன்னர் அன்யாங் என்ற நகரைத் தலைநகராகக் கொண்டு அரசாண்டார். இவரது தேசம் பல்வேறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு சிற்றரசர்களால் ஆளப்பட்டது. பெயரளவில் தான் இவர்கள் அரசர்கள். மன்னர் நினைத்தால் பதவியிலிருந்து இறக்கும் அதிகாரம் படைத்தவர். அமானுஷ்யங்களில் நம்பிக்கை கொண்ட சிற்றரசர்கள் உதவிக்கு இறைசக்தியைத் தொழுதனர்.
ஸியாவில் தொடங்கி ஷாங் காலத்தில் தொடர்ந்து டாங் முடியாட்சி வரையில் மஞ்சள் ஆறு எப்போதுமே அரசியல், பொருளாதாரம் மற்றும் கலாசாரத்துடன் பின்னிப் பிணைந்தவாறே தான் இருந்து வந்துள்ளது. அத்துடன், விஞ்ஞான தொழில் நுட்பங்களிலும் இந்தப் பகுதி எப்போதுமே முன்னணியில் இருந்து வந்திருக்கிறது. மஞ்சள் ஆற்றுக் கலாசாரத்தின் கொடையாக மண்பாண்டங்கள், பட்டு, வெண்கலம், சீனச் சித்திர எழுத்துக்கள் என்று பெரியதொரு பட்டியலே இருக்கிறது.
மஞ்சள் ஆற்றுக் கலாசாரம் கி.மு 4000 முதல் கி.மு 2000 வரையிலான 2000 ஆண்டுகள் அடங்கிய காலத்தில் தொடங்கியிருக்கலாம் என்பர். இந்தக் காலகட்டத்தில் குழுக் கலாசாரங்கள் தழைத்தோங்கியுள்ளன. ஆனால், துரதிருஷ்ட வசமாக அந்தக் குழுக்களில் பல முற்றிலும் அழிந்தொழிந்தன. ஆற்றுக்கருகில் தோன்றியுருவான இனக்குழுக்கள் மட்டுமே தப்பி, தொடர்ந்தும் துடிப்புடன் செழித்து முன்னேறின. சீனக்கலாசாரத் தொட்டிலாக அறியப்பெறும் இந்தப் பகுதியில் தோற்றங்களும் மறைவுகளும் ஒரே காலத்தில் நடந்துள்ளன. கலாசாரம் செழித்த சகாப்தம் வரலாற்று முக்கியத்துவம் பெற்றதே அரசாட்சி முறை அமுலுக்கு வந்த போது தான்.
குன்லுன் மலைகளில் தொடங்கி பசிஃபிக் பெருங்கடல் வரை நீளும் மஞ்சள் ஆறு சீனத்தைக் குறிக்கும் சின்னமாகவே கருதப்படுகிறது. 5464 கிலோமீட்டர் நீளம் கொண்ட சீனத்தின் இரண்டாவது நெடிய ஆறு, ஒன்பது மாநிலங்களைக் கடந்து கென்லி என்ற இடத்தில் போஹாய் கடலில் சென்றடைகிறது. மஞ்சள் வண்டலை மங்கோலியா வரைக்கு கடத்தும் இவ்வாற்றை சீனத்தில் ஹுவாங் ஹே என்றழைப்பார்கள். இரண்டு பெரும் ஆறுகள் ஓடியும் கூட சீனத்தில் 10% நிலம் மட்டுமே பயிரிடுவதற்கு ஏற்ற தன்மை கொண்டது. சீனா மலைகள் சூழப்பட்டிருக்கிறது. இதனால் அந்நாளில் வாணிக இடப்பெயர்வுகளும் மிகக் கடினமானது. ஆற்று நீரோட்டம் படகுகள் செல்ல நல்ல போக்குவரத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.
சீனர்களின் இயல்புகளான கடின உழைப்பு, சிரத்தை, திடசித்தம் ஆகியவற்றைப் பிரதிபலிப்பதாக நம்பப்படும், நூற்றுக்கணக்கான கிளை நதிகளைக் கொண்ட மஞ்சள் ஆறு வழிநெடுக ஏராளமான புல்வெளிகள், பாலைகள், சமவெளிகள் போன்ற நிலங்களை வளப்படுத்துகிறது. சீனர்களின் பெருமையாகத் திகழ்கிற மஞ்சள் ஆறு வடக்கே உள்ளடங்கிய மங்கோலியாவின் புலிவெளிகளில் அமைதியாக ஓடும். பெருஞ்சுவருக்கு அப்புறமிருக்கும் இப்பகுதிகள் வண்ண மலைகள், நதிகள், புல்வெளிகள், பாலைகள் மற்றும் ஏரிகளுடன் மிகமிக அழகாகக் காட்சியளிக்கும். ஆடல் பாடல்களின் பிரதேசமாக அறியப் பெறும் இங்கு குதிரையேற்றம், மல்யுத்தம், வில்வித்தை ஆகியவை ஆண்களுக்குத் தெரிந்திருக்க வேண்டிய மூன்று முக்கிய திறன்களாக அறியப் படுகின்றன. கலாசார வளர்ச்சிக்கு பதிவுகள், அகழ்வுத்தலங்கள், வரலாற்று இடங்கள் ஆகிய பலவும் இம்மக்களின் கணிசமான பங்காகும்.
நூற்றாண்டுகளாகப் படியும் வண்டல் மற்றும் கரையினால் ஏற்படும் மோசமான பல வெள்ளப் பெருக்குகளை ஏற்படுத்தியது. கடந்த 3000-4000 ஆண்டுகளுக்குள் 1,593 முறை இவ்வாற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக கருதப்படுகிறது. 1887 மற்றும் 1931ம் ஆண்டுகளில் ஏற்பட்ட வெள்ளத்தில் ஆறு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இறந்தனர். 1938ம் ஆண்டு ஜூன் 9ம் தேதி இரண்டாம் சீன – ஜப்பானியப் போரின் போது ஜப்பானிய துருப்புகளின் முன்னேற்றத்தை தடுக்கும் நோக்கில் சியாங் காய் ஷேக் தலைமையிலான சீனத் துருப்புகள் ஆற்றின் கரைகளை உடைத்துப் பெரிய வெள்ளத்தை வேண்டுமென்றே உருவாக்கினர். இந்த வெள்ளத்தில் 54,000 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பு நீரில் மூழ்கி 500,000 – 900,000 வரையிலான உயிர்கள் பலியாகின. ஜப்பான் தரப்பில் பலியான துருப்புகளின் எண்ணிக்கை விபரம் தெரியவில்லை. ஜெங்ஜோவ்வை ஜப்பானியர் ஆக்கிரமிப்பதைத் தடுக்க முடிந்தாலும் வூஹன்னை கைப்பற்றுவதைத் தடுக்க முடியவில்லை.
மஞ்சள் நதியில் அடிக்கடி ஏற்படும் வெள்ளப் பெருக்கிற்குக் காரணம் புரியாமல் திகைத்துப் போன முற்காலச் சீன மக்கள் மூட நம்பிக்கையின் காரணமாக மஞ்சள் ஆற்றை ‘மாமா நதி’ என்று அழைத்தனர். வாரிங் காலத்தில் யெயி என்ற நகரிலிருந்த ஊழல் மிகுந்த அதிகாரிகளும் அவர்களுக்கு உடந்தையான சூனியக்கிழவிகளும் மக்களது மூட நம்பிக்கையைப் பயன்படுத்தி ஏராள செல்வம் கொழித்து வந்தனர். நதி மாமாவுக்கு மனைவி இல்லாத மனக் குறைதான் வெள்ளப் பெருக்கிற்குக் காரணம் என்று நிறுவி ஆண்டுதோறும் ஓர் அழகிய இளம் பெண்ணை நதிமாமாவுக்கு மனைவியாகத் தேர்ந்தெடுத்து அலங்கரித்து கட்டிலில் படுக்க வைத்து பணமும் நகைகளும் குவித்து வைத்தனர். சூனியக்காரிகள் மந்திரம் சொல்ல, அதிகாரிகள் பணத்தையும் நகைகளையும் சுருட்டிக் கொண்டு அப்பெண்ணைக் கட்டிலோடு ஆற்றில் தள்ளினர். ஆண்டுதோரும் இச்சடங்கு தொடர்ந்தது. நதி மாமாவின் மனக் குறை தான் தீர்ந்தபாடில்லை.
