சமச்சீர் கல்வி : பிரசினைகளும் தீர்வுகளும்

கல்விமுறை பல விவாதங்களுக்கும், பொதுக் கருத்து உருவாக முடியாத படி தடங்கல்களுக்கும் பிறகு தி மு க ஆட்சிக் காலத்தில் சமச்சீர் கல்வி என்ற பெயரில் வேறு வேறு சரடுகளாகவும் பிரிந்து செயல்பட்டுக் கொண்டிருந்த கல்வித் திட்டங்களை ஒருங்கே கொண்டு வந்து ஒருமைப் படுத்தும் திட்டமாக முன்வைக்கப் பட்டது. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பின்பு சமச்சீர் கல்விக்கு எதிராகவோ, ஆதரவாகவோ எந்தக் கருத்தும் முன்வைக்கப்படாமல், திமுகவின் செயல் திட்டம் என்ற முத்திரை குத்தி பாடப் புத்தகங்கள் வினியோகமும், கல்வியாண்டு தொடக்கமும் நிறுத்தி வைக்கப் பட்டது. அரசியல் காரணங்களை ஒதுக்கிவிட்டால், ஜெயலலிதாவின் செயலுக்கு நியாயம் என்ன என்பது பற்றித் தெளிவில்லை. முந்திய ஆட்சியின் செயல்பாடுகளை தூக்கி எறிந்து விட்டுத்தான் புதிய ஆட்சி தொடங்க வேண்டும் என்ற உன்னதமான வழிமுறையை வீராணம் திட்டத்தைக் கிடப்பில் போட்டுத் துவக்கி வைத்த ப்ருமை எம் ஜி ஆரைச் சாரும்.

சமச்சீர் கல்வியின் ஆதரவும் விமர்சனமும் கொண்டிருக்கும் உள்ளுறை அரசியல் நோக்குகளைத் தவிர்ஹ்துப் பார்க்க வேண்டும்.

1. சமச்சீர் கல்வி பாடத்திட்டங்களை ஒரே தரமாக ஓரியண்டல், மெட்ரிக் பள்ளிகளுக்கு அமைக்க முயல்கிறது. ஒரே தரம் என்பது சிறந்த தரம் என்பது பொருளல்ல.

2. சமச்சீர் கல்வி என்பது சமச்சீரான மாணவத் திறன்களை முன்முடிபாகக் கொண்டு இயங்குகிறது. இந்த அனுமானம் விவாதத்திற்கு உரியது.

3. சமச்சீர் கல்வியில் அரசியல் தலையீடுகளைத் தவிர்க்க எந்த வழிமுறையும் இல்லை. ஜெயலலிதா சமச்சீர் கல்விக்கு தந்த எதிர்ப்புக்கு பாடப்புத்தகங்களில் இருந்த தி மு க சார்பு அரசியல் பகுதிகள் ஒரு பெருங் காரணம் என்றால் அது மிகையல்ல.

4. சமச்சீர் கல்வியினால் கல்வி வியாபாரம் பாதிக்கப் படும் என்றும், சமச்சீர் கல்வியின் மூலம் கல்வியின் வணிகமயமாக்கல் தடுக்கப் படும் என்று சொல்லப் படுகிறது. இது சரியல்ல. கல்வி தனியார் மயமானதன் பின்பு தான் கல்விப் பரவல் தமிழ் நாட்டில் பல மடங்காகப் பெருகியுள்ளது. தனியார் மயம் தவிர்க்கப் படவேண்டியதல்ல. சீர் திருத்தம் பெற வேண்டியது. அரசாங்கப் பள்ளிகள் தரமான கல்வி ஹரும் என்ற நம்பிக்கை உறுதிப் படும் வரையில் தனியார் பள்ளி மோகமும், மாணவர் சேர்க்கை பெருவாரியாய் நிகழ்வதும் நடைபெறவே செய்யும்.

