சாகசக்காரி ஒரு பார்வை

 

 

கவிஞர் தான்யாவின் இக்கவிதைகள் சாகசக்காரி பற்றியவை மட்டுமல்ல. மதம் இனம் மொழி கலாச்சாரம், காதல், பிரிவு தனிமை தேசம், குடும்பம் சார்ந்து சாகசக்காரியைப் ”பற்றியவை பற்றி” அவரின் மொழியில் ஒரு சரளமான வெளிப்பாடு.

 

புலம்பெயர் பெண்களின் கவிதைகளில் தான்யாவின் கவிதைகள் குடும்ப உறவில் உள்ள முரண்களைப் பதிவு செய்கின்றன. குடும்பம் ஒரு அதிகார மையமாகத் தன்னைக் கட்டுப்படுத்துவதையும் அதையும் மீறி அந்த சாகசக்காரி சாதிக்க முயல்வதையும் தன்னுடைய கவிதை மொழியில் சொல்லிச் செல்கிறார் தான்யா. புலம் பெயர் வாழ்வின் வலியையும் தனிமையையும் இரு வேறு மாறுபாடான சூழல்களை எதிர்கொள்வதையும் வாழ்வியல் அழுத்தத்தோடு சொல்கின்றன கவிதைகள்.

 

ஒலிக்காத இளவேனில் என்ற கவிதை நூலின் தொகுப்பாசிரியர்களில் இவரும் ஒருவர். புலம்பெயர்ந்த பெண்களின் மன அழுத்தத்தையும் வழமை போல அவர்கள் வீட்டார்களாலும் அடக்கப்படுகிற, நிர்ப்பந்திக்கப்படுகிற நிலைமையையும் அதை எதிர்கொள்ளும் அவர்களின் வாழ்வியல் நிலையையும் வலியோடு வரைந்து செல்கின்றன கவிதைகள்.

 

மிகப்பெரும் சாகசம் புரியக்கூடிய பெண்களையும் நம் குடும்ப அமைப்பு எப்படி மிகச் சாதாரணமானவர்களாக, அவர்களின் சாகசப் பாதையில் குறுக்கிட்டுத் தன்னுடைய மந்தைத்தனமான வெளியில் இட்டுச்செல்வதாக அமைகிறது என்பதைப் பதிவு செய்வதால் தான்யா  நவீன கவிஞர்களில் முக்கியமானவராகிறார்.

 

பிறந்த நாடு பற்றிய ஏக்கமும் புலம் பெயர் நாட்டில் அடையாளம் தேடியும் போரின் அடக்கு முறையிலிருந்தும் குடும்பத்தினரின் அன்பான அடக்குமுறையிலிருந்தும் தன்னை விடுவித்துக்கொள்ள இயலாமல் தவிக்கும் பெண்களும் அவர்களின் காதல், பணி, வெளியுலகை எதிர்கொள்ளுதல், மாறுபட்டு நிற்கும் கலாசாரம், வெளியுலக வாழ்வு ஆகியவற்றை அழுத்தமான மொழியில் அதே சமயம் மென்மையாகவும் பதிவு செய்யும் கவிதைகள் இவருடையவை.

 

சுயமரியாதையும் பதின்மத்திலிருந்து தன் கனவுகளோடு தன்னை அடையாளம் காணும் முயற்சியுமாக நகரும் கவிதைகள் நம்மையும் அந்த இடங்களில் பிணைக்கின்றன. கணவனைத் தக்கவைத்துக்கொள்ள விரும்பாத அதிகாரத்துகெதிரான மனது ஒரு வேலையைத் தக்கவைக்கப்படுகிற முயற்சிகளும் இதனூடே தன்னை வெளிப்படுத்தும் சுயகௌரவத்தினோடு சமரசமும் செய்துகொள்ளாத நிகழ்வுகளைச் சொல்லிச் செல்கிறது கவிதைகள்.

 

வாழ்வியல் சிக்கல்களை வெளிப்படுத்தும் கவிதை வரிகள் சில..

 

”நீண்டு செல்லும் பாதைகளில்

குறுக்கு வழி தேடி ஓடி

சந்துகள் பிரிய

பக்கங்கள் புரிபடாமல்

திணறலுடன் முன்னேற

எல்லா முனைகளிலும்

ஆக்கிரமிக்கும் உருவங்கள்.”

 

“ இப்போதெல்லாம் கனவில்

கற்களே சூழ்ந்து கொள்கின்றன

உடைக்க முடியாமல் வளர்ந்து

என்னைச் சூழ்ந்து

அவற்றுக்குள் சிக்குண்டு

கல்லுக்குள் அடைபட்டு

காணாமற் போனேன். ”

 

“போக முடியா

என் தேசத்துள்

அமிழ்ந்து போகின்றேன்”.