சிமன்போ என்றொரு அதிகாரி பதவியேற்று அவ்வூருக்கு வந்தார். இந்தக் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்தவர் நதி மாமாவுக்கு திருமணம் நடக்க ஏற்பாடான நாளன்று ஆற்றங்கரைக்கு வந்ததும் சூனியக்காரியும் ஊழல் அதிகாரிகளும் மகிழ்ச்சியடைந்து நதி மாமாவுக்கு மனைவியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அழகிய இளம் பெண்ணைக் காட்டினார்கள். “இந்தப் பெண் அத்தனை அழகாக இல்லையே. வேறொரு பெண்ணைத் தேர்ந்தெடுங்கள்,” என்று கூறிவிட்டு சூனியக்கிழவியைப் பார்த்து, “இன்னும் இரண்டே நாட்களில் நல்ல அழகான மனைவியைத் தேர்ந்தெடுத்து அனுப்புகிறோம் என்று நீ போய் நதி மாமாவிடம் சொல்லிவிட்டு வா” என்று கூறி அவளை ஆற்றில் தள்ளிவிட்டார். இரண்டு நாட்கள் கழிந்து. “என்னாயிற்று கிழவிக்கு? இன்னமும் திரும்பவில்லையே. நீ போய் பார்த்து வா” என்று ஓர் ஊழல் அதிகாரியை நீருக்குள் தள்ளினார். இவ்வாறாகப் பல சூனியக்காரிகளும் ஊழல் அதிகாரிகளும் நதி மாமாவைப் போய்ச் சந்திப்பதற்கென ஆற்று நீரில் தள்ளிவிடப்பட்டனர். நதி மாமாவுக்கு மனைவியை அனுப்பும் பழக்கம் அதோடு மறைந்ததில் மக்கள் மனம் மகிழ்ந்தனர். அதிகாரி சிமன்பாவ் மக்களை ஒன்று திரட்டி ஆற்றைத் தூர்வாரினார். கால்வாய்கள் வெட்டினார். வெள்ளப் பெருக்கின் கொடுமையெல்லாம் ஓய்ந்து விவசாயம் செழித்தது. நதிப்படுகையில் புதைந்துள்ள இயற்கை வளங்கள் பயன்பட்டன. இன்றைக்கோ எண்ணற்ற நீர்மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட்டு வளம் கொழிக்கும் பூமியாக மஞ்சள் நதிப் பள்ளத்தாக்கு மாறிவிட்டது.
ஹாக்கா என்ற இனக்குழு தான் ஆதியில் மஞ்சள் ஆற்றங்கரையோரத்தில் தோன்றிய இனம் என்று நம்பப்படுகிறது. இவர்களை ‘கேய்ஜீ’ என்பர் மாண்டரின் மொழியில். தொடக்க கால ‘ஹான்’ சீனர்களான ஹாக்கா இனத்தவர்களில் அரசகுல ரத்தம் ஓடுவதாக நம்புவோர் உண்டு. ஹாக்கா இனத்தோர் ஹான் கலாசாரத்தைத் தூக்கிப் பிடிப்பவர்களாக இருக்கலாம். ஆனால், 2000 ஆண்டுகால இடப்பெயர்வு வரலாறுடைய இவர்கள் இனத்துக்கு வெளியில் பெண்ணெடுத்தும் பெண்கொடுத்தும் நீர்த்துப் போனார்கள் என்பது பெரும்பான்மையோர் வாதம். மற்ற மற்ற சீன இனங்களோடு கலந்து போன இவ்வினம் மெதுமெதுவாக தெற்கு வந்து ஜியாங்ஸி, ஃபுஜியான், குவாங்தோங் ஆகிய மாநிலங்களில் வாழ ஆரம்பித்தனர்.
