கிருமி நுழைந்து விட்டது

Spread the love

காலக்கட்டத்தில் தேதி கிழிக்கப்பட்ட
ஓர் இரவது!

மசூதியின் முன்னில் நண்பர்களோடு
அளவளாவிக் கொண்டிருக்கையில்
ஒரு அலறல் சத்தம்!

மருண்டோடி சிதறினான்..
முஹல்ல குழு நண்பனொருவன்!

அதிர்ச்சியும்.. நிசப்தமும்
நிலவிய தருணம்
உள் நுழைந்தோம்..
நண்பர்கள் புடை சூழ!

வேண்டாம்.. தொட்டு விடாதீர்கள்.
பல ராசிகளுக்கு அடித்து விடும்.
சில ராசிகளுக்கு ஒடிந்து விடும்.
– முஹல்லத் தலைவர் கூற்று!

மினுங்கும் தகடுகளை கையிலெடுத்துக்
கூறினேன்.. ராசியே இல்லாதவனுக்கு
என்ன தான் நிகழுமென!

நீ அறிந்திராய்..
உண்மையாய் உணர்வினிலே
செயலரின் கைங்கர்யம்
யான் அறிந்தேன்..
ராதாபுரம் பிசாசும்..
கொல்லங்கோடு தங்ஙளும்..
பாலப்பள்ளம் அவ்லியாவும்..
தேங்காய்ப்பட்டணம் அப்பாவும்..
நெடுமங்காடு ஜின்னும்மாவும்..
அவர் ஏறி இறங்கிய இடங்கள்.
-பிறிதொரு உறுப்பினர் கூற்று!

மேசையிலிருந்து கண்டெடுக்கப்பட்ட
பெண்ணுருவம் பதித்த வெள்ளித் தகடொன்று
மண்டைக்காடு கோவில் திருவிழா
கடைகளை நினைவுப் படுத்தியதும்
பொங்கி சிரித்தேன்.

முஹல்லக் குழுவில் ஒரு சிலருக்கு
அல்லாஹ் மறந்து ஷைத்தான் பிறந்தான்!

நானோ.. ஒவ்வொன்றாய் அனுபவித்து
அலைபேசியில் புகைப் படமும்
ஓடும் படமும் பிடித்தேன்..

இரவில்..
தலையணைக்கு பக்கத்திலே
அலைபேசியை வைத்து விட்டு
தூங்கினேன்.

துயில் கலைத்த காலையில்..
எனக்கொன்றும் நிகழவில்லை.

அலைப் பேசியில் (virus)
கிருமி நுழைந்து விட்டது!
இது வரை சரி செய்யவே இல்லை.
ஒரு வேளை..

அலைபேசியில் வந்தது..
அவ்லியாவா?! பிசாசா?!
தங்ஙளா?! அப்பாவா?!
ஜின்னும்மாவா?!..

-மணவை அமீன்.
Series Navigationஆதாம் சிதைத்த ஏவாளின் மிச்சங்கள்வட கிழக்குப் பருவம்