கவிஞனின் மனைவி

அபூர்வமான சொற்களைப் பின்னும்
பொன்னிற சிலந்தி அவன்

ஆறும் தேநீரை மறந்து இரவிரவாய்
நூற்காடுகளுக்குள் மல்லாந்து கிடப்பான்.

திடும் மென அவள் தாகித்தெழும் நடுநிசி பொழுதுகளில்
அவன் விரல்கள் தாளில் முளைத்துக்கிடப்பதைப்
பார்த்தவாறே உறங்கிப்போவாள்.

அவன் எழுதும் எதையும்
அவள் வாசித்ததில்லை
அவனது விசாரங்களும் தனித்துவமான
சிந்தனைகளும்
அவளுக்குப் புரிந்ததேயில்லை.
அதிகம் பேசுவது அவனை
ஆத்திரமூட்டும்.
அவள் மொழி மறந்தவள் ஆயினள்.

கிராமத்துக்கிளி மொழிகள்
மட்டுமே தெரிந்த அவள் அந்த நாலுசுவர் கூட்டுக்குள்
அடங்கியிருந்தாள்.

சமைப்பதும்,துவைப்பதுமாய் அவள் துருப்பிடித்து rusted
சாகத் தொடங்கிய ஒரு பொழுதில்
அந்த ‘அதிசயம்’ நிகழ்ந்தது.

புழுங்கிய சமையலறையில்
நெடுங்காலமாய் திறவாதிருந்த
‘ஜன்னல்’ தான் அது

அதனூடே அவள்
அடர் காட்டு மூங்கிலின் பாடலையும்
வானவில் எழுதும் ஓவியங்களையும்
வாசிக்கத் தொடங்கினாள்.

2011.06.10
சமீலா யூசுப் அலி
மாவனல்லை
இலங்கை
ms.yoosufali@gmail.com

Series Navigationஎன்னைக் கைது செய்யப் போகிறார்கள்வாழ்தலை மறந்த கதை