கோனோரியா ( மேகவெட்டை நோய் )

Spread the love

          கொனோரியா ஒரு பாலியல் நோய். இதை மேகவெட்டை நோய் என்று அழைப்பார்கள். இது தகாத உடல் உறவு மூலம் பரவும் தொற்று நோய். இது கோனோகக்காஸ் எனும் கிருமியால் உண்டாகிறது.இது பாலியல் நோயாதலால் உலகளாவிய நிலையில் காணப்படுகிறது.தொழில் மயமான நாடுகளில் இது அதிகமாகவே காணப்படுகிறது.பாதுகாப்பற்ற பாலியல் உறவுகளால் இந்த நோய் எளிதில் பரவிவருகிறது. 15முதல் 19 வயதுடைய பெண்களுக்கும், 20 முதல் 25 வயதுடைய ஆண்களுக்கும் அதிகமாகவே பரவி வருகிறது.விலை மாதர்களிடம் ஆணுறை பயன்படுத்தாமல் உடல் உறவு கொண்டால் இது எளிதில் தொற்றிக்கொள்ளும்.
                                                                                                அறிகுறிகள்

இது பாலியல் உறவால் தொற்றுவதால், பாலியல் உறுப்புகளைப் பாதிப்பதோடு உடலின் வேறு உறுப்புகளையும் பாதிக்கும் தன்மை கொண்டது. இதனால் உண்டாகும் அறிகுறிகள் வருமாறு:

* சிறுநீர் வெளியாகும் ” யூரத்ரா ” எனும் சிறுநீர் வடிகுழாய் பகுதியில் அழற்சி உண்டாகி வலிக்கும். இது உடலுறவுக்குப்பின் 2 முதல் 7 நாட்களில் உண்டாகலாம். இதைத் தொடர்ந்து ” புரோஸ்டேட் ” சுரப்பி வீக்கமும் ,  ” எப்பிடிடிமைட்டிஸ்  ” எனும் விதை நீட்சி பகுதியும்  வீங்கி வலிக்கும். ஆண் உறுப்பில் வீக்கமும் புண்ணும் உண்டாகி வலிக்கலாம்.

* ” செர்விக்ஸ் ” எனும் கருப்பை வாயில்  கோனோரியா கிருமிகளின் தொற்று உண்டாகி புண் உண்டாகும்.இது உடலுறவுக்குப்பின் 10 நாட்கள் சென்று உண்டாகும். இதனால் அப்பகுதியில் வீக்கம் உண்டாகி வலிக்கும்.

* ஆசனவாய் பகுதியில் கிருமிகள் தொற்றி அங்கும் வலி உண்டாகும்.

* வாய், தொண்டையில்கூட இக் கிருமி பாலியல் உறவால் பரவலாம்.

* கண்களில் கூட இது பரவி கண் இமைகளில் வீக்கம், கருவிழியில் புண் போன்றவற்றை உண்டுபண்ணலாம்.

* கர்ப்ப காலத்தில் இந்த தொற்று ஏற்பட்டால் முதல் மூன்று மாதத்தில் கரு கலையலாம்.நிறை மாதத்தில் இந்த தொற்று உண்டானால் சிசுவை பாதிக்கும். பிறந்த குழந்தைக்கு கண்களில் இந்த தொற்று காணப்படலாம்.

* எலும்பு மூட்டுகளில் கிருமிகள் தாக்கி வீக்கத்தையும் வலியையும் உண்டுபண்ணும். முழங்கால், முழங்கை ,கைகால்களின் விரல் மூட்டுகள் பாதிப்புக்கு உள்ளாகலாம்.

                                                                                   பரிசோதனைகள்

வெள்ளை அல்லது மஞ்சள் நிறத்தில் வெளியேறும் சீழ் போன்றதை எடுத்து பரிசோதனை செய்து பார்த்தால் கோனோகாக்கஸ் கிருமிகளைக் காணலாம்.இதுவே நோயை நிர்ணயம் செய்ய போதுமானது.

                                                                                   சிகிச்சை முறைகள்

இந்த பாலியல் நோய் எளிதில் பலருக்கு பரவினாலும், இப்போது இதை பூரணமாக குணப்படுத்த வலுவான கிருமிக்கொல்லி மருந்துகள் உள்ளன. ஒருவேளை கணவன் இதை வேறு பெண்ணிடம் தொற்றிக்கொண்டு வந்தால், மனைவிக்கும் இது பரவும் என்பதால் இருவரும் சிகிச்சை பெறுவதே நல்லது.

முன்பின் தெரியாதவர்களுடன் பாலியல் உறவு வைத்துக்கொள்வது ஆபத்தானது. பொது மகளிரிடம் உறவு வைத்துக்கொள்வது இன்னும் ஆபத்தானது. ஆணுறையை பயன்படுத்துவது பாதுகாப்பானது.

இது பாலியல் தொடர்புடைய நோய்தான். ஆனால் இது ஏய்ட்ஸ் நோய் போன்று கொடூரமானது அல்ல.ஒரு முறை இந்த நோயால் பாதிக்கப்பட்டபின்பு முறையான சிகிச்சையின் மூலம் ( கணவன் மனைவி இருவரும் ) இதை முற்றிலும் குணப்படுத்தலாம். ஆனால் அதன்பின்பு மீண்டும் தகாத உறவு இல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

( முடிந்தது )

Series Navigationஉலகின் தலை சிறந்த சில ஓரின ஈர்ப்புப் படங்கள் 11- ஒர்லாண்டோஇப்போது எல்லாம் கலந்தாச்சு !