கல்விக் கனவுகள் – பணம் மட்டும் தானா வில்லன்? (பகுதி -3 நிறைவுப் பகுதி)

Spread the love

“ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அதுதாண்டா வளர்ச்சி” என்பது பிரசித்தமான சினிமாப் பாடல் வரி. வளர்ச்சி முழுமையடைய ஒரு பக்கம் பாடத் திட்டக் கல்வி, மறுபக்கம் விளையாட்டு, பேச்சுத் திறன், போட்டியிட்டு வெல்லும் தன்னம்பிக்கை, தலைமைக் குணங்கள் ஆகிய பலவும் மாணவனின் வளர்ச்சியின் அடையாளம்.

பாடத் திட்டங்கள் குறித்து வல்லுனர் மட்டுமே விவாதிக்க முடியும். ஒவ்வொரு துறையிலும் ‘பிஹெச்டி’ பட்டம் பெற்ற பெரிய கல்வியாளர் பணி அது. ஏறத்தாழ ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை பாடத் திட்டம் மாற்றி அமைக்கப் படுகிறது. சாதாரண மக்களின் புரிதலுக்கும் விவாதத்துக்கும் அப்பாற் பட்டது அது.

மறு பக்கமான ஆளுமை மற்றும் திறன்களை வளர்க்கும் வழிகளைப் பற்றிப் பேசுவோம். மிகப் பெரிய சோகம் என்னவென்றால் பெரும்பாலான கல்வி நிறுவனங்களின் முன்னுரிமையில் அது இல்லை.

பள்ளிப் பருவத்திலேயே விளையாட்டு, கலை சம்பந்தப் பட்ட போட்டிகலில் எல்லா மாணவர்களையும் ஈருபடுத்தும் முறை நம் கல்வி அமைப்பில் இல்லை. குழுக்களாக அமர்ந்து விவாதிப்பது, தன் தரப்பை உணர்த்தும் திறனையும் தன்னம்பிக்கையையும் வளர்த்துக் கொள்வதற்கான வாய்ப்பு கல்வி நிறுவனத்திற்கு உள்ளே ஒரு மாணவனுக்கு இருப்பதில்லை. பின்னாளில் அவர்கள் உடல் மட்டும் வளர்ந்து ஆளுமை முழுமையடையாத சிறுவர் சிறுமியராய் நம்முன்னே வந்து நிற்கும் போது மிகவும் காலதாமதம் ஆகி விட்டது என்றே நாம் கொள்ள வேண்டும்.

இதன் முக்கியத்துவத்தை -ஆளுமை மேம்பாட்டின் அவசியத்தை – பெற்றோர், சமூகம் மற்றும் அரசாங்கம் இன்னும் உணரவில்லை.

மழலைப் பருவம் தொடங்கி ஒவ்வொரு வயதிலும் ஏட்டுக் கல்விக்கு இணையாக ஆளுமை சம்பந்தப்பட்ட பயிற்சிகளும் நம் கல்வித் திட்டத்தில் முக்கியமான இடம் பெற வேண்டும்.

ஏன் மழலையரிலிருந்து தொடங்க வேண்டும்? மழலைப் பருவத்திலிருந்தே சவால்கள் துவங்குகின்றன. மழலையர் மீது பாலியல் வன்முறை எல்லாத் தட்டு மழலையருக்கும் நிகழவே செய்கின்றன.அவற்றுள் புகார் வழக்கு என்று வெளியே தெரிபவை மிகவும் குறைவு. எனவே மழலையருக்குத் தொடுகைகளில் தவறானவை எவை, எப்படிக் குரல் கொடுத்துத் தப்ப வேண்டும் என்பவற்றை உணர்த்த இளம் பெண்களைப் பணிக்கு அமர்த்தி வகுப்புகள் எடுக்க வேண்டும். இதைக் கல்வி நிறுவனம் செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது.

ஆரம்பப் பள்ளியிலிருந்து கல்லூரி வரை ஏதேனும் ஒரு (மைதான) விளையாட்டில் மாணவ மாணவியர் அனைவரும் (100% அனைவரும்) குழுக்களாக இணைந்து விளையாடும் விளையாட்டுக்களில் பங்கு பெறுவதைக் கட்டாயமாக்க வேண்டும். தனியார் பயிற்சியாளர் குறிப்பாக தேசிய அளவு விளையாட்டு வீரர்கள் இதில் ஈடுபடுத்தப்பட வேண்டும்.

பெண் குழந்தைகளுக்கு ‘உடல் சுகாதாரம்’ மற்றும் சரிவிகித உணவு, தாய்மை, மகப்பேறு, குழந்தை வளர்ப்பு பற்றிய வகுப்புக்கள் கட்டாயம் இருக்க வேண்டும். எல்லாப் பதின் பருவ மாணவ மாணவியருக்கும் ‘எய்ட்ஸ்’ விழிப்புணர்வு, சுற்றுப்புறச் சூழல், சுகாதாரம் பற்றிய நேர்முறை விளக்கப் பயிற்சி இருக்க வேண்டும்.