சடங்கு சம்பிரதாயங்கள், உணவு, பேசுமொழி போன்ற கலாசார இயல்புகளைக் கட்டிக் காப்பதற்குப் பெயர் போனவர்கள் ஹாக்கா இனத்தவர். சீனர்களைப் பிரதிநிதிக்கும் இனமாகச் சொல்வார்கள். இதற்கான வரலாற்று வேர் 2200 வருடங்களுக்கு முன்பான ச்சின் அரசாட்சிக்கும் முந்தையகாலத்தில் இருக்கிறது. கலாசாரச் சங்கிலியைக் காப்பதில் ஹாக்கா இனத்தவர்களுக்கு பயங்கரப் பிடிவாதமுண்டு. வடக்கிலிருந்து வந்த ஆதிக்க சக்திகளிலிருந்து தப்புவதற்கு தான் முதன்முதலில் இவர்கள் இடம்பெயர்ந்தார்கள். போய்ச் சேரும் ஊர்களில் உள்ளூர் ஆட்களோடு கலந்தும் சட்டென்று பழக மாட்டார்கள். கடும் உழைப்பாளிகளான இவர்கள் மிக மோசமான வானிலை கொண்ட வாழ்நிலங்களிலும் விடாமுயற்சியுடன் காலூன்றும் திடமனம் படைத்தவர்கள். ஹாக்கா இனத்தோர் தான் சீனரில் ஆக அதிக பழமையில் ஊறிய சிந்தனைகள் கொண்டவர்கள் என்றறியப் பெறுகிறார்கள். ஆபத்துகளைக் கண்டு இவர்கள் ஓடுவதில்லை. வாய்ப்புகளைப் பிடித்துக் கொண்டு வேறிடங்கள் போகும் தைரியசாலிகள். துருவத்தில் இருக்கும் சீன உணவகத்தை நடத்துபவர் ஹாக்கா சீனர் என்றொரு நகைச்சுவையும் சொல்வார்கள். அந்த அளவுக்கு உலகின் எந்த மூலையிலும் இவர்கள் வாழ்வதைப் பார்க்கலாம்.
பிரமாண்ட மஞ்சள் தொட்டிலில் பிறந்த சீனப்பிள்ளைகள் இன்றைக்கு உலகெங்கும் பரந்து சிதறியிருக்கிறார்கள். 1.2 பில்லியன் சீனர்களில் சுமார் 7% பேர் ஹாக்கா வழித்தோன்றல்கள் என்று தம்மைச் சொல்லிக் கொள்கிறார்கள். இன்னும் கூடவே இருக்கும் என்று சொல்லப் படுகிறது. எண்ணற்ற இடப்பெயர்வுகளாலும் மற்ற இனங்களுடன் கலந்து போனதாலும் நிறைபேருக்குத் தமது முன்னோர்கள் குறித்து தெரியாமலே இருக்கிறது. கடந்த நூறாண்டுகளில் ஹாக்கா இனத்தவர் தென்கிழக்காசியா, கிழக்கு ஆஃபிரிக்கா, ஐரோப்பா, தென்னமெரிக்கா, கனடா, வட அமெரிக்கா போன்ற பல்வேறு நாடுகளுக்கு இடம்பெயர்ந்து வாழ்கிறார்கள்.
ஷாங் முடியாட்சியின் தலைநகரான ஜெங்ஜோவ் தான் அன்றிலிருந்து இன்று வரைக்கும் வணிக்க நகரமாக விளங்குகிறது. பழஞ்சீனத்தில் வாணிகம் தொங்கிய புள்ளியிது. இன்னொரு நகரான ஷாங்தோங் ‘அறிவாளிகள் வாழும் அழகிய ஊர்’ என்றறியப்படுகிறது. முற்காலத்தில் கிழக்கில் ச்சி அரசாலும் மேற்கில் லூ அரசாலும் ஆளப்பட்டதால் இதை ‘ச்சி மற்றும் லூ நகரம்’ என்றும் சொல்வார்கள். மஞ்சள் ஆற்றங்கரையோரத்தில் காண வேண்டிய, கண்ணையும் கருத்தையும் கவரும், அசரடிக்கு சுற்றுலாத்தலங்கள் ஏராளமாக இருக்கின்றன. குறிப்பாக, ஹென்னென் பகுதியில் மலைகள், காடுகள், நதிகள், அருவிகள், சமவெளிகள், புல்வெளிகள் என்று இயற்கைக் காட்சிகள் எல்லாமே மயக்கக் கூடியவையாக இருக்கின்றன. மத்தியச் சமவெளியில் ராட்சத யாளியாக கிடக்கும் மஞ்சள் ஆறு சன்மென் மலைகளுக்கிடையில் ஓடும் போது கம்பீரமும் மென்மையும் கொள்வதைக் காணலாம்.
