சரித்திர நாவல் போதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 34

புத்தர் தியானத்திலாழ்ந்திருந்தார். மிகவும் சிரமப் பட்டுக் கண்விழித்த ஆனந்தன் இருவருக்கெனப் பெரிது பட்டிருந்த குடிலெங்கும் இருளடைந்து கிடப்பதைக் கண்டார். எழுந்து பெரிய அகலுக்கு எண்ணை ஊற்றி விளக்கேற்ற வேண்டும். ஒருக்களித்து எழுந்திருக்க முயன்றார். முடியவில்லை. காய்ச்சலின் வீச்சு அதிகமாயிருந்தது.

தியானத்திலிரிந்து விழித்தெழுந்த புத்தர் கண்கள் பழகச் சில நொடிகள் காத்திருந்தார். மங்கலான வெளிச்சம் வந்த இடம் குடிலின் வாயில் என்று பிடிபட்டது. ஆனந்தனின் அரவமே இல்லாதிருப்பது வியப்பாயிருந்தது. குடிலுக்கு வெளியே சென்று இரண்டு மூன்று குடில்களுக்குப் பொதுவாக வைக்கப்பட்டிருந்த தீப்பந்தந்தத்தை எடுத்து மீண்டும் குடிலுக்குள் வந்தார். அகல் விளக்குகளைத் தேடும் போது தான் படுத்திருந்த ஆனந்தன் கண்ணில் பட்டார். ஆனந்தனைப் படுத்திருக்கும் நிலையில் தான் பார்த்ததே இல்லையே என்பதும் நினைவுக்கு வந்தது. அகலில் திரி எரிந்து போயிருந்தது. ஆனந்தன் அருகிலேயே வாழை நாரால் ஆன திரியை வைத்திருந்தார். அதை அகலில் இட்டு எண்ணைக் குடுவையில் இருந்த எண்ணையை ஊற்றி அகல் விளக்கைத் தீப்பந்தம் வைத்து ஏற்றினார். தீப்பந்தந்தத்தை அது இருந்த இடத்தில் வைத்து விட்டு வரும் போது தான் ஆனந்தனுக்கு உடம்பு சுகமில்லையோ என்று ஐயம் வந்தது. உள்ளே வந்து ஆனந்ததனின் நெற்றியில் கை வைத்துப் பார்த்தார் . கொதித்தது. சிறிய துணி ஒன்றை எடுத்து ஈரமாக்கி ஆனந்தனின் நெற்றி மீது வைத்து விட்டு மறுபடி வெளியே வந்து ஒரு தீப்பந்தந்தத்தை எடுத்துக் கொண்டார்.

வெளிச்சத்தைத் தேடி வரும் பூச்சிகள் முகத்தில் மோதியதால் புத்தர் தீப்பந்தந்தத்தைத் தள்ளிப் பிடித்தபடியே நந்தவனத்துக்குள் நுழைந்தார். கீழே ஏதேனும் ஊர்ந்து செல்கிறதா என்று பார்ப்பதற்காகவோ என்னவோ தீப்பந்தத்தை செங்குத்தாக அதே சமயம் தாழ்வாகப் பிடித்தபடி நடந்தார். முகத்தின் மீது புகை பட்டதால் சற்றுத் தள்ளிப் பிடித்துக் குனிந்த படி நடந்தவர் ஒரு இடத்தில் நின்று அதை மேலும் தாழப் பிடித்தார். அவரது முட்டிக்கு மேல் உயரமாக இருந்த துளசிச் செடிகளில் இருந்து ஒரு கை கொள்ளுமளவு துளசி இலைகளைப் பறித்தார். திரும்பக் குடிலுக்கு வந்தவர் ஆனந்தன் நெற்றியில் இருந்த துணியை மீண்டும் ஈரமாக்கி வைத்து விட்டு நந்தவனத்தைச் சுற்றி நடந்தார். நீள் சதுரமாகவும் சற்றே உயரமாகவும் இருந்த உணவுக் கூடத்தை அடைந்தார்.

