காட்சியும் தரிசனமும்

பூகோள வரைபடங்கள் இல்லாமல்
திசையை அவதானித்து தேசங்களைக்
கடப்பதாய்

பறந்தும் மிதந்தும் மின்னல் வேக
இறக்கத்தில் ஒரு மீனைக் கொத்திச்
செல்வதாய்

வளாகங்களின் சாளர மேற்புறத்து
வெயில் மறைப்புகளில் ஒடுங்கிப்
பெருகுவதாய்

மலரினுள் நுழைந்து தேனெடுத்து
மரத்தைக் கொத்தி இரை தேடி
ஜீவிப்பதாய்

வணங்கப் படுவதாய் உண்ணப் படுவதாய்
ஒரு வலையை விடவும் நுண்ணிய கூடு
கட்டும் திறனாளியாய்

இன்னும் பலவாய் அறியப்பட்ட பறவையின்
நாள் முழுதுமான இயங்குதல் அனைத்தும்
காணக் கிடைப்பதில்லை

உதிர்ந்த சிறகுகளும்
சிதறிய இறகுகளும்
சில கவிதைகளும்

 
-சத்யானந்தன்

Series Navigationப.மதியழகன் கவிதைகள்ஒரு புளியமரத்தின் கதை: திரு.சுந்தர ராமசாமி