குடை ரிப்பேரும் அரசியல் கைதும்

சமீபத்தில் ஒரு நாள் வீட்டிலிருந்து வேலையாக வெளியே செல்வதற்கு வர நேர்ந்தது. ஒரு குடை ரிப்பேர் செய்பவர் குடைகளை சரி செய்து கொண்டிருந்தார். சரி. மழை காலம் வந்து விட்டது, வீட்டிலிருந்த பழுது பட்ட குடைகளை எடுத்து வந்து சரி செய்து கொள்ளலாம் என்று தோன்றியது. வீட்டிற்கு சென்று குடைகளை எடுத்து வந்து கொடுத்தேன்.

பழுதான குடைகளை ஆராய்ந்து கொண்டே என்னுடன் பேச ஆரம்பித்தார். சார், எங்க வேலை பாக்குறீங்க என்று ஆரம்பித்தார். சொன்னேன். பார்க்க வாட்ட சாட்டமாக இருந்தார். நான் கூட போலீஸ் கான்ஸ்டபிளாக இருந்தேன் சார் என்றார். எனக்கு ஆச்சர்யமாகவும் என்னவோ போலும் இருந்தது. சிறிது நேரம் மௌனமாக இருந்தார். பிறகு, அவரே தன்னுடைய கதையை ஆரம்பித்தார்.

1970-களில் பிரபலமாக இருந்த ஒரு அரசியல் பிரமுகரை கைது செய்ய போன போலீஸ் குழுவில் கூட போனேன் சார் என்றார். சரி என்றேன். பிறகு, ஆட்சி மாறியது. நான் கைது செய்ய சென்ற பிரமுகர் கட்சி ஆட்சியை பிடித்தது என்றார். யார் அந்த பிரமுகர் என்று கேட்டேன்? பதில் சொல்லாமல் உரையாடலை தொடர்ந்தார்.

என்னை சென்னையிலிருந்து ராமநாதபுரத்திற்கு மாற்றினார்கள். அடப்பாவமே என்றேன். இரு பெண் குழந்தைகளையும் விட்டு விட்டு அங்கே பணிக்காக சென்றேன் என்றார். துறைரீதியாக வெவ்வேறு நடவடிக்கை எடுத்தார்கள். கடைசியாக ஒரு நாள் வேலையை விட்டு போக சொல்லிவிட்டார்கள் என்றார். துயரமாக இருந்தது.

என்னங்க “கோர்ட், டிரிபுயனல், மனித உரிமை ஆணையம்” எல்லாம் இருக்கே என்றேன். அதெல்லாம் ஆட்சியாளர்களுக்கு எதிரா ஒன்றும் செய்ய முடியாது சார் என்றார். சரிங்க ஏதாவது செக்யூரிட்டி வேலைக்கு போய் இருக்கலாமே என்றேன்.

அட போங்க சார். போலீஸ் வேலையில் இருந்து டிஸ்மிஸ் ஆனவங்களுக்கு யாரு சார் செக்யூரிட்டி வேலை தருவா? என்றார். அட கடவுளே என்றேன். சிறிது நேரம் மௌனமாக இருந்தார்.

உரையாடலை அவரே தொடர்ந்தார்.

எனக்கு ரெண்டு பொண்ணுங்க சார். பெரிய பொண்ணு கல்யாணத்தை கஸ்டப்பட்டு முடிச்சிட்டேன் சார். சின்ன பொண்ணு இப்ப வேலைக்கு போறா எதோ குடும்பம் ஓடுது சார் என்றார்.

என்னோட செர்வீசுக்கு நான் டி.எஸ்.பி ஆகி இருக்கனும் சார். இப்படி தெரு தெருவா குடை தைக்கிறேன் என்றார். டி.எஸ்.பி் குடை தைப்பது வருத்தமாகத்தான் இருந்தது.

சமீபத்தில் ஒரு முன்னாள் அமைச்சரை கைது செய்ய சென்ற போது பெரிய போலிஸ் அதிகாரிகள் எல்லாம் மரத்தடியில் நின்றதாகவும் ஒரு இன்ஸ்பெக்டர் தான் கைது செய்ததாகவும் ஒரு வார இதழில் படிக்க நேர்ந்தது. ஒப்பிட்டு பார்க்கவும் முடிந்தது.

ஒரு கட்சி ஆட்சிக்கு வரும்போது மிக உயர்வான பதவிகளில் இருப்போர் எல்லாம் வேறு கட்சி ஆட்சிக்கு வரும்போது முக்கியத்துவம் இல்லாத பதவிகளுக்கு போவதையும் பார்க்க முடிகிறது.

அவர் குடையை தைத்து முடித்தார். நான் அவரிடம் யாரு அந்த பிரமுகர் என்று திரும்பவும் கேட்டேன். அவர் முகத்தில் கலவர ரேகைகள் படிவதை பார்க்க முடிந்தது. வேண்டாம் விட்டுருங்க சார் என்றார்.

எவ்வளவு பணம் தரவேண்டும் என்றேன்? சொன்னார். குறைந்த வருமானம் உள்ளவர்களிடம் பேரம் பேச வேண்டியதில்லை என்ற என் கருத்தின்படி கேட்ட தொகையை கொடுத்து விட்டு நடையை கட்டினேன்.

பிறிதொரு நாள் மழை வந்தது குடையை எடுத்துக்கொண்டு தெருவில் இறங்கினேன். குடைக்காரர் நினைவில் வந்தார். அவர் குடை ரிப்பேரை எப்படி கற்றுக் கொண்டார் என்று கேட்காமல் விட்டு விட்டோமே என்று தோன்றியது.

இப்பொழுதெல்லாம் மழை வந்து குடையை விரித்தால் குடை கனமாகி இருப்பது போல் படுகிறது.

Series Navigationஇங்கே..(80) – நினைவுகளின் சுவட்டில்