ஆற்றங்கரையோரம் சுற்றுப்பயணிகள் இயற்கையை மட்டுமின்றி வரலாறு மற்றும் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் முதல் மஞ்சள் மாமன்னர் ஃபூஸியின் கல்லறை இருக்கும் யாங்ஷாவ் கலாசாரத் தலம், சன்மென் என்ற ஊர், ஆயிரமாண்டு பழமை கொண்ட லுவோயாங், வணிகத் தலைநகர் ஜெங்ஜோவ், பழங்காலத் தொங்கு சாலை, ஹாங்கூ கணவாய், குவான் காடுகள், வெண்குதிரைக் கோவில், புத்தாயிர ஆண்டின் நகரம், ஸியான் நகரின் காட்டு வாத்துக் கோபுரம், டெர்ரகோட்டா போர்வீரர்கள், ச்சின் முடியாட்சியின் (கி.மு 221-206) முதல் மன்னரின் குதிரைகள், யின்ஷுவான் நகரின் ஹாய்பாவ் கோபுரம், லியூஜியா மலையின் பிங்கிலிங் குகைகள், ஊற்று நகரான ஜினன், தியான்ஷ்யூ பகுதியின் மாய்ஜோ குகைகள், ஸோங் காலத் (960-1279) தலைநகர் உள்ளிட்ட எண்ணற்ற இடங்களைக் காணலாம். ஒவ்வொரு இடமும் மிகச் செழுமையானதும் செறிவானதுமான கலாசார முக்கியத்துவத்துடன் விளங்குகின்றன.
ச்சூஃபூ என்ற கன்ஃப்யூஷியஸ்ஸின் பூர்வீக ஊர் மற்றும் மென்ஸியஸின் ஊரான ஜோவ் கிராமம் ஆகியவை மிக முக்கிய வரலாற்றுத் தலங்கள். அருகிலே இருப்பது தாய் மலை. பெருமதிப்பிற்குரிய ஐந்து மலைகளுள் ஒன்று இது. கிழக்கில் இருக்கும் இம்மலை சூரியோதயத்தின் போது மிக அழகாக இருக்கும். ‘பத்தாயிரம் புத்தர்கள் தெரு’வும் இப்பகுதியில் தான் இருக்கின்றது. யின் முடியாட்சியைப் பற்றிய ஆவணங்களும் யின் முடியாட்சியின் சடங்கு சம்பிரதாயங்கள், அரசியல், கலாசாரம் ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் அரிய பொருட்களும் அடங்கிய காட்சியகம் ச்சூஃபூவில் இருக்கிறது.
மஞ்சள் ஆறு உற்பத்தியாகும் மலைப்பகுதியிலிருந்து உள் மங்கோலியாவின் வடக்கு நோக்கி திரும்பும் பகுதி வரை ஆற்றின் மேல் பகுதி எனவும் ஹெனான் மாநிலத்தின் ஜெங்ஜோவ் வரை உள்ள ஆற்றுப்பகுதி இடைப்பகுதி என்றும் போஹாய் கடலில் கலக்குமிடம் வரை கீழ்ப் பகுதி என்றும் பிரிக்கின்றனர். மஞ்சள் ஆறு மற்றும் அதன் துணைநதிகளின் 8,384 மைல் தொலைவை 2007ல் மதிப்பீட்டு முடிவுகள் சேகரிக்கப்பட்டு, ஆற்றின் மூன்றில் ஒரு பாகம் விவசாயம் மற்றும் தொழில் துறையின் பயன்பாட்டுக்கு ஏற்றதல்ல என கணிக்கப்பட்டது. ஆலைகளிலிருந்து வரும் கழிவுகளும் நகரங்களில் இருந்து வரும் கழிவுகளுமே காரணமாகும். மண்ணரிப்பு காரணமாக முன்பு 8,000 சதுர கிலோ மீட்டராக இருந்த மஞ்சள் ஆற்றின் கழிமுகப் பரப்பு ஆண்டு தோறும் குறைந்து வருவதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் மஞ்சள் ஆறு மேட்டுநிலத்திலிருந்து 1.6 மில்லியன் டன் வண்டலைக் கொணர்கிறது. மிக அதிகளவிலான வண்டல், குறைவான நீர் வரத்து உள்ள