குளிர்காலத்தில் உணவைச் சூடு செய்யவோ உடல் நலம் இல்லாதவருக்காக சமைக்கவோ உணவுக்கூடம் என்று ஒன்று வேண்டும் என்று கற்பனை செய்து நிறைவேற்றியதே ஆனந்தன் தான். உணவுக் கூடத்தில் தீப்பந்தத்துக்கென ஒரு உயரமான மண் குடுவையே இருந்தது. அகல்கள் மட்டுமே குடில்கள் உள்ளே எரிந்தன. உணவுக் கூடத்தில் யாரும் அதிக நேரம் இல்லாததால் எப்போதேனும் தீப்பந்தங்கள் பயன்பட்டன. மண்ணால் மெழுகிச் செய்த அடுப்பில் சுள்ளிகளை இட்டுத் தீப்பந்த உதவியுடன் அடுப்பை ஏற்றினார். ஒரு மண் கலையத்தில் துளசி இலைகளை இட்டுக் கொதிக்க வைத்தார். நன்கு கொதித்ததும் அதன் சாறை ஒரு சிறு மண் குடுவையில் இறுத்து, குடிலுக்குத் திரும்பினார். ஆனந்தனின் முதுகுப் பக்கமாகக் கையைக் கொடுத்துத் தூக்கினார். “ஆனந்தா. கண் திற. இந்த்த் துளசிச் சாறை அருந்து” என்றார். மெல்லக் கண் விழித்த ஆனந்தன் பலவீனமாக நோக்கினார். புத்தர் மிக மெதுவாக துளசிக் கஷாயத்தை ஊட்டி விட்டார். கொஞ்சம் அருந்தியதும் ஆனந்தன் புத்தர் தோளில் சாய்ந்தார். சிறிது இடைவெளி விட்டு மேலும் கஷாயத்தை ஊட்டினார். ஆனந்தன் ஒரு மணி நேரம் கழித்தே தெம்பாகிப் பேசத் துவங்கினார் ” தாங்களா இதைக் கொதிக்க வைத்தீர்கள்?”

“ஏன் ஆனந்தா நன்றாக இல்லையா?”

ஆனந்தன் கண்களில் நீர் மல்க ” தெய்வத்துக்கு நிகரான தாங்கள் ஒரு எளியவனுக்காக இதையெல்லாம் செய்வது தவறில்லையா?” என்றார். புத்தர் பதிலேதும் சொல்லாமல் ஆனந்தனின் தலையைத் தடவிக் கொடுத்தார். ஆனந்தன் உடல் வேர்த்துவிடத் தொடங்கியது. “வெளியே காற்றாடச் சற்று நேரம் இரு” என்று புத்தர் அழைக்க இருவரும் குடிலுக்கு வெளியே வந்தனர். ஒரு காவித் துணியால் ஆனந்தனின் உடலைத் துடைத்து விட்டார் புத்தர். ஆனந்தன் ஒரு சிறிய பாறையில் அமர்ந்தார்.

பலத்த சத்தத்துடன் பெரிய பாறைகள் குடிலின் மேல் விழுந்து கூரையைத் துளைத்துத் தரையைப் பெயர்த்தபடி விழுந்தன. ஓரிரு நொடிகளில் ஆனந்தனை நோக்கி மற்றொரு பாறை உருண்டு வந்தது. புத்தர் அவரை அணைத்தபடி பக்கவாட்டில் ஆனந்தனைத் தள்ளி விட்டார். புத்தரின் வலது கால் மீது வந்து விழுந்து நின்றது பாறை. “புத்த தேவரே” என்னும் ஆனந்தனின் அலறல் கேட்டு மற்ற சீடர்கள் ஓடி வந்தனர்.

“இளவரசர் ஜீவகரே. புத்த தேவருக்குப் பலமான அடி இல்லையே?” என வினவினார் ஆனந்தன்.

