சாமானியனிடம் இந்திய சர்க்கார் கேட்கும் பத்து சாதாரண கேள்விகள்

Spread the love

 

நான் (பிரதம மந்திரி) சர்வ வல்லமை பொருந்தியவன் எல்லா தவறுக்கும் நான் தான் காரணம் என்று நீங்கள் சொல்வது என் காதில் விழுகிறது. சரி. முதலில் என் வருத்தத்தை சொல்லி விடுகிறேன். கால் பிரதமராகிய என்னிடம் பத்து கேள்விகளை கேட்கிறீர்களே,  முக்கால் பிரதமரிடம் ஏன் முந்நூறு கேள்விகளை கேட்கவில்லை என்ற வருத்தம் எனக்கு இருக்கிறது. (எனக்கு வருத்தப்படக்கூட உரிமை இல்லையா என்ன?) சரி. அதிருக்கட்டும். நான் ஒன்றும் உங்கள் குறைகளை தீர்க்கப்போவதில்லை. ஆனால், எனக்கும் கேள்வி கேட்க தெரியும். (கேள்விகள் கேட்க  மட்டும் தான் தெரியும்)

 

 

எனக்கு மட்டும் தான் பொறுப்பு இருக்கிறதா? உங்களுக்கு இல்லையா? நீங்களும் நானும் சேர்ந்தது தானே இந்திய சமூகம். நீங்கள் பத்து கேள்விகள் கேட்டீர்கள். சரி. நானும் பத்து கேள்விகள் கேட்கிறேன்.

 

”இக்கேள்விகளில் தவறு இருந்தால் சுட்டிக்காட்டவும்(திருத்திக் கொள்கிறேன்), அல்லது எனது கேள்விகள் சரியென உணர்ந்தால், அதற்குத் தக்க பதிலை, செயலில் செய்து காட்டவும். இங்கே, என் மனதில் பட்டதை அப்படியே எழுதியுள்ளேன். இவைகளை அவரவர்களுக்குத் தகுந்தவாறு, முன்னுரிமை (Priority) அளிக்க வேண்டியவை மாற்றி, அமைத்துக் கொள்ளலாம்.”

 

  1. பொதுமக்கள் நலன் கருதி ஒரு சட்டம் இயற்றப்பட்டால் உங்களுக்கு சாதகமாக இருந்தால் பின்பற்ற தயார். பின்பற்ற சிறிது கடினமாக இருந்தால் அதை மதிப்பது இல்லையே ஏன்? (உ.ம். தலைக்கவசம் கட்டாயம் என்று சட்டம். அணிய சிரமமாக இருப்பதால் சட்டத்தை மதிப்பது இல்லை)

 

  1. சுப்ரீம் கோர்டே ஒரு தீர்ப்பு தருகிறது என்றாலும் இதே நிலை தான். உங்களுக்கு சாதகமாக இருந்தால் பின்பற்ற தயார். இல்லை என்றால் சட்டத்தின் மாட்சிமையை மதிப்பது இல்லை.(உ.ம். சுப்ரீம் கோர்ட் வேலை நிறுத்தம் சட்ட விரோதம் என்று சொன்ன பின்பும் விமான ஓட்டிகளின் வேலை நிறுத்தம்.)

 

  1. தங்களுக்கு ஒரு வேலை முடியவேண்டுமானால் எந்த முறைகேடான வழியையும் பின்பற்றலாம் என்று நினைப்பது ஏன்? “Survival of the Fittest”  என்ற சார்லஸ் டார்வினின் கொள்கைக்கு விரோதம் இல்லாமல் எந்த வழிமுறையையும் பின்பற்ற துணிவது ஏன்? எவ்வளவு செலவு ஆனாலும் பரவாயில்லை என்ற உறுதி மொழி வேறு. (உ.ம். பல வேலைகளை லஞசம் கொடுத்து முடித்துக்கொள்வதில் ஆரம்பித்து நிறைய சொல்லலாம்.) லஞ்சம் கொடுக்க மாட்டேன் என்று பிடிவாதமாக இருந்து எந்த காரியத்தையும் தாமதமாக முடித்துக்கொள்ள தாயாரா?

 

  1. வெளி நாட்டுக்கு செல்லும்போது அந்நாட்டின் சட்டங்களை மதித்து தெருவில் குப்பை போட தயங்கும் நீங்கள் இந்திய திரு நாட்டிற்கு ஏன் அந்த மதிப்பை தருவதில்லை?  குப்பைகளைகூட தொட்டியில் போடாமல் தெருவில் போட்டுவிட்டு தெரு சுத்தமாக இல்லை என்று என்னையும் நகராட்சியையும் திட்டுவது ஏன்? மேலும் சில : ரோட்டில் எச்சில் துப்புவது, யாரும் கவனிக்கவில்லையே என்று சிக்னலை மீறுவது, ஓவர் ஸ்பீடில் செல்வது…. சொல்லிக்கொண்டே போகலாம்.

 

  1. நானா உங்களை வெளி நாட்டில் சென்று வேலை செய்ய ஊக்குவிக்கிறேன். நான் ஏதாவது மானியம் தருகிறேனா? உங்கள் நாட்டின் மீது உங்களுக்கு சிறிது கூட பற்று இல்லாமல் வெளி நாட்டிற்கு ஓடிவிட்டு நான் ஏன் தடுக்க வில்லை என்று கேட்கிறீர்கள்? உள்ளே உட்கார வைக்க கூட மனம் இல்லாத அமெரிக்க எம்பசி வாசலில் கால் கடுக்க நானா சார் உங்களை நிற்க சொன்னேன்? என்ன சார் நியாயம்? நீங்கள் கூறியுள்ளது போல் பெரிய பெரிய படிப்பெல்லாம் படித்துவிட்டு நான் என்ன உலக வங்கி கவர்னராகவா வேலை செய்தேன். இந்திய ரிசர்வ் வங்கியில் தானே இருந்தேன்.
  2. நான் மின்சார சிக்கனத்தை கடுமையாக அமல் படுத்தவில்லை என்று சொல்லி இருக்கின்றீர்கள். சரி. மின் பற்றாக்குறை இருப்பது உங்களுக்கும் தெரியும் தானே! எப்போதும் குளிர் சாதன வசதிக்கு பழகி விட்ட பொருப்புள்ள இந்திய குடிமகனாகிய நீங்கள் மின் சிக்கனம் கருதியும் நாட்டின் நலன் கருதியும் குளிர்சாதன வசதி இல்லாமல் இருக்க ரெடியா?

 

  1. இலவச டிவி கொடுத்தா வாங்க ரெடி. அடுத்து மிக்ஸி எப்ப, லாப்டாப் எப்ப என்று கேட்க ரெடி. ஓட்டுக்கு பணம் கொடுத்தா வாங்க தயார். தரும் போது வாங்கிகிட்டு என்னைய திட்டுனா என்ன சார் அர்த்தம்? நீங்க இதை எல்லாம் புறக்கணிச்சா நாங்க ஏன் சார் தரப்போறோம்.

 

  1. தேவைக்கு அதிகமாக பொருட்களை வைத்திருப்பது என்பதே பதுக்கல் தான். நீங்கள் எத்தனை சட்டை, பாண்ட் வைத்திருக்கிறீர்கள்? உங்களுக்கு இரண்டு போதாதா? யாருக்கோ கிடைக்க வேண்டியதை நீங்கள் உங்கள் வசதிக்காக உபயோகம் செய்கிறீர்கள். ஏற்றுமதி இறக்குமதி என்பதெல்லாம்  இரு நாடுகள் சம்பந்த பட்ட பல்வேறு பிரச்சினைகளை உள்ளடக்கிய விசயம். மனம் போன படி இதில் எல்லாம் ஒரு சர்க்கார் செயல் பட முடியாது.

 

  1. ரயில்வே நிர்வாகம் சரி இல்லை. டாய்லெட் சுத்தமாக இல்லை, என்ன நிர்வாகம் என்று அங்கலாய்க்க ரெடியா இருக்க நீங்க, ஏன் சார் பப்ளிக் டாய்லெட்ட சுத்தமா உபயோகிக்க கத்துக்க மாட்டேங்கறீங்க? நீங்க சரியா சுத்தமான முறையில உபயோகிக்க தயார் இல்ல ஆனா நான் சுத்தம் பண்ணலைன்னா திட்டுங்க. என்ன நியாயம் இது?

 

  1. எந்த ஒரு சமூகம் சார்ந்த பிரச்சினைக்கும் ( பெண்ணியம், வரதட்சிணை, சுற்றுச்சூழல், மின் சிக்கனம், தண்ணீர் சிக்கனம், இன்னும் பிற) உங்களின் நிலைப்பாடு இருவேறு விதமாக இருக்கிறதே ஏன்? உங்கள் வீடு என்றால் ஒரு நிலை, சமூகம் என்றால் ஒரு நிலை. இதில் நான் ஒருவன் திருந்தியா இந்த நாடு திருந்த போகிறது என்று ஒரு கேள்வி வேறு. ஏன் சார் நீங்களும் நானும் சேர்ந்தது தானே சமூகம்.

அப்பாடா! ஒரு வழியாக ஒரு தவறை மறைக்க இன்னொரு தவறை உதாரணம் காட்டியாகிவிட்டது.  அப்ப எப்பதான் பிரச்சினை தீரும்? இப்படியே நாங்கள் வாழ பழகவேண்டியது தானா என்று தானே கேட்கிறீர்கள். கண்டிப்பாக எல்லாம் மாறும். நம்பிக்கை வையுங்கள். ஆனால், நாளாகும். இந்திய பொருளாதாரம் முன்னேறிக்கொண்டிருக்கிறது என்பதில் யாருக்கும் ஐயம் இல்லை தானே?. தனி மனித உழைப்பு இருக்கின்ற எந்த ஒரு நாடும் கண்டிப்பாக முன்னேறத்தான் செய்யும். ஒரு ஜன நாயக நாட்டில் இது போன்ற குறைபாடுகள் இருக்கத் தான் இருக்கும். உலத்தின் “பெரிய அண்ணா” வாகிய அமெரிக்க பொருளாதாரம் ஆட்டம் காணவில்லையா?

 

நியுயார்க் நகரில் திடீரென ஒரு நாள் மின்சாரம் போன போது பல கடைகளில் பல பொருட்களையும் காணவில்லையாம். காத்தரீனா புயல் அடித்த போது பொருட்களை கொள்ளையர்கள் எடுத்துக்கொண்டு ஓடிய காட்சி நாம் எல்லொரும் பார்த்தது தான். ஆனால், இது போல் ஜப்பானில் நடக்கவில்லை என்பது ஆறுதலான விசயம். முன்னேறிய நாடுகளிலும் கூட இரு பக்கமும் தவறு இருக்கிறது.

 

ஜன நாயகத்தின் அனைத்து அமைப்புகளின் மீதும் உங்களுக்கு நம்பிக்கை போய்விட்டது. ஏனென்றால், அமைப்புகளின் செயல்பாடுகள் அப்படி உள்ளன. ஆனாலும், அன்னா ஹசாரே, நிதிஷ்குமார் போன்றவர்கள் எல்லாம் உங்களுக்கு நம்பிக்கை தர வில்லையா? எல்லாம் மாறும். நம்புங்க சார்.

 

சரி சார். இருவர் மீதும் தவறு இருக்கிறது. நீங்களும் கொஞ்சம் இறங்கி வாங்க நானும் கொஞ்சம் இறங்கி வாரேன். நாம் இருவரும் சேர்ந்து “ஒப்பில்லாத சமுதாயம் உலகத்துக்கு ஒரு புதுமை” என்று வாழ்ந்து காட்டுவோம்.

 

பி.கு: கேள்வி எண்கள் 4,9,10 டாக்டர்.அப்துல் கலாம் அவர்கள் குடியரசுத்தலைவராக இருந்த போது தெரிவித்த கருத்துக்கள். கட்டுரைக்காக சிறிது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

 

Series Navigation‘காதல் இரவொன்றிற்க்காகபெற்றால்தான் பிள்ளையா?