சிற்றிதழ் பார்வை – கல்வெட்டு பேசுகிறது

This entry is part 20 of 31 in the series 16 செப்டம்பர் 2012

 

சிறகு இரவிச்சந்திரன்.

சிறகின் ஆரம்பமே, கல்வெட்டு சொர்ணபாரதி நிகழ்த்திய, ஒரு கவிதை நூல் வெளியீட்டு விழாவில்தான் நடந்தது. கவிஞர் பால்நிலவன் “ தேவநேயப்பாவாணர் சிற்றரங்குக்கு வாருங்கள்.. அங்கே சில தோழர்களைச் சந்திக்கலாம் “ என்றார். போனதில், ஒரு சிற்றிதழ் ஆரம்பிக்கும் முன்பே, கையில் கல்வெட்டும், ஒரு கவிதை நூலும் திணிக்கப்பட்டது. அப்படி அற்¢முகமானவர்தான் முகவை முனியாண்டி (எ) சொர்ணபாரதி.
சில காலம் தொடர்பில்லாமல் போய், திடீரென்று என் வீட்டு கடிதப் பெட்டியில் கல்வெட்டு! ஆகஸ்டு இதழ்! “ என்ன திடீர்னு “ என்றேன் தொலைபேசியில்.. “ நடுவ்லே வரலீங்க .. இப்பத்தான்.. “ அதுவும் சரிதான்.. எப்போதோ செதுக்கி விட்டு, இப்போதும் காட்சியளிப்பவைதானே கல்வெட்டுகள்!
நீண்ட காலத்திற்குப் ப்¢ன் கவிஞர் செல்லம்மாள் கண்ணனின் ‘ நட்பின் தர்¢சனம் ‘. இவர் சிறகின் ஆரம்ப இதழ்களில் ஹைக்கூ புரிதல் குறித்து கட்டுரைகள் எழுதியவர். இந்தக் கவிதை மூன்று வரியெல்லாம் இல்லை. மூவேழு வரிகள். “மௌனத்திலிருந்து / விடுபடத் தயங்கும் / பயத்தின் உச்சம் “ பல செய்திகளை உள்ளடக்கியதாக உள்ளது.
சொர்ணபாரதி “ இயல்பற்ற இயல்புகளை” பற்றி எழுதியிருக்கிறார். நல்ல கவிதை.
“ இயல்பற்ற இயல்புகள் / இயல்பு முலாம் பூசி / இயல்புகளாய் ஏற்படுகின்றன “ குறள் வடிவில் இருக்கும் இம்மாதிரி வரிகளை இவர் தொடர்ந்து எழுத வேண்டும்.
குகன் எழுதிய அம்பேத்கர் திரைப்படம் பற்றிய கட்டுரை ஒரு நல்ல பதிவு. அம்பேத்கர் பிராம்மணர் அல்லர் என்பது காந்தியை வருத்தப்படச் செய்ததாக ஒரு புதிய செய்தியும் இதில் உண்டு. அம்பேத்கர் சட்ட அமைச்சராக நியமிக்கப்படும்போது நேருவின் முகம் மாறுவதாகக் காட்டுவது நல்ல வரலாற்றுப் பதிவு. புத்த மதத்தைத் தழுவிய இரண்டு மாதங்களில் அம்பேத்கர் இறந்து போனார் என்பதும் புதிய தகவல்.
நாவல் குமரேசனின் கவிதையில் “ செல்போனை நீட்டவும் / பசியை மறந்து / சிரித்தது குழந்தை “ என்கிற வரிகள், தாராளமயமாக்கலின் விபரீதத்தைக், கோடிட்டுக் காட்டுகின்றன. பள்ளிக் குழந்தைகள் முகநூல் தொடர்பில் இருக்கிறார்கள் என்கிற சமீபத்திய செய்தி மூளையில் நெருடுகிறது.
அயோத்திதாசர் ஆய்வுகள் என்கிற, ராஜகௌதமனின் நூலின், ஒரு சார்பு நிலையைச் சாடி இரா. கிருஷ்ணன் எழுதிய நூல் விமர்சனம் சரியான முறையில் எழுதப் பட்டிருக்கிறது. அதேபோல சங்கப் பாடல்களை மேற்கோள் காட்டி, மு.செந்தமிழ்ச் செல்வி எழுதிய “ மகளிருக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் “ ஆற அமர வாசிக்க வேண்டிய கட்டுரை.
முத்தாய்ப்பாக பா. சத்தியமோகனின் “ எந்த மழையும் நினைவு வராது / செலவுக்குக் காசில்லாத போது “ என்ற வரிகளைப் படிக்கும்போது, அடிவயிற்றில் பந்து உருளுகிறது.
20 பக்கம். ஏராளமான படைப்புகள். கடுகு சிறுத்தாலும், காரம் போகவில்லை.
தொடர்புக்கு:
கல்வெட்டு பேசுகிறது. 924 அ , 29 வது தெரு, பக்தவச்சலம் நகர் , வியாசர்பாடி, சென்னை – 600 039. அலைபேசி: 9677110102 / 9884404635.
0

Series Navigationகால் செண்டரில் ஓரிரவுபிரான்ஸ் வொரெயால் தமிழ்க்கலாச்சார மன்றம் புகைப்பட கண்காட்சி
author

சிறகு இரவிச்சந்திரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *