கைப்பைக்குள் கமண்டலம்

Spread the love

என்னை வீழ்த்திய
கற்களே படுக்கையாய்
இறுதி நொடிகள்
நகர்ந்திருக்க
“இது முடிவில்லை”
என்று தேவதை கூறினாள்

அது கனவா என்றே
ஓரிரு நாட்கள்
வியந்திருந்தேன்

பின்னொருனாள்
கொடுங்கனவால்
வியர்த்தெழுந்த போது
என் அருகில்
அமர்ந்திருந்தாள்
‘இருள் எப்போதும் தோற்றமே”
என்றாள்.

மற்றொரு நாள்
மௌனமாய் அருகில்
“இந்தக் காயங்களை உடனே
உன் சக்தியால் ஆற்றக் கூடாதா?”

“மானுட உடல் இன்பம்
துன்பம் இரண்டையும்
அனுபவிக்கும். நீ மானுடனே”
புன்னகைத்தாள்

தைரியம் கூடி ஒரு நாள்
“நீ ஏன் மானுடப் பெண் ஆக கூடாது?”
“சீதையின் கதை எனக்குத் தெரியும்”
மறைந்தாள்

உட்காரும் நிலைக்கு வரும் போதே
அவளிடம் கைப்பை உண்டு என்று ‘
கண்டேன்
ஒரு மூலிகையை எடுக்க அதைத்
திறந்தாள்
உள்ளே கமண்டலம்

-சத்யானந்தன்

Series Navigationபொன்னியின் செல்வன் படக்கதை தொடராதுதிரையுலகக் கலைஞர்களுக்கு . . .