காதலாகிக் கசிந்துருகி…

தோற்ற மயக்கம்
தொற்றாகி
மொட்டை மாடியில்
மல்லாந்து கிடந்த
கல்லூரிக் காலங்களில்

அவளை
வருணிக்க வாய்த்திருந்த
நிலா காய்ந்திருக்கும்

நிலா நுகர்ந்த முல்லையெனவும்
என்
நெஞ்சுக்குள்
அடைபட்ட காலங்களே
அகிலத்தாருக்கு
அமாவாசை யெனவும்

ஒளிந்தும்
ஒளிர்ந்தும்
நிலா
நிலவியதை
அவளோடு
ஊடல் கூடல்
என் ஒப்பிட்டும்
கசிந்துருகிய காலங்களிலும்
நிலா காய்ந்திருக்கும்

கலைந்திறாத
கூந்த லொதிக்கிய
கையினூடே கழட்டியனுப்பிய
கடைக்கண் பார்வை குறித்து
கிறுக்கித் தள்ளிய
கவிதைகளிலும்
நிலா இருக்கும்

மேலேப் பார்த்தபோது
நிலா
உதிர்ந்துகொண்டிருக்கும்
பெள்ர்னமி!

கீழே பார்த்தபோது
நிலா
அதிர்ந்துகொண்டிருக்கும்
ஊருணி!

உற்று நோக்கினால் மட்டுமே
மேகத்தை நிலைநிறுத்தி
நிலா
நகர்ந்துகொண்டிருக்கும்…
தோற்ற மயக்கம்!

Series Navigationசென்னை ஓவியங்கள்கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மனிதரின் மந்திரி (A Councellor of Men) (கவிதை -48 பாகம் -2)