5. சமச்சீர் கல்வி எனும் சதுரங்க விளையாட்டில் ஒரு கோணம் உண்மையான கல்வியாளர்கள். இன்னொரு கோணம் அரசியல் வாதிகள். இன்னொரு கோணம் தனியார் பள்ளி உரிமையாளர்கள். இன்னொரு கோணம் பெற்றோர்கள். ஆனால் மிக முக்கியமான கோணம் ஆசிரியர்கள். அவர்கள் பற்றிய விவாதம் முழுதும் காணப்படவில்லை. சரியான ஆசிரியர் பயிற்சி இல்லாமல் எந்த கல்வித் திட்டமும் வெற்றி பெற முடியாது. ஆசிரியர் பயிற்சிக்கு வருபவர்கள் பெரும்பாலோர் ஆசிரியப் பணியின் மீது ஈடுபாட்டோடு செயல்படும் வகையில் ஆசிரியர்களுக்கான சமூக அந்தஸ்து இல்லை. சரியான ஊதியமும் இல்லை. அதனால் அவர்களுக்கு ஆசிரியப் பணி மீது ஈடுபாடும் இல்லை. வெறும் சமச்சீர் கல்விக்கு பாடப் புத்தகங்களை அச்சிட்டு வழங்குவதுடன் சமச்சீர் கல்வித் திருத்தம் முடிந்து போவதில்லை.

6. பெற்றோர்களின் கவலை தம் குழந்தைகளின் எதிர்காலம் குறித்ததாக இருக்கிறது. அவர்களுக்கு வேலை கிடைக்குமா என்பது அவர்களின் முதல் கவலை. லட்சியவாதக் கண்ணோட்டத்தில், வேலைக்காக அல்ல, அறிவுக்காக கல்வி என்ற முழக்கம் சமூகத்தின் யதார்த்தைக் கருஹ்தில் கொள்ளாதது.

7. பள்ளிகளில் கூடுதல் பாடத்திட்டத்தை மாணவர் ஈடுபாடு கருதி, ஆனால் மதிப்பீட்டுகளுக்கு அப்பாற்பட்டு, அறிமுகப் படுத்த அனுமதி வழங்க வேண்டும்.

8. பள்ளிகளில் மதிப்பெண்களுக்கு இலக்காகாத பாடங்கள் குறைந்த பட்சம் ஒரு மணி நேரமாவது நடத்தப் படுவது கட்டாயமாக்க வேண்டும். அந்த நேரத்தில் மாணவர்களின் விருப்பத்தேற்க கலை, மொழி, சமூகவியல், சுற்றுச் சூழலியல் என்ற பாடங்கள் நடத்த முன்வர வேண்டும்.

9. சமச்சீர் கல்வி என்பது சமச்சீர் அறிதிறன் எல்லா மாணவர்களுக்கும் உள்ளது என்ற தவறான அடிப்படையில் உருவாக்கப் பட்டிருந்தால் அது திருத்தி அமைக்கப் படவேண்டும். அறிவியல் திறமை உள்ள மாணவர்கள் மொழித் திறனின் குறைபாடு இருந்தால் அந்தக் காரணத்திற்காக அவர்கள் பின்னடைவு பெறக் கூடாது. அதனால் மாணவர்களின் ஈர்ப்புத் திறனுக்குத் தக்க அவர்கள் மதிப்பீடு செய்யப்பட வேண்டும். ஆனால் இங்கு எல்லோரும் மொரே மாதி கல்வி கற்று ஒன்றே போல் மதிப்பெண்கள் எல்லாப் பாடங்களிலும் பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பினால் மாணவர்களின் உண்மையான அறிவுத்திறனுக்கு பதிலாக பாடங்களை மட்டுமெ சுற்றிப் புழங்கும் குறுகிய பயிற்சி தளம் உருவாக்கப் படுகிறது.