காலங்களில் ஆற்றின் அடியில் படிகிறது. இதனால் ஆற்றின் உயரம் அதிகரிக்கிறது. மிக அதிக நீர்வரத்துள்ள காலங்களில் வெள்ளம் ஏற்பட்டு கரையை உடைத்து அருகிலுள்ள நிலங்களில் பாய்கிறது. வெள்ளம் வடிந்த பின்பும் ஆற்றின் அடி உயர்ந்திருப்பதால் ஆறு பழைய பாதைக்கு திரும்பாமல் வேறு பாதையில் ஓடுகிறது. சமீபகாலங்களில் கரையின் பலத்தை மேம்படுத்தி வெள்ளத்தை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகள் செய்யப்படுகின்றன. 1950ம் ஆண்டில் எடுக்கப்பட்டதை விட தற்போது ஐந்து மடங்கு விவசாய நீர் எடுக்கப்படுவதால் முன்பை விட அதிக காலம் உலர்கிறது. அதனால், நீர் பங்கீட்டுத் திட்டத்தில் யாங்ட்ஸூ ஆற்றின் உபரிநீரை மஞ்சள் ஆற்றுக்குத் திருப்பிவிட பல்வேறு கட்டப் பணிகள் நடக்கின்றன. jeyanthisankar@gmail.com
(முற்றும்)
சீனநாகரிகம் வளர்ந்த கதை
என்ற தலைப்பில்
அம்ருதா – செப்டம்பர் 2011
ஜெயந்தி சங்கர்
சூழலையும் சமூகத்தையும் துருவி ஆராய்ந்து எளிய நிகழ்வுகளை வாழ்வனுபவமாக சிருஷ்டிக்கும் இவரது ஆற்றலானது உலகளாவிய தமிழிலக்கியப் பெருந்திரையில் இவருக்கென்றொரு நிரந்தர இடத்தைப் பொறித்து வருகிறது. தனது வாழ்விடத்தின் நிகழ்வுகள், நிலப்பரப்பு, பண்பாடு, சமூகம் ஆகியவற்றை சிறுகதைகளாகவும் நெடும் புனைவுகளாகவும் எழுதி அவற்றை உலக அனுபவங்களாக்குவதே இவரது எழுத்தின் வெற்றி. சிங்கப்பூரைக் களமாகக் கொண்ட எளிய எதார்த்த நடைக்காக நன்கு அறியப் பெறும் இவரது சிறுகதைகள் பல்வேறு தொகுப்புகளிலும் இடம் பெற்றுள்ளன. இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பா, ஸ்ரீலங்கா, மலேசியா போன்ற பல்வேறு நாடுகளில் எண்ணற்ற சிறுகதைகள் கட்டுரைகள் பிரசுரமாகியுள்ளன. ஈரம், நுடம், நாலேகால் டாலர், தையல், தம்மக்கள் போன்ற இவருடைய எண்ணற்ற சிறுகதைகள் பரவலான கவனத்தைப் பெற்றுள்ளன. 6 சிறுகதைத் தொகுப்புகள், 5 நாவல்கள், 1 குறுநாவல் தொகுப்பு, 1 சீனக் கவிதைகள் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். ஒவ்வொரு நூலும் ஒவ்வொரு வகையில் முக்கியத்துவம் வாய்ந்தது. கனடாவின் – தமிழ் இலக்கியத் தோட்டத்தின் ’இயல் விரு’தின் நடுவர் குழுவில் இடம் பெற்றுள்ளார். சிங்கப்பூர் தேசிய கலைகள் மன்றம் அக்டோபர் 31st 2009ல் ‘Under Covers’ என்ற கருப்பொருளில் கொண்டாடிய சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவில் ’ஒரே போன்ற இருவேறு ’வடு’க்கள்’ (‘Scars so similar and yet so different’) என்ற தலைப்பிலும் 4-01-09 ல் இலக்கிய வட்டத்தில் ‘நவீன தமிழ்ப் புனைவுகளில் பேசுபொருள்’ என்ற தலைப்பிலும் உரையாற்றியுள்ளார். அத்துடன், மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தினால் 