கவி நுகர் பொழுது-கருதுகோள்

—————————– —

கவிதை, கவிதை குறித்த உரையாடல்,கவிதை குறித்த கருத்துப் பகிர்வுகள், பார்வைகள், நிகழ்வுகள், கூட்டங்கள் எனஅமைந்த என் இலக்கியச் செயல்பாட்டின் நீட்சியாகவே எனது முனைவர் பட்ட ஆய்வுத் தலைப்பையும் ‘ நவீன தமிழ்க்கவிதைகளில் நாடகக் கூறுகள்: காலமும் வெளியும்’,  என்பதாக தேர்வு செய்ய நேர்ந்தது.

கவிதை ஒரு போதும் என்னை விட்டு விலகுவதில்லை. கவிதை குறித்த அறிமுகம் கிடைத்ததற்குப் பின் கவிதை எப்போதும் உடன் பயணி. அப்பயணத்தில், கவிதை குறித்த வரையறைகள் மாறி மாறி வந்திருக்கின்றன. நல்ல கவிதைகள் தரும் உணர்வெழுச்சி எப்போதும் ஒரே மாதிரியே இருக்கிறது. தொல்காப்பியம் தொடங்கி சமகாலக் கவிதைகள் வரை வாசிப்பின் வழி ஏதேனுமோர் திறப்பு கிடைத்தவண்ணமே உள்ளது.

ஆய்வின் பொருட்டு ஒருசேர இரு நூறு சமகாலக் கவிஞர்களின் கவிதைகளை வாசித்தது, வாய்த்தற்கரிய பேரனுபவம். ஒரு படைப்பாளியாய் என் படைப்புகள் குறித்து எதிர் கொள்ளும் கருத்துகளைப் போலவே சக படைப்பாளிகளின் கவிதைகள் குறித்த அபிப்ராயத்தை எப்போதும் பதிவு செய்வதை ஒரு முக்கியமான கடமையாகக் கருதுகிறேன். தொடர்ந்து எழுதியும் வந்திருக்கிறேன். நூல் விமர்சனக் கட்டுரைகளைத் தொகுத்து ‘சொல் விளங்கும் திசைகள்’, என்னும் நூலொன்றினையும் வெளியிட்டேன்.

 

சமகாலக் கவிஞர்களின் கவிதைகளை வாசித்த பிறகுஆய்வுக்குட்பட்ட விதமாக குறிப்பிட்ட கோணத்தில் குறிப்பிட்ட சில வரிகளையே பயன் படுத்த முடிந்தது. சமகாலக் கவிதைகள் குறித்துப் பேசுவதற்கு  நிறைய இருக்கிறது.

இல்லாதவற்றை, கவிஞனின் பொருட்டு பிரமாண்டப் படுத்துவதும் இல்லையெனில்,  ஏதுமில்லையென ப் புறந்தள்ளுவதுமான சூழலில் கவிதைகளை மட்டுமே பிரதானப் படுத்தி , வாசிப்பனுபவத்தை, ‘கவி நுகர் பொழுது’ என்னும் தலைப்பில், ஒரு தொடராகப் பதிவு செய்து வருகிறேன். வாரந்தோறும் ஒர் கவிதைத் தொகுப்பு குறித்த கட்டுரையை திண்ணை இணைய தளத்தில் எழுதி வருகிறேன். இது வரை, கதிர்பாரதியின் ,’ஆனந்தியின் பொருட்டு தாழப்பறக்கும் தட்டான்கள்,’ உமா மோகனின்,’துயரங்களின் பின் வாசல்’, சொர்ணபாரதியின்,’எந்திரங்களோடு பயணிப்பவன்’, ஆகிய கவிதை நூல்கள் குறித்து எழுதியுள்ளேன். தொடர்ந்து திண்ணை இணைய தளத்தில் வெளிவரும் இக்கட்டுரைகளை வாசித்திட வேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறேன்.

அடையாளப் படுத்த வேண்டுமென மனம் சொல்லும் நூல்களை – பார்வைக்கு வந்து பாதித்த நூல்களை எழுத வேண்டும் ; எழுதுவேன்.

 

கவிதையோடு வாழ்வை சங்கமித்துக்கொண்ட  என்னைப் போன்றவனுக்கு சக படைப்பாளியின் கவிதையினூடாகப்  பயணிப்பதை விட மகிழ்வான தருணம் வேறென்ன இருக்க முடியும்.

 

கவிதைகளோடு கை குலுக்கிக் கொள்வோம்  வாருங்கள்.

 

Series Navigationயாராவது கதை சொல்லுங்களேன் !கலாம் ஆ.. ப. ஜெ. அப்துல் கலாம்