காக்க…. காக்க….

This entry is part 2 of 41 in the series 8 ஜூலை 2012

லக்ஷ்மண பெருமாள்

எல்லா நாட்களிலும் மாலையில் இருட்டு ஒரே மாதிரி வருவதில்லை. எத்தனையோ நாட்களில் அது, தான் விரும்புவது போல வந்து விடுகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. அதுவும் மாலை நேரத்து மஞ்சள் வெயில் பார்ப்பதற்கு வானத்தில் நிறத்தையே ஓரிடத்தில் மாற்றிக் காண்பிக்கிற அந்த அழகு காணக் கண் கொள்ளாதது. அன்றும் அப்படி ஓர் அழகுக் காட்சி. கிரிக்கெட் விளையாடும் போது மாலை நேரக் கதிரவன், கேட்ச் பண்ண முடியாத அளவுக்கு கண்ணைக் கூசச் செய்த போது, கதிரவன் மீது எந்த அளவுக்குக் கோபப்பட்டேனோ அதே அளவுக்கு மறைகிற நேரத்தில் உள்ள அழகை ரசித்தேன்..

அப்போதெல்லாம், இப்போது போல் வீட்டில் உண்மையைச் சொல்லி விட்டு வெளியில் போக முடியாது. அம்மாவின் கண்டிப்பு அத்தகையது. அதற்கு ஒரு காரணம் இருந்தது. அப்பா தூத்துக்குடி பக்கத்தில் இருக்கிற முத்தையா புரத்தில் கிராம நிவாக அதிகாரியாய் பனி புரிந்து கொண்டிருந்தார். தினமும் வந்து செல்ல முடியாதுங்கிறதாலே அவர் மட்டும் அங்கெ தனியாய் தங்கி இருந்தார். நான், அண்ணன், அக்கா மூவரும் அம்மாவோடு திருவரங்கநேரியில் இருந்தோம். அம்மாவைப் பொறுத்த வரையில், எங்கே தன்னுடைய புருஷன் , பிள்ளையைக் கண்டிச்சு வளர்க்க மாட்டியா என்று கேட்டு விடுவாரோ என்பதால் எங்களிடம் அத்தனைக் கண்டிப்பு. அப்பாவின் நேர்மை பிடித்திருந்தது. ஆனால் அவரது கண்டிப்பு தேவையற்றது என்று பல முறை எண்ணியதுண்டு.

இப்படி ரொம்ப கண்டிப்பு இருந்ததால் பல முறை பொய் சொல்லி விட்டுத் தான் போவேன். பொய் சொல்லக் கூடாது என்பதைக் கூட, கண்டிப்போடு சொன்னதால்தான், பொய் சொல்லி இருப்பேனோ என்று இன்று கூட நினைப்பது உண்டு. அன்றைக்கும் அம்மாவிடம், இன்னைக்கு சிறப்பு வகுப்பு என சொல்லிக் கொண்டுதான் போனேன். சாத்தான்குளத்தில்தான் நான் படிக்கிற பள்ளி இருந்தது. கிரிக்கெட் விளையாடி விட்டு நண்பர்களோடு, மக்கா … நான் வீட்டுக்குப் போறேண்டா என்று சொன்ன போது நண்பர்கள், மச்சான்… டீ குடிச்சிட்டு போடா என்று இழுத்தடித்தனர்.

மெல்ல இருட்டுக் கவ்வியது. தெரு விளக்குகள் நகரை ஆக்கிரமித்து இருந்தது. மெயின் பஜாரில் உள்ள காமராஜர் சிலைக்கு அருகில் உள்ள சாந்தி பேக்கரி டீதான் ரொம்ப சுவையாக இருக்கும். மெயின் பஜாரே சாயங்காலம் ஏழு மணிக்குத் தான் களை கட்டி இருக்கும். இப்ப கூட ராத்திரி ஒன்பது மணி வரைக்கும்தான் ஜே.. ஜே ..ன்னு கூட்டம் இருக்கும். அதுக்கப்புறம் பார்த்தா காமராஜர் மட்டும் ஊர் தெய்வம் மாதிரி தனியாக நிற்பார். ஒயின் ஷாப் தவிர அத்தனை இடங்களும் வெறிச்சோடி கிடக்கும்.

டீ குடிச்சிட்டு கிளம்பலாம் என்றெண்ணிய போது சைக்கிள் டியுப் பஞ்சராகி இருந்தது. சைக்கிள் கடைக்கார அண்ணன், பத்து நிமிடம்.. பத்து நிமிடம்னு கிட்டத்திட்ட முக்கால் மணி நேரம் இழுத்தடிச்சிட்டார். ஒரு வழியா பஞ்சர் முடிஞ்சு கிளம்பும் போது மணி எட்டே முக்காலாகிட்டிருந்தது.

சாத்தான்குள எல்லையைத் தாண்டும் வரை ஊரின் விளக்கு வெளிச்சத்தில் எதுவும் வித்தியாசமாக உணரவில்லை. மெல்லிய டைனமோ வெளிச்சத்தில் நான் மட்டும் தனியாக சென்று கொண்டிருந்தேன். அப்போதுதான் அன்றைக்கு அமாவாசை என்பதை உணர்ந்தேன். என் சைக்கிளின் டைனமோ வெளிச்சம் தவிர எங்கு பார்த்தாலும் கும்மிருட்டு. தூரத்தில் எரிகிற தாளமுத்து நாடார் வயலின் பம்ப்செட்டு ரூம்ல ஒரு குண்டு பல்ப் எறிவது மட்டும்தான் தெரிந்தது.

கொஞ்ச தூரம் வரை சாலைக்கு இரண்டு புறமும் வயல் வெளி இருந்தது. அதுவரையில் எனக்கு எதுவும் தோன்றவில்லை. மெல்ல மெல்ல ஆறுகண் பாலத்தை நெருங்கிக் கொண்டிருந்தேன். ஆறுகண் பாலம்ன்னா என்னன்னு ரொம்ப யோசிக்காதீங்க. பாலத்துக்குக் கீழே தண்ணீர் போறதுக்கு ஏதுவாக ஆறு ஓட்டைகள் இருக்கும். இரண்டு ஓட்டை பாலத்தை ரெண்டு கண் பாலம்னும், ஆறு ஓட்டை இருந்தால் ஆறுகண் பாலம்னுதான் சொல்வோம்.

ஆறுகண் பாலம் இருக்கிற இடத்தில ரோடு ரொம்ப வளைந்து இருக்கும். அப்படி இருக்கிறதால ரொம்ப தடவை விபத்து நடந்திருக்கிறது. அதுல சில பேர் விபத்தில் இறந்தும் போய் இருக்காங்க. அதனால ஆறுகண் பாலத்தில செத்து போன மனிதர்கள் பேயாகவும் ஆவியாகவும் வரும்னு ஊர்ல நிறைய பேர் சொல்லிக் கேள்வி பட்டிருந்ததால பயம் கூடிக்கிட்டே போச்சு. தினம் தினம் அதே சாலையில் தான் பள்ளிக்கு போய்கிட்டும் வந்துகிட்டும் இருந்தேன். இருட்டு சம்பந்தமான கதைகள் தான் என்னை பயமுறுத்திக் கொண்டிருந்தது என்பதை அந்த வயதில் உணர்ந்திருக்கவில்லை.

போன மாசம்தான் முத்தையா தேவர் பையன் இதே இடத்தில மாரடைப்புல இறந்து போய் இருந்தான். டாக்டர் அது மாரடைப்புன்னு சொன்னாலும் ஊர் நம்பத் தயாராக இல்லை. ஏன்… ஆறுகண் பாலத்துக்கு பக்கத்துல தான் வந்து மாரடைப்பு வரணுமா என்ன… என்ற ஊர் பெருசுங்க வச்ச லாஜிக்கல் கேள்விதான் என்னை ரொம்ப பயமுறுத்திக் கொண்டிருந்தது. போதாக்குறைக்கு எனக்குத் தெரிந்தே ஒரு பையன் ஒரு மாசத்துக்கு முன்னால் மத்தியானம் பன்னிரண்டு மணிக்கு காய்ச்சல்னு வீட்டுக்கு வந்தப்ப ஆறுகண் பாலத்துக்கு பக்கத்தில ரோட்டு ஓரத்தில் இருந்த முள்செடியில் கிடந்தான். கேட்டப்போ.. கையை வச்சு யாரோ மறைச்ச மாதிரி இருந்துச்சுன்னு சொன்னதெல்லாம் நினைவுக்கு வர , பகலிலேயே அவனுக்கு கையைக் காண்பிச்சு மறைச்ச பேய் இன்னைக்கு என்னை சும்மா விடாதா. இது ஒரு பக்கம்.

இன்னொரு பக்கம் அய்யய்யோ … வீட்டில வேற பொய் சொல்லிட்டு வந்திருக்கேன். வீட்டுக்குப் போன பிறகு என்ன ஆகப் போகுதோன்னு வேற பயம். எல்லாக் கடவுளையும் துணைக்குக் கும்பிட்டுக் கிட்டு வேக வேகமாக சைக்கிளை மிதிக்கிறேன்.