9th-10th அக்டோபர் 2010ல் சிறுகதைக் கருத்தரங்கில் பங்குபெற அழைக்கப்பட்டார். ‘அயலில் தமிழிலக்கியம்’ என்ற தலைப்பில் இவர் ஆற்றிய உரை நல்ல வரவேற்பைப்பெற்றது. சீனக் கலாசாரத்தின் மீது தனி ஆர்வத்தை வளர்த்துக் கொண்டுள்ள இவரது சீனக் கவிதைத் தொகுப்பு நூலான ‘மிதந்திடும் சுயபிரதிமைகள்’ 2009ல் நல்லி – திசையெட்டும் (மொழியாக்க) இலக்கிய விருதைப் பெற்றது. ‘நியாயங்கள் பொதுவானவை’ என்ற சிறுகதைத் தொகுப்பு திருப்பூர் அரிமா சங்கத்தினர் ஏற்பாடு செய்த ‘அரிமா சக்தி விருது 2006’ சிறப்புப் பரிசு, ‘மனப்பிரிகை’ நாவலுக்கு – அரிமா சக்தி 2008 (சிறப்பு) விருது உள்ளிட்ட பல பரிசுகள் மற்றும் விருதுகள் வாங்கியுள்ளார். சிறுகதைத் தொகுப்பான ‘பின் சீட்’ ‘சிங்கப்பூர் இலக்கிய விருது – 2008’க்கும் ‘திரைகடலோடி’ சிறுகதைத் தொகுப்பு சிங்கப்பூர் இலக்கிய விருது 2010க்கும் தேர்வாகின. பல்வேறு மொழிபெயர்ப்பு முயற்சிகளில் ஈடுபட்டு வரும் இவர் உலகளாவிய பரந்துபட்ட வாசகர்களைப் பெற்றுள்ளார். சிங்கப்பூரைக் களமாகக் கொண்ட எளிய எதார்த்த நடைக்காக நன்கு அறியப் பெறும் இவரது சிறுகதைகள் பல தொகுப்புகளிலும் இடம் பெற்றுள்ளன. 1995 முதல் எழுதி வரும் இவரது ஆக்கங்கள் வேற்று மொழியில், குறிப்பாக ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மொழிபெயர்ப்பு காணவிருக்கின்றன.
jeyanthisankar@gmail.com
ஜெயந்தி சங்கர் – நூல்கள்சிறுகதைகள்
1. நாலேகால் டாலர் (2005)
2. பின் சீட் (2006)
3. நியாயங்கள் பொதுவானவை (2006)
4. மனுஷி (2007)
5. திரைகடலோடி (2008)
6. தூரத்தே தெரியும் வான்விளிம்பு (2010)
நாவல்கள்
7. வாழ்ந்து பார்க்கலாம் வா (2006)
8. நெய்தல் (2007)
9. மனப்பிரிகை (2008)
10. குவியம் (2009)
11. திரிந்தலையும் திணைகள் (2012)
குறுநாவல் தொகுப்பு
12. முடிவிலும் ஒன்று தொடரலாம் (2005)
கட்டுரைகள்
13. ஏழாம் சுவை (2005)
14. பெருஞ்சுவருக்குப் பின்னே (2006)
15. சிங்கப்பூர் வாங்க (2006)
16. ச்சிங் மிங் (2009)
17. கனவிலே ஒரு சிங்கம் (2010)
மொழிபெயர்ப்பு + தொகுப்பு
18. மிதந்திடும் சுயபிரதிமைகள் – சீனக் கவிதைகள் (2007)
19. என் தாத்தாவுக்கொரு தூண்டில் கழி – சீனத்துச் சிறுகதைகள் (2011)
நூல் மொழிபெயர்ப்பு
20. சூரியனுக்கு சுப்ரபாதம் (2007)
வாழ்க்கை வரலாறு
21. இசையும் வாழ்க்கையும் (2007)
சிறுவர் இலக்கியம் (மொழிபெயர்ப்பு)
22. மீன் குளம் – சிறார் சீனக்கதைகள் (2008)

Series Navigation”கீரை வாங்கலியோ…கீராய்…!”“ஊசியிலைக்காடுக‌ள்”
author

ஜெயந்தி சங்கர்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *