சிற்றிதழ் அறிமுகம் : சங்கு

.

முப்பது வருடங்களுக்கு மேலாக கடலூரிலிருந்து வந்து கொண்டிருக்கும் சிற்றிதழ். சுப்பிரமணியம் என்கிற தமிழாசிரியரின் ஆர்வத்தால் கொணரப்படும் இதழ். அவர் வளவ. துரையன் என்கிற புனைப்பெயரில் எழுதுகிறார். சிறகு ஆரம்பித்த காலத்தில் இருந்து சங்குக்கும் எனக்கும் தொடர்பு உண்டு என்றாலும் பெரிதாக என்னை ஈர்க்க வில்லை இதழ் என்று தான் சொல்ல வேண்டும்.
வாசகனின் சுவாரஸ்யத்தைக் கூட்டாத வடிவமைப்பு, நெருக்கமான அச்சிட்ட வரிகள், ஒரு படைப்புக்கும் இன்னொரு படைப்புக்கும் இல்லாத இடைவெளி என்று நெருக்கடியாக வெளிவந்து கொண்டிருந்தது இதழ். இத்தனைக்கும் அது காலாண்டு இதழ். என் கதைகள் வரும்போது மட்டும் கஷ்டப்பட்டு படித்துப் பார்த்திருக்கிறேன்.
ஆனால் இப்போது கையில் இருக்கும் இதழ் 141வது இதழ். இதழின் செயல் ஆசிரியராக சேலம் கி. இளங்கோ பொறுப்பேற்றிருக்கிறார். இன்னொரு மூளை உள்ளே நுழையும்போது மாற்றம் பளிச் என்று தெரிகிறது.
முன்னட்டையே தெளிவாக இருந்தது. வளவ. துரையனின் ‘ விடாத தூறலில் ‘ நூல் வெளியீட்டு விழா செய்தி வெறும் ஆறு புகைப்படங்களாக அட்டையில், கறுப்பு வெள்ளையில்..
ஒரு சிற்றிதழ்க்கே உரிய அழகில் சிறு சிறு கவிதைகள், கட்டுரைகள், கதை, கடிதங்கள் என நிரம்பி வழிகிறது சங்கு. விக்கிரமாதித்யன், நாஞ்சில் நாடன், வெற்றிப் பேரொளி, சுகன் என்று தெரிந்த கவிஞர்களின் படைப்புகள், பாவண்ணன், நெய்வேலி பாரதிகுமார், சேலம் கி. இளங்கோ என்று படித்த இலக்கியர்களின் படைப்புகள்.. எல்லாம் 36 பக்கங்களில்.. வரிகளில் நெருக்கமில்லை.. எழுத்துக்களின் அளவு பெரிதாக்கப்பட்டிருக்கிறது, ஆனால் மருந்துக்கும் ஓவியங்களோ புகைப்படங்களோ இல்லை.. ஒரே எழுத்து எறும்புகள் தான்.
இதழ் வடிவமைக்கப்பட்டதற்கு பாராட்டப்பட வேண்டியவர் சேலம் கி. இளங்கோ. அவர்தான் அச்சாக்க பொறுப்பு.
பொறுப்பாசிரியர் வளவ. துரையனுக்கு ஒரு ஷொட்டு. ஓய்வுக்குப் பிறகும் இதழ் தொடர்ந்து வெளிவருவதற்கு. சுகன் சொல்வது போல் இதழ் நிறுத்தி விட்டால், ஒரு ஐந்தாயிரம் குடும்ப செலவில் சேர்த்துக் கொள்ளலாம். சிற்றிதழ் அச்சிட அவ்வளவு ஆகிறது ஒவ்வொரு முறையும்.
இதழ் முகவரி:

சங்கு, 20, இராசராசேசுவரி நகர், கூத்தப்பாக்கம், கடலூர்-607002.

செல்: 93676 31228.
0

Series Navigationகிறுக்கல்கள்சாந்தகுமாரின் ‘மௌனகுரு’