சிலை உயிர்த்தெழும் ஓர் கணம்

This entry is part 31 of 40 in the series 1 ஏப்ரல் 2012

பாகங்களாக உடைந்திருக்கிறது

அவ் வனத்தின் பட்டுப்போன மரமொன்றினூடு

தென்படும் முழு நிலவு

விருட்சங்களால் ஈரலிப்போடு உறிஞ்சப்படுகின்றன

வனத்தின் எல்லை மர வேர்களை

தழுவும் சமுத்திரத்தின் அக் கணத்து அலையில்

இருளை ஊடறுத்துச் சிதறும் ஒளிக் கிரணங்கள்

காற்று அணைக்கப் பாடுபடும் அந்த ஓடத்து விளக்கினை

ஏற்றியவன் கரங்களிலிருந்து விசிறப்படும்

வலையினில் சிக்கிக் கொள்கிறது

தண்ணீரில் முளைத்த பௌர்ணமி

வேட்டைக்காரனுக்குத் தப்பிய தேன்கூடொன்று

ஒளிந்திருக்கும் மலைக்குன்று இதுவல்லவோ

எந்தப் பாதச் சுவடுகளும் தொட்டிராச் சருகுக் குவியல்

சலசலத்து எழுப்பும் இசை

தேனீக்களுக்குத் தாலாட்டோ

எத்தனையோ நிலவுகளை ரசித்த புத்தர்,

சிலையாகித் தனித்திருக்கும் வனத்தின் விகாரைக்கு

தூய மலர்களோடு அணிவகுக்கும்

வெண்ணிற ஆடை பக்தர்களுக்கு

வழிகாட்டும் நிலவின் விம்பம்

அவர்கள்தம் நகங்களில் மின்னுகிறது

நீரின் மேல் மிதந்த நிலவு

அசைந்து அசைந்து மூழ்கும் காலை

தீக்குழம்பாய் உருகும் ஆகாயத்தில்

தொலைதூரச் செல்லும் பறவைகள்

தனித்த புத்தர் சிலையையும் விருட்சமெனக் கொண்டு

தரித்துச் செல்லும் அக் கணம் மட்டுமேதான்

சிலை உயிர்த்தெழும் ஓர் கணம்

– எம்.ரிஷான் ஷெரீப்,

இலங்கை

Series Navigationவிஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் எண்பத்தி மூன்று இரா.முருகன்நட்புறவு – கலீல் கிப்ரான் (மொழி பெயர்ப்பு)

3 Comments

  1. அன்பின் ரிஷான் ஷெரீப்,

    சிலை உயிர்த்தெழும் கணம்… கனமான கற்பனை. உன்னதம். வாழ்த்துகள்.

    அன்புடன்

    பவள சங்கரி,

  2. Avatar சோமா

    வலையினில் சிக்கிக் கொள்கிறது
    தண்ணீரில் முளைத்த பௌர்ணமி
    searching the bhudhas in the way of nature…wondering..

  3. விருட்சமெனக் கொண்டு

    தரித்துச் செல்லும் அக் கணம் மட்டுமேதான்

    சிலை உயிர்த்தெழும் ஓர் கணம்.

    சிந்தனையைக் கிளரும் அருமையான வரிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *