காப்பியக் காட்சிகள் ​16. சிந்தாமணியில் சமுதாய நம்பிக்கைகள்

 

முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத் துறைத்தலைவர்,                மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.                         E-mail: Malar.sethu@gmail.com

மக்கள் வாழ்க்கையில் தொய்வில்லாமல் முன்னேற நம்பிக்கைகள் பயன்படுகின்றன. வாழ்வில் ஏற்படும் தோல்விகளைக் கண்டு மனமுறிவு ஏற்பட்டு, சோம்பேறிகளாக வாழாமல் இருப்பதற்கு இந்நம்பிக்கைகள் பெரிதும் பயன்படுகின்றன. வாழ்வில் ஏதேனும் ஓர் எதிர்பார்ப்பு இருக்குமானால் ஓய்வின்றி மனிதன் உழைப்பான். ஒரு சமுதாயத்தில் இருக்கும் நம்பிக்கைகள் அச்சமுதாயத்தில் வாழும் மக்களின் வாழ்க்கை நிலையையும் வளர்ச்சி நிலையையும் அறிவதற்குப் பெரிதும் உதவி செய்யும்.

சிந்தாமணியில் பலவகையான சமுதாய நம்பிக்கைகள் இடம்பெற்றுள்ளன.கனவு, குலம், செல்வம், நல்வினை, தீவினை, சகுனம், ஊழ்வினை உள்ளிட்ட சமுதாயம் சார்ந்த நம்பிக்கைகள் குறித்த பல செய்திகளை திருத்தக்கதேவர் சிந்தாமணிக் காப்பியத்தில் தெளிவுபடுத்துகின்றார்.

கனவு

கனவுகள் எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் செய்திகளை முன்கூட்டியே அறிவிக்கும் சக்தி வாய்ந்தவை என்று அக்கால மக்கள் நம்பினர். காப்பியத் தொடக்கத்திலேயே சச்சந்தன் மனைவி விசயை கனவு காண்கிறாள். இக்கனவில் ஓர் அசோகமரம் பூங்கொத்துக்களோடு முறிந்து மண்ணில் விழுந்தது. முறிந்த அம்மரத்திலிருந்து ஒரு முளை அந்த அசோகமரத்தைப் போன்றே தோன்றியது. அம்முளையைச் சுற்றி எட்டு மாலைகள் விளங்குவதுபோல் காட்சி தந்தது என்று தான் கண்ட கனவின் தன்மையை விசயை தன் கணவன் சச்சந்தனிடம் எடுத்துரைக்கின்றாள்.

இதனைத் திருத்தக்கதேவர்,

‘‘தொத்தணி பிண்டி தொலைந்தற வீழ்ந்ததெண்

முத்தணி மாலை முடிக்கிட னாக

ஒத்ததன் றாள்வழி யேமுளை யோங்குபு

வைத்தது போல வளர்ந்ததை யன்றே’’(223)

என்று சிந்தாமணியில் குறிப்பிடுகின்றார்.     இதைக் கேட்ட சச்சந்தன், ‘‘கனவுகள் அனைத்தும் பலித்து விடுவதல்ல. அது காணும் நேரத்தைப் பொறுத்துத்தான் பலன் இருக்கும்’’ என்று கனா நூலின் முறைப்படி அக்கனவிற்குப் பொருள்கூறுகின்றான்.

விமலையார் இலம்பகத்தில் விசயை தன் மகனைச் சந்திக்கப்போகும் இனிய நிகழ்ச்சியைக் கனவாகக் காண்கிறாள். இதை,

‘‘எல்லிருட் கனவிற் கண்டேன் கண்ணிட னாடுமின்னே

பல்லியும் பட்டபாங்கர் வருங்கொலோ நம்பியென்று

சொல்லினள் தேவிநிற்பப் பதுமுகன் றொழுது சேர்ந்து

நல்லடி பணிந்து நம்பி வந்தன னடிக ளென்றான்’’(1909)

என்று திருத்தக்கதேவர் மொழிகிறார். விசயை பதுமுகனிடம் எடுத்துரைப்பதாக இக்கனவு அமைகின்றது.

கட்டியங்காரன் என்னும் மன்னனும் தன் சூழ்ச்சித் திறத்தால் சச்சந்தனைக் கொன்றொழிக்க மக்களுக்கும் அமைச்சர்களுக்கும் இருக்கும் கனவு நம்பிக்கைகளைப் பயன்படுத்திக்கொள்ள விழைகிறான். ஒரு தெய்வம் கனவில் தோன்றி மன்னனைக் கொல்க என்று ஆணையிடுவதாகப் அவன் பொய்கூறுகிறான்(241).

சுரமஞ்சரியின் தாய் தன் மகள் திருமணம் செய்து கொள்ளப் போவதைக் கனவின் வாயிலாகக் கண்டறிகிறாள். குளத்து நீர் மெல்ல வற்றுவதாக அவள் கனவு காண்கிறாள். இக்கனவின்படியே மறுநாள் தன்தாயிடம் சுரமஞ்சரி தனது திருமண விருப்பத்தை வெளியிடுகின்றாள்(2075).

இங்ஙனம் சிந்தாமணிக் காப்பியமானது அக்காலத்து மக்கள் கனவு எதிர்காலத்தில் நடக்கும் செயல்களின் முன்னறிவிப்பு என்ற நம்பிக்கை மிக்கவர்களாக விளங்கியதைக் காட்சிப்படுத்துகின்றது.

குலம்

சிந்தாமணிக் காலத்தில் குலம் பற்றிய நம்பிக்கை மக்களிடையே இருந்தது. உயர்ந்த குலத்தில் பிறந்த பெண்களைத் திருமணம் செய்து கொள்வதே சிறந்த ஒழுக்கம் என்று நம்பினர்(483). செல்வத்திற்காக வேறு குலத்துப் பெண்களைத் திருமணம் செய்து கொள்வது கூடாது என்ற நம்பிக்கை மக்களிடத்தில் வேரூன்றி இருந்தது.

கோவிந்தையார் இலம்பகத்தில் வேடர்கள் ஆநிரைகளைக் கவர்ந்தபோது அதை மீட்டுத் தருபவர்களுக்குத் தன் மகளைத் திருமணம் செய்து கொடுப்பேன் என்று நந்தகோன் அறிவிக்கின்றான். சீவகன் வேடர்களிடமிருந்து ஆநிரைகளை மீட்கிறான். அப்பொழுது நந்தகோன் தன் மகளைத் திருமணம் செய்துகொள்ளுமாறு வேண்டுகிறான். சீவகன் குல வேறுபாட்டைக் கருத்தில் கொண்டு தன் நண்பன் பதுமுகனுக்காக ஏற்றுக் கொள்கிறான்(489).

காந்தருவதத்தையார் நடத்தும் இசைப்போட்டியில் கலந்து கொள்பவர்கள் அரசர், அந்தணர், வணிகர் எனும் முறைப்படியே போட்டியில் கலந்து கொள்கின்றனர்(659-663). அரசர்களும் வணிகர்களும் சமமானவர்கள் என்று கருதி சீவகன் அரச குலப் பெண்களையும் வணிகர் குலப் பெண்களையும் திருமணம் செய்து கொள்கிறான்.

இக்காட்சிகளிலிருந்து குலப்பாகுபாடு திருமணத்தில் கடைபிடிக்கப்பட்டது என்பதையும் ஆடவர்கள் தங்கள் குலத்திற்கு இணையில்லாத குலத்திலிருந்து பெண்களைத் திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள் என்பதையும் உணரமுடிகிறது.

(தொடரும்……17)

Series Navigationகாணாமல் போன கவிதைபர்வதாச்சியும் பூசாரிக்கணவனும்