ஜீவகன் மெல்லிய மூங்கில்களாகப் பார்த்து எடுத்து அவற்றை அதிக அகலமில்லாத பட்டைகளாக வெட்டிக் கொண்டிருந்தான். “பிட்சு ஆனந்தரே. இது சாதாரண எலும்பு முறிவு தான். நல்ல அதிர்ஷ்ட்டம் பாறை புத்தரின் காலில் பட்டது. அதுவே தலையில் பட்டிருந்தால் அவருடைய உயிருக்கே ஆபத்தாக முடிந்திருக்கும்”

“என்னுடைய உயிரைக் காப்பாற்றத் தன்னுடைய உயிரை அவர் பணயம் வைத்து விட்டார் இளவரசரே”

“புத்தரின் போதனைக்கும் அவரது வாழ்க்கைக்கும் வேறுபாடு கிடையாது ஆனந்தரே. அவர் நம் அனைவரையும் நேசிப்பவர்”

“விரைவில்குணமாகி விடும் இல்லையா?”

“புத்தபிரானுக்கு எழுபது வயது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இவ்வளவு பெரியவருக்குக் குணமாக இரண்டு மாதங்கள் ஆகலாம்”

ஜீவகன் மறுபடிக் குடிலினுள் நுழைந்து புத்தரின் வலது காலைப் பரிசோதித்தான். முட்டிக்குக் கீழே நன்றாக வீங்கி இருந்தது. பாறை பட்ட இடத்தில் ரத்தம் கசிந்தது. துடைக்கப் பட்டாலும் காயம் பட்ட இடத்தில் ஒரு கோடு போல ரத்தம் உறைந்திருந்தது. ஜீவகன் மெல்லிய துணியால் புத்தரின் காலை நன்கு துடைத்தான். பிறகு பணிவான குரலில் “புத்தபிரானே.. தங்கள் எலும்பை சேர்க்க இருக்கிறேன். சற்றே வலிக்கும். தயை கூர்ந்து பொறுத்துக் கொள்ளுங்கள்” என்றான்.

“இதை என் உடலிடம் நீ சொல்லாம் ஜீவகா.. ஆனாலும் அதற்குப் புரியாதே” என்றார் புத்தர்.

ஜீவகன் புத்தரின் வலது கால் முட்டிக்கு அருகில் இடது கையால் அழுத்திப் பார்த்து கணுக்காலுக்கு அருகே வலது கையால் இறுக்கிப் பிடித்து சற்றே வலுவாகக் காலைக் கீழ்ப் பக்கம் இழுத்தான். காலை இருபக்கமும் திருப்பியபடி புத்தரின் முகத்தையே பார்த்த படி இருந்தான். மெல்லிய வலி உணர்வு தென்பட்டது. பிறகு இரு கைகளாலும் காலை நேராகப் பிடித்து வலது கையால் நடுக்காலை அழுத்தித் திருப்பி காதைக் காலின் அருகே வைத்துக் கொண்டான்.

காலை இன்னொரு முறை திருப்பியதும் அவன் விரும்பிய மெல்லிய ஒலி- எலும்பு சரியாக அமரும் ஒலி கிடைத்தது. புத்தர் முகத்தில் வலி உணர்வு மறைந்தது. “யாரங்கே மூங்கில் பட்டைகளைக் கொண்டு வா…” என்றதும் ஒரு சேவகன் மெல்லிய நன்கு இழைக்கப் பட்டிருந்த மூங்கில் பட்டைகளை எடுத்து வந்தான். ஜீவகன் கையை அசைக்காமல் ஒவ்வொன்றாகப் பொருத்து என்றதும் அவன் முறிவான காலுக்குக் கீழே வரிசையாக மூன்று பட்டைகளை வைத்தான். ஜீவகன் பிடியை விடாமல் ஒரு விரலை மட்டும் தூக்கி இடம் விட காலின் மேற்பகுதியில் இரண்டு பட்டைகள் வந்தன.ஜீவகன் பிடியை விடவே இல்லை. சேவகன் கணுக்காலுக்கு மேலே மூங்கிற் பட்டைகளையும் காலையும் ஒன்றாக்கிக் கட்டினான். அதே போல முட்டிக்குக் கீழேயும் ஒரு கட்டுப் போட்ட பின்பே ஜீவகன் தன் கையை எடுத்து கட்டுக்களை இறுக்கினான். கணுக்கால் மற்றும் முட்டி அசையுமளவு வசதி இருந்தது. ஒரு மட்குடுவையில் இருந்து மூலிகை எண்ணையைக் கட்டின் மீது ஊற்றினான் ஜீவகன்.

புத்தரிடம் வணக்கம் கூறி விடைபெற்ற ஜீவகன் குடிலுக்கு வெளியே வந்த போது ” இது நிலச்சரிவு இல்லை. அப்படி இருந்திருந்தால் மரங்கள், மண், சிறு கற்கள் இவையும் சேர்ந்து வந்திருக்கும். இது தேவதத்தன் சதி என்றே தோன்றுகிறது ” என்றார்.

“மகத நாட்டில் புத்தபிரான் மீது வெறுப்புள்ள ஒரே ஜீவன் அவர்தான்” என்றான் ஜீவகன்.

“அஜாத சத்ருவை விட்டுவிட்டீரே இளவரசரே”

“அஜாத சத்ருவிடம் மன மாற்றம் இருக்கிறது. பதினைந்து யோஜனை தூரத்தில் பாடலிபுத்திரம் என்னும் நகரை அவர் நிர்மாணித்துக் கொண்டிருக்கிறார்.நானும் அங்கே வரும்படி பணிக்கப் பட்டவனே. எனது அதிர்ஷ்ட்டம் புத்த தேவருக்கு மருத்துவம் புரிய வாய்ப்புக் கிடைத்தது. நான் அவர் பழையபடி நடக்கும் வரை ராஜகஹத்தை விட்டு நீங்க மாட்டேன்”

பிட்சுக்களின் குடில்களுக்கு வெளியே ஒரு மைதானம். அதில் பொது மக்கள் கூடியிருந்தனர். பகலிலேயே பல்ரும் வந்து காத்திருக்கத் துவங்கினர். இரவுக்கு முன் புத்தரை தரிசித்து வீடு திரும்பவே எண்ணியிருந்தனர். சூரியன் மறைய இன்னும் நேரமிருந்தது. மேற்கே இறங்கிக் கொண்டிருந்தான்.

“வழி விடுங்கள் மகாராணி கேமா வருகிறார்” என்ற பணிப் பெண்களின் கூக்குரலால் சற்றே சலசலப்பு ஏற்பட்டது. வெண் பட்டு ஆடையில் நகைகளின்றி சிந்தூரமின்றி ராணி கேமா வந்திருந்தார். மிகவும் தளர்ந்திருந்தார் என்று மக்களுக்குப் பட்டது. சேவகர்கள் கொண்டு வந்திருந்த ஆசனத்தில் அமர்ந்த அவர் தம்மை வணங்கிய மக்களுக்கு பதில் வணக்கம் தெரிவித்தார். அவருடன் வந்த ஜீவகன் குடிலுக்குச் கென்று ஒரு பக்கம் தனது தோளில் புத்தரைக் கை போட வைத்து மறு கையால் அவர் ஒரு கழியை ஊன்ற, அவரை மக்கள் கூடியிருந்த இடத்துக்கு அழைத்து வந்தான்.

காலில் கட்டுப் போட்டுக் கழி ஊன்றி நடந்து வரும் புத்தரைக் கண்டதும் ராணி கேமாவையும் சேர்த்து அனேக பெண்கள் கண் கலங்கினார்கள். அனைவரும் எழுந்து நின்று புத்தருக்கு வணக்கம் தெரிவித்தனர். ஒரு பாறை மீதோ பெரிய மரத்துண்டின் மீதோ அமர்ந்து புத்தர் பேசுவதையே அனைவரும் பார்த்திருந்தனர். ஒரு அலங்காரமில்லாத மர நாற்காலியில் அவர் அமர்ந்து கொள்ள வலது காலை அவர் மடிக்காதபடி ஔர் மர முக்காலி அணைப்பாக வைக்கப் பட்டது.

புத்தர் பேசுவார் என்று எதிர்பார்த்த பலருக்கும் பிட்சுக்கள் சிலர் தாம் மகதத்தில் பௌத்தம் பற்றித் தெளிவு படுத்தச் சென்ற பயண அனுபவங்கள் பற்றிப் பேசியது ஏமாற்றமாகத் தான் இருந்தது. அவர்கள் பேசிய பிறகு ஆனந்தன் பேசத் துவங்கினார். “அனேகமாக எல்லா பிட்சுக்களுமே உருவ வ்ழிபாடும் பூசை முறைகளும் பௌத்தத்தில் இருக்க வேண்டும் என்று மக்கள் விரும்புவதாகத் தெரிவித்தனர். நாம் தர்ம சக்கரத்தை நம்து புலன்களையும் அகம்பாவத்தையும் கட்டுக்குள் கொண்டு வரும் சின்னமாக நிறுவி அதன் முன் தியானம் செய்யலாம். தன்னையோ வேறு உருவங்களையோ வழி படும் படி புத்தர் கூறவில்லை. சடங்குகளில் மனம் திருப்திப் படும் போது, உருவ வழி பாட்டில் நாட்டம் இருக்கும் போது நம் விடுதலை என்பதும் பின்னால் போய் விடுகிறது. மேலான வாழ்க்கை என்பதும் பின்னுக்குத் தள்ளப் படுகிறது. நிறைய பிட்சுக்கள் இருக்கும் இடத்தில் சங்கத்துக்கான குடில்களை உண்டாக்கி அங்கே தியானமும் விவாதங்களும் செய்யலாம். எப்போது ஒன்று நினைவில் இருக்க வேண்டும். நாம் புதிய உருவ வழிபாட்டுக்காகப் புத்தரைச் சரணடையவில்லை.

ஜீவகன் ராணி கேமாவிடம் “அம்மா. ந்டந்தும் மாட்டு வண்டியிலும் வந்த மக்கள் இரவுக்குள் திரும்ப வேண்டும். நாம் சற்றே காத்திருந்து புத்த தேவரின் ஆசி பெறலாமே” என்றான்.

மாலை தாண்டி இரவு கவிந்து தீப்பந்தங்கள் ஏற்றப் படும் போது அனேகமாக நிறைய மக்கள் கலைந்து சென்றிருந்தனர். கேமாவும் ஜீவகனும் புத்தரின் எதிரே வணங்கி நின்றனர்.

“பௌத்தம் தழைக்க பிம்பிசாரர் தந்த ஆதரவு மகத்தானது தாயே. நாங்கள் அனைவருமே அவரது துயரமான முடிவினால் மிகவும் மனம் புண்பட்டிருக்கிறோம்” என்றார் புத்தர்./

“மகதத்துக்கு உங்கள் வரவு பெரிய பாக்கியம் புத்ததேவரே. மாமன்னர் நீண்ட நாள் இருக்கும் பாக்கியம் தான் இல்லாமற் போய் விட்டது”

“ஆன்மீகம் தம் மண்ணில் தழைக்க வேண்டும் என்பதில் அவர் மிகவும் உறுதியாக இருந்தார். அப்படிப்பட்ட மன்னர் கிடைத்தது மகத மக்களின் பெரும் பேறு ” என்றார் புத்தர்.

சற்று நேரம் பிம்பிசாரருக்கு அஞ்சலி செலுத்துவது போல அனைவருமே மௌனம் காத்தனர்.