+2 முடித்து வெளிவரும் மாணவர் ஏதேனும் ஒரு ‘பாலிடெக்னிக்’ க்கு நிகரான பட்டயப் படிப்புச் சான்றிதழை முறையான பயிற்சியுடன் பெற்று வெளிவருவதை உறுதி செய்ய வேண்டும். இதற்கான தொடக்கம் 9ம் வகுப்பிலிருந்து இருக்கும். மாணவ மாணவியருக்கு வருங்கால வேலை வாய்ப்பு, சுயதொழிலுக்குத் தொடர்புடைய எல்லாவிதமான படிப்புகள் பற்றிக் காணொளி அல்லது நேரடியான தொழில்துறை வல்லுனர் விளக்க உரைகள் மூலமாக ஒரு துறையை, ஒரு பணியைத் தேர்ந்தெடுத்து அதற்கான திறனை வளர்த்துக் கொள்ளும் ஆர்வமும் ஈடுபாடும் வளர விதை ஊன்ற வேண்டும்.

ஒரு பட்டியலே இடலாம். மின்சாரப் பொறியாளர், நெசவு தையலை ஒருங்கிணைத்து விசைத்தறி தொடங்கி ஆயத்த ஆடை வடிவமைப்புப் பயிற்சி, நகை வடிவமைப்பு, லேத் வைத்து சிறு தொழில், சைக்கிள் பராமரிப்பு, வாகனப் பராமரிப்பு, ‘பெயின்டிங்’, மெழுகுவர்த்தி – ஊதுபத்தி உற்பத்தி, டிவி-மொபைல்-வாஷின் மெஷின் பராமரிப்பு, கம்ப்யூட்டர் பராமரிப்புக்கான ‘ஹார்ட் வேர்’ பயிற்சி என்ற ஒரு வகையும் மறுபக்கம் பெண்களுக்கு செவிலியர் பட்டயப் படிப்பு, அனைவருக்கும் இன்ஸூரன்ஸ் ஏஜென்ட், விற்பனைப் பிரதிநிதிப் பணி ஆகியவற்றிற்கான பட்டயப் படிப்பையும் சேர்த்துத் தரலாம். ‘என்ஜினீயரிங்’ படிப்பு இந்தப் பட்டயப் படிப்புக்குப் பின் தேவை என விரும்பும் மாணவர் தொடரலாம்.

ஆசிரியரின் பணியை அளவிட ஒரு புதிய அணுகு முறை தேவை. எந்தப் பாடத்தில் குறைந்த மதிப்பெண் அல்லது தோல்வி மதிப்பெண் மாணவர்கள் வாங்குகிறார்கள் என்று ஆய்ந்து அந்த ஆசிரியருக்கு ஓய்வு பெற்ற ஆசிரியரை ஈடுபடுத்தி பாடம் நடத்துவதின் நுணுக்கங்களை கற்றுத் தர வேண்டும்.

(குறைந்த பட்சம்) அரசுத் தொலைக்காட்சியில் ஜூன் மாதம் முதலே 9,10,11,12 வகுப்புக்களின் பாடங்களுக்கான விளக்க உரைகள் 24 மணி நேரமும் இடம் பெற வேண்டும். சந்தேகம் தீர்க்கும் தொலைபேசி காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை செயற்பட வேண்டும். பட்டதாரிகளுக்கு (நல்ல கல்விப் பின்னணி உள்ளவர்) இதில் பெரிய அளவில் வேலை வாய்ப்பு உருவாகும்.

மேல்நிலைப்பள்ளியோ, கல்லூரியோ இரண்டிலுமே ஆளுமை, தன்னம்பிக்கை வலுப்பட வாழ்வில் வென்றோர் பற்றிய காணொளிக் காட்சிகள், சிறிய பெரிய அளவில் வெற்றி பெற்ற சாதனையாளர் தமது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் இருக்க வேண்டும். நேர்முகத் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் கல்லூரிகளில் கட்டாயம் இடம் பெற வேண்டும்.

கல்லூரி மாணவருக்கு இணைய தளம் மூலம் பாடத்திட்டத்திற்கான முழுமையான எளிய ஒலி, ஒளி, வரி வடிவ விளக்கப் பாடங்களைப் பல்கலைக் கழகங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும். அசலான ‘ப்ராஜக்ட்’ செய்ய சிறிய பெரிய தொழில் நிறுவனங்கள் மாணவருக்கு ஆதரவு தர வேண்டும்.

வருவாய் குறைவானவரும் சக்திக்கு மீறி குழந்தைகள் படிப்புக்கென எந்த செலவையும் ஏற்கும் மனப்பாங்கையும் உற்சாகத்தையும் கண்கூடாகக் காண்கிறோம். ஆனால் பணம் விழுங்கித் திமிங்கிலங்களாகப் பயனேதும் தராது வளர்ந்து நிற்கும் கல்வி நிறுவனங்களை திசை மாற்றும் முனைப்பு அரசுக்கும் சமூக ஆர்வலர்களுக்கும் வேண்டும்.

பணம் மட்டுமல்ல கல்விக் கனவுகளுக்கு வில்லன். வளரும் தலைமுறை பற்றிய அக்கறை எல்லா பட்டதாரிகளுக்கும் அரசாங்கத்துக்கும் இல்லாததே தேக்க நிலைக்குக் காரணம்.

——————–

Series Navigationஏழாம் அறிவு….விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூற்று ஆறு