அப்பாவும் அம்மாவும் ராத்திரி தனியாக வந்தா சாமி பாட்டைப் படிச்சிட்டு வான்னு சொன்னது நினைவுக்கு வந்தது. உருப்படியாக, அன்னைக்குத்தான் கந்த சஷ்டி கவசத்தை முழு மனசோடு படிக்கிறேன்.

காக்க காக்க கனகவேல் காக்க

நோக்க நோக்க நொடிவேல் நோக்க

தாக்கத் தாக்க தடையறத் தாக்க

…..

பில்லி சூனியம் பெரும்பகை அகல

வல்ல பூதம் வலாஸ்டிர பேய்களும்

அல்லல் படுத்தும் அடங்கா முனியும்

பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும்

கொள்ளிவாய்ப் பேய்களும் குறளைப் பேய்களும்

……..

அடியடைக் கண்டால் அலறிக் கலங்கிட
…..

என என்னையும் அறியாமல் படித்துக் கொண்டே வேகமாக மிதித்தேன். கண்களை மூடுவதும், லேசாக திறந்து வைத்தும் சைக்கிளை மிதித்தேன். ஒரு வழியாக ஆறுகண் பாலத்தைத் தாண்டி விட்டேன்.

ஆனால் பயம் மட்டும் விட்டபாடில்லை. பற்றாக்குறைக்கு, கூடவே கொசு வேறு அவ்வப்போது கண்ணில் விழுந்து எரிச்சலைத் தந்து கொண்டிருந்தது. தைரியமடைவதற்குள் ரெட்டைப் பனை வந்து கொண்டிருந்தது. ரெண்டு பனை மரத்தோட அடிப்பாகம் ஒரே இடத்திலிருந்தும் மரத்தோட தண்டுப் பகுதியில் இருந்து தனித்தனியாக நீட்டு விட்டிருக்கும். பயத்துக்குக் காரணம் பக்கத்தில இருக்கிற புளிய மரம்தான்.

பக்கத்தில் இருந்த வயலில் வேலை செய்த பெண் அந்த மரத்தில ரொம்ப வருடத்துக்கு முன்பு தூக்குப் போட்டு செத்துப் பொய் இருந்தாளாம். அந்த பெண்ணுக்கு கல்யாணம் ஆகிறதுக்கு முன்னாலேயே ரெண்டு பெரு வயலில் வைத்து கெடுத்திருந்ததால் தூக்குப் போட்டுகிச்சாம். அதனாலேயே அந்தப் பெண் கல்யாணம் ஆகாத ஆண்களை எல்லாம்தான், அடிச்சு சாப்பிடுவாள் என்று வேறு சொன்னது மேலும் பயத்தைக் கூட்டியது. எனக்கு வேறு கல்யாணம் ஆகலியே.. அப்பெல்லாம் நான் பிறந்திருக்கவே இல்லை. ஆனால் அவள் செத்த கதை மட்டும் எனக்கு பதினேழு வயசாகி இருந்தப்ப கூட சொல்லி அனாவசியமா நான் பயப்பட வேண்டி இருந்தது.

அதுல இருந்து அந்த பெண் முனியாக மாறிட்டதாகவும் வெள்ளை சேலையில் அலைவதாகவும் சொல்லி இருந்தாங்க. பற்றாக்குறைக்கு தமிழ் சினிமா பார்த்து அதுல பேய் வருகிற காட்சியில் வடிவேலுவோ செந்திலோ பயப்பட்டப்போ , எப்படி அலறுவார்களோ அது மாதிரி அலறணும் போல இருந்தது.

ஆனால் ஊர் பெருசுங்க சொல்லும், ஏலேஏய் … முனி … கினி .. பின்னால வந்தா திரும்பி பார்க்கக் கூடாது. திரும்பிப் பார்த்தாதான், அது தூக்கிடும்ல… மெல்ல பின்னால வந்து சொல்லுமில்ல… நான் உன்கூட மாட்டு வண்டியில கொஞ்ச தூரம் துணைக்கு வரட்டுமான்னு கொஞ்சி பேசும்ல. அது அழகில் மயங்கி அந்தக் காலத்தில நிறைய பேர் செத்துப் பொய் இருக்காக… சுண்ணாம்பு அதுக்கு ஆகாதுல… வெற்றிலை போடுதியான்னு கேட்டா அது ஓடி போயிடும்டா… என்றும் இரும்பைக் காட்டினாலும் அது நெருங்க பயப்ப்படும்னும் சொல்வாங்க. இருட்டுதாம்ல.. முனிக்கு ரொம்ப சௌகர்யம்.

ஐயோ.. கடவுளே .. இன்னைக்குப் பார்த்து அமாவாசையாய்ப் போச்சே. ச்சே.. இனி ஜென்மத்துக்கும் வீட்டில பொய் சொல்லக் கூடாது. அதான் கடவுள் நம்மை இப்படி போட்டு வாட்டி வதைக்கிறார் என்று நானாக பயத்தில் ஒரு நொடியில் நல்லவனாக மாறி கொண்டிருந்தேன். எல்லாம் கோழி குமாரால் வந்த வினை. வரலடா… வீட்டுக்குத் தெரிஞ்சா அவ்வளவுதான்னு சொல்லியும் சிறப்பு வகுப்புன்னு சொல்லிட்டு வான்னு ஐடியா கொடுத்ததே அவன்தான். என் புத்தியைச் செருப்பால அடிக்கணும். முதன் முதலாக வாழ்க்கையில் பழியை ஏற்றுக் கொள்கிற மனப் பக்குவம் வந்தது.

சைக்கிளை மிதிச்சுகிட்டு இருக்கேன். கிரீச்… கிரீச் .. ன்னு சத்தம் ஒரு பக்கம். திடீர்னு பார்த்தா ரோட்டுல பள்ளத்துல வண்டியை விட்டுட்டேன். அய்யய்யோ… விழுந்தா.. என்ன ஆவேன் சைக்கிளை விட்டு கீழே விழுந்தால் இரும்புல இல்லன்னு என்னை அடிச்சிடுமோ… எப்படியோ கீழே விழாமல் சமாளிச்சேன். ஆனால் பயத்தில கொலுசு சத்தம் கூடவே கேட்கிற மாதிரி….கூடவே பின்னால வர்ற மாதிரி தோணுது. ஆனால் பின்னால் திரும்புற சமயத்தில நம்மளைத் தூக்கிடுமோ..ங்கிற பயத்தில திரும்பவே இல்லை. என்னையும் அறியாமல் மீண்டும் மனசில தோணுகிற சாமியை எல்லாம் கும்பிடுகிறேன்.

முனி பயம் ஒரு பக்கம். பேய் பயம் இன்னொரு பக்கம். பற்றாக் குறைக்கு இப்ப எல்லாம் தனியாக வந்தா, பணம் பிடுங்குகிற கும்பல் கத்தியைக் காட்டி மிரட்டுராங்கன்னு, புதுக் கதை வேற ஊர்ல உலா வந்துகிட்டு இருந்தது. யாராவது சைக்கிளை நிறுத்தச் சொன்னாலோ, யாராவது நிக்கிற மாதிரி தெரிஞ்சாலோ வேகமா ஓட்டிட்டு போயிடணும்னு எச்சரிக்கை இருந்தது. நல்ல வேலையாக… யாரும் இடையில் கை போட்டு மறைக்க வில்லை. கும்மிருட்டு என்பதால் வரவில்லை போலன்னு நானாகவே நினைச்சுகிட்டு இருக்கும் போதே ஊர் வந்து சேர்ந்தது.
—————

Series Navigationஅம்மா என்றால்….மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் -2
author

லக்ஷ்மண பெருமாள்

Similar Posts

Comments

  1. Avatar
    Lakshmana Perumal says:

    கதையின் முடிவு ஏனோ வெளியிடப்படும் போதோ, அல்லது நான் அனுப்பிய மின் மடலில் விடுபட்டதோ தெரியவில்லை.

    கதை இவ்வாறு தொடர்கிறது.

    இப்பதான்… உண்மையான பயம் தொற்றியது. அம்மா கேட்டா.. என்ன சொல்றது. திட்டுவாங்களா… இல்லன்னா இது என்ன பெரிய மனுஷன் மாதிரி லேட்டா வர ஆரம்பிச்சு விட்டான்னு அப்பாகிட்ட போட்டு விட்டு விடுவாளோ என்று உள்ளே உள்ள என் பிம்பத்திடம் பேச்சுக் கொடுத்தேன். என்ன ஆனாலும் பார்த்துக் கொள்வோம் என்ற படியே வீடு வந்து சேர்ந்தேன்.

    சைக்கிளை நிறுத்தப் போறேன். ஒட்டு மொத்த ஊரே வீட்டு முன்னால நிக்குது. ஏம்பு… இவ்வளவு நேரம்,அம்மா தவியாய் கிடந்து தவிச்சிட்டுது.

    அன்று அம்மா ஒரு வார்த்தைக் கூட கோபப்படவில்லை. தக்குப் புக்குன்னு குதிப்பாளோ என எண்ணிக் கொண்டிருந்த எனக்கு அம்மா நான் பத்திரமாக வந்து சேர்ந்த திருப்தியில் ஆனந்தக் கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தாள். அப்போது தான் தாய்மையின் அன்பை முழுமையாக உணர்ந்து கொண்டிருந்தேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *