கழுத்தில் வீக்கம்

          கழுத்தில் வீக்கம் அல்லது கட்டி உள்ளதை நாம் எளிதில் கண்ணாடியில் பார்த்தாலே தெரியும். அல்லது நம் நண்பர் அல்லது உறவினர் அது பற்றி கூறலாம். அதை உடன் மருத்துவரிடம் காட்டி ஆலோசனைப் பெறுவது முக்கியமாகும். காரணம் எந்த கட்டியானாலும் அது புற்று நோய்க் கட்டி இல்லை என்பதை முதலில் நிர்ணயம் செய்தாக வேண்டும். அதற்கு தற்போது எளிமையான பரிசோதனை முறைகள் வழக்கில் உள்ளன.
                                                                     கழுத்தில் வீக்கத்தை உண்டாக்கும் கட்டிகள்
                    மேலோட்டமான கட்டிகள் ( Superficial Lumps )
                    பின்வரும் இக் கட்டிகள் சாதாரணமானவை. இவற்றால் ஆபத்து இல்லை. காரணம் இவை புற்று நோய்க் கட்டிகள் இல்லை. இவை தோலின் அடியில் தோன்றும் கட்டிகள்.
                    * வியர்வை சுரப்பிக் கட்டிகள் ( Sebaceous Cysts )
                    * கொழுப்புக் கட்டிகள் ( Lipoma )
                    * தோல் நீர்க்கட்டி ( Dermoid )
                   * சீழ்க் கட்டிகள் ( Abscess )
                     நிணநீர்க் கட்டிகள் ( Lymph  Nodes  )
)                      நிணநீர் என்பது உடலின் எதிர்ப்புச் சக்தி தொடர்புடைய இலேசான மஞ்சள் நிறத்திலான சுரப்பு நீர். உடலில் தொற்று உண்டானால் அந்தப் பகுதியில் இந்த நிணநீர்க் கட்டிகள் வீங்கி கரளை போன்று தெரியும். சிலருக்கு காய்ச்சலின்போது இது கழுத்தில் தோன்றலாம். கழுத்து, தலைப் பகுதியில் தொற்று அல்லது புண் இருந்தாலும் இது உண்டாகும்.அதோடு உடலில் பொதுவான தொற்று நோய் அல்லது புற்று நோய் இருந்தாலும்
இது உண்டாகலாம்.  இது போன்ற காரணத்தை வைத்து இவை ஆபத்தை உண்டு பண்ணுமா  அல்லது இல்லையா என்பதை நிர்ணயம் செய்யலாம்.
                    ஆழமான கட்டிகள் ( Deep Lumps )
                   இந்த வகை கட்டிகள் கழுத்தின் ஆழமான பகுதியில் உள்ள சில சுரப்பிகளிலிருந்து எழுபவை. இதனால் இவற்றை நன்கு பரிசோதித்து அவற்றின் அடிப்படைத் தனமையைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
                    * தைராய்டு கட்டிகள்
                    * தைரோகுளோசல் நீர் பைக் கட்டிகள்
                    * நிணநீர்க் கட்டிகள் )
                   * உமிழ்நீர் சுரப்பியின் கட்டிகள்
                    * சில இரத்தக் குழாய்க் கட்டிகள்
          இவற்றில் தைராய்டு  வீக்கம் சாதரணமாக பலரிடம் காணப்படும். ஆண்களை விட பெண்களுக்குத்தான் இது அதிகம் உண்டாகும். பெரும்பாலும் இந்த வீக்கம் வலியை உண்டு பண்ணாது. ஆனால் வீக்கம் பெரிதானால் உணவு விழுங்குவதில் சிரமம், சுவாசிப்பதில் சிரமம், போன்ற அறிகுறிகள் தோன்றும். இவை இரண்டு வகையான வீக்கம் கொண்டவை. முதல் வகை சீரான வழவழப்பான வீக்கம். இதில் ஆபத்து இல்லை.இரண்டாம் வகைகள் கட்டிகள் நிறைந்ததுபோல் தென்படும். இவையும் விழுங்குவதிலும் சுவாசிப்பதிலும் சிரமத்தை உண்டுபண்ணும். இவற்றுடன் நிணநீர்க் கட்டிகளும் தோன்றினால் அது புற்று நோயைக் குறிக்கும். தைராய்டு கட்டிகளை இரத்தப் பரிசோதனையின் மூலம் நிச்சயப்படுத்தலாம். உங்களுக்கு உள்ளது இத்தகைய தைராய்டு வீக்கம் என்றுதான் மருத்துவர் கூறியுள்ளார்.
          கழுத்தில் ஏற்படும் வீக்கத்தின் தன்மையை கண்டுணர சில பரிசோதனைகள் தேவைப்படும். அவை வருமாறு:
          * இரத்தப் பரிசோதனை.
          * நெஞ்சு எக்ஸ்ரே
          * அல்ட்ராசவுண்டு பரிசோதனை
          * சிறு ஊசி பையாப்சி பரிசோதனை.- இதில் கட்டியில் சிறு ஊசி நுழைத்து அதன்மூலம் நீர் உறிஞ்சி அது பரிசோதனை செய்யப்படும்., அதில் புற்று நோய் அறிகுறி உள்ளது தெரியவரும்.
          ஆகவே கழுத்துப் பகுதியில் கட்டிகள் தோன்றினால் அதை அலட்சியம் செய்யாமல் உடன் மருத்துவரைப் பார்த்து பரிசோதனை செய்துகொண்டு தகுந்த சிகிச்சை பெற வேண்டும்.
          ( முடிந்தது)
Series Navigationஉலகின் தலை சிறந்த சில ஓரின ஈர்ப்புப் படங்கள் 12- மில்க் (Milk)எல்லாம் பெருத்துப் போச்சு !