கே.எஸ்.தங்கசாமியின் “ ராட்டினம் “

இப்போதெல்லாம் டிஜிட்டலில் எடுப்பது சர்வ சாதாரணமாகி விட்டது. வழக்கு எண்ணை ரெட் 1ல் எடுத்ததாக வேதம் புதிது கண்ணன் சொன்னார். பிலிம்மில் எடுப்பதில் 70 விழுக்காடு ரிசல்ட்தான் வரும் என்று அறிந்தவர்கள் சொல்கிறார்கள். 70க்கு 100 என்றால் கசக்குமா என்ன? கருப்பட்டியைக் கேட்பரீஸ் ரேப்பரில் கொடுத்த கதைதான். அப்படிப்பட்ட ஒரு படம்தான் ராட்டினம்.

தூத்துக்குடி களம். கயிறு விற்பனைக்கடையில் நாயகன். நாயகி துறைமுக அதிகாரியின் மகள். அவளது மாமா பப்ளிக் பிராசிகுயூட்டர். நாயகன் அண்ணன் உள்ளூர் கட்சித் தலைமையின் வலது கரம். அவன் மனைவி கவுன்சிலர். அரசியலுக்கும் அரசுக்கும் காதல். அடிதடி, வன்முறை அதிகம் இல்லாமல் காதல் கட். கடைசியில் நாயகன் நாயகி கல்யாணம் வெவ்வேறு நபர்களுடன். தலை சுற்றுகிறதா? அப்படி எதுவும் ஆகாமல் படம் பார்க்க முடிவதால், இயக்குனருக்கு வெற்றி. படம் ஹிட்.

பல புதுமைகள் படத்தில். முதலில் காட்டப்படுவது நாயகன் நாயகி காதல் அல்ல. ஹீரோவுடைய நண்பனுடையது. எப்படிக் காதலிக்க வேண்டும் என்கிற பாடம் எடுக்கும் சூழலில், சோதனை எலியாக மாட்டிக் கொள்பவள்தான் நாயகி. இவர்கள் காதல் விவரம், முதலிலேயே இரு வீட்டிற்கும் தெரிந்து, வன்முறை ஏதும் இல்லாமல், பெண்ணின் படிப்பு முடிய வேண்டிய கட்டாயத்தில், சுமூகமாகப் பேசித் தீர்ப்பது இன்னொரு புதுமை. பெரிய இடத்துப் பெண்கள், தப்பு செய்து, மாட்டிக்கொள்ளூம்போது, காவல் துறையின் அணுகுமுறை, நிஜ சம்பவத்தின் வார்ப்பு. பருவ வயது மாறும்போது, இனகவர்ச்சி தொலைந்து, வாழ்வின் அவசியங்கள் வெளிப்படுவது நல்ல முடிவு.

ஜெயம் ( லகுபரன் ) தனம் ( சுவாதி ) நல்ல தேர்வுகள். ஒரு ரவுண்டு வர வாய்ப்புகள் உண்டு. சரியாகப் படங்களைத் தேர்வு செய்தால், லகுபரன் அடுத்த தனுஷ் ஆகலாம். ஜெயத்தின் அண்ணனாக தங்கசாமியே நடித்திருக்கிறார். அவசியமில்லாத பாத்திரம். வேலை எதுவுமில்லாமல் வந்து போகும் பாத்திரங்கள் நடுவே அவரும் ஒருவர். ஜெயத்தின் நண்பனாக வரும் சிறுவன், சில படங்களில் சந்தானத்திற்கு side kick ஆகலாம். அடுத்த ஹாஜா ஷெரீப்? “ நாங்க பாத்துக்கறோம் “ என்று வீராப்பு பேசும் அரசியல் அடிவருடிகள் மற்றும் ஜெயத்தின் டீன் ஏஜ் தோழர்கள் எல்லாம் வெத்து வேட்டுகள் என்பது ஒரு அண்டர் கரண்ட். ஜெயத்தின் அண்ணனை திட்டம் போட்டுக் கொன்றவர்களை, ஒரு ஊனமுற்ற ஒருவர், நண்பர்களுடன் போட்டுத் தள்ளுவது, ஒட்டிய மண்ணை மீசையிலிருந்து துடைத்த கதை. சுப்பிரமண்யபுரம் பாதிப்பு.

ராட்டினம், விண்ணைத் தாண்டி வருவாயாவும் இல்லை, காதலும் இல்லை. புதுசு. சில உதிரிக் கதாபாத்திரங்கள் ஈர்க்கின்றன. கருப்பாக, கறுப்பு கூலிங்கிளாஸ் போட்டு, பல்ஸரில் சுற்றும் பையன். கயிறு விற்பனைக் கடை நடத்தும் ஜெயத்தின் அப்பா. (‘நம்மகிட்டயே கயிறு திரிக்கிறான்.’ ) காவல் நிலையத்தில் காணப்படும் விலைமாதர்கள். ( ‘என்கிட்டே வந்திருந்தா இன்னும் கம்மியா முடிஞ்சிருக்கும்.’) ரோட்டில் எதிர்படும் டிவிஎஸ் 50 தம்பதி ( ‘ சுர்ருனு போனே, சுடுகாட்டுக்குத்தான் போவே’ ).

ஒளிப்பதிவு ( ராஜ் சுந்தர் ) பளிச். இசை ( மனு ரமேஷ் ) ஓகே. பாடல்கள் நாலுக்கு ரெண்டு பழுதில்லை. ஓரளவு வேகத்துடன் ஓடும் படம். இன்னமும் 20 நிமிடம் கத்தரி போட்டிருந்தால் படம் விர் ஆகியிருக்கும். ஆனாலும் தங்கசாமியிடம் சரக்கு இருக்கிறது. அடுத்த படம் வந்தால்தான் தாக்குப் பிடிப்பாரா என்று தெரியும்.

இந்தப் படத்தோடு வெளியான “ கண்டதும் காணாததும் “ காணுவதற்கு முன்பே காணாமல் போனது, டிஜிட்டல் குப்பைக்கு ஒரு சான்று.

#

பதினைந்து பேர் ( @ ரூ 60/- ) படம் பார்த்த போரூர் கோபாலகிருஷ்ணா திரையரங்கை, நவீனமாக மாற்றியதில், மாற்றம் ஏதும் இல்லை கூட்டத்தில். வருமானம் ஆரம்பத்திலும் இடையிலும் போடப்படும் பத்து நிமிட விளம்பரப் படங்கள் மூலம் என்கிறார்கள். ஒரு மாற்றம் உண்டு. இப்போதெல்லாம் புதுப் படங்கள் ரிலீஸாகிறது இங்கே. Stop gap ல் ‘மாமனாரின் இன்ப வெறி’ யெல்லாம் கிடையாது. ( அப்பாடா!) செலவோடு செலவாக ஏசி பண்ணியிருந்தால், கிளாஸ் கட் பண்ணும் இளம் ஜோடிகள் குவிந்திருப்பார்கள். ஹை நாக்ஸ¤கள் அப்படித்தானே கல்லா கட்டுகின்றன!

#

Series Navigationபொக்கிஷம் – ஜெயகாந்தன், இந்திரா பார்த்தசாரதி, மா. அரங்கநாதன் – ஆவணப்படங்கள்.யமுனா ராஜேந்திரனுடன் சில மணித்தியாலங்கள்