 

மார்பங்கள் அருமையான குறியீடுகளாக வருகின்றன. அன்பையும் காதலையும் சுமந்து கனத்துத்திரியும் பெண்களின் நிலையைச் சொல்வதாகக் கவிதைகள் பல இருந்தாலும் இவை என்னைப் பாதித்தவை. பெண்கள் அடக்கப்படுவதை இவ்வளவு வலிமையாக யாரும் பதிவு செய்திருக்க முடியாது.

 

சுவாதீனமான சேர்வையாய் உடல்

மார்பகங்கள் பால் உறுப்புகள்

இவற்றை மூடி மறைத்து

அடக்கி சட்டம் ஒழுங்கு எனும் சூழல்

 

ஒரு ஆன்மாவின் துடிப்பும்

தேவையும்

உணரப்படாமலே முடிகிறது.

 

உறவுக்குள் நுழைகையில்

பிரிவு பற்றிய பயம் சூழ்ந்து

புடைத்துக் கொள்ள

சிரிப்பு கோபம் எனத் தொடர்ச்சி அற்ற

என் இருப்பு

 

எனத் துவங்கும் இக்கவிதை எனக்குப்  பிடித்த ஒன்றாயிற்று. ஏனெனில்

 

காதலை மார்புக்குள் பதுக்கி

துக்கத்தை மறைத்து

இயல்பாக்கி வாழ

என்னால் முடியும்.

 

உயிர்ப்பைக் குரலிலும்

காதலை மார்பிலும்

பதுக்கிய

அவளது எதிர்பார்ப்பும் ஆசையும்

எந்த மனதையும் சென்றடையாது

மூடிக் கொள்கிறது.

 

– என்ற வரிகளில் ஒவ்வொரு பெண்ணும் ஒளிந்திருக்கிறாள்.

 

அவர்கள் போடும் பிச்சையாய்

வாழ்வும் வீழ்வும்

 

ஆனால்

எல்லாமே வருத்தும்

எஞ்சிய உனது

காலத்தை

 

என் மையக் குகைகளுக்குள்

சீழ்பிடித்துக்கிடக்கிறது வாழ்வு

 

இவை எல்லாம் என்னை ஆட்டி வைத்த வரிகள். நிதர்சனனைப் பற்றிய கவிதையும் அதிகாரத்தைப் பற்றிய கவிதையும் அவற்றுள் சில

 

தாய் தேசத்தை மனிதர்களை நேசத்தை நாடிச் செல்லும் வரிகள் பல. கவிதைகளில் எல்லாவற்றுக்குமான ஒரு தேடல் இருக்கிறது. எல்லாம் வாய்க்கப் பெற்றிருந்தாலும் ஏதோ ஒன்று குறைவதான மனநிலையைப் பற்றிக் குரல் கொடுக்கின்றன. அதுதான் கூட்டத்திலும் தனிமையை உணர்தல் என்ற மனநிலை. மழையைப் பற்றிய கவிதையில் இது வெளிப்படுகிறது. பிறழ்வைப் பற்றிப் பேசும் கவிதைகளிலும் தன்னை அதில் இனங்காணுதல் இவரின் தனித்தன்மை.

 

முத்தாய்ப்பாக

 

இறுதி நாளில்

எழுதிவிட்டுப்போவேன்

புள்ளியிடமுடியாத

என்னுடைய சரித்திரத்தை

 

என்றும்

 

வயதானவளாய்

பேரப்பிள்ளை கண்டவளாய்

தென்படும் கோடுகளுள்ளும்

சுருக்கங்களுள்ளும்

நரைத்த முடிகளுள்ளும்

வாழ்ந்து கொண்டிருக்கிறேன்

முடிவுறா இளமையுடன்

தசாப்தங்களைக் கடந்தபடி.

 

என்றும் சொல்வது அருமை.

 

காலம், வடலி, கணையாழி, அற்றம், உயிர்நிழல், மூன்றாவது மனிதன், ஒலிக்காத இளவேனில்,மறுபாதி, கூர் ஆகியவற்றில் இவர் கவிதைப் பங்களிப்புச் செய்துள்ளார்.

 

புலம்பெயர் நாடுகளில் பதின்ம வயதுகளிலிருந்து வாழும் பெண்களின் மனநிலையையும் அவர்கள் அந்த நாட்டுக் கலாசாரத்தோடு ஒட்ட ஒழுக இயலாமலும் குடும்பத்தில் தாய் தேச கலாசார வழக்கங்கள் சார்ந்தும் இரு வேறு நிலைகளில் எதிர்கொள்ளும் சூழ்நிலைகள் பற்றிய சவாலைப் பேசிச் செல்வதால் இந்தக் கவிதைகள் சிறப்பானதாகின்றன.

 

நூல் :- சாகசக்காரி பற்றியவை

 

ஆசிரியர் – கவிஞர் தான்யா

 

பதிப்பகம் :- வடலி

 

விலை – ரூ.50.

Series Navigationவேலையத்தவங்கபாவண்ணன் கவிதைகள்