“அஜாதசத்ருவிடம் மனமாற்றம் இருக்கிறது. தனது குழந்தை தவழ்ந்து, நடந்து விளையாடுவதைக் கண்டு அவன் மகிழ்ந்த போது “இப்படித்தான் உன் அப்பாவும் மகிழ்ந்தார் என்றேன். கண்கலங்கி மனம் உடைந்து அழுதான். தன் பாவச் செயல்களுக்காக வருந்தினான். ராஜகஹம் தனது கொலைக்கும் பதவி ஆசைக்குமான சின்னமாகத் தோன்றி விட்டது அவனுக்கு. புதிய வாழ்க்கையின் அடையாளமாக பாடலிபுத்திரம் என்னும் நகரை நிர்மாணித்துக் கொண்டிருக்கிறான்”

“ஆசையும் புலன்களிலான துய்ப்பும் நோய் யார் கண்ணிலும் படாமலேயே பலரின் மீது தொற்றுவது போல, பல தலைமுறைகளாகத் தொடர்கிறது. மரணம் பிறப்பு இரண்டும் அதற்குத் தீர்வே இல்லை. இறு பிறக்கும் குழந்தையும் இந்த சங்கிலித் தொடரில் சிக்கி அலைக்கழிக்கப் படத்தான் போகிறது.

விடுதலைக்கான தேடல் ஒரு மனிதனின் வாழ் நாள் முழுவதையும் அர்ப்பணிக்குமளவு உயர்ந்தது. சிறு விளக்குச் சுடர்கள் ஒரு மாளிகையையே வெளிச்சமாக்குவது போல, தேடல் உள்ளவர்கள் ஒரு சிலராயிருந்தாலும் ஒரு தேசமே மனித இனமே அவர்களால் விடியலுக்கான வழியைக் காணும். அஜாத சத்ருவுக்குத் தொற்றிய நோய் அவரை விட்டுவிட்டதை அறிந்து மகிழ்ச்சி”

தினமும் புத்தரைக் காண வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வந்தது. ஜீவகன் பரிசோதித்து, காலில் இருந்த கட்டை அகற்றி, அவருக்கு குணமாகி விட்டது என்று கூறி விட்டான். அவர் ஒரு பக்கம் கழியை ஊன்றியே நடந்தார். வரும் வழியில் ஆங்காங்கே ஜனங்கள் “எங்கள் கிராமத்துக்கு வாருங்கள்” என்று அழைத்தால் புன்னகையுடன் அதை ஏற்கவும் செய்தார்.

ராஜகஹத்திலிரிந்து வடக்கே செல்கிறோம் என்று மட்டும் தெரிந்தது. பிட்சுக்களுக்கு புது ஊர்கள், புது மக்கள், பயணம் என்று சந்தோஷம் மேலிடுவதாக ஆனந்தனுக்குத் தோன்றியது. புத்தருக்கு உண்டாகும் பயண அசதியும் ஏன் இவர்கள் கண்ணில் படுவதே இல்லை என்று வருத்தமாக இருந்தது ஆனந்தனுக்கு.

கழுகுக் குன்று என்று கிராம மக்கள் அழைத்த மலையில் உயரம் குறைவான பகுதிகளிலேயே பல குகைகள் தென்பட்டன.

“இங்கு ஓரிரு நாட்கள் தங்குகிறோம் புத்தரே”

“தங்கலாமா? என்று கேட்காமல் தங்குகிறோம் என்று கட்டளை இட்டு விட்டாயே ஆனந்தா”

குகை வாயில் அகன்றும் உள்ளே நீண்டும் போகப் போகக் குறுகியபடியும் இருந்தது.

புத்தர் குகை வாயிலை ஒட்டி, சமமாக இருந்த கல்லின் மீது அமர்ந்து வலது காலை நீட்டி வைத்துக் கொண்டிருந்தார். தியானத்தின் போது கூட பத்மாசனத்தில் அமர முடியாத படி அவரது வலது கால் பாதிக்கப் பட்டிருந்தது.

“நிறைய அலைகிறேன் என்று உனக்கு வருத்தமா ஆனந்தா?”

ஆனந்தன் மறுமொழி கூறவில்லை. ஒரு அணில் புத்தரின் அருகே வந்து வந்து போய்க் கொண்டிருந்தது. திடீரென அவர் மடி மீது ஏறி அமர்ந்தது. சில நொடிகளில் கீழிறங்கி மீண்டும் அங்கும் இங்கும் அலைந்தது.

“காலை உணவு ஒரு வேளை மட்டும் உண்டு நாள் முழுவதும் நடப்பது பிட்சுக்களுக்கு சிரமமாக இல்லையா ஆனந்தா?”

‘தங்களுக்குத் தெரியாததா புத்த தேவரே? உடல் நலம் இல்லாதோருக்கு மாலையில் ஏதேனும் உணவு உண்டு”

“ஷரமண நியமங்களை விட்டுக் கொடுக்காமல் துறவிகளை நீ வழி நடத்திச் செல்வது உன் சிறப்பு ஆனந்தா”

“ஏன் சுவாமி? நானா வழி நடத்திச் செல்கிறேன்? தாங்கள் ஒருவர் மட்டுமே எங்கள் அனைவரின் வழிகாட்டி”

“யாரோ நடந்து வரும் சத்தம் கேட்டது. ம்கத நாட்டு சேவகர்கள் பலர் பின் தொடர ஒரு வர் நல்ல ஆடை அணிகலன்களுடன் வந்தார். அவர் புத்தரின், ஆனந்தனின் பாதங்களைத் தொட்டு வணங்கினார். “நான் மாமன்னர் அஜாத சத்ருவின் மந்திரி வாசக்கரா.மன்னர் தன் வணக்கங்களைத தெரிவிக்கிறார்”

“அமருங்கள் வாச்க்கரரே” என்றார் ஆனந்தன்.

புத்தருக்கு சற்றித் தள்ளி அமர்ந்த வாசக்கரா “பாடலிபுத்திரம் என்னும் தலைநகர் உருவாகிக் கொண்டிருக்கிறது. தாங்கள் அங்கே எழுந்தருள வேண்டும்”

“அவசியம் வருவோம்” என்றார் புத்தர்.

“வஜ்ஜியர்கள் நாடு பாடலிபுத்திரத்தை ஒட்டியே வருகிறது. அவர்கள் மேல் படையெடுத்து மக்தத்துடன் இணைக்க மாமன்னர் விரும்புகிறார். தங்கள் திருவுள்ளம் அறிய விரும்புகிறார்”

“நான் ஒன்றும் ராஜ குரு இல்லையே..”புத்தர் புன்னகைத்தார்.

“மன்னர் அஜாத சத்ருவுக்குப் போர் புரிவதில் தங்கள் எண்ணம் அறியாமல் ஈடுபட விருப்பமில்லை ”

“வஜ்ஜியர்கள் நாட்டில் பெரியவர்கள் அவமதிப்புக்கு ஆளாகிறார்களா? பெண்கள் பலாத்காரம் செய்யப் படுகிறார்களா? தங்கள் பாரம்பரியத்தை அவர்கள் கைவிட்டதாக சேதி உள்ளதா?”

“இல்லை சுவாமி”

“அவ்வாறெனில் ஏன் அவர்களது அமைதியான நல்லாட்சி தொடரக் கூடாது?”

“சரி ஸ்வாமி. தங்கள் கருத்தை நான் மன்னரிடம் கூறி விடுகிறேன்”. மறுபடி அவர்கள் இருவரின் பாதம் தொட்டு வணங்கி விடை பெற்றார்.

புத்தர் ஆனந்தனிடம் நான் “எதிலிருந்தாவது தப்பிக்க முயன்றிருக்கிறேனா? “என்று கேட்டார்.

ஆனந்தனுக்குக் கேள்வியே பிடிபடவில்லை.

Series Navigationஜீவி கவிதைகள்புகழ் ​பெற்ற ஏ​ழைகள் 21