10. தமிழ் மொழிப் பயிற்சியை எல்லா பள்ளிகளிலும் கட்டாயமாக ஆக்க முடியாமல் தடையாக இருப்பது இருமொழித் திட்டமே. உடனடியாக மும்மொழித்திட்டம் அமல் செய்யப் பட்டு தமிழ் கற்றுக் கொள்வது எல்லா பள்ளிகளிலும் இடம் பெற வகை செய்ய வேண்டும். இந்தி ஒழிப்புப் போர் இறுதியாக தமிழ் ஒழிப்பில் முடிந்தது என்ற உண்மை எல்லோருக்கும் புரிய வேண்டும்.

11. தமிழ்வழிக் கல்வி என்பது இன்னமும் பெற்றோர்களிடம் பெருத்த ஆதரவு இல்லாமல் இருக்கிறது. ஆங்கிலம் அத்தியாவசியம் என்ற உணர்வும், ஆங்கில வழிக் கல்வி குழந்தைகளுக்கு உலக அளவில் வாய்ப்புக் கதவுகளைத் திறக்கும் என்ற உணர்வும் பெற்றோர்களுக்கு இருப்பது நியாயமே. ஆங்கில வழிக் கல்வி முற்றிலும் அகற்றப் படும் என்பதை தம் குழந்தைகளின் பணின் பாதுகாப்பு அகற்றப் படும் என்பதாகப் புரிந்து கொண்டு பெற்றோர்கள் எதிர்வினை ஆற்றுவதும் நியாயமே. எனவே முழுக்கத் தமிழில் என்ற நிலை வரும் வரையில் முடிந்த வரை தமிழில் என்ற கோட்பாட்டைச் செயல் படுத்த வேண்டும். ஆங்கிலத்தில் உள்ள பாடப்புத்தகங்களுக்கு இணையாக தமிழ்ப் பாடப்புத்தகங்கள் தாராளமாகக் கிடைக்க ஏற்பாடு செய்வது உசிதம். மின் புத்தகங்கள் பரவலாய், மடிக் கணினியின் ஓர் அங்கமாக வழங்கப் பட்டால் மாணவர்கள் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு என்று சரிபார்க்க உதவக் கூடும். அதன் மூலம் தமிழ்ப் பாடப் பயிற்சி கொஞ்சம் கொஞ்சமாக வேரூன்றும் சாத்தியம் உள்லது.

12. ஆரிய-திராவிடப் பிரிவினைகள் போன்ற அறிவியலுக்கும் வரலாறுக்கும் எதிரான ஆக்கங்கள் பாடப் புத்தகங்களிலிருந்து நீக்கப் படவேண்டும்.

13. மதிப்பெண்களின் எண்கள் சார்பு நீக்கப் பட்டு எந்த அளவீடு என்று மட்டுமே குறிக்கப் படவேண்டும். 95-லிருந்து 100 என்பது ஒரு மதிப்பீடாகவும், 90-லிருந்து 94 ஒரு மதிப்பீடாகவும் எண்ணப் படவெண்டும். 98-ஐ விட 99 உயர்ந்தது என்ற மாயை களையப் படவேண்டும்.

அரசாங்கப் பள்ளிகளுக்கும், தனியார் பள்ளிகளுக்கும் ஆரோக்கியமான போட்டி உரிவாக வழி வகுக்கப் பட்டால் தான் இந்த குறிப்புகளில் சிலவாவது நிறைவு பெறுதல் சாத்தியம். தனியார் மயமாக்கல் பற்றிய எதிர்மறை உணர்வை முற்போக்கு என்ற பெயரில் பரப்புவது நல்லதல்ல.

இவை எல்லாமே உடனடியாய் சாத்தியமில்லை ஆயினும் ஒரு சில உடனடியாகச் சாத்தியமே. அரசாங்கம் சார்பு நிலை எடுக்காமல் செயல்பட்டால் பெரும்பாலும் இதை நிறைவேற்றலாம்.

கோபால் ராஜாராம்

Series Navigationபஞ்சதந்திரம் தொடர் 5 – நரியும் பேரிகையும்எனது இலக்கிய அனுபவங்கள் – 12 பத்திரிகை ஆசிரியர்கள் சந்திப்பு – 4 (